
அவர்கள் இருவரும் தனித்தனி நபர்கள்தானே! அதாவது - வாழ்க்கையில் ஒன்றாக இல்லாமல் விதி என்ற ஒன்றால் இணைக்கப்பட்ட இரு தனித்தனி நபர்கள்!
இரவு அவர்களுக்கு முன்னால் திறந்த பாலைவனம் போல் விரிந்து கிடந்தது.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்று சேரும்போது உண்டாகக்கூடிய முக்கியமான அனுபவத்தை சர்வசாதாரணமாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள் அவர்கள். நம்முடைய நூற்றாண்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும் நபர்களுக்கான மாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் இருவரும் திரைப்படம் பார்க்கச் சென்றார்கள். அங்கு அடர்த்தியான இருட்டு இருப்பதாகக் கூறுவதற்கில்லை. இருட்டு இல்லை என்று கூட கூறலாம். பாதி அளவு இருட்டுதான் இருந்தது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றியவாறு அவர்கள் அமர்ந்திருந்தார்கள், அந்த இளம்பெண்ணும் நம்முடைய நண்பர் ஆண்ட்ரியாஸும். அப்போது கூட அவனுடைய கைகளில் ஆர்வம் சற்று குறைவாகவே இருப்பது நன்றாக நமக்குத் தெரிந்தது. அங்கு உட்கார்ந்திருக்கவே அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இடைவேளை விட்டபோது, அழகான அந்த இளம்பெண்ணை வெளியே அழைத்துக்கொண்டு வந்து ஏதாவது குடிப்பதற்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அவர்கள் வெளியே வந்தார்கள். குடித்தார்கள். அதற்கு மேல் திரைப்படம் பார்ப்பதற்கு அவனுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஒருவித தர்மசங்கடமான நிலையை உணர்ந்த அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தார்கள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே பணம் திருப்பித் தர வேண்டிய கடமை தனக்கு இருப்பதை ஆண்ட்ரியாஸ் நினைத்துப் பார்த்தான். முதல்நாள் காலையில் எழுந்ததைவிட அன்று சீக்கிரமாகவே அவன் படுக்கையை விட்டு எழுந்தான். அழகான அந்த இளம்பெண்ணை அவளே திடுக்கிடும்வண்ணம் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினான்.
அவள் கேட்டாள்: ‘‘ஆண்ட்ரியாஸ், என்ன இவ்வளவு அவசரம்?”
‘‘நான் ஒரு கடனைத் தீர்க்க வேண்டியிருக்கு” - ஆண்ட்ரியாஸ் சொன்னான்.
‘‘என்ன? இன்னைக்கா? இந்த ஞாயிற்றுக்கிழமையா?” - அந்த அழகி கேட்டாள்.
‘‘ஆமா... இன்னைக்கேதான். இந்த ஞாயிற்றுக்கிழமைதான்.”
‘‘கடன் யாருக்குத் திருப்பித் தரணும்? ஆணுக்கா, இல்லாட்டி ஒரு பெண்ணுக்கா?”
‘‘ஒரு பெண்ணுக்கு...” சிறிது தயங்கிய குரலில் சொன்னான் ஆண்ட்ரியாஸ்.
‘‘அவ பேரு என்ன?”
‘‘தெரேஸா...”
அப்போது அந்த அழகான இளம்பெண் படுக்கையைவிட்டு எழுந்து வேகமாகப் பாய்ந்து இரண்டு கைகளையும் சுருட்டி வைத்துக் கொண்டு ஆண்ட்ரியாஸை வேகமாக குத்தத் தொடங்கினாள்.
அடுத்த நிமிடம் அவன் அந்த அறையைவிட்டு ஓடினான். ஹோட்டலை விட்டும்தான். எந்தவித குழப்பமும் இல்லாமல் நேராக புனிதமேரியின் தேவாலயத்திற்குச் சென்று கொச்சு தெரேஸாவிற்குத் தரவேண்டிய இருநூறு ஃப்ராங்க் பணத்தை இன்றாவது கட்டாயம் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் அவன் நடந்தான்.
கடவுளின் விருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் அதையே அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். ஆண்ட்ரியாஸ் மீண்டும் அந்த பத்து மணிக்கு இருக்கும் வழிபாட்டுக் கூட்டத்துக்கு மிகவும் தாமதமாகவே வந்தான். அவன் தன்னையே அறியாமல் முன்பொருமுறை மது அருந்துவதற்காக நுழைந்த எதிரில் இருந்த மதுக்கடையை அப்போது பார்த்தான். அடுத்த நிமிடம் அதற்கு அவன் நுழையவும் செய்தான்.
உள்ளே போய் அமர்ந்து குடிப்பதற்கான மது வகையைக் கொண்டு வரச் சொன்னான். உலகத்திலுள்ள எல்லா தரித்திர மனிதர்களைப் போல அவனும் மிகவும் எச்சரிக்கையுள்ள மனிதனாகத்தான் இருந்தான். ஒன்றிற்குப் பின் இன்னொன்றாக அவனுடைய வாழ்க்கையில் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அற்புதச் சம்பவங்கள் நடை பெற்றிருந்தாலும், அவன் முதலில் தன்னுடைய பர்ஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பார்த்தான். நெஞ்சுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பர்ஸைத் திறந்து பார்த்தபோது, அதில் முன்பு இருந்த தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்க் கிட்டத்தட்ட முழுமையாக செலவாகி விட்டிருந்ததை அவன் பார்த்தான்.
மீதி எஞ்சி இருந்தது வெறும் இருநூற்று ஐம்பது ஃப்ராங்க் தான். அவன் சிறிது நேரம் ஆழமான சிந்தனையில் ஆழ்ந்தான். ஹோட்டலில் இருந்த அந்தப் பெண் தன்னுடைய பணத்தை எடுத்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அதற்காக அவன் சிறிது கூட கவலைப்படவில்லை. சுகத்திற்கு விலை கொடுத்தாகத்தான் வேண்டும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அவன் சுகம் அனுபவித்தான். அதற்கு அவன் விலை தந்துதானே ஆக வேண்டும்! பாதையைக் கடந்து சென்ற தெரேஸாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பு, தேவாலயத்தின் மணியோசை மக்களை வழிபாட்டுக் கூட்டத்திற்கு அழைப்பது வரை இங்கேயே அமர்ந்திருப்பதுதான் சரி என்ற முடிவுக்கு அவன் வந்தான். ஆனால், அதுவரை குடித்தால் என்ன என்று அவன் நினைத்தான். குடிப்பதற்காக என்னவோ கொண்டு வரும்படியும் அவன் சொன்னான். குடித்தான், ஆட்களை வழிபாட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அழைக்கும் மணிகள் தொடர்ந்து ஒலித்தன. அவன் ஹோட்டல் பணியாளை அழைத்துச் சொன்னான். ‘‘வெயிட்டர், பில் கொண்டு வா” அடுத்த நிமிடம் அவன் பணத்தைச் செலுத்திவிட்டு, எழுந்து வெளியே வந்தான். அப்போது அந்த வாசல் கதவிற்கு சற்றுத் தள்ளி மிகவும் உயரமான, விரிந்த தோள்களைக் கொண்ட ஒரு மனிதனைச் சந்தித்தான்.
‘வொய்செஹ்’- அவன் உரத்த குரலில் அழைத்தான். அந்த மனிதனும் அதே வேகத்தில் ‘ஆண்ட்ரியாஸ்’ என்று அழைத்தான். அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் க்யூபெக்கில் ஒன்றாக ஒரே நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்.
‘‘நான் வர்றதுவரை நீ எனக்காக இங்கே காத்திருக்க முடியுமா?” - ஆண்ட்ரியாஸ் கேட்டான். ‘‘இருபது நிமிடங்கள்ல வந்துடுவேன். வழிபாட்டுக் கூட்டம் முடிஞ்சவுடனே வந்துவிட வேண்டியதுதான். அதற்குமேல் ஒரு நிமிடம் கூட ஆகாது...”
‘‘நிச்சயமா முடியாது”- வொய்செஹ் சொன்னான். ‘‘சரி நீ எப்போ இருந்து வழிபாட்டுக் கூட்டங்களுக்குப் போய்க்கிட்டு இருக்கே? வழிபாடு நடத்துற பாதிரியார்களை விட நான் அதிகமா வெறுக்குறது யாரை தெரியுமா? வழிபாட்டுக் கூட்டத்துக்கு போற ஆளுகளைத்தான்...”
‘‘ஆனா, நான் போறது தெரேஸாவைத் தேடி...” ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘நான் அவளுக்கு கொஞ்சம் பணம் தர வேண்டியதிருக்கு.”
“நீ சொல்ல வர்றது புனித தெரேஸாவையா?”- வொய்செஹ் கேட்டான்.
‘‘ஆமா... அவளையேதான்.”
‘‘நீ அவளுக்கு எவ்வளவு தர வேண்டியதிருக்கு?” - வொய்செஹ் கேட்டான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook