ஷ்யாம் அண்ணன் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
கையில ஆயுதத்தையும் வெட்டுக் கத்தியையும் வச்சுக்கிட்டு பாதை உண்டாக்கிய பிறகுதான் உள்ளேயே போகமுடியும். இருநூறு அடிவரை உயர்ந்து வளர்ந்து இருக்கிற காட்டுக் கொடிகள் படர்ந்து ஏராளமான இலைகளுடன் நின்று கொண்டிருக்கும் மரங்கள் காரணமாக இருக்க வேண்டும். உச்சி பகல் நேரத்துல கூட அங்கே வெயில் இருக்காது. அந்தப் பெரிய மரங்களுக்குக் கீழே முட்கள் நிறைந்த சிறு மரங்களின் இன்னொரு காடு பதினஞ்சு அடி உயரத்தில் இருக்கும். அதற்குள்ளே அர்மிலா ரப்பர் மரங்களின் வேர்கள் பரவியிருக்கும். அப்போ ஓய்வு எடுப்பதற்காக கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் காட்டின் ஆக்கிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து 'சவன்னா'... அதாவது- புற்கள் அடர்ந்த பகுதி காணப்பட்டது. அந்தப் புற்கள் சாதாரண புற்களைப் போல் இருக்காது. ஆறடி உயரத்தைக் கொண்ட ஒரு மனிதன் அதற்குள்போய் நின்றால், வெளியே தெரியாது. ஒரு குள்ளமான 'பவ்பாப்' மரத்தின் கீழ்ப்பகுதியைச் சுத்தப்படுத்தி அங்கே கூடாரம் அமைக்கப்பட்டது. ஆப்ரிக்கா காடுகளில் வேட்டையாடுவதை 'சஃபாரி' என்பார்கள். எங்க சஃபாரியில ஆட்கள் அதிகம் இல்ல. சாமான்கள், உணவு, பிடிக்கும் மிருகங்களை அடைக்கக்கூடிய கூடுகள் போன்றவற்றைச் சுமப்பதற்கு நூறு 'காஃபிர்' இனத்தைச் சேர்ந்த கூலியாட்கள் இருந்தார்கள். பிறகு 'மஸாயி' இனத்தைச் சேர்ந்த ஐந்து வேடர்கள்.
அங்கு சிங்கங்களின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதனால் கூடாரத்தைச் சுற்றி நெருப்பை எரிய வைத்துவிட்டு இரண்டு வேடர்களைக் காவல் இருக்க வைத்துவிட்டு நாங்கள் உறங்குவோம்.
எங்கள் கூடாரத்தில் இரண்டு மூன்று விலை மதிப்புள்ள பறவைகளின் கூடும், மீன், உடும்பு போன்றவற்றில் வேறு எங்கும் பார்க்க முடியாத சில இனங்களைப் பாதுகாப்பாக வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரங்களும் இருந்தன. ஒரு கண்ணாடிப் பாத்திரம் எப்படியோ உடைந்து தண்ணீர் வெளியே கொட்டுவதை நான் பார்த்தேன். உள்ளே நீர் இல்லாமல் மீன் துடித்தது. நான் எழுந்துபோய் அதை வேறொரு கண்ணாடி ஜாடியில் போட்டு நீர் ஊற்ற ஆரம்பிக்கிறப்போ, ஜீகன் உள்ளே வந்தான்.
ஜீகன் எங்கள் எல்லாருடைய நம்பிக்கையையும் பெற்ற ஒரு நல்ல மனிதன். எல்லா காஃபிர் கூலியாட்களுக்கும் மஸாயி வேடர்களுக்கும் தலைவன் அவன்தான். ஆஜானுபாகுவான உடம்பைக் கொண்டவன் அவன். குரல் கூட கொஞ்சம் முரட்டுத்தனமானதுதான். சாதாரண ஒரு ஈட்டியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு மாமிசத்தைச் சாப்பிடும் சிங்கத்தைக் கூட அவன் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் சந்திப்பான். யாரிடமும் அவனுக்குச் சிறிதும் பயமில்லை. ஆனால், இந்த விஷயங்களெல்லாம் பகல் நேரத்துல மட்டும்தான். இரவு நேரத்துல ஒரு இலை அசைஞ்சால் கூட போதும். பூதம், பிரேதம், ஆவி அது இதுன்னு சொல்லிட்டு நடுங்கிக் கூப்பாடு போட ஆரம்பிச்சுடுவான். பேய்கள் தன்னைப் போல இருக்கிற வேடர்களின் மண்டைகளை உடைப்பதற்காக ராத்திரி நேரங்கள்ல ஒளிஞ்சு வரும்னு அவன் உறுதியாக நம்பினான்.
ஜீகனோட முக வெளிப்பாடுகளைப் பார்த்தாலே நமக்குத் தெரிஞ்சிடும். அவன் இந்த மாதிரி எதையோ பார்த்துப் பயந்துதான் இந்த நேரத்துல வந்திருக்கான்னு.
எந்தப் பேயைப் பார்த்து இப்படிப் பதைபதைச்சுப்போய் வந்து நிற்கிறேன்னு கேட்டு அவனைக் கிண்டல் பண்ணலாம்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ, வினோதமான ஒரு சத்தத்தைக் கேட்டு நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். கண்களை உருட்டி மிரள மிரள விழித்துக் கொண்டு என்னைப் பார்த்த ஜீகன் பயத்துடன் சொன்னான்: "சத்தம் கேட்குதா?"
தெளிவாக அந்தச் சத்தம் கேட்டது. நிச்சயமாக அது சிங்கத்தின் சத்தமோ, கோபமடைந்த யானையின் சத்தமோ அல்ல. ஆழமான இருட்டைக் கிழித்துக் கொண்டு எங்கோ தூரத்திலிருந்து ஆகாயத்தையே நடுங்கச் செய்யிற மாதிரி அந்தச் சத்தம் திரும்பவும் கேட்டது: கும் கும் கும் கும்...!
ஒரு திசையிலிருந்து அந்த சத்தம் வந்து நிற்பதற்கு முன்னால் வேறொரு இடத்திலிருந்து கேட்க ஆரம்பித்தது. பிறகு இன்னொரு இடத்துல இருந்து. இப்படி அந்தச் சத்தம் இருட்டான வானத்தின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லை வரை நானே நடுங்கிப் போகிற அளவுக்குப் பயங்கரமாகக் கேட்டது.
சிறிது நேரம் அந்தச் சத்தத்தையே கேட்ட நான் கேட்டேன்: "நீ என்ன நினைக்கிறே ஜீகன்? ஏதாவது புரியுதா?"
ஜீகன் பயத்துடன் சொன்னான்: "புரியுது எஜமான்! அந்த கெட்ட ஆவிகளுக்கு எதிரியான சாத்தான் தேவைப்படுது. காடு, மலை எதாலயும் அவனை மறைச்சு வைக்க முடியாது. எண்ணெய் நிறைக்கப்பட்ட கொப்பறை தயாரா இருக்கு."
"நீ அதைச் சரியா கண்டுபிடிச்சுட்டே இருந்தாலும் இன்னொரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும். அவங்களுக்குத் தேவை சாதாரண ஒரு சாத்தான் இல்ல. வெள்ளைத்தோலைக் கொண்ட ஒரு சாத்தான்தான் அவங்களுக்கு வேணும்!"
ஜீகன் சிறிது நேரம் கழித்துச் சொன்னான்: "நீங்க சொல்றது சரிதான் எஜமான். ஆனா, நீங்க யாரைப்பற்றி சொல்றீங்க? உங்களைப் பற்றியா?"
சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்: "நீ சொல்றது சரியான ஒண்ணா எனக்குத் தோணல. காஃபிர்களுக்கு மத்தியில் நிக்கிறப்போ கூட நான் வெள்ளைக்காரன்னு ஒரு பார்வை தெரியாத மனிதர் மட்டும்தான் கூறமுடியும்."
இதற்கிடையில் அந்தச் சத்தத்தைக் கேட்ட காஃபிர் கூலிக்காரர்களும் மஸாயி வேடர்களும் கூடாரத்திற்கு முன்னால் பயத்துடன் வந்து நின்னாங்க. அவங்கக்கிட்டயும் அதையே சொல்லி சமாதானப்படுத்தினேன் நான். அந்த இரவு அப்படியே நீண்டது.
அவர்களை நான் சமாதானப்படுத்திவிட்டேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பொழுது விடியும் வரையில் பலவிதப்பட்ட சம்பந்தா சம்பந்தமில்லாத எண்ணங்களால் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஆஃப்ரிக்காவை நன்கு அறிமுகமானவர்களுக்கு அந்த சத்தத்தின் அசாதாரண தன்மையையும் அது எந்த அளவுக்கு அச்சம் தரக் கூடியதுன்றதும் நல்லாவே தெரியும். அந்தச் சத்தம் ஆஃப்ரிக்காவுக்கு மட்டுமே சொந்தமானது. ஒருவித பிரத்யேக தப்பட்டையின் ஓசை அது. பயங்கரமான காடுகளில் வாழும் பத்து மைல் தூரத்திலிருக்கும் கிராமப்புற மக்கள் ஒருவரையொருவர் நெருங்கவோ அப்படி நெருக்கமாக இருக்கும் போது இரண்டு குழுவினருக்கு இடையில் ஒரு மொழியில் பேச முடியாத சூழ்நிலை உண்டாகும்போதோ அந்தத் தப்பட்டையின் வழியாகத்தான் அவங்க தந்தி வழியா செய்தி பரிமாறிக்குற மாதிரி நீண்ட தூரத்தைக் கடந்து செய்திகளை அனுப்பிக்குவாங்க. அந்தத் தப்பட்டைகளுக்குன்னு தனியா ஒரு மொழி இருக்கு. வேற்று இனத்தைச் சேர்ந்த மாறுபட்ட மொழிகள் பேசுபவர்கள் கூட அந்த மொழியைப் புரிஞ்சுக்க முடியும். அந்த மொழியைக் கையாளுற விதமே வினோதமா இருக்கும்.