
ஆண்ட்ரியாஸின் அறை ஐந்தாவது மாடியில் இருந்தது. அவனும் கால்பந்து வீரனான நண்பனும் லிஃப்டில் ஏறினார்கள். ஆண்ட்ரியாஸின் கையில் எந்தவித பொருளும் இல்லை. இருந்தாலும், வாடிக்கையாளர்களின் பொருட்களைச் சுமந்து செல்லும் பணியாளோ, லிப்டில் பணிபுரிபவனோ, ஹோட்டலில் வேலை செய்யும் மற்ற மனிதர்களோ அதைப் பார்த்து சிறிது கூட ஆச்சரியப்படவில்லை. எல்லாமே அவனுக்கு விந்தையான ஒரு விஷயமாகத்தான் இருந்தது. இருந்தாலும், ஆச்சரியப்படும் அளவிற்கு அங்கு என்ன நடந்து விட்டது? அவர்கள் இருவரும் தனியாக அறையில் அமர்ந்திருந்தபோது கால்பந்து வீரன் கன்யாக் தன்னுடைய பழைய பள்ளிக்கூட நண்பனான ஆண்ட்ரியாஸைப் பார்த்துச் சொன்னான், ‘‘உனக்கு இப்போ கட்டாயம் சோப் தேவைன்னு நினைக்கிறேன்!”
‘‘ஓ...” - ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘சோப் இல்லாமலும் என்னால இருக்க முடியும். இங்கே சோப் இல்லாமலே ஒரு வாரம் இருக்குறதுன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன். இருந்தாலும் நான் குளிப்பேன். இப்போ எனக்கு ஏதாவது குடிக்கணும் போல இருக்கு. அப்படின்னாதான் இந்த அறைக்கு கவுரவமா இருக்கும்!”
கால்பந்து வீரன் ஒரு குப்பி கொன்யாக் கொண்டு வரச் சொன்னான். இரண்டு பேரும் அதை முழுமையாகக் காலி செய்தார்கள். பிறகு அவர்கள் அறையை விட்டு வெளியே வந்து மோங்மார்த்ரிக்குப் போவதற்காக வாடகைக் கார் பிடித்தார்கள். ஆண்ட்ரியாஸ் சமீபமாகச் சந்தித்த இளம்பெண்கள் இருக்கும் கஃபேயை நோக்கி இருவரும் போனார்கள். அங்கே அமர்ந்து இரண்டு மணி நேரம் பள்ளிக்கூட வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்து விட்டு கன்யாக் ஆண்ட்ரியாஸை வீட்டில், அதாவது - வாடகைக்கு எடுத்திருக்கும் ஹோட்டல் அறையில் கொண்டு போய் விட்டான். அவன் சொன்னான்: ‘‘இப்பவே ரொம்பவும் நேரமாயிடுச்சு. நான் போறேன். நாளைக்கு நான் உனக்கு ரெண்டு ஸுட்டுகள் கொடுத்தனுப்புறேன். பிறகு... உனக்கு ஏதாவது பணம் வேணுமா?” ‘‘வேண்டாம்”- ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘என்கிட்ட தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்க் இருக்கு. அதுவே எனக்குப் பெரிய தொகைதான். நீ வீட்டுக்குப் புறப்படு.”
‘‘நான் ரெண்டு நாட்கள்ல திரும்பவும் வர்றேன்”- கால்பந்து வீரன் கன்யாக் சொன்னான்.
ஆண்ட்ரியாஸ் இப்போது தங்கியிருக்கும் அறையின் எண் எண்பத்தியொன்பது. ரோஸ் நிறத்தால் ஆன ஒரு துணியால் மூடப்பட்ட ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் சுற்றிலும் பார்வையை ஓட்டினான். மங்கலான பொன் நிறத்தால் ஆன கிளியின் தலைகள் வரையப்பட்ட சிவப்பு துணியால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டதை அவன் அப்போதுதான் பார்த்தான். பிறகு, வலது பக்கம் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட மூன்று கைப்பிடிகளைக் கொண்ட வாசல் கதவைப் பார்த்தான். அடர்த்தியான பச்சை நிறமுள்ள தட்டுகள் கொண்ட, படிப்பதற்கு வசதியாக இருக்கும் விளக்குகள் உடைய படுக்கைக்கு வெகு அருகில் போடப்பட்டிருக்கும் மேஜையைப் பார்த்தான். அதற்குப் பின்னால் ஏதாவது ரகசிய அறை இருக்குமோ என்று ஆண்ட்ரியாஸ் சந்தேகப்பட்டான். இதைத் தவிர, கட்டிலுக்குப் பக்கத்தில் கருப்பு வண்ணத்தில் ஒரு தொலைபேசி இருந்தது. படுக்கையில் படுத்தவாறு மிகவும் வசதியாக கையை நீட்டி தொலைபேசி ரிசீவரை எடுத்து பேசக்கூடிய விதத்தில் அது அமைந்திருந்தது. சிறிது நேரம் அறையையே பார்த்துக் கொண்டிருந்த ஆண்ட்ரியாஸுக்கு இனம் புரியாத ஒரு வகை ஆர்வம் உண்டானது. வெளுத்த கைப்பிடியைக் கொண்ட இரண்டாவது கதவை எண்ணியபோது அவன் மனதில் என்னவோ கலக்கம் உண்டானது. ஒருவித கோழைத்தனம் வந்து அவன் மனதை ஆக்கிரமித்துவிட்டிருந்தாலும், ஹோட்டல் அறைகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பற்றி அவனுக்கு சரிவர தெரியாது என்பதாலும், அந்த கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு தன்னையும் மீறி உண்டானது. அந்த எண்ணம் மேலோங்க, அவன் இருந்த இடத்தை விட்டு எழுந்தான். அந்தக் கதவு பூட்டப்பட்டிருக்கும் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால், அதுவே அவனுடைய கை பட்டவுடன், திறந்தது. அவ்வளவுதான் அவன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
அவன் தனக்கு முன்னால் ‘பள பள’வென்று மின்னிக் கொண்டிருந்த தரையைக் கொண்ட குளியலறையைப் பார்த்தான். வெண்மை நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த குளிக்கும் தொட்டியையும், கழிப்பறையும் பார்த்தான். மொத்தத்தில் அவனே கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் அந்த அறை படு அமர்க்களமாக இருந்தது.
அப்போது அவனுக்கு குளிக்கவேண்டும் போல் இருந்தது. அவன் இரண்டு குழாய்களையும் திருகிவிட்டு, சுடுநீரையும் குளிர்ந்த நீரையும் சம அளவில் கலந்து விட்டு தொட்டியை நிரப்பினான். தொட்டிக்குள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக மாற்று ஆடைகள் எதுவும் கைவசம் இல்லையே என்று நினைத்து கவலையில் ஆழ்ந்தான். அணிந்திருந்த சட்டையைக் கழற்றியபோது, அது மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அவன் உணர்ந்தான். குளித்து முடித்து மீண்டும் அதே சட்டையைத்தான் அணிய வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கே என்னவோ போல் இருந்தது.
அவன் குளித்து எவ்வளவோ நாட்கள் ஆகியிருந்தன. அந்த நினைப்புடனே அவன் குளியல் தொட்டிக்குள் இறங்கினான். உற்சாகமாகக் குளித்து முடித்து அவன் வெளியே வந்தான். ஏற்கனவே தான் அணிந்திருந்த ஆடைகளை எடுத்து மீண்டும் அவன் அணிந்து கொண்டான். அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நின்றிருந்தான். ஆர்வம் காரணமாக, அவன் அறையின் கதவைத் திறந்து வெளியே இருந்த இடைவெளியில் நடந்தான். அவனைப் போலவே அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த இளம் பெண்ணை அவன் பார்த்தான். அவள் இளமையான தோற்றத்தை கொண்டவளாகவும், நல்ல அழகியாகவும் இருந்தாள். அவன் பர்ஸ் வாங்கிய கடையில் இருந்த விற்பனை செய்யும் இளம் பெண்ணையும் லேசாக கரோலினையும் அந்தப் பெண் ஞாபகப்படுத்தினாள். அதனால் அவளைப் பார்த்ததும் ‘ஹலோ’ என்று சொல்லி தலையைக் குனிந்தவாறு நின்றான் ஆண்ட்ரியாஸ். அவள் பதிலுக்கு தன் தலையைக் குனிந்தவுடன், அவனுக்கு தைரியம் வந்தது. அவன் அவளைப் பார்த்து சொன்னான், ‘‘நீங்க ரொம்பவும் அழகாக இருக்கீங்க...”
‘‘எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சிருக்கு” - அவள் சொன்னாள். ‘‘இப்போ நீங்க என்னை மன்னிக்கணும். நாளைக்கு நாம பார்ப்போம்” அவள் கீழே இருந்த வழியில் இருட்டில் கலந்து காணாமல் போனாள். அவனுக்குத் திடீரென்று காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் தலையெடுக்க ஆரம்பித்தது. அவன் அந்தப் பெண் வெளியேறிய அறைக்கதவு எண் என்ன என்று பார்த்தான்.
அறைக்கு வெளியே எண்பத்து ஏழு என்று போடப்பட்டிருந்தது. அந்த எண்ணை இதயத்தில் குறித்து வைத்துக் கொண்டான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook