புனிதமான குடிகாரன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
‘‘எனக்கும் முழு சம்மதம்தான். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்க போனா போதும்”- வயதான அந்த மனிதர் சொன்னார். அவர் தன் பர்ஸிலிருந்து இருநூறு ஃப்ராங்க்கை எடுத்து ஆடிக் கொண்டிருந்த மனிதனிடம் கொடுத்தவாறு சொன்னார். ‘‘நான் உங்களுக்கு நன்றி சொல்றேன்.”
‘‘சந்தோசம்” அந்த மனிதன் சொன்னான். அடுத்த கணம் இருட்டில் அவன் மறைந்தே போனான்.
இதற்கிடையில் நதிக்கரையின் கீழ்ப்பகுதி மேலும் இருண்டது. இருந்தாலும் பாலத்திற்கு மேலும், படகுத் துறையிலும் பாரீஸின் உற்சாகமான இரவின் வருகையை அறிவிப்பது மாதிரி பிரகாசமான விளக்குகள் எரியத் தொடங்கின.
2
அழகாக ஆடையணிந்திருந்த மிடுக்கான மனிதரும் இருட்டுக்குள் மறைந்தார். உண்மையாகவே வினோதமான பல அனுபவங்களும் அவருக்கு வாழ்க்கையில் கிடைத்திருக்கின்றன. கஷ்டங்கள் நிரம்பிய நிரந்தர வாழ்க்கையை அவர் வாழ ஆசைப்பட்டார். அதற்காக அவர் பாலங்களுக்குக் கீழே வாழ்ந்தார்.
அந்த ஏழை மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பயங்கர குடிகாரனாக இருந்தான். எப்போது பார்த்தாலும் மதுவின் போதையிலேயே இருந்தான். அவன் பெயர் ஆன்ட்ரியாஸ். எல்லா குடிகாரர்களையும் போல அவனும் கட்டுப்பாடு கொஞ்சமும் இல்லாத தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் இருநூறு ஃப்ராங்கை ஒரே நேரத்தில் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஓரு சிறு தாளை எடுத்து பாலத்திற்கிடையில் இருந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் செயிண்ட் தெரேசாவின் முகவரியையும் தான் அவளுக்குக் கடன் பட்டிருக்கும் இருநூறு ஃப்ராங்க்கையும் ஒரு பென்சிலால் எழுதினான். தொடர்ந்து ஸேன் நதிக்கரையில் இருந்த படகுத் துறைக்குச் செல்லும் கல்லால் ஆன படிகளில் ஏறினான். அங்கே ஒரு உணவு விடுதி இருப்பதை அவன் அறிவான். அவன் அங்கு சென்றான். தான் விருப்பப்பட்ட வண்ணம் சாப்பிட்டு முடித்து, மது அருந்தி மனம் போனபடி பணத்தைச் செலவழித்து, அங்கிருந்து கிளம்பும்போது வழக்கம்போல் பாலத்திற்கடியில் இருக்கப்போகிற இரவு நேரத்தில் குடிப்பதற்காக ஒரு முழு மதுபாட்டிலை வாங்கி கையில் வைத்துக் கொண்டான். பிறகு, அவன் குப்பைத் தொட்டியில் இருந்து பத்திரிகையைப் பொறுக்கி எடுத்தான். படிப்பதற்காக அல்ல.... தன்னைப் போர்த்திக் கொள்வதற்காக. வீடு இல்லாத எல்லோருக்கும் பத்திரிகைகள் குளிரிலிருந்து காப்பாற்றும் என்ற உண்மை தெரியும்.
3
அடுத்த நாள் காலையில் ஆண்ட்ரியாஸ் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்தான். காரணம் - எப்போதையும் விட அன்று எந்த வித கவலையும் இல்லாமல் சுகமாக உறங்கியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி சிறிதுநேரம் அவன் மனதில் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் முதல் நாள் கொஞ்சமும் எதிர் பார்க்காமல் ஒரு அற்புத சம்பவம் நடைபெற்றது அவன் ஞாபகத்தில் வந்தது. உண்மையிலேயே அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். குளிர் குறைவாக இருந்த இரவாக இருந்ததாலும், பத்திரிகையை வைத்து மூடி சுகமாக தூங்கியதாலும், ஆற்றில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். அவன் குளித்தே பல நாட்கள் ஆகிவிட்டன. சரியாகச் சொன்னால் குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்தே அவன் குளிக்கவில்லை. உடம்பிலிருந்து ஆடைகளை அகற்றுவதற்கு முன்பு தன் சட்டையின் இடதுபக்கம் இருக்கும் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தைப் பற்றி அவன் எச்சரிக்கையாக நினைத்துக் கொண்டான். நேற்று நடைபெற்ற அந்த அற்புதச் செயலை மீண்டும் அவன் தன் மனதில் ஓட்டிப் பார்த்து ஆனந்த அனுபவத்தை அடைய முயற்சித்தான். பிறகு ஸேன் நதியில் ஆள் இல்லாத ஒதுகுப்புறமாகத் தேடி அவன் நடந்தான். கழுத்தையும் முகத்தையும் மட்டுமாவது கழுவ வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் மக்களின், தன்னைப் போன்ற ஏழை மக்களின் பார்வையின் தான் படுவதை பொதுவாக அவன் விரும்பவில்லை. (சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அந்த ஏழை மக்களை பற்றி அவன் மனதில் அப்போது இந்த நினைப்பு ஓடிக் கொண்டிருந்தது). தான் ஏற்கனவே தீர்மானித்திருந்த முடிவை அவனாகவே வேண்டாமென்று மாற்றிக் கொண்டு தன்னுடைய கைகள் இரண்டையும் வெறுமனே தண்ணீரில் நனைக்க மட்டும் செய்தான். மீண்டும் சட்டையை அணிந்து கொண்டான். உள்ளே இடது பக்கம் இருக்கும் பாக்கெட்டில் வங்கி நோட்டுகள் இருப்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி நினைத்துப் பார்த்துக் கொண்டான். என்னவோ சிந்தித்தவாறு அவன் அங்கிருந்து நடந்தான்.
அவனின் அன்றையபொழுது ஆரம்பித்தது. காலத்தின் ஆரம்பம் முதல் இப்போதும் அந்த ‘நாள்’ என்று ஒன்று கடந்து போய் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ரூதெகதர் வென்த்திலுள்ள ரஷ்யன்-ஆர்மேனியன் உணவு விடுதிக்குப் போக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கையில் எவ்வளவு சிறிய தொகை கிடைத்தாலும், அதைக் கொண்டு வந்து அந்த உணவு விடுதியில் கிடைக்கும் விலை குறைநத மதுவிற்கே செலவழித்து விடுