ஷ்யாம் அண்ணன் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
எனினும், மீண்டும் ஏமாற்ற உணர்வு எங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்னால் ஷ்யாம் அண்ணன் தொடர்ந்து சொன்னார்: "அந்தக் கல்லால் ஒரு தீவு தூள் தூளாகி அழிஞ்சது."
"ஒரு உருண்டைக் கல்தான் அதற்குக் காரணமா?"
ஷ்யாம் அண்ணன் கூச்சத்துடன் சொன்னார்: "ஆமாம். ஒரு சின்ன வெள்ளை நிறக் கல்லை நான் கையில எடுத்தேன். நடந்தது அவ்வளவுதான். அதே சமயம் ஒரு தீவு கடலுக்குள்ளே மூழ்கிடுச்சு."
அதற்குப் பிறகு ஷ்யாம் அண்ணனை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றாகிவிட்டது. அவர் எந்தவிதத் தடையும் இல்லாமல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்.
"நியூ ஹெ ப்ரைடெஸ் அப்படின்னு எப்பவாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, அது என்னன்னு சரியா உங்களுக்குச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அப்படித்தானே? நியூசிலாந்துக்கு வடக்குத் திசையில், ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கு திசையில் சின்னச் சின்ன தீவுகள் வரிசையா இருக்கும். அதைத்தான் நியூ ஹெ ப்ரைடெஸ்னு புவியியலில் சொல்லுவாங்க.
பூமிக்கு மேலேயிருந்து பார்த்தால் கடல்ல பாறைகள் விட்டு விட்டு இருக்குற மாதிரியும், ஆங்கிலத்தில் 'ஒய்' என்று எழுதியிருப்பது மாதிரியும் அந்தத் தீவுகள் இருக்கும்.
அந்த 'ஒய்'யின் மூன்று கைகளும் ஒன்றாகச் சேர்கிற இடத்தில் ஒரு தீவு இருக்கு. அதோட பேரு 'இஃபாட்டே' அதுதான் தீவுகளின் தலைமையிடம்.
இஃபாட்டேயில் இரண்டு துறைமுகங்கள் இருக்கு. அவற்றின் பெயர்கள் விலா, ஹவானா. அரசாங்க அலுவலகங்கள் விலா துறைமுகத்தில் இருக்கின்றன.
அப்போ நான் சந்தன வியாபாரத்துக்காக நியூ ஹெ ப்ரைடெஸ்ஸுக்கு தெற்கில் இருக்கும் 'அனீவா' என்ற தீவுல இருந்தேன். ஒருமுறை அரசாங்கத்துல இருந்து லைசென்ஸ் வாங்குறதுக்காக விலாவுல நான் சிறிது நாட்கள் தங்கவேண்டி வந்தது.
அரசாங்க அலுவலகங்கள் விஷயத்தை எடுத்துக்கிட்டா ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் அவை இருக்கும். அரசாங்க அலுவலகங்களுக்கு வருடம் ஒண்ணுக்குப் பதினெட்டு மாதங்கள். நியூ ஹெ ப்ரைடெஸின் கதையை எடுத்துக்கிட்டா, அது இன்னும் அதிகம் வினோதமானது. இருக்குற சூழ்நிலையைக் கெடுக்குறதுக்கு ராமன் ஒரே ஆளே போதும். அவனுடன் சுக்ரீவனும் சேர்ந்துவிட்டால்? நியூ ஹெ ப்ரைடெஸிற்குத் தலைமையிடம் ஒண்ணுதான். முன்னாடி சொன்ன இஃபாட்டே தான் அது. ஆனா, ஆட்சி இரண்டு பேர்களுக்குச் சொந்தமானது. ஆங்கிலேயர்களும் ஃப்ரெஞ்ச்காரர்களும் சேர்ந்து ஆட்சி செய்யிறதுன்னா எப்படி இருக்கும்? ஒரு வாரத்துல சாதாரணமா முடிக்க வேண்டிய வேலை இரண்டு விஷயங்களுக்கு நீண்டுக்கிட்டு இருக்கும். ஆங்கிலத்துல இருந்து ஃப்ரெஞ்சுக்கும், ஃப்ரெஞ்ச்ல இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு செய்யிறதுக்கு மத்தியில் லைசென்ஸுக்காக நாம் செய்த விண்ணப்பம் எந்த இடத்துல ஒதுங்கிக் கிடக்கும்னு மை போட்டுப் பார்த்தாலும் நம்மால கண்டுபிடிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் மொஸ்யு பேட்ராவை நான் சந்திச்சேன். ஆச்சரியமான விதத்தில் அந்தச் சந்திப்பு நடந்தது. தலைநகரம்தான். துறைமுகம்தான். இருந்தாலும் என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல ஹோட்டல் கூட அங்கு இல்லை. மலானா என்ற பெயரைக் கொண்ட ஒரு கிராம பாணியில் அமைந்த தகரம் போட்ட இரண்டு மாடி ஹோட்டல்களில் மேல் மாடியிலிருந்த ஒரு அறையில் நான் இருந்தேன். அப்போ ஒரு நாள் அரசாங்க அலுவலகத்துல பார்க்க நேர்ந்த அடி முட்டாள்களான க்ளர்க்குகளுடன் சண்டை போட்டு சோர்வடைந்து போய் ஹோட்டல் அறைக்கு நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன். திடீரென்று மேலேயிருக்கும் என்னோட அறையில் என்னவோ சத்தமும் அசைவும் கேட்பது மாதிரி இருந்தது.
வேகமாக மரப்படிகளில் ஏறி பதைபதைப்புடன் மாடியை அடைந்தேன். வெளியே போறப்போ நான் என் கைகளால் அறையைப் பூட்டி விட்டுப் போயிருந்தேன். பிறகு எப்படி இப்படியொரு பிரச்னை உண்டானது?
மேலே இருந்த வராந்தாவில் ஹோட்டல் சொந்தக்காரரான மலானாவைப் பார்த்தேன். அவர் கோபத்துடன் என் அறையை விட்டு வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் "உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயே ஆக வேண்டும்" என்று கையை ஆட்டியவாறு அவர் என்னிடம் சொன்னார்.
"எதுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகணும்?"
"எதற்கா? எங்கேயோ இருந்த ஒரு ஃப்ரெஞ்ச் போக்கிரி உங்க அறைக்குள்ளே நுழைஞ்சிருக்கான். நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். ஆனால், ஒரு பிரயோஜனமும் இல்ல. தாழ்ப்பாளை பலமாகத் திறந்து உள்ளே நுழைஞ்சிட்டான். நான் ஸ்டேஷனுக்குப் போயி போலீஸை அழைச்சு வரட்டுமா?"
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "அதற்கு முன்னாடி நான் அந்தத் தொழிலாளியோட முகத்தைக் கொஞ்சம் பார்த்திடறேனே! அதற்குப்பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம்..."
மலானா பயத்துடன் சொன்னார்: "இதுல பார்க்குறதுக்கு என்ன இருக்கு மிஸ்டர்? எதற்கும் பயப்படாத ஒரு போக்கிரி அவன். அவன் செய்யாத ஒரு விஷயமும் இல்ல!"
"தேவைப்பட்டால் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். பிறகு எதற்குப் பயப்படணும்?"
மலானா நான் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் பயந்து பயந்து எனக்குப் பின்னால் வந்தார்.
உள்ளே போனப்போ என் பெட்டியும் பத்திரங்களும் கீழே சிதறிக் கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு நடுவுல இருந்த நாற்காலியில ஒரு வீங்கிப்போன முகத்தைக் கொண்ட ஒரு மனிதர் புகைபிடித்துக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்திருந்தார். ஒரு பேண்ட் மட்டும் அவர் அணிந்திருந்தார். வெப்பத்தைத் தாங்க முடியாததால் அவர் சட்டையைக் கழற்றியிருக்க வேண்டும். நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தார். அவர் தாடியும் மீசையும் வைத்திருந்ததைப் பார்த்தவுடன் கூறிவிட முடியும் அவர் ஒரு ஃப்ரெஞ்ச்காரர் என்று.
நான் உள்ளே வர்றதைப் பார்த்து நாற்காலியை விட்டு எழுந்த அவர் நரியைப் போல சீறிக்கொண்டு ஃப்ரெஞ்ச் மொழியில் கேட்டார்:
"யாருடா நீ?"
மலானா அந்தக் குரலைக் கேட்டதும் பயந்து போய் வராந்தா பக்கம் ஓடினார்.
நான் சிரித்துக் கொண்டே சுத்தமான வங்காள மொழியில் சொன்னேன்: "தெரியலையா? நான்தான் உங்களோட எமன்!"
தெரிந்திராத மொழியையும் சிரிப்பையும் கேட்டு அந்த மனிதருக்குக் கோபம் வந்துவிட்டது. என்னை உயிருடன் தின்று விடுவதைப் போல வேகமாக எழுந்து பற்களைக் கடித்தவாறு ஆங்கிலத்தில் அவர் சொன்னார்: "இங்கேயிருந்து போ கறுப்பு முட்டாளே! இல்லாட்டி உன் தோலை நான் உரிச்சுடுவேன்."
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "நீங்க என்ன சொல்றீங்க வெள்ளைக்காரரே? நீங்க சொல்றதைக் கேட்டு எனக்கு எரிச்சல் படிப்படியா ஏறுது. சீக்கிரம் இங்கேயிருந்து கிளம்புங்க. ஏன்னா, இது என்னோட அறை."