Lekha Books

A+ A A-

ஷ்யாம் அண்ணன் - Page 14

shyam annan

"நெருப்புல கிடந்து சாகுறது, செம்பு கொப்பறையில் வறுக்கப்பட்டு இறப்பது- இதுல எதுல உங்களுக்கு விருப்பம்? ரெண்டுல ஒண்ணு தேர்ந்தெடுக்குறதுக்கு உங்களுக்க அனுமதி தர்றேன்."

நான் டாக்டர் ஹில்லின் சார்பாகச் சொன்னேன்: "எங்களை வறுத்தோ பொறிச்சோ கொல்றதுக்கு முன்னாடி தலைவலியைப் போக்குற ஒரு மந்திரசக்தி கொண்ட மாத்திரை கிடைச்சா நல்லா இருக்கும்னு உங்களுக்குத் தோணுதா இல்லையா?"- நான் பண்டு மொழியில் பேசினேன்.

புரோகிதர்மார்கள் அதைத் தடுத்தார்கள்: "வேண்டாம்... வேண்டாம். இந்த மந்திரசக்தி வாய்ந்த மாத்திரை முதல்ல நோயைக் குணப்படுத்தினாலும், கடைசியில அதுவே விஷமா மாறிடுது. அதைத் தொடவே கூடாது!"

தலைவனின் மனதில் ஒரு ஊசலாட்டம் இருப்பதை உணர்ந்த நான் சொன்னேன்: "இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த புரோகிதர்களும், மந்திரவாதிகளும் முடியும்னா தலைவலியைப் போக்குற மாத்திரை ஏதாவது தர்றாங்களான்றதை நாங்களும் கொஞ்சம் பார்க்குறோமே!"

தலைவனின் மனம் மேலும் சற்று அசைவதைப் பார்த்த நான் டாக்டர் ஹில்லைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னேன்: "முட்டாள்களான புரோகிதர்மார்களுக்காக நீங்கள் யாரைத் துன்பத்துக்குள்ளாக்குறீங்க தெரியுமா? நிலாவுல இருந்து நேரா இங்கே இறங்கி வந்த மனிதராக்கும் இவர்..."

நிலாவில் இருந்து இறங்கி வந்த மனிதரா? தலைவன் வானத்தையும் ஹில்லையும் மாறி மாறிப் பார்ப்பதைக் கண்டு அவன் எங்கள் பக்கம் சாய்ந்து விட்டான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது.

புரோகிதர் உரத்த குரலில் கத்தினார்: "எல்லாமே பொய். இவர் நிலவுல இருந்து இறங்கி வந்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு?"

"ஆதாரம் இவரின் முகம் தான் நிறம்..."

"இல்ல... இந்த ஆதாரத்தை நாங்க ஒத்துக்க மாட்டோம். வேற ஏதாவது ஆதாரம் வேணும்"- புரோகிதர்களின் பிடிவாதத்துக்கு முன்னால் தலைவன் எதுவும் செய்ய முடியவில்லை.

அது மிகவும் சாதாரண ஒரு விஷயம் என்பது மாதிரி நான் சொன்னேன்: "சரி... இன்னைக்கு ராத்திரி நிலவில் உங்களுக்கத் தேவையான ஆதாரம் கிடைக்கும்."

சிறிதும் தயங்காமல் நான் சொன்னதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்ட காட்டுவாழ் மனிதர்கள் தங்களுக்குள் என்னவோ மாறி மாறி பேசிக் கொண்டதைப் பார்த்த டாக்டர் ஹில் சொன்னார்: "நீங்க என்ன சொல்றீங்க? வறுத்தோ வேகவச்சோ கொல்லுறதுக்கு பதிலாக இவங்க இனிமேல் தோலை உரிச்சு கொல்லப்போறதா சொல்லப் போறாங்க. எதுக்காக தேவையில்லாம நிலாவைக் கொண்டு வந்து சேர்த்தீங்க."

நான் சொன்னேன்: "பயப்பட வேண்டாம். நான் நிலாவை வச்சு அவங்களுக்கு ஆதாரம் கொடுப்பேன்."

பரிதாபமாக என்னைப் பார்த்த டாக்டர் ஹில் சொன்னார். "வேண்டாம். இக்கட்டான நிலை காரணமா உங்களோட மூளையில பிரச்சினை உண்டாகியிருக்கு. நிலவை வச்சு என்னத்தை நிரூபிக்க முடியும்!"

"இன்னைக்கு என்ன தேதின்னு உங்களுக்குத் தெரியாது. இல்லாட்டி இப்படிப் பேசமாட்டீங்க."

டாக்டர், கொஞ்ச நேரம் யோசிச்சுப் பார்த்துவிட்டு வேகமான குரலில் சொன்னார்: "ஆமா... நான் முழுசா மறந்துட்டேன். இன்னைக்கு சந்திரகிரகணத்தை நாம பார்க்கலாமே!"

"ஆமா... இதைவிட என்ன பெரிய ஆதாரம் வேணும்?"

இருந்தாலும் அதிர்ஷ்டம் எங்களை விட்டு எவ்வளவு தூரத்துல இருக்குன்றதை எங்களால புரிஞ்சிக்க முடியல.

சாயங்கால நேரம் வந்தப்போ எங்கிருந்தோ மேகங்கள் கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்துச்சு. வானத்தை அது முழுமையா மூடிடுச்சு. புரோகிதர்களும் மந்திரவாதிகளும் கூப்பாடு போட ஆரம்பிச்சாங்க. தங்களின் மந்திரச் செயல்களால் இப்படியொரு நிலைமை உண்டாக்கினதா அவர்கள் உரத்த குரல்ல சொன்னாங்க.

தலைவன் நெருப்பென சிவந்த கண்களுடன் வந்து சொன்னான்: "எங்கே? நிலாவில் ஆதாரத்தைக் காட்டுங்க பார்ப்போம்..."

உள்ளே நடுக்கம் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்சியமான குரலில் நான் சொன்னேன்: "உங்க புரோகிதர்களும் மற்றவர்களும் சாதாரண மனிதர்கள் இல்லை. இருந்தாலும் நிலாவுல ஆதாரத்தைக் காட்டுவதற்கு இன்னும் நேரம் வரல."

பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு பந்தத்தை எங்களுக்கு முன்னால் குத்தி வைத்த தலைவன் சொன்னான்: "சரி... இந்த பந்தம் எரிஞ்சு முடியிறது வரை உங்களுக்கு நான் நேரம் தர்றேன். அதற்குப் பிறகு உயிரோட உங்க இதயத்தை வெட்டி எடுத்துடுவேன்!"

"தாராளமா... " என்று சொல்லிய நான் உரத்த குரல்ல சிரிச்சேன். அதே நேரத்துல நான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன்: "ஏ வானத்து தேவதைகளே! ஒரு சூறாவளிக் காற்றடித்து வானத்துல இருக்குற மேகங்களை விரட்டி விடு!... இல்லாவிட்டால், நாங்க தப்பிக்கவே முடியாது."

ஆனா, வானத்து தேவதைகள் கருணை காட்டல. மேகங்கள் மேலும் அதிகமா திரண்டு நின்றன.

பந்தம் முழுசா எரிஞ்சு முடிஞ்சது. அதையே பார்த்துக் கொண்டிருந்த நான் மனசுக்குள்ளே வானத்து தேவதைகளின் பெயர்களைச் சொல்லித் தொழுதேன். அப்போ, திடீர்னு ஒரு சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தேன். குடுவைகளில் போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த மீன்களில் ஒன்று கொஞ்சமும் எதிர்பார்க்காம துடியோ துடின்னு துடிச்சது!

டாக்டர் ஹில் தன் தலைவிதியை நினைத்து நொந்து போய்விட்டார். கவலை தோய்ந்த சிரிப்புடன் அவர் சொன்னார்: "பாவம்... இந்த மீன்கள் கூட நம்ம நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்படுதுங்க."

சிறிது நேரம் அந்த மீனையே பார்த்துக் கொண்டிருந்த நான் திடீர்னு உற்சாகமானேன். நான் சொன்னேன்: "கவலைப்படாதீங்க. டாக்டர் ஹில். இனிமேல் பயப்படத் தேவையே இல்ல. மீன் எங்களின் நெருங்கிய நண்பன். அது தப்பிப்பதற்கான வழியைச் சொல்லித் தந்திருக்கு."

பிறகு உரத்த குரலில் நான் சொன்னேன்: "கிராமத்துத் தலைவன் எங்கே? மந்திரவாதிகளும் புரோகிதர்களும் எங்கே? நிலவில் இருந்து வந்திருக்கும் மனிதனின் வீரம் என்னன்றதை அவங்க காணட்டும்!"

எல்லாரும் ஓடி வந்தார்கள்.

நான் உரத்த குரலில் சிரித்தவாறு சொன்னேன்:

"சாதாரண மேகங்களைக் கொண்டு வானத்தை மூடச் செய்யும் காரியத்தை உங்க ஆளுங்க செய்து காட்டினாங்க. அதே நேரத்துல சந்திரன்ல இருந்து வந்திருக்கும் இந்த மனிதர் இந்தக் காட்டையும் மலையையும் இப்போ நடுங்கச் செய்யப் போறாரு. அதை நீங்களே பார்க்கலாம்."

புரோகிதர்கள் அதைக் கேட்டு சும்மா இருக்கல. அவங்க சொன்னாங்க: "எல்லாம் சுத்த ஏமாற்று வேலை."

காட்டு வாழ் மனிதர்கள் எங்கள் மீது பாய்ந்து விழத் தயாராக இருந்தார்கள். அப்போ திடீர்னு மண்ணுக்குக் கீழே ஆச்சரியமான ஒரு சத்தம் கேட்டது. தொடர்ந்து அலைகள் மீது படகு போறது மாதிரி மலை ஆட ஆரம்பிச்சது. அதோடு நிற்கவில்லை. கிவ் ஏரியில் நீர் பெருகி கரையை உடைத்துக் கொண்டு வெள்ளமென ஓடியது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel