புனிதமான குடிகாரன் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6382
‘‘இருநூறு ஃப்ராங்க்.”
‘‘அப்படின்னா நானும் உன் கூட வர்றேன்” என்றான் வொய்செஹ்.
அப்போதும் மணிகள் முழங்கிக் கொண்டுதான் இருந்தன. அவர்கள் இருவரும் தேவாலயத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு அவர்கள் நுழையவும், வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வொய்செஹ் கிண்டலான குரலில் சொன்னான், ‘‘நீ எனக்கு முடிஞ்சா, நூறு ஃப்ராங்க் தா. வெளியே என்னை எதிர்பார்த்து ஒரு ஆள் காத்து நின்னுகிட்டு இருக்கான்றதே இப்போத்தான் என் ஞாபகத்துல வருது. நான் அந்தப் பணத்தை அவனுக்குக் கொடுக்கலைன்னா என்னை உதைச்சிட்டுத்தான் அவன் மறுவேலை பார்ப்பான்.”
அவ்வளவு தான்- தன் கையிலிருந்த இரண்டு நூறு ஃப்ராங்க் நோட்டுகளையும் எடுத்து அவன் கையில் தந்த ஆண்ட்ரியாஸ் சொன்னான், உன்னை ஒரு நிமிடம் கழிச்சு நான் வெளியில வந்து பார்க்குறேன்.”
தெரேஸாவிற்குத் திரும்பத் தரவேண்டிய பணம் கைவசம் இல்லாத நிலையில் வழிபாட்டுக் கூட்டத்தில் அதிக நேரம் இருப்பது தேவையில்லாத ஒன்று என்று அவன் மனதில் நினைத்தான். இருந்தாலும் பொறுமையாக ஐந்து நிமிடங்கள் அங்கேயே அவன் நின்றான். பிறகு, மது அருந்தும் இடத்தை நோக்கி நடந்தான். வொய்செஹ் அவனுக்காக அங்கு காத்து நின்றிருந்தான்.
அந்த நிமிடம் முதல் அவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டார்கள்.
உண்மையாய் சொல்லப்போனால் வொய்செஹ்ஹை எதிர்பார்த்து வெளியே அவன் கடன்பட்டிருக்கும் நண்பன் யாரும் அவனுக்காக காத்திருக்கவில்லை. ஆண்ட்ரியாஸ் தந்த இரண்டு நூறு ஃப்ராங்க் நோட்டுகளில் ஒன்றை எடுத்து அவன் மிகவும் கவனமாக கைக்குட்டைக்குள் இருக்குமாறு வைத்தான். மீதி இருந்த இன்னொரு நூறு ஃப்ராங்க் நோட்டைக் கொடுத்து குடிப்பதற்கு மதுபானம் வாங்கினான். மீண்டும் ஒன்று, மீண்டும் ஒன்று, மாலை நேரம் வந்ததும் இருவரும் சேர்ந்து தங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான இளம் பெண்கள் தங்கியிருக்கும் வீட்டைத் தேடி போனார்கள். மூன்று நாட்கள் அங்கேயே தங்கி கொட்டமடித்தார்கள். மீண்டும் வெளியே வந்தபோது, செவ்வாய்க்கிழமை ஆகியிருந்தது. வொய்செஹ் ஆண்ட்ரியாஸிடம் ‘‘நாம திரும்பவும் வர்ற ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். இதே நேரம்... இதே இடம்...” என்று கூறிவிட்டு விடை பெற்றான்.
‘‘சரி... மீண்டும் சந்திப்போம்...”
‘‘சந்திப்போம்...” - வொய்செஹ் சொல்லிவிட்டு மறைந்தான்.
12
மழை பெய்து கொண்டிருக்கும் மதிய நேரமாக இருந்தது அது. வொய்செஹ் அந்த இடத்தை விட்டுப்போய் ஒரு நிமிடம்தான் ஆகியிருக்கும். பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. இல்லாவிட்டால் பெரிய ஒரு மழை பெய்து கொண்டிருப்பதாக ஆண்ட்ரியாஸுக்குத் தோன்றியிருக்கலாம். மழையில் தன்னுடைய நண்பனை மீண்டும் தொலைத்துவிட்டதாக அவன் நினைத்தான். அவன் பாக்கெட்டில் முப்பத்தைந்து ஃப்ராங்க் மட்டுமே மீதியிருந்தது. அதிர்ஷ்டத்தின் ரேகைகள் முழுமையாகப் படர்ந்திருக்கும் மனிதன் தான் என்ற எண்ணத்தை மனதில் வைத்தவாறு மீண்டும் கொஞ்சமும் எதிர்பார்க்காமலே அந்த சம்பவங்கள் தன் வாழ்க்கையின் நடக்கும் என்ற அற்புத நம்பிக்கையுடன், எல்லா தரித்தரர்களையும் போல, எல்லா குடிகாரர்களையும் போல தான் நம்பும் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க அவன் தீர்மானித்தான். அந்த எண்ணத்துடன் அவன் ஸேன் நதிக்கரையில் இருக்கும் நன்கு அறிமுகமான படிகளில் இறங்கினான். வீடு இல்லாமல் இருக்கும் எல்லோரையும் போய் அவன் பார்த்தான்.
அப்போது படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த அவனுக்கு ஏற்கனவே அறிமுகமானவரைப் போல் தோன்றிய ஒரு மனிதரை அவன் பார்த்தான். மிகவும் பவ்யமாக அந்த மனிதரைப் பார்த்து ஆண்ட்ரியாஸ் வணக்கம் சொன்னான். வயதான, நவநாகரிக தோற்றத்தில் இருந்த அந்த மனிதர் ஆண்ட்ரியாஸை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டார்.
‘‘என் அன்பான மனிதரே, உங்களுக்கு ஏதாவது பணம் தேவையா?” மூன்று வாரங்களுக்கு முன்பு அதே இடத்தில் சந்தித்த அந்த மனிதரின் குரல் தான்ன அது என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்டான். அவன் சொன்னான்: ‘‘உங்களுக்கு நான் பணம் தர வேண்டியதாயிருக்குன்ற விஷயத்தை நான் மனசுல வச்சுக் கிட்டுத்தான் இருக்கேன். அந்தப் பணத்தை புனித தெரேஸா கிட்ட கொண்டு போய் கொடுத்துர்றதா நான் வாக்குறுதி தந்ததையும் மறக்கல. ஆனால், நான் நினைச்சது மாதிரி காரியங்கள் தரணும்னு மூணு முறை முயற்சி செய்தேன்.
“ஏதாவது தப்பு நடந்திருக்கும்...” வயதான, நவநாகரிகமான உடைகள் அணிந்த அந்த மனிதர் சொன்னார். நீங்க அறிமுகமானதுனால எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமை இன்னும் கிடைக்கல. நீங்க வேற யாரோ ஆள்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, நீங்க ஒரு தர்ம சங்கடமான நிலையில இருக்கீங்கன்ற உண்மையை என்னால புரிஞ்சுக்க முடியுது. இப்போ நீங்க செயிண்ட் தெரேஸாவைப் பற்றி சொன்னீங்க. நான் தனிப்பட்ட முறையில் என்னை தெரேஸாகிட்ட முழுமையா ஒப்படைச்சிட்டேன். அதனால நீங்க தரவேண்டிய பணத்தை முழுசா முன் கூட்டியே உங்ககிட்ட தர்றதுக்கு நான் தயாரா இருக்கேன். பணம் எவ்வளவுன்னு தயவு செய்து சொல்ல முடியுமா?”
‘‘இருநூறு ஃப்ராங்க்”- ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘ஆனா, உண்மையாகவே என்னை உங்களால புரிஞ்சிக்க முடியலியா? நான் ஒரு வாக்கு கொடுத்தா, அதை எப்படியும் காப்பாற்றணும்னு நினைக்கிற ஆளு. நான் கொடுக்க வேண்டிய பணத்தை உங்களால அனுப்பி வைக்க முடியாது. எனக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. ஆனா, எனக்குன்னு முகவரி எதுவும் கிடையாது. ஒவ்வொரு ராத்திரியும் இந்தப் பாலங்கள்ல ஏதாவது ஒண்ணுக்குக் கீழேதான் படுத்து தூங்கிக்கிட்டு இருக்கேன்.”
‘‘அதனால என்ன?” - அந்த மனிதர் சொன்னார், ‘‘நானும் அங்கே தான் உறங்குறேன். எங்கிட்ட இருந்து பணம் வாங்கிக்கிறதுக்காக உங்களுக்கு நான் நன்றி சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு என்கிட்ட நீங்க நடந்துக்குறீங்க. காரணம் என்ன தெரியுமா? நானும் செயிண்ட் தெரேஸாவுக்கு அந்த அளவுக்கு கடன் பட்டிருக்கேன்...”
‘‘அப்படின்னா...”- ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘உங்க விருப்பம்...” அந்த மனிதர் தந்த பணத்தை ஆண்ட்ரியாஸ் பெற்றுக் கொண்டான். அவர் படிகளில் ஏறிப் போவது வரை அவன் அவரைப் பார்த்தவாறு நின்றிருந்தான். பிறகு அவன் படிகளில் ஏறி நேராக அவன் எப்போதும் செல்கின்ற ரூதெகதர் வென்த், தாரி-பாரியில் இருக்கும் ரஷ்யன்- ஆர்மேனியின் உணவு விடுதியை நோக்கி நடந்தான். சனிக்கிழமை இரவு வரை அவன் அங்கே தங்கினான். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதை அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில் புனித மேரியின் தேவாலயத்தில் தான் செய்து தீர்க்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதையும் அவன் எண்ணிப் பார்த்தான்.