
அவன் அந்தச் சிறுமியை நோக்கி தட்டுத் தடுமாறி நடந்தான். தலை குனிந்து மரியாதை செலுத்தியவாறு அந்தச் சிறுமியைப் பார்த்து அவன் கேட்டான், ‘‘நீ இங்கே என்ன பண்ணுற?”
‘‘என்னோட அப்பாவும் அம்மாவும் வழிபாட்டுக் கூட்டத்துக்கு போயிருக்காங்க. நான் அவங்களுக்காகக் காத்திருக்கேன். எல்லா நாலாவது ஞாயிற்றுக்கிழமைகள்லயும் அவங்க என்னைப் பார்ப்பாங்க” என்று அவள் சொன்னாள். வயதான ஒரு மனிதன் திடீரென்று தனக்கு முன்னால் வந்து நின்று தன்னுடன் பேச ஆரம்பித்ததைப் பார்த்த அவளுக்கு கூச்சமும், பதைபதைப்பும் உண்டாயின். அவனைப் பார்த்து அந்தச் சிறுமி லேசாக பயப்படவும் செய்தாள்.
ஆண்ட்ரியாஸ் கேட்டான், ‘‘ஆமா... உன் பேரு என்ன?”
‘‘தெரேஸா” - அந்தச் சிறுமி சொன்னாள்.
‘‘ஹா...” - ஆண்ட்ரியாஸ் உரத்த குரலில் கத்தினான். ‘‘எவ்வளவு நல்லதா போச்சு! இவ்வளவு பெருமைகள் கொண்ட புனிதச் சிறுமி இவ்வளவு மகத்துவம் கொண்ட சிறுமி தெரேஸா, நீண்ட நாட்களா நான் அந்தப் பக்கம் போகாத காரணத்தால், என்னைத் தேடி வருவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல...”
‘‘நீங்க என்ன சொல்றீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியல...” - அவன் பேசியதைக் கேட்டு திகைத்துப் போன சிறுமி சொன்னாள்.
‘‘அது உன்னோட நல்ல குணத்தைக் காட்டுது”-ஆண்ட்ரியாஸ் சிறுமியைப் பார்த்து சொன்னான்: ‘‘அது உன்னோட மரியாதை! ஆனா, அது ஏன் என்பதை நான் புரிஞ்சுக்குறேன். கொஞ்ச நாட்களா உனக்கு நான் இருநூறு ஃப்ராங்க் கடன் பட்டிருக்கேன். அந்தப் பணத்தை உன்னைத் தேடி வந்து திருப்பித்தர என்னால முடியல.”
‘‘நீங்க எனக்கு எந்தப் பணமும் தர வேண்டியதே இல்லை. ஆனா, என் பர்ஸ்ல கொஞ்சம் பணம் இருக்கு. தயவு செய்து அதை எடுத்துக்கங்க. என்னை வெறுமனே விடுங்க. என்னோட அப்பாவும் அம்மாவும் எந்த நேரத்துலயும் இங்கே வரலாம்.”
அவள் தன் பர்ஸை திறந்து, அதிலிருந்து நூறு ஃப்ராங்க் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் தந்தாள்.
வொய்செஹ் இந்த சம்பவத்தை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நாற்காலியை விட்டு எழுந்து இரண்டு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். அதைக் குடிப்பதற்காக மது அருந்தும் இடத்திற்கு ஆண்ட்ரியாஸை அவன் பலவந்தமாக இழுத்தான். ஆண்ட்ரியாஸும் மது அருந்தும் இடத்திற்குச் செல்வதற்காக அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். அடுத்த நிமிடம் ஒரு கோணியைப் போல அவன் தரையில் நிலை தடுமாறி விழுந்தான். வொய்செஹ் உட்பட மது அருந்தும் சாலையில் இருந்த எல்லாரும் ஒருவித பதைபதைப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்தனர். எல்லோரையும் விட அந்தச் சிறுமி மிகவும் பதைபதைத்துப் போய் நின்றாள். அருகில் மருத்துவர்கள் யாரும் இல்லாததாலும், மருந்துக் கடைகள் என்று எதுவும் இல்லாததாலும் அவனை நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தைத் தாண்டி இருக்கும் தேவாலயத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றார்கள். வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் அங்கிருக்கும் பாதிரியார்களுக்கு ஏதாவது தெரியும் என்று நம்பிக்கையற்ற ஹோட்டல் பணியாட்கள் கூட முழுமையாக நம்பினார்கள். தெரேஸா என்ற அந்தச் சிறுமியும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.
அவர்கள் நம்முடைய ஆண்ட்ரியாஸை தேவாலயத்தின் ஆலோசனை அறைக்குள் கொண்டு சென்றார்கள். அவனுடைய அதிர்ஷ்டக்குறைவு என்றுதான் சொல்ல வேண்டும், அவனுடைய பேசும் சக்தி முழுமையாக அவனிடமிருந்து இல்லாமற் போயிருந்தது. அவனால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். அவன் சிறுமி தெரேஸாவிற்குத் தருவதற்காக வைத்திருந்த பணம் இருக்கும் சட்டையின் இடதுபக்க பாக்கெட்டிற்குள் தன் கையை அவன் நுழைத்தான். தொடர்ந்து அவன் சொன்னான்: ‘‘மிஸ்.தெரேஸா” அவன் ஒருமுறை நீண்ட பெருமூச்சு விட்டான். அடுத்த நிமிடம் அவன் உயிர் பிரிந்தது.
கடவுள் நம் எல்லோருக்கும், எல்லா குடிகாரர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு கஷ்டமில்லாத மரணத்தைத் தருவாராக!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook