புனிதமான குடிகாரன் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
கனவிற்குப் பின்னால் வந்த காலையில், அற்புத சம்பவங்கள் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைப் போல, படு உற்சாகமாகத் தூக்கம் கலைந்து எழுந்தான் ஆண்ட்ரியாஸ். இந்தக் கனவுக்கூட ஒரு அற்புதமான ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றுதான் என்று அவன் மனதிற்குப்பட்டது. மீண்டும் நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. அதற்காக சட்டையைக் கழற்ற முயற்சித்தான். அதைக் கழற்றுவதற்கு முன்பு, சட்டையின் இடது பக்கப் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஆராய்ந்தான். ஓருவேளை தன்னுடைய கவனத்தில் படாமல் அங்கு பணம் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவன் அந்தச் செயலைச் செய்தான். பாக்கெட்டில் கையை விட்டபோது, பண நோட்டுகள் எதுவும் அங்கு இல்லையென்றாலும், சில நாட்களுக்கு முன்பு அவன் வாங்கிய தோலால் ஆன மணி பர்ஸ் இருந்தது. அவன் அந்தப் பர்ஸை வெளியே எடுத்தான். அது மிகவும் விலை குறைந்ததாகவும், ஆங்காங்கே கிழிந்து விட்டிருந்ததாகவும் இருந்தது. ஏற்கனவே யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ஒன்றை விலைக்கு வாங்குகிற போது, அதற்கு மேல் அதில் என்ன எதிர்பார்க்க முடியும்? கிழிந்து போன அந்தப் பசுவின் தோலையே அவன் வெறித்துப் பார்த்தான். காரணம் அந்தப் பர்ஸை எப்போது, எங்கே வாங்கினோம் என்பதே அவனின் ஞாபகத்தில் இல்லை. அந்தப் பர்ஸ் தன்னிடம் எப்படி வந்தது என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்துப் போனான்.
‘என் கையில் எப்படி இந்தப் பர்ஸ் வந்தது?’ தனக்குத் தானே அவன் கேட்டுக் கொண்டான். கடைசியில் அவன் அதைத் திறந்து பார்த்தான். அதில் இரண்டு உறைகள் இருந்தன. ஒருவகை ஆர்வத்துடன் அவன் இரண்டு உறைகளையும் கண்களால் அலசிப் பார்த்தான். ஒரு உறையில் ஏதோ ஒரு நோட்டு இருப்பது கண்ணில் தெரிந்தது. அவன் அதை வெளியே எடுத்தான். அது ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டு.
அவன் அந்த ஆயிரம் ஃப்ராங்க் நோட்டைத் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்தவாறு ஸேன் நதிக்கரையில் இறங்கினான். அங்கிருந்த ஏழை மக்களின் பார்வைகளை அலட்சியப்படுத்தியவாறு அவன் முகத்தையும், கழுத்தையும் மிகவும் மகிழ்ச்சியுடன் நீரில் கழுவினான்.
மீண்டும் சட்டையை எடுத்து அணிந்து அன்றைய நாளுக்குள் தன் காலை வைத்தான். சிகரெட் வாங்குவதற்காக ஒரு பெட்டிக்கடையைத் தேடிப்போன காரியத்துடன் அவன் அந்த நாளைத் தொடங்கினான்.
சிகரெட் வாங்குவதற்குத் தேவையான சில்லறை நாணயங்கள் இப்போதும் அவனுடைய பாக்கெட்டில் மீதியிருந்தன. இருந்தாலும், கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த அந்த ஆயிரம் ஃப்ராங்க் நோட்டை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் எப்போது வரும் என்று அவனுக்கே தெரியாமல் இருந்தது. அவன் அணிந்திருந்த ஆடைகளும், அவனுடைய முக அமைப்பும் ஆயிரம் ஃப்ராங்கிற்குச் சொந்தக்காரனாக அவன் இருந்தும், உலகத்தின் பார்வையில், இன்னொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால்- இந்த உலகத்தில் சுயநினைவுடன் உலவிக் கொண்டிருப்போரின் பார்வையில் என்ன எண்ணத்தை அவனைப் பற்றி உண்டாக்கும் என்பதையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. இருந்தாலும், புதிதாக தனக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தின் விளைவாக கிடைத்த அந்த ஆயிரம் ப்ராங்க் நோட்டை உள்ளேயே வைத்துக் கொண்டிருக்காமல், வெளியே எடுப்பது நல்லது என்ற முடிவுக்கு அவன் வந்தான். அதே நேரத்தில் ஒருவகை எச்சரிக்கை உணர்வையும் மனதில் வைத்துக் கொண்டு அவன் பெட்டிக் கடையில் இருந்த மனிதனிடம் இப்படிக் கேட்டான்: ‘‘ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டுக்கு உங்களால் சில்லரை தர முடியுமா? என் கையில சில்லரை இருக்கு. இருந்தாலும், அந்த நோட்டை மாற்றினா, எனக்கு சந்தோஷமா இருக்கும்.”
