புனிதமான குடிகாரன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
1934-ம் ஆண்டு ஒரு வசந்த காலத்தின் மாலை நேரத்தில் வயதாகிப் போன ஒரு மிடுக்கான தோற்றத்தைக் கொண்டிருக்கும் மனிதர், ஸேன் நதியின் பாலத்தை விட்டு இறங்கும் கற்படிகள் வழியே கீழே இறங்கினார். இங்குதான் எல்லாருக்குமே இதற்கு முன்பு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயமான - இனிமேலும் இதைப் பற்றி ஞாபகப்படுத்தத் தேவையில்லாத ஒரு செய்தியான பாரிஸில் சொந்த வீடு இல்லாத மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், இரவு நேரங்களில் தங்குவதற்காக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வீடு இல்லாத மனிதன், நவநாகரீகமாக ஆடையணிந்து, வெளிநாடுகளில் இருக்கும் விஷயங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணியைப் போல் தோற்றம் தரும் அந்த வயதான மிடுக்கான மனிதருக்கு நேராக நடந்து சென்றான். இந்த வீடு இல்லாத மனிதன் மற்ற மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் பரிதாபப்படக்கூடியவனாகவோ, கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன் மாதிரியோ தெரியவில்லை. இருந்தாலும் நன்றாக ஆடையணிந்து காட்சியளித்த அந்த மனிதனுக்கு இந்த வீடு இல்லாத மனிதன் உதவிகள் தேவைப்படும் ஓரு மனிதனாக தெரிந்தான். அவன் அந்த மனதரின் கண்களுக்கு அப்படித் தோற்றம் தந்ததற்குக் காரணம்? அதற்கான காரணம் என்னவென்று நம்மால் கூறமுடியாது. முன்பே கூறியதுபோல் அது ஒரு மாலை நேரம். பாலத்தின் மேற்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நதிக்கரையின் கீழ்ப்பகுதி மிகவும் இருண்டு போய் காணப்பட்டது.அந்த வீடு இல்லாத மனிதன் லேசாக ஆடிக் கொண்டிருந்தார். அவன் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அவன், அந்த வயதான நன்றாக உடையணிந்திருந்த மிடுக்கான தோற்றத்தைக் கொண்டிருந்த அந்த மனிதரைக் கொஞ்சம் கூட கவனிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அந்த மிடுக்கான மனிதரோ, ஆடிக்கொண்டிருந்த அந்த மனிதரையே சற்று தூரத்தில் நின்றவாறு வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மிடுக்கான மனிதர் ஆடாமல் அந்த வீடு இல்லாத மனிதனை நோக்கி நடந்தார். அந்த மனிதன் நடந்துவரும் வழியில் தான் போய் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் நடந்தார். சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் நேருக்கு நேராக பார்த்தவாறு நின்றார்கள்.
‘‘சகோதரா, நீங்க எங்கே போறீங்க? “ அழகாக ஆடையணிந்து, வயதான அந்த நவ நாகரீக தோற்றத்தைக் கொண்ட மனிதர் கேட்டார்.
அந்த ஏழை மனிதன் அவரை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு சொன்னான்.
‘‘எனக்கு ஒரு சகோதரன் இருக்குற விஷயமே இதுவரை தெரியாது. எங்கே நான் போறேன்னும் எனக்குத் தெரியாது!”
‘‘அப்படின்னா நான் உங்களுக்கு ஒரு வழி காட்டுறேன்.” அந்த மனிதர் சொன்னார், ‘‘நான் உங்கக் கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன். நீங்க மாட்டேன்னு சொல்லிடக்கூடாது”
‘‘நான் நீங்க எது சொன்னாலும் கேக்குறேன். நான் உங்க சேவைக்காக காத்திருக்கேன்” வெறுமனே சுற்றித் திரியும் அந்த வீடு இல்லாத மனிதன் சொன்னான்.
‘‘கஷ்டங்கள் இல்லாத மனிதர் இல்லை நீங்கள்னு எனக்குத் தெரியும். கடவுள் உங்களை என்கிட்ட அனுப்பியிருக்காரு. நான் சொல்றதுக்காக நீங்க மன்னிக்கணும். இப்போ உங்களுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுதுன்ற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். என்கிட்டே தேவைக்கும் அதிகமாகவே பணம் இருக்கு. உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்ல முடியுமா? இனி வர்ற கொஞ்ச நாட்களுக்கு என்ன தேவையோ அதை...”
அந்த ஏழை மனிதன் ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னான். ‘‘இருபது ஃப்ராங்க்.”
‘‘அது போதாது...” அந்த மனிதர் சொன்னார். ‘‘உங்களுக்கு எப்படியும் இருநூறு ஃப்ராங்காவது தேவைப்படும்னு நான் நினைக்கிறேன்.”
அதைக்கேட்டு அந்த வீடு இல்லாத மனிதன் ஒரு அடி பின்னால் தள்ளி நின்றான். அவன் கீழே விழுந்து விடப் போவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது. கஷ்டப்பட்டு கால் இடறிக் கீழே விழாமல் பார்த்துக் கொண்ட அந்த மனிதன் சொன்னான், ‘‘உண்மையா பார்க்கப் போனா இருபது ஃப்ராங்கைவிட இருநூறு ஃப்ராங்க்ல தான் எனக்கு விருப்பம். ஏன்னா, அந்தளவுக்கு கௌரவம் உள்ள மனிதன் நான். ஒருவேளை நான் சொல்வதை உங்களால புரிஞ்சுக்க முடியாமல் போகலாம். சில காரணங்களால் நீங்க தர்றதா சொல்ற தொகையை வாங்கிக்க முடியாத நிலையில் நான் இருக்கேன். முதல் காரணம் நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. இரண்டாவது காரணம் இந்தத் தொகையை நான் எப்போது எப்படி திருப்பித் தரப்போறேன்றது எனக்கே தெரியாத ஒரு விஷயம். மூணாவது காரணம் நீங்க இந்தத் தொகையை திருப்பிக் கேட்க முடியாது. ஏன்னா, எனக்குன்னு முகவரி எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் வேற வேற பாலத்துக்குக் கீழே நான் தங்கிக்கிட்டு இருக்கேன். இருந்தாலும் உங்கக்கிட்ட சொன்னது மாதிரி நான் ஒரு கௌரவமான மனிதன்தான்...”
‘‘எனக்கும்தான் முகவரி இல்ல...” வயதான அந்த மிடுக்கான மனிதர் சொன்னார். ‘‘ஒவ்வொரு நாளும் ஏதாவது பாலத்துக்குக் கீழே என்னையும் பார்க்கலாம். இருந்தாலும், நான் தர்றதா இருக்க இருநூறு ஃப்ராங்க்கை நீங்க கட்டாயம் வாங்கிக்கணும்னு நான் உங்களைக் கெஞ்சி கேட்டுக்கிறேன். உங்களைப் போல ஒரு ஆளுக்கு இது சர்வ சாதாரணமான விஷயம். இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதைப் பற்றி நீங்கள் யோசிக்கிறதா இருந்தா, இதை ஏதாவது ஒரு வங்கியில் என் கணக்குல போட்டுட்டா போச்சுன்னு சொல்லமுடியாத நிலைமையில நான் இருக்கேன். அது என்னன்னா சமீபத்துல லீஸியாதெரேசான்னு சின்ன கன்னியாஸ்திரியின் கதையைப் படிச்சு கிறிஸ்தவனா மாறிட்டேன். மேரி தேவாலயத்துல இருக்குற சின்ன தெரெசாவின் சிலையை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த இடத்தை கண்டுபிடிக்கிறது உங்களுக்கு ஒண்ணும் கஷ்டமான ஒரு விஷயம் இல்லை. அதுனால இந்த இருநூறு ஃப்ராங்க் உங்க கைக்கு வந்த பிறகு, உங்களுடைய மனசாட்சி இந்த சின்ன தொகையின் கடன்காரனா உங்களை அனுமதிக்கத் தயாரா இல்லைன்னு வர்றப்போ, நீங்க புனிதமேரி தேவாலயத்துக்குப் போங்க. பணத்தை அங்கே வழிபாட்டுக் கூட்டம் நடத்துற பாதிரியார் கையில் கொடுத்துடுங்க. நீங்க யாருக்காவது கடமைப்பட்டிருக்கிறதா இருந்தா, அது இந்த சின்ன தெரேசாவுக்குத்தான். இனி மறந்துடக் கூடாது. மேரி தேவாலயம்...”
‘‘அப்படியா...?” - அவன் சொன்னான். ‘‘நீங்க என்னையும் என்னோட அந்தஸ்து என்னன்றதையும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க. சொன்ன வாக்கைக் காப்பாத்துவேன்னு நான் உங்களுக்கு உறுதி தர்றேன். ஆனா, ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் என்னால வழிபாட்டுக் கூட்டத்துக்கு போக முடியும்!”