Lekha Books

A+ A A-

புனிதமான குடிகாரன் - Page 8

punidamaana kudikaaran

‘‘இவர் கூப்பிட்டதுதான் என் காதுல முதல்ல விழந்துச்சு” ஆண்ட்ரியாஸ் பணத்தைத் தந்தான். அவன் சட்டையின் உட்பகுதியில் இடது பக்க பாக்கெட்டில் வைத்திருந்த பணம் முழுவதையும் வெளியே எடுத்தான். பில்லுக்கான பணத்தைக் கொடுத்து முடித்தபோது, சின்ன தெரேஸாவுக்குத் தான் கொடுக்க வேண்டிய பணம் தன் கையில் தற்போது இல்லை என்பதை உள்ளே போயிருக்கும் மதுவின் போதை சிறிதளவே இருந்த அந்த நிமிடத்திலும் - ஒருவித அதிர்ச்சியுடன் அவன் நினைத்துப் பார்த்தான். இருந்தாலும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். சமீப நாட்களாக அடுத்தடுத்து கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஆச்சரியப்படும் வகையில் பல சம்பவங்கள் தன் வாழ்க்கையில் நடைபெற்று வருவதை அவன் நினைத்துப் பார்த்தான். நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில் கொடுக்கும்படி பணம் தனக்குக் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினான் அவன். அதை வைத்து அடுத்த வாரம் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விடலாம் என்று அவன் தீர்மானித்தான்.

‘‘நீங்க ஒரு பணக்காரர்னு என்னால புரிஞ்சுக்க முடியுது” அவர்கள் வெளியே வந்த போது கரோலின் சொன்னாள். ‘‘சின்ன தெரேஸா உங்களுக்காக செயல்பட்டுக்கிட்டு இருக்கான்னு நான் நினைக்கிறேன்.”

மீண்டும் அவன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தான். அதனால் தான் சந்தேகப்பட்டது சரிதான் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். ஒரு திரைப்படத்திற்கு தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவள் அவனிடம் ஆசைப்பட்டாள். அவன் அவளைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றான். திரைப்படம் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது! அதனால் தன்னுடைய கவனத்தைச் செலுத்தி அவனால் படத்தைப் பார்க்க முடியவில்லை. கரோலினின் தோள் மீது சாய்ந்து அவன் உறங்கினான். பிறகு, இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த ஒரு நடன அரங்கிற்கு அவர்கள் சென்றார்கள். அவன் நடனம் ஆடி ஏகப்பட்ட நாட்கள் ஆகிவிட்டதால், கரோலினுடன் நடனம் ஆடலாம் என்று வந்த அவனுக்கு எப்படி நடனம் ஆடவேண்டும் என்பதே தெரியாமல் போய்விட்டது. மற்ற நடனக்காரர்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து அவளை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டு போனார்கள். அவள் அப்போதும் இளமை தாண்டவமாடக் கூடியவளாகவும் யாரும் விரும்பக் கூடியவளுமாக இருந்தாள். அவன் ஒரு மேஜைக்கருகில் தனியாக அமர்ந்து பெர்னோ குடித்தான். கரோலின் மற்ற ஆண்களுடன் சேர்ந்து நடனமாடப் போனதையும், அந்தச் சமயங்களில் தான் மட்டும் தனியே அமர்ந்து மது அருந்திய கடந்து போன நாட்களை நினைத்துப் பார்த்த அவனுக்கு இப்போதும் அதே விஷயம் நடப்பதைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை நினைக்கும் போது அவனுக்கு மனதில் வெறுப்புத்தான் உண்டானது. என்ன நினைத்தானோ வேகமாக எழுந்து அவளுடன் நடனமாடிக் கொண்டிருந்த ஆணிடமிருந்து அவளை பலவந்தமாகப் பிடித்து இழுத்து அவன் சொன்னான். ‘‘இப்பவே நாம வீட்டுக்குப் போகணும்” அவன் அவளை ஆடவிடாமல் தடுத்து அவளின் கழுத்தைப் பிடித்து இழுத்தான். பணத்தைத் தந்து விட்டு அவளுடன் வீட்டிற்கு அவனும் புறப்பட்டான். அவள் அங்கு அருகில் தான் வசித்துக் கொண்டிருந்தாள்.

எல்லாம் அந்தக் காலத்தில் நடந்தது போலவே இருந்தது. அவன் சிறைக்குப் போவதற்கு முன்பிருந்த பழைய காலத்தைப் போலவே.

5

வன் காலையில் சீக்கிரமே கண் விழித்தான். கரோலின் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள். திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு பறவை இனிமையாக ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு படுக்கையிலே அசையாமல் படுத்துக் கிடந்தான். இரண்டு நிமிடங்கள் அப்படியே கிடந்திருப்பான். அப்போது அவன் மனம் பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்த ஒரு வார காலத்தில் எத்தனையோ ஆச்சரியப்படும் சம்பவங்கள் அவனுடைய வாழ்க்கையில் நடைபெற்றிருக்கின்றன. அவன் அடுத்த நிமிடம் தலையைத் திருப்பிப் பார்த்தான். கரோலின் அவனுக்குப் பக்கத்தில் படுத்துக் கிடந்தாள். முதல் நாள் பார்த்தபோது தான் சரியாக கவனிக்காமல் விட்ட சில விஷயங்களை அப்போது அவனால் பார்க்க முடிந்தது. அவளுக்கு வயது ஏறியிருக்கிறது. வெளியில் போய் தடித்து, நீளமாக மூச்சை விட்டுக் கொண்டு, காலம் கடந்துபோன ஒரு பெண்ணைப் போல அவள் அந்த அதிகாலை நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். கடந்து போய்விட்டன என்று தோன்றிய வருடங்கள் உண்டாக்கிய மாற்றங்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் தன்னுடைய மனதில் உண்டாகியிருக்கும் மாற்றங்களையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. கரோலினை எழுப்பாமல் தான் மட்டும் படுக்கையை விட்டு எழ அவன் தீர்மானித்தான். சிறிது கூட எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில் விதியின் விளையாட்டால் முந்தைய நாள் தாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்ததைப் போல, இப்போது அவன் அந்த இடத்தை விட்டு போக முடிவெடுத்தான். ஓசை வராத வண்ணம் ஆடைகளை அணிந்து இன்னொரு நாளில், அவனுக்கு நன்கு அறிமுகமான மற்றொரு நாளில் அவன் கால் வைத்து நடந்து போனான்.

ஒரு விதத்தில் சொல்லப்போனால் அவனுக்குப் பழக்கமில்லாத நாள் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். காரணம் வழக்கமாக பணம் வைக்கப்படும் அவனுடைய சட்டையின் இடது பக்க பாக்கெட்டில் மீதியிருந்தது ஐம்பது ஃப்ராங்க் நோட்டும், கொஞ்சம் சில்லறைகளும்தான் என்பதை அவனும் தெரிந்து கொண்டான். பல வருடங்களாக பணத்தின் அருமை தெரியாத அந்த மனிதன், அது எதைச் சொல்லாமல் சொல்லுகிறது என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க முயற்சிக்காத அவன் அப்போது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனான். பாக்கெட்டில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் எப்படி வழக்கத்திற்கு மாறாக சிறிதளவு பணம் மட்டுமே இருந்தால் அதிர்ச்சிக்கு ஆளாவானோ அத்தகைய ஒரு அதிர்ச்சியைத்தான் அவன் அடைந்தான். காலை நேரத்தில் வெளிறிப்போன ஆள்நடமாட்டமில்லாத பாதையில் நடந்து செல்லும் போது மாதக்கணக்காக ஒரு சல்லிக்காசு இல்லாமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன்னிடம், கடந்த இரண்டு நாட்களாக இருந்த பண நோட்டுகள் இப்போது இல்லாமற் போனதையும், அதன் விளைவாக தான் மீண்டும் வறியவர்கள் கூட்டத்தில் ஒருவனாக ஆகிப் போனதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய வறுமை நாட்கள் எங்கோ தூரத்தில் இருக்கும் நினைவாக மட்டுமே அவனுக்கு அப்போது தெரிந்தது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel