ஷ்யாம் அண்ணன் - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
இந்த முறை நான் ஜெர்மன் மொழியில் பேசினேன். அந்த மனிதர் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டார். எது எப்படியோ ஜெர்மன் மொழி தெரியும் என்பதால் அந்த மனிதர் முழுமையாகக் கழுதை ஆக வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன்.
நான் சொன்னதைப் புரிந்து கொண்ட அந்தத் தாடிக்காரர் மீண்டும் கோபத்துடன் என் முன்னால் குதித்தார். அவர் கேட்டார்: "இந்த அறை உன்னோடதா? அதற்கான ஆதாரம்?"
"ஆதாரமா?"- நான் சிரிப்பை விடாமல் சொன்னேன்: "ஆதாரங்கள் ¬ நீங்க அறையில் சிதறிப் போட்டிருக்கீங்களே!"
"அதுவா?"- என்று சொன்ன அந்த மனிதர் என்னுடைய சூட்கேஸை எடுத்து வராந்தாவில் எறிந்துவிட்டு சொன்னார்: "போ... உன்னோட ஆதாரங்கள் அறைக்கு வெளியே கிடக்கு. இதுக்குப் பிறகும் உனக்கு நல்ல புத்தி வரலைன்னா, உன்னையும் உன் ஆதாரங்களுக்குப் பின்னால் மிதிச்சு வெளியே தள்ளி விட்டுடுவேன்."
அறையின் மத்தியில் அந்த வெள்ளைக்கார மனிதரின் கனமான கேபின்ட்ரங்க் பெட்டி இருந்தது. அதைக் கையில் எடுத்தவாறு நான் சொன்னேன்: "அப்படிச் செய்யிறது கொஞ்சம் மரியாதைக் குறைவான செயலாச்சே, சார்? அதைவிட நீங்க வேற வழியைப் பார்க்குறது நல்லது. உங்க சுமையை நீங்க சுமக்காம இருக்க நான் வழி செஞ்சு தர்றேன்..."
ட்ரங்க் பெட்டியை எடுத்து வராந்தாவைத் தாண்டி நான் வெளியே வீசி எறிந்தேன்.
அடுத்த நிமிடம் அந்த வெள்ளைக்கார மனிதர் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டார். தொடர்ந்து பீரங்கிக் குண்டைப் போல அவர் என் மீது பாய்ந்தார்.
நான் தூசியைத் தட்டிவிட்டு திரும்பிப் பார்த்தேன்.அந்த மனிதர் சாளரத்துக்குப் பக்கத்துல அப்படியே படுத்துக் கிடந்தார். சிறிதுகூட அவரிடம் அசைவு இல்லை.
அறையில் இருந்த மண் கூஜாவிலிருந்து நீர் எடுத்து நான் அவருடைய முகத்தில் தெளித்து, தலையைத் தூக்கினேன்.
அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். கண்களைத் திறக்காமலே அவர் சொன்னார்: "நான் செத்துட்டேன்! சாகாமலே செத்துட்டேன்!"
நான் அவரைப் பிடித்து பலமாகக் குலுக்கிக் கொண்டே சொன்னேன்: "ஆமா... செத்துப் போயிட்டீங்க. செத்து நரகத்துக்கு வந்திருக்கீங்க. கண்களைத் திறந்து பாருங்க. உங்களுக்கு முன்னாடி எமன் நின்னுக்கிட்டு இருக்கான். உங்களை வரவேற்குறதுக்காக அவன் நிக்கிறான்."
அந்த மனிதர் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டே சொன்னார்: "என்ன சொன்னே? அப்படின்னா, நான் சாகல. ஆனா, என் முதுகெலும்பு உடைஞ்சு தூள், தூளா ஆனது மாதிரி நான் உணர்கிறேனே!"
"சேச்சே... அப்படி எதுவும் நடக்கல. எழுந்திரிங்க."
ஆனால், அவர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமலே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டார்: "நீங்க ஜப்பான்காரர்தானே?"
தொடர்ந்து அந்தக் கேள்விக்கு அவரே பதிலும் கூறிக் கொண்டார்: "இருக்காது... ஜப்பான்காரர்களுக்கு முகம் இப்படி இருக்காது."
சிரித்துக்கொண்டே நான் சொன்னேன்: "நான் ஜப்பான்காரன் இல்ல. வங்காளி. வங்காளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?"
"வங்காளம்!"- அந்த வெள்ளைக்காரரின் கண்கள் மலர்ந்தன.
"வங்காளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனான்னு கேக்குறீங்களா? தாகோரை நல்லா தெரிஞ்ச மனிதன் நான்."
"தாகோரா? எந்த தாகோர்?"
"தெரியாதா? ராபீந்த்ர நாதா தாகோர்!"
ஃப்ரெஞ்ச்காரர்கள் கவிஞர் தாகூரின் பெயரை இந்த மாதிரிதான் உச்சரிப்பார்கள் போலிருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன். பிறகு கேட்டேன்: "அவரை உங்களுக்குத் தெரியுமா? அவரை எங்கே பார்த்தீங்க?"
"அறிமுகம்னா பார்த்ததையும் கேட்டதையும் தான் சொல்லுறேன். அதாவது பாரிஸ்ல..."
சற்று மிடுக்கான குரலில் நான் கேட்டேன்: "என்ன சொல்றீங்க?"
வெள்ளைக்காரர் சற்று புரண்டுகொண்டே கூறினார்: "அவர் அங்கே இருந்த சமயத்துல பத்திரிகைகளில் வந்த படங்களைப் பார்த்திருக்கேன்."
நான் கண்களை உருட்டியவாறு சொன்னேன்: "இங்க பாருங்க, வெள்ளைக்காரரே! இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதீங்க. இந்த அறையை விட்டு நீங்க கட்டாயம் போய் ஆகணும். ம்... எழுந்திரிங்க..."
வெள்ளைக்காரர் கெஞ்சுகிற குரலில் சொன்னார்:
"எழுந்திரிக்கிறேன். ஆனா, நான் எந்த நரகத்துக்குப் போகணும்ன்றதையும் நீங்களே சொல்லிடுங்க. பகல் முழுவதும் அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வீட்டுத் திண்ணை கூட எனக்குக் கிடைக்கல. தெருவுல படுத்துத் தூங்கணும்னு நீங்க சொல்றீங்களா?"
அவர் சொனன்தைக் கேட்டு எனக்கு அடக்க முடியாத அளவிற்குச் சிரிப்பு வந்தது. நான் சொன்னேன்: "சரி... இங்கே நீங்க தங்குறதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனா, என்னை மோசடி பண்ணணும்னு நினைக்கக்கூடாது!"
வெள்ளைக்காரர் தன்னுடைய கழுத்தைத் தடவிக் கொண்டே சொன்னார்: "இல்ல. என் கழுத்தை நான் இன்சூர் செய்யல..."
பெட்டியைத் தரையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து அறைக்குள் வைத்துவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு என்னுடன் பல விஷயங்களைப் பற்றியும் அவர் பேச ஆரம்பித்தார். மொஸ்யு பேட்ரா என்னை மாதிரியே ஒரு நாடோடி. சண்டையில இருந்து உறவு ஆரம்பித்ததாலும் இரண்டு பேரும் ஒரே தாதுவால் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதாலும் நாங்கள் மிகவும் சீக்கிரத்திலேயே நண்பர்களாக ஆகிவிட்டோம். நான் இதற்கிடையில் என்னோட வியாபாரத்தைப் பற்றி அவர் கிட்ட சொன்னேன்: மொஸ்யு பேட்ரா தலையை ஆட்டியவாறு சொன்னார்: "சந்தன வியாபாரம் பண்ணுறது என்ன பெரிய விஷயமா? இந்தத் தீவுல இருக்குறதுலயே விலை மதிப்பு அதிகமா உள்ள பொருள் கந்தகம்தான். ஒரே வருடத்துல இங்கே கந்தக வியாபாரம் எப்படி பெரிய அளவுல நடக்கப்போகுதுன்றதை நீங்களே பார்க்கப் போறீங்க!"
அதற்குப்பிறகு பெரிய மனதுடன் அவர் என்னை கந்தக வியாபாரத்தில் பங்காளியாகச் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தார். நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "முதல்ல நீங்க கந்தக சுரங்கத்தைத் தேடிக் கண்டுபிடிங்க. அதற்குப் பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம்."
அதற்கு பேட்ரா வருத்தம் கலந்த குரலில் சொன்னார்:
"அப்படின்னா நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு நினைக்கிறேன். பைத்தியக்காரத்தனமா நான் ஏதோ உளர்றேன்னு நீங்க நினைக்கலாம். சரி... ஒருநாள் நானே அதை நிரூபிக்கிறேன்."
பேட்ராவின் சவால் வெறும் வாய்ச்சவடால் இல்லை என்பது ஒருநாள் புரிந்தது. ஆனா, அது நடந்தது ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு. இந்தக் கால இடைவெளியில் அவரைப் பற்றி நான் விசாரிக்கவும் இல்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவும் இல்லை. இஃபாட்டே தீவில் மலானாவுக்குச் சொந்தமான ஹோட்டலில் இரண்டு நாட்கள் ஒன்றாகத் தங்கினோம்.