ஆண்ட்ரியாஸே ஆச்சரியப்படுற மாதிரி அந்தப் பெட்டி கடையின் சொந்தக்காரன் சொன்னான், ‘‘அது ஒரு புறம் இருக்கட்டும். எனக்கு ஒரு ஆயிரம் ஃப்ராங்க் நோட்டு இப்போ தேவைப்படுது. நீங்க சரியான நேரத்துல இங்கே வந்திருக்கீங்க.” - அந்த மனிதன் ஃப்ராங்கிற்குப் பதிலாக மாற்று பண நோட்டுக்களைத் தந்தான். அதை வாங்கிய ஆண்ட்ரியாஸ் பெட்டிக் கடையோடு சேர்த்து இருந்த மது அருந்தும் சாலையில் போய் சிறிது நேரம் அமர்ந்தான். மூன்று கண்ணாடி டம்டளர் நிறைய வெள்ளை மது அருந்தினான். விதி ஏற்படுத்தித் தந்த அந்த அதிர்ஷ்டத்தை அவன் அங்கு மது அருந்தித் கொண்டாடினான்.
7
மது அருந்தும் சாலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதன் மேலாளரின் முதுகுக்குப் பின்னால் சுவரில் சட்டமிடப்பட்ட ஒரு புகைப்படம் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆல்ஸ்கோவிட்ஸில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தன்னுடன் படித்த ஒரு நண்பனின் முகச்சாயல் அந்தப் புகைப்படத்தில் தெரிந்தது. அவன் மேலாளரைப் பார்த்துக் கேட்டான். ‘‘இந்தப் புகைப்படத்தில் இருக்குறது யாரு? எனக்கு நல்லா தெரிஞ்ச ஆளு மாதிரி தெரியுது” அதைக் கேட்டு மதுச்சாலை மேலாளரும் அங்கு எப்போதும் வரக்கூடிய வாடிக்கையாளர்களும் உரத்த குரலில் சிரித்தார்கள். ‘என்ன?’ - அவர்கள் தங்களுக்குள் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டார்கள். ‘‘இந்த ஆளுக்கு இந்தப் புகைப்படத்துல இருக்குறது யாருன்னு தெரியலையாம்...”
அவர்கள் அப்படி சொன்னதற்குக் காரணம்- அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மனிதனை மிகச் சாதாரண மனிதர்களுக்குக் கூட தெரியும் என்பதுதான். அது- புகழ்பெற்ற ஸைலேஷாவின் கால்பந்து வீரனான கன்யாக்தான். இந்த உண்மை பாலங்களுக்குக் கீழே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் குடிகாரனான நம்முடைய ஆண்ட்ரியாஸைப் போன்ற ஒரு மனிதனுக்கு எப்படித் தெரியும்? எது எப்படியோ, இந்த விஷயம் தனக்குத் தெரியாமல் போனதற்காக அவன் மிகவும் வெட்கப்பட்டான். அதுவும் ஆயிரம் ஃப்ராங்க் நோட்டை மாற்றி அதிக நேரம் ஒன்றும் ஆகிவிடாத இந்த நேரத்தில், தனக்கு இப்படியொரு சூழ்நிலையா என்று அவன் நொந்து போனான். ஆண்ட்ரியாஸ் மெதுவான குரலில் சொன்னான், ‘‘உண்மையாகவே இந்த ஆளை எனக்கு நல்லா தெரியும். இந்த ஆள் என்னுடைய நண்பனா இருந்தவன். ரொம்பவும் நெருக்கமான நண்பன்னு சொல்றதுக்கில்ல. அது ஒண்ணுதான்.” அதற்குமேல் எங்கே அவர்கள் ஏதாவது கேள்விகள் கேட்டு விடுவார்களோ என்று எண்ணி, அதிலிருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் அவன் வேகமாக பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இப்போது அவனுக்குச் சரியான பசி உண்டாகத் தொடங்கியது. அவன் அருகிலிருந்த உணவு விடுதியை நோக்கி நடந்தான். சாப்பிட்டுக் கொண்டே, அதனுடன் சிவப்பு ஒயினையும் சேர்த்துக் குடித்தான். வெண்ணெய் சாப்பிட்டு முடித்து, காபியையும் பருகினான். மதியம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம் என்று மனதிற்குள் திட்டம் போட்டான்.