புனிதமான குடிகாரன் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
மனதிற்குள் திட்டம் போட்டு நல்ல முறையில் வாழ்க்கையை நடத்துவதற்காக பயன்பட்டிருக்க வேண்டிய அந்தப் பணம் சிறிதுகூட யோசனையே இல்லாமல் தேவையில்லாமல் கரோலினுக்காக தான் செலவிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அப்போது அவன் நினைத்தான்.
அதனால் கரோலின்மீது அவனுக்கு ஒரு வகையில் கோபம் உண்டானது. பணம் கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கொஞ்சமும் நினைப்பு இல்லாமல் இருந்த அவனுக்கு பணத்தின் மதிப்பு என்ன என்பது திடீரென்று தோன்ற ஆரம்பித்தது. தன்னைப் போன்ற ஒருவன் ஒரே ஒரு ஐம்பது ஃபிராங்க் நோட்டை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பது என்பது வெட்கக்கேடான ஒரு விஷயமாக அவனுக்குத் தோன்றியது. மீண்டும் தான் மதிப்புள்ள மனிதனாக மாறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதற்கு தான் உடனே ஒரு குவளை பெர்னோ அருந்தினால்தான் சரியாக வரும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.
அந்தப் பகுதியிலேயே இருந்து வருபவர்களுக்கு மரியாதை தரக்கூடிய ஒரு ஹோட்டலைப் பார்த்து தேர்ந்தெடுத்து அங்கு போய் அமர்ந்து ஒரு பெர்னோ கொண்டு வரச் சொன்னான். மதுவின் போதையில் இருக்கும் நிமிடத்தில் பாரிஸில் தான் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையே இல்லாமல் இருப்பது அவன் ஞாபகத்தில் வந்தது. அவன் பேப்பர்களை எடுத்து படித்து பார்த்தான். போலண்ட், ஸைலீஷாவின் ஆல்ஸ்கோவிட்ஸில் இருந்து ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாக ஃப்ரான்ஸுக்கு வந்ததால், உடனே அவன் இந்த நாட்டை விட்டு புறப்பட்டே ஆக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
6
கிழிய ஆரம்பித்திருக்கும் தாள்களை மேஜையில் தனக்கு முன்னால் வைத்த அவன், பல வருடங்களுக்கு முன்பு ஃப்ரான்ஸுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தேவைப்படுகிறது என்று வந்திருந்த பத்திரிகைச் செய்தியைப் பார்த்து இங்கு புறப்பட்டு வந்த நாளை அவன் நினைத்துப் பார்த்தான். வாழ்க்கை முழுவதும் தூரத்தில் இருக்கும் பல நாடுகளுக்கும் போக வேண்டும் என்று மனப்பூர்வமாக அவன் ஆசைப்பட்டான். அதனால் க்யூபெக்கிற்கு சுரங்கங்களில் வேலை செய்ய அவன் போனான். அங்கு தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஷேபிக் என்ற பெயரைக்கொண்ட தம்பதியுடன் அவனும் வாடகைக்கு ஒரு அறையை எடுத்து தங்கினான். அப்போது அவன் தன்னுடைய நண்பனின் மனைவி மீது காதல் கொண்டான். அதை அறிந்த அந்தக் கணவன் ஒருநாள் தன்னுடைய மனைவியைக் கொல்ல முயற்சிக்க, ஆண்ட்ரியாஸ் அவனைக் கொன்று தீர்த்தான். அந்த மனிதனைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆண்ட்ரியாஸ் இரண்டு வருடங்கள் சிறைக்குள் இருக்க நேர்ந்தது. அந்த நண்பனின் மனைவிதான் கரோலின்.
தான் இந்த நாட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று கூறும் அந்த தாள்களையே பார்த்தவாறு ஆண்ட்ரியாஸ் அமர்ந்திருந்தான். அவன் தலைக்குள் பலவிதப்பட்ட சிந்தனைகளும் அலைமோதிக் கொண்டிருந்தன. மிகவும் மனக்கவலைக்கு ஆளான அவன் இன்னொரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான்.
கடைசியில் இருந்த இடத்தை விட்டு எழுந்தபோது அவனுக்குப் பசி தோன்றியது. அது சாதாரணமாக மது அருந்துவோருக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை பசி. சில நிமிடங்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வகைப்பட்ட அந்தப்பசி உணவு சம்பந்தப்பட்டது அல்ல. அத்தகைய அனுபவத்தைப் பெறுகிற ஒரு மனிதன் தனக்கு மிகவும் பிடித்த மது வகையை மனதில் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அந்தப் பசியை உடனே இல்லாமற் போக வைக்கலாம்.
ஆண்ட்ரியாஸ் தன்னுடைய குடும்பத்தின் பெயரையே மறந்து விட்டிருந்தான். ஆனால், தனக்குக் குடியுரிமை இல்லாமற்போன பேப்பர்களைப் பார்த்தபோது, அவனுக்கு அது ஞாபகத்தில் வந்தது. கர்ட்டக் என்பதுதான் அவனின் குடும்பப்பெயர். அவனுடைய முழுப் பெயர் ஆண்ட்ரியாஸ் கர்ட்டக் என்பதாகும். பல வருடங்களுக்குப் பிறகு தன்னையே கண்டெடுத்த மாதிரி அவன் உணர்ந்தான்.
மேலும் பணம் சம்பாதிப்பதை சாத்தியமில்லாத ஒரு விஷயமாக ஆக்கிய விதியை நினைத்து, குழந்தைத்தனமான முகத்தையும் மீசையையும் கொண்ட அந்தத் தடித்த மனிதரை இந்த ஹோட்டலுக்கு வரவிடாமல் செய்து அவரை வேறொரு ஹோட்டல் பக்கம் போக வைத்த விதியைப் பார்த்து அவனுக்கு மனதில் தாங்க முடியாத கோபம் வந்தது. ஆச்சரியப்படும் வகையில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் வாழ்க்கையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடைபெற்று விட்டால், அதோடு முழுக்க முழுக்க மனிதர்கள் பழக்கமாகி விடுகிறார்கள். ஆமாம்... மனிதர்களின் வழக்கமே இதுதான். அதுவாகவே வரும் சூழ்நிலைகளாலோ, கொஞ்சமும் எதிர்பார்க்காமலோ ஒருமுறை தங்கள் மீது கொட்டப்பட்ட வசதிகள் அடுத்தடுத்து கிடைக்காமல் போனால், தாங்கள் ஏதோ வஞ்சிக்கப்பட்டதைப் போல் மனிதர்கள் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மக்கள் எப்போதுமே இப்படித்தான். நிலைமை அப்படி இருக்கும்போது ஆண்ட்ரியாஸ் மட்டும் எதற்கு தன்னுடைய சூழ்நிலையை நினைத்து கவலைப்பட வேண்டும்? அன்றைய மீதிப் பொழுதையும் வேறு வேறு மது அருந்து சாலைகளுக்குள் நுழைந்தே போக்கினான் அவன். அனுபவித்துக் கொண்டிருந்த - அற்புதங்கள் சம்பவித்த இனிய நாட்கள் முடிவுக்கு வந்து, அதற்கு முன்னால் இருந்த பழைய காலம் மீண்டும் வந்து அவனைத் தொற்றிக் கொண்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அமைதியான ஒரு மனிதனால் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வது கூட கஷ்டம். அதே நேரத்தில் மது அருந்திய ஒரு மனிதன் தன்னிடம் உண்டாகும் சிறு சிறு மாற்றங்களைக் கூட உணர்ந்து... ஆண்ட்ரியாஸ் தன் நிலைமையைப் புரிந்து கொண்டு ஸேன் நதியின் கரைகளையும் பாலங்களையும் தேடி திரும்பவும் சென்றான்.
கடந்த ஒரு வருடமும் எப்படி அவன் நடந்தானோ, அதே போன்று பாதி பகலும், பாதி இரவும் அவன் அங்கேயே படுத்து தூங்கினான். அவ்வப்போது ஒரு நண்பர் இல்லாவிட்டால் இன்னொரு நண்பரிடம் என்று ஓசியில் பிராந்தி பாட்டில் வாங்கி குடித்துக் கொண்டிருந்தான். வியாழக்கிழமை வரை இதுதான் நடந்தது.
புனித தெரேஸா ஒரு சிறு பெண் குழந்தை வடிவத்தில் வந்து தன்னுடைய கள்ளங்கபடமற்ற குரலில் தன்னைப் பார்த்து இரவு நேரத்தில் இப்படிக் கேட்டதாக அவன் கனவு கண்டான். ‘‘ஏன் ஞாயிற்றுக்கிழமை வந்து என்னை நீ பார்க்கல?” பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த மகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் மனதில் கற்பனை பண்ணினானோ, அதே போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை தெரேஸா. அவனுக்குப் பெண் குழந்தை இல்லை! கனவில் வந்த குழந்தை தெரேஸாவைப் பார்த்து அவன் சொன்னான், ‘‘அப்படி நீ என் கிட்ட பேசக்கூடாது, நான் உன் அப்பான்ற விஷயத்தை மறந்துட்டியா? அதற்கு அந்தப் பெண் குழந்தை சொன்னாள்: ‘‘மன்னிக்கணும் அப்பா, தயவு செய்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புனித மேரியின் தேவாலயத்துக்கு வந்து என்னை நீங்க பார்ப்பீங்களா?”