ஷ்யாம் அண்ணன் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
கீழே ஒரு இடத்தை அடைந்ததும் பேட்ரா சொன்னார்: "கீழே பாருங்க, ஏதாவது தெரியுதா?"
நான் சொன்னேன்: "தெரியுது. ஒரு வகையான நீல நிறப் பாறைகள்."
"சாதாரண நீலப் பாறைகள் இல்லை. உலகத்திலேயே மிகவும் விலை மதிப்புள்ள வைரக்கற்கள் விளையும் பாறைகள் அவை!"
வைரம்! என்னைச் சுற்றிலும் நான் பார்த்துக் கொண்டிருப்பது முழுவதும் வைரங்கள். அப்படியென்றால் இந்தக் குளத்தில் ஏழு சாம்ராஜ்யங்களின் செல்வங்களும் குவிந்து கிடக்கின்றனவோ? மனதை என்னால் சிறிது கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பாறைக்கற்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு சிறு பொருளைப் பார்த்து அதை எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். உளியைப் போன்ற ஒரு கருவியை நான் கையில் கொண்டு வந்திருந்தேன். அதைக்கொண்டு அந்தப் பொருளைத் தோண்டி, அந்தக் கல்லைக் கையிலெடுத்தேன். ஆச்சரியம்! அதற்குக் கீழே ஒரு துவாரம்- குழலின் வாய்ப்பகுதியைப் போல- தெரிந்தது. அது மட்டுமல்ல- அதன் வழியாக நீர் கீழ்நோக்கி ஒழுகிக் கொண்டிருந்தது.
என்னுடைய செயல் பேட்ராவைக் கோபம் கொள்ளச் செய்தது. எனக்கு மேலும் கொஞ்சம் வைரக் கற்களைச் சேகரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவர் என்னைப் பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்தார். அது மட்டுமல்ல- அணிந்திருந்த நீச்சல் உடையைக் கழற்றி எறிந்து என்னை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்காமல் மலையின் ஒரு மூலைக்கு என்னை அவர் பிடித்துக் கொண்டு போனார். அங்கு ஒரு கயிறால் ஆன ஏணி கடல் மட்டம் வரை தொங்கிக் கொண்டிருந்தது. நீரில் ஒரு பாறையின் மறைவில் ஒரு மோட்டார் படகு நின்றிருந்தது.
கயிறால் ஆன ஏணியின் வழியாகக் கீழே இறங்கி மோட்டார் படகில் ஏறிப் பயணித்து தீவிலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தூரத்தை அடைவது வரை என்ன கேட்டும் ஒரு வார்த்தை கூட மொல்யு பேட்ரா என்னிடம் பேசவில்லை.
கடைசியில் கோபத்தைத் தாங்க முடியாமல் நான் சொன்னேன்: "என் கேள்விக்கு பதில் சொல்லலைன்னா, நான் உங்களைக் கடல்ல வீசி எறிஞ்சுடுவேன். இதுக்கு என்ன அர்த்தம்? பைத்தியம் பிடிச்சதைப் போல என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இப்படி ஓடினா எப்படி!"
"அர்த்தம் இப்போ புரியும். படகின் ஓரத்தை இறுகப் பிடிச்சிக்கிட்டு காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கே பாருங்க!"
அதற்குப் பிறகு அவர் சொன்னது எதுவும் என் காதுகளில் விழவில்லை. நான் தீவுப் பக்கம் திரும்பி நின்றிருந்தேன். திடீர்னு வானமே வெடிக்கிற மாதிரி ஒரு சத்தத்துடன் அந்த மலைத் தீவு தண்ணீர்ப பழத்தைப் போல சிதறி கடலுக்குள் விழுந்தது.
அதற்குப் பிறகு உண்டான சூறாவளிக் காற்றிலிருந்தும் பயங்கரமான அலைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே பல நிமிடங்கள் ஆயின.
மீண்டும் நான் பேட்ராவிடம் கேட்டேன்: "என்ன இதெல்லாம்?"
"நீங்க வைரக்கல்லைத் தோண்டியதால் வந்த ஆபத்து இது. ஒரு கூழாங்கல் அளவு இருந்த அந்த வைரக் கல்லைப் பெயர்த்து எடுத்ததால் ஒரு தீவே முழுமையா ஒண்ணுமில்லாமப் போச்சு!"
"அப்படி நடக்காம இருக்குமா?"- பேட்ரா மீண்டும் சொன்னார்: "தீவு என்பது ஒரு நெருப்பு மலையைத் தவிர வேறு ஒண்ணுமில்ல. மேலே பார்த்த குளம் ஒரு காலத்தில் லாவா உண்டாகுற நெருப்பு குண்டமாக இருந்தது. அதன் வாய்ப்பகுதி எப்படியோ மூடப்பட்டிருச்சு. பிறகு அதில் மழைநீர் விழுந்து விழுந்து அது ஒரு குளமாக மாறிடுச்சு. அதே நேரத்துல அடியில் இருந்த நெருப்பு அணைஞ்சு போகல. குளத்தின் நீர் அப்பப்போ சூடாக இருப்பதுல இருந்து நமக்கு அதைத் தெரிஞ்சுகொள்ள கஷ்டமாக இல்லை. குளத்தின் அடிப்பகுதி அந்த அளவுக்கு உறுதியா இல்ல. நீங்க அந்த வெள்ளை நிறக் கல்லைப் பெயர்த்தவுடன் மூடப்பட்டிருந்த துவாரம் வெளியே தெரிஞ்சுடுச்சு. அதன் வழியா கீழே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குளத்தின் நீர் நுழைஞ்சிடுச்சு. அது ஆவியாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு சிறிய துவாரம்தான் இருப்பதே. வெளியே வர வழி தெரியாத ஆவி உள்ளேயே கிடந்து குமைந்து கடைசியில் மலையையே தூள் தூளாகச் சிதறச் செய்திட்டு வெளியே வந்திடுச்சு. நீங்க ஒரு சின்ன கல்லை எடுத்ததால் வந்த வினை இது!"
ஷ்யாம் அண்ணன் கதை சொன்னதை நிறுத்தியவுடன் கோரா ஆர்வத்துடன் கேட்டான்: "அந்தத் தீவின் பெயர் என்ன ஷ்யாம் அண்ணே?"
ஷ்யாம் அண்ணன் அலட்சியமான குரலில் சொன்னார்: "மூழ்கிப்போன அந்தத் தீவின் பெயரைத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?"
"அந்த நான்கைந்து வைரக் கற்கள்?"- சிபு கேட்டான்.
"அவற்றை ஷ்யாம் அண்ணன் பத்திரமா வைத்திருப்பார்!"
ஷ்யாம் அண்ணன் சிபுவின் கேள்வியைக் கேட்காதது மாதிரி காட்டிக் கொண்டு சிசிரனிடம் சிகரெட்டிற்காகத் தன் கையை நீட்டினார்.