புனிதமான குடிகாரன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
குடித்து முடித்ததும், மீண்டும் ஒரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். திரும்பவும் மூன்றாவதாக ஒரு பெர்னோ கொண்டு வரச்சொன்னான். சற்று நீரின் அளவைக் குறைத்தான். நான்காவது முறை பெர்னோவைக் குடிக்கும் போதுதான் இப்போது அருந்துவது இரண்டாவது முறையா, ஐந்தாவதா, ஆறாவதா என்று தெரியாத அளவுக்கு அவன் ஆளாகிவிட்டான். இந்த மது அருந்தும் சாலையில் தான் இப்போது செய்து கொண்டிருப்பது என்ன... நகரத்தின் ஒரு மூலையில் இருக்கும் இந்த இடத்திற்கு தான் வந்தது எப்படி என்பதைப் பற்றிய ஞாபகமே அவனுக்கு இல்லாமல் போனது. தனக்கு ஏதோ ஒரு பொறுப்பு இருக்கிறது, அந்த மிகவும் முக்கியமான பொறுப்பை தான் நிறைவேற்ற வேண்டியதிருக்கிறது என்பது மட்டும் அவனின் மனதிற்கு நன்கு தெரிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் எழுந்தான். நேராக நடந்து வாசலைக் கடந்த போது, எதிரில் இருந்த தேவாலயம் கண்ணில் பட்டது. அப்போதுதான் அவனுக்கு எல்லா விஷயங்களும் ஞாபகத்திற்கு வந்தன. தான் இப்போது எங்கிருக்கிறோம் என்பதும், தான் செய்ய வேண்டிய அந்த மிக முக்கியமான வேலை என்ன என்பதும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதும் அடுத்தடுத்து அவன் ஞாபகத்தில் வந்தன. அவன் தேவாலயத்தை நோக்கி தன் கால்களை எடுத்து வைக்க முற்பட்டபோது, அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் அவனுக்குக் கேட்டது. ‘ஆண்ட்ரியாஸ்’ என்று அழைக்கும் ஒரு பெண்ணின் குரல். வேறு ஏதோ ஒரு யுகத்தில் இருந்து கேட்பது மாதிரி அவனின் காதுகளில் அந்தக் குரல் வந்து விழுந்தது. குரல் வந்த வலது பக்கத்தை அவன் திரும்பிப் பார்த்தான். யாருக்காக அவன் சிறைக்குச் சென்றானோ, அந்தப் பெண்ணின் முகம் அவன் மனக் கண்ணில் தோன்றியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி... கரோலின்தான்.
கரோலின்! முன்பு எப்போதும் பார்த்திராத ஆடைகளையும், தொப்பியையும் அணிந்து கொண்டு அவள் அவனைப் பார்த்தாள். அவளுடைய முகம் இப்போதும் முன்பு அவன் பார்த்த மாதிரியே தான் இருந்தது. தன்னை நோக்கி நீட்டிய அவளின் கைகளை அவன் தன்னுடைய கரங்களால் பற்றினான். ‘‘என்ன ஆச்சரியம். இப்படியொரு சந்திப்பா?”- அவள் சொன்னாள். அது உண்மையாகவே அவள் குரல் தான். அதாவது, கரோலினுடைய குரல்.
‘‘நீங்க தனியாவா இருக்கீங்க?” அவள் கேட்டாள்.
‘‘ஆமா...” அவன் சொன்னான். ‘‘நான் தனியாகத்தான் இருக்கேன்...”
‘‘அப்படின்னா வாங்க... நாம பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு” - அவள் சொன்னாள்.
‘‘ஆனா... ஆனா...” அவன் சொன்னான்; ‘‘நான் ஒரு ஆளை இங்கே சந்திக்க வேண்டியிருக்கு.”
‘‘அது ஒரு பெண்ணா...?”
‘‘ஆமா...” அவன் பயத்துடன் சொன்னான்.
‘‘யார் அது?”
‘‘சின்ன தெரேஸா...”- அவன் சொன்னான்.
‘‘அவ ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல...” - கரோலின் சொன்னாள். அப்போது அவர்களை ஒரு வாடகைக் கார் கடந்து சென்றது. கரோலின் தன்னுடைய குடையை ஆட்டிக் காண்பித்து அந்தக் காரை நிறுத்தும்படி செய்தாள். அவள் காரின் டிரைவரிடம் ஒரு முகவரியைக் கொடுத்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை ஆண்ட்ரியாஸ் புரிந்து கொண்ட போது அவன் காருக்குள் கரோலினுடன் அமர்ந்திருந்தான். கார் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த, சிறது கூட தெரியாத தெருக்கள் வழியாக கார் போய்க் கொண்டிருந்தது. அது எங்கே போகிறது என்ற விஷயம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்!
அவர்கள் நகரத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தார்கள். இயற்கை தன்னுடைய அழகை அள்ளி வீசி எறிந்திருக்கும் ஒரு இடத்தில், பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் - வரப்போகும் வசந்த காலத்தை அறிவிக்கும் பசும்புல் வெளிக்கு அருகில் கார் நின்றது. பெரும்பாலும் இலைகள் அதிகம் இல்லாத சில மரங்களைத் தாண்டி ஒரு உணவு விடுதி காட்சியளித்தது.
கரோலின் காரை விட்டு முதலில் இறங்கினாள். அவனுக்கு நன்கு பழக்கமான பாதங்கள் ஓசை உண்டாக்க அவன் முழங்காலுக்கு மேலே ஏறி அவள் கீழே இறங்கினாள். காருக்குப் பணம் கொடுத்தது அவள் தான். அவன் அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் இருவரும் உணவு விடுதியை நோக்கி நடந்தார்கள். பச்சை வண்ண வெல்வெட்டால் ஆன இருக்கை கொண்ட ஒரு பெஞ்சில், அவன் சிறைக்குப் போவதற்கு முன்பு இருந்த இளமை நாட்களைப் போல, அவர்கள் மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். எப்போதும் போல இருவருக்கும் தேவைப்படும் உணவு விஷயங்கள் என்னென்ன என்பதை அவள் தான் சொன்னாள். அவள் அவனையே பார்த்தாள். அவளைப் பார்ப்பதற்கு அவன் ஏனோ பயப்பட்டான்.
‘‘இவ்வளவு நாட்களா நீங்க எங்கே இருந்தீங்க?” - அவள் கேட்டாள்.
‘‘கண்ட கண்ட இடங்கள்ல...” - அவன் சொன்னான். ‘‘அதாவது குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி ஒரு இடத்துல இல்லை. நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு ரெண்டு நாட்கள்தான் ஆகுது. வெறுமனே தெருத் தெருவா பிச்சைக்காரன் மாதிரி சுத்திக்கிட்டு மது குடிச்சிக்கிட்டு பாலங்களுக்குக் கீழே தூங்கி வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருந்ததுனால நாம ரெண்டு பேரும் இவ்வளவு நாட்களா சந்திக்க முடியாமப் போச்சு. நீ நல்ல வசதியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்” என்றான்.
‘‘ஏன் சொல்ல மாட்டீங்க?” - அவள் அவனைப் பார்த்துச் சொன்னாள். ‘‘குடிச்சிட்டு வேலை வெட்டி எதுவும் இல்லாம பாலங்களுக்குக் கீழே தூங்கிக்கிட்டு இருக்குறப்போ கூட உங்களுக்கு இந்த தெரேஸாவைச் சந்திக்கிறதுக்கு நேரம் கிடைக்குது. நான் மட்டும் அந்தப் பக்கம் வரைலைன்னா, நீங்க அவ கூடத்தான் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...”
அவன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. இருவரும் மாமிசம் சாப்பிட்டார்கள். அதைச் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்தான். வெண்ணெயும் பழங்களும் வந்தன. மது காலியானவுடன், பல வருடங்களுக்க முன்பு கரோலினுடன் வாழும்போது உண்டான சில விஷயங்களை நினைத்துப் பார்த்த அவன் ஒருவித குழப்ப நிலைக்கு ஆளானான். அவளிடமிருந்து ஓடி ஒளிய வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. அவன் வெயிட்டரை அழைத்துச் சொன்னான். ‘‘வெயிட்டர் பில் கொண்டு வா”. ஆனால், அவள் அவனைத் தடுத்தாள். ‘‘வேண்டாம் வெயிட்டர், அது என் விஷயம்...” புத்திசாலியான வெயிட்டர் அங்கு நின்றவாறு சொன்னான்.