ஷ்யாம் அண்ணன் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
பிறகு யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவர் காணாமல் போனார். எனக்கு அது ரொம்பவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், அந்த ஆச்சரியம் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. அவர் எங்கு போனார் என்ற விஷயத்தைப் பற்றி நானும் கொஞ்சம் கூட நினைக்க முயற்சிக்கவல்லை. இப்படிப்பட்ட மனோபாவத்தைக் கொண்ட பயணிகளை நான் இந்த உலகத்தில் எவ்வளவோ தடவைகள் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் என்ன பண்ணப் போறோம்னு காலை நேரத்துல அவங்களுக்கே ஒரு தெளிவான தீர்மானம் இருக்காது.
ஆறு வருடங்கள் கடந்த பிறகு நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். அதுவும் வினோதமான ஒரு சூழ்நிலையில்.
அனிவா தீவிற்குத் திரும்பச் சென்று சந்தன வியாபாரத்தில் நான் அப்போ ஈடுபட்டிருந்தேன். வியாபாரத்தில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஃபிஜி தீவிலிருந்த சந்தன மரங்களை வெட்டி வீழ்த்தி அங்கிருந்து வேறு நாடுகளுக்குக் கடத்தி விற்று பணமாக்கிய பிறகு ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து அதே விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள்.
வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு ஏதாவது திசைக்குச் சென்று கூடாரம் அடித்தால் என்னன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் ஆச்சரியப்படுற மாதிரி ஒரு சம்பவம் என் ஆர்வத்தைத் தட்டி எழுப்பியது. அனிவா தீவிற்கு தென்கிழக்கு மூலையில் கடலோரத்தில் ஒரு பெரிய மனிதரின் வீட்டில்தான் அப்போ நான் தங்கியிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே அந்த கிராமத்து மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகை பரபரப்பும் ஆவேசமும் இருந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒருநாள் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டபோது நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன்.
நான் வசித்த கிராமத்திலிருந்து பத்து மைல்கள் தூரத்தில் கடலில் வேறொரு தீவு இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தீவு என்று கூறுவதை விட கடல் மத்தியில் உயர்ந்து நிற்கும் மலை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எந்தப் பக்கத்துல நின்னு பார்த்தாலும் இரண்டாயிரம் அடி உயர்ந்து நிற்கும் மலை தெரியும்.
ஊர்க்காரர்கள் கெட்ட தேவதைகள் தங்கியிருக்கும் இடம் என்று அந்தத் தீவை நினைத்திருந்தார்கள். அங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. சாயங்கால நேரங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக மலையின் பொந்துகளில் போய் தங்குவதை நாம் பார்க்கலாம். நினைக்க முடியாத தைரியத்தைக் கொண்ட ரெண்டோ நாலோ ஊர்க்காரர்கள் மட்டும் பகல் நேரத்துல அவர்களின் நீளமான படகில் ஏறிச்சென்று உரத்திற்கு சரியாக இருக்கும். அந்தப் பறவைகளின் எச்சத்தைச் சேகரித்துக் கொண்டு வருவார்கள். இரவு நேரங்களில் அவர்கள் அங்கு ஒருமுறை கூட தைரியமாகத் தங்கியது இல்லை.
'குவானோ' என்ற பெயரைக் கொண்ட அந்த உரம் விலை மதிப்பு உள்ளது.
அந்தப் பூதங்களும் பேய்களும் நிறைந்த தீவில் கொஞ்ச நாட்களாகவே அவற்றின் தொந்தரவுகள் அதிகமாக இருப்பதாக எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.
'குவானோ' சேகரிப்பதற்காகச் சென்ற சிலர் யாருக்கும் தெரியாமல் இறந்து போனார்கள். மேலேயிருந்து சரியாக அவர்களைக் குறிவைத்து யாரோ ஒரு பெரிய பாறையைத் தள்ளிவிட்டிருக்காங்க. மற்றொரு குழுவினர் பகல் நேரத்துல பயங்கரமான ஒரு உருவத்தை மலைமேல் பார்த்திருக்காங்க.
எல்லாவற்றுக்கும் மேலாக நீள நீளமாகப் புகைச்சுருள்கள் மலையிலிருந்து வருவதை எல்லாரும் பார்க்குறாங்க. இடையில் பயமுறுத்துற மாதிரி வெடிச் சத்தங்களும் கேட்கும்.
இனிமேல் அந்த பூதங்களும் பேய்களும் இங்குவரை வந்து விடுமோ என்றுதான் ஊர்க்காரர்களின் பயமாக இருந்தது. மந்திரவாதிகள் தங்களின் திறமைகளைக் காட்டுவதில் மும்முரமாக இறங்கியிருந்தார்கள். பேய் பிடிப்பதை முழுமையாக இல்லாமற் செய்வதாக உறுதி மொழி சொல்லி அவர்கள் ஜெபம், ஹோமம்னு ஈடுபட்டிருந்தாங்க.
ஊர் பெரியவரிடமிருந்து இந்தத் தகவல் எனக்குக் கிடைத்த போது, நான் அந்தத் தீவுக்குப் போக முடிவெடுத்தேன். பெரியவர் என்னைப் போக வேண்டாமென்று தடுத்தார். நான் அவர் சொன்னது எதையும் காதிலேயே வாங்காமல் புறப்பட்டேன்னுதான் சொல்லணும். என்னை அந்தத் தீவுல கொண்டு போய் சேர்க்க ஒரு படகோட்டி கூட தயாராக இல்லை.
கடைசியில் கோபத்தை அடக்க முடியாமல் ஒரு நாள் ஒரு சிறிய படகில் ஏறி மாலை நேரத்தில் தீவை நோக்கிப் புறப்பட்டேன். கையில் ஒரு நல்ல வெட்டுக்கத்தி, கிணற்றுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால், அதை எடுப்பதற்குப் பயன்படும் பாதாளக் கரண்டியை நுனியில் கட்டியிருக்கும் ஒரு பெரிய கயிறு, இரவு உணவுக்குக் கட்டாயம் தேவைப்படும் சில பொருட்கள் - இவை எல்லாம் இருந்தன. அவற்றை என்கிட்ட தந்தப்போ இரவு நேரத்துல அங்கே தங்க முடியுமான்னு ஊர்ப் பெரியவர் சந்தேகத்தோட என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.
என் படகு கடலில் புறப்பட ஆரம்பித்த நேரத்தில் ஊர்ப்பெரியவர் கூப்பாடு போட்டு அழுது விடுவாரோ என்பது மாதிரி இருந்தது. இவ்வளவு நாட்களாக ஒன்றாக வசித்ததன் காரணத்தால் கபடம் என்றால் என்னன்னு தெரியாத அந்தக் கிராமத்துத் தலைவருக்கு என்மீது வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு பாசம் தோன்றியிருந்தது. இப்படி நான் இறப்பதற்குத் திட்டம் போட்டு புறப்படுவதைப் பார்த்தப்போ அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
தனியா படகைச் செலுத்தி தீவை நோக்கிப் புறப்பட்டப்போ என் செயல் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனம் தான் என்பதாக எனக்குப் பட்டது. எங்கோ ஒரு பகுதியில் பூதமோ, பேயோ கூத்தாட்டம் போடுதுன்னா அதைப்பற்றி உனக்கு என்னடா இழப்பு? ஆனால், என்னைப் போன்ற ஒருவன் ஒரு இடத்துல இருக்க முடியுமா?
பேய்த் தீவை நெருங்கினப்போ நேரம் இருட்டாயிடுச்சு. கடல் காகங்களும் மற்ற பறவைகளும மலையையொட்டி பறந்து சென்று கூடுகளில் அடைந்துவிட்டிருந்தன. சற்று தாமதமாக வந்த நான்கு பறவைகளின் சிறகடிப்பு சத்தம் அப்போது காதில் விழுந்தது.
வசதியான ஒரு இடத்தில் படகைக் கட்டிப்போட்டுவிட்டு, வெட்டுக் கத்தியையும் கயிறையும் எடுத்துக் கொண்டு கரையில் கால் வைத்தேன். கரை என்றால் கரும் பாறை. இருபது கஜம் பாறைகள் வழியே நடந்தால் கோட்டைச் சுவரைப் போல நெடுங்குத்தாக நின்று கொண்டிருகும் மலை. வெட்டுக் கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு பாதாளக் கரண்டி கட்டப்பட்ட கயிறை மேலே எறிந்தேன். பாதாளக் கரண்டி பாறையின் பிளவில் எங்கோ பிடித்துக் கொண்டது. நன்கு இறுகப் பிடித்திருக்கிறதா என்று கயிறை இழுத்துப் பார்த்துவிட்டு, கயிற்றின் வழியாக ஏறி பாதாளக் கரண்டி பற்றியிருந்த இடத்தை அடைந்தேன். பிறகு அங்கிருந்தவாறு கயிறை வீசி எறிந்து அதற்கு மேலேயிருந்த பாறையை பாதாளக் கரண்டி பற்றிக் கொள்ள, நான் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.