புனிதமான குடிகாரன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
அதனால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து குடித்தார்கள். இரண்டாவது முறை குடித்தற்கு ஆண்ட்ரியாஸ் பணம் தந்தான். குழந்தை முகத்தைக் கொண்ட அந்த மனிதர் எழுந்தபோது அவர் நல்ல தடிமனான ஆள் என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்டான். அவர் தன் பர்ஸில் இருந்த ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அதில் தன்னுடைய முகவரியை எழுதித் தந்தார். அதே பர்ஸில் இருந்து ஓரு நூறு ஃப்ராங்க் நோட்டையும் எடுத்து அதையும் ஆண்ட்ரியாஸிடம் தந்துவிட்டு சொன்னார். ‘‘நீங்க நாளைக்கு கட்டாயம் வந்து நான் சொன்ன வேலையைச் செய்யணும்ங்கறதுக்காக இந்த முன் பணத்தைத் தர்றேன். நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு சரியா வந்துடணும். சரியா? மறந்துடக் கூடாது. மீதி பணத்தை, வேலை முடிஞ்ச உடனே தர்றேன். அப்போ திரும்பவும் நாம ஒண்ணா உட்கார்ந்து மது அருந்துவோம். சரிதானே? நான் விடை பெற்றுக் கொள்கிறேன் நண்பரே!” இவ்வளவையும் சொன்ன அந்த தடிமனான, குழந்தை முகத்தைக் கொண்ட அந்த மனிதர் புறப்பட்டார். பணத்தை எடுத்த அதே பர்ஸில் இருந்துதான் விசிட்டிங் கார்டையும் அவர் எடுத்தார் என்ற ஒரு விஷயம்தான் ஆண்ட்ரியாஸின் மனதில் திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டிருந்தது. தன் கையிலும் இப்போது பணம் இருப்பதாலும், மேலும் பணம் வருவதற்கான சூழ்நிலை இப்போது உண்டாகி விட்டிருப்பதாலும், சொந்தத்தில் ஒரு பர்ஸ் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தான் அவன். மனதில் இந்த விஷயத்தை நினைத்துக் கொண்டே தோல் சாமான்கள் விற்கும் கடை எங்கே இருக்கிறது என்பதை விசாரித்தவாறு அவன் நடந்தான். முதல் கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்தான். கருப்பு வண்ணத்தில் ஆடையும், ஆடை அழுக்காகி அந்தப் பெண் அவளின் கவுண்டருக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவள் ஒரு அழகி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே முடிவு செய்தான் ஆண்ட்ரியாஸ். சுருண்ட தலைமுடியைக் கொண்டிருந்த அவளின் கையில் சற்று கனமான ஒரு ப்ரேஸ்லெட் இருந்தது. தொப்பியை எடுத்து அவளுக்கு மரியாதை செலுத்தியவாறு அவன் உற்சாகத்துடன் சொன்னான். ‘‘நான் ஒரு பர்ஸ் வாங்குறதுக்காக வந்தேன்.” அந்தப் பெண் ஆணட்ரியாஸின் கிழிந்து போன ஆடைகளைப் பார்த்தாள். அவனைத் தாழ்வான எண்ணத்தில் அவள் பார்க்கவில்லை. மாறாக, தன் முன்னால் நின்றிருக்கும் மனிதனை எடை போடும் விதத்தில்தான் இருந்தது அவளின் பார்வை. காரணம்- அவளுடைய அந்தக் கடையில் விலை அதிகமானது, சராசரி விலையைக் கொண்டது, மிகவும் குறைந்த விலையைக் கொண்டது என்ற மூன்று நிலைகளைக் கொண்ட பர்ஸ்களும் விற்பனைக்கு இருந்தன. அவள் ஒரு வார்த்தைகூட கூறாமல் ஒரு ஏணியின் மேல் ஏறி எல்லாவற்றுக்கும் மேலே இருந்த தட்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தாள். தங்களிடமிருந்து பழையவற்றைக் கொடுத்து புதியவற்றை வாங்கிச் செல்லும் நபர்கள் கொடுத்த பழைய பர்ஸ்கள் ஏராளமாக அதில் இருந்தன.
அவளுடைய கால்கள் நல்ல சதைப்பிடிப்புடன் அழகாக இருப்பதையும், அவளின் பாதங்கள் மிகவும் சிறிய காலணிகளுக்குள் மறைந்திருப்பதையும் ஆண்ட்ரியாஸ் கவனித்தான். அதே நேரத்தில் அப்படிப்பட்ட பாதங்களை கைகளால் தடவிய, அவற்றை முத்தமிட்ட, பாதி மறந்துபோன அந்த கடந்து போன இனிமையான நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். பொதுவாக பெண்களின் முகங்களை அவன் மறந்து போயிருந்தான். பெண்களின் முகங்களை யார் முகத்தையும் அவன் ஞாபகப்படுத்திப் பார்க்காமல் இருந்தான் - ஒரே ஒரு பெண்ணின் முகத்தைத் தவிர எந்தப் பெண்ணுக்காக அவன் சிறைக்குப் போய்விட்டு வந்தானோ, அந்தப் பெண்ணை மட்டும். இதற்கிடையில் அந்த இளம்பெண் ஏணிப்படிகளை விட்டு இறங்கியிருந்தாள். அவள் தன் கையில் இருந்த பெட்டியைத் திறந்தாள். எல்லாவற்றுக்கும் மேலே இருந்த ஒரு பர்ஸை பார்க்கக் கூடச் செய்யாமல் அவன் எடுத்தான். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தொப்பியைத் தலையில் அணிந்து அந்த இளம்பெண்ணைப் பார்த்து சிரித்தான். அவளும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். சிறிது கூட கவனமே செலுத்தாமல் அவன் அந்தப் புதிய பர்ஸை பணத்தோடு சேர்த்து பாக்கெட்டிற்குள் வைத்தான். அந்தப் பர்ஸ் ஒரு பொருட்டாகவே அப்போது அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கு பதிலாக ஏணிப்படியும், இளம் பெண்ணின் கால்களும், பாதங்களும் அவன் மனம் முழுக்க நிறைந்திருந்தன. அதன் காரணமாக அவன் ஒரு காலத்தில் ஆனந்த அனுபவங்கள் பலவற்றை அடைந்த இடங்களைத் தேடி நேராக மாங்மார்த்ரியை நோக்கி நடந்தான். ஒரு அகலம் குறைந்த சந்தில் பெண்கள் மது அருந்தும் இடத்தை அவன் பார்த்தான்.
பெண்களுக்கு மத்தியில் ஒரு மேஜையில் அமர்ந்து அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை மது வாங்கினான். அங்கிருந்த ஒருத்தியை அவன் தேர்ந்தெடுத்தான். சரியாகச் சொல்வதாக இருந்தால் தனக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்திருந்த பெண்ணையே அவன் தேர்ந்தெடுத்தான். அவன் அவள் இருக்கும் அறைக்குள் சென்றான். அப்போது மதிய நேரமாக இருந்தது. இருந்தாலும் அவன் மறுநாள் காலைவரை அங்கேயே உறங்கினான். அதற்குக் காரணம் அந்தப் பெண் அவனிடம் பெரிய மனதுடன் நடந்து கொண்டதுதான். அவள் அவனை அங்கேயே உறங்க அனுமதித்தாள்.
மறுநாள் காலையில் வெள்ளிக்கிழமையன்று, தடிமனான அந்த நவநாகரீக மனிதருக்காக அவன் வேலை செய்யப்போனான். அந்த மனிதரின் மனைவிக்கு வீட்டுச் சாமான்களை ஒதுக்கி வைப்பதிலும் அவன் உடனிருந்து உதவ வேண்டும். இதுதான் அவனுடைய வேலை. பொருட்களை எடுத்துக் கொண்டு போகும் பணியாட்கள் அவர்களது வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தார்கள். இருந்தாலும் ஆண்ட்ரியாஸ் செய்ய வேண்டிய வேலைகள் என்றும் சிறியதும் பெரியதுமாக நிறையவே அங்கு இருந்தன. வேலை செய்ததால் தன்னுடைய உடம்பின் சதைக்கு மீண்டும் பலம் கிடைத்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த வேலையைச் செய்ததில் அவனுக்கு மிகவும் சந்தோஷம் கிடைத்தது. பொதுவாக அவன் வேலை செய்து வளர்ந்தவன்தான். தன்னுடைய தந்தையைப் போல அவனும் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாக இருந்தான். அதற்கு முன்பு தன் தந்தையைப் போலவே சிறிது காலம் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். வீட்டின் சொந்தக்காரி அவன் மன அமைதி கெடும் விதத்தில் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அவன் இருக்க வேண்டியதைப் போல அவள் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தாள். தான் போக வேண்டுமா வர வேண்டுமா என்று ஒரே குழப்பத்திற்கு ஆளாகி விட்டான் அவன்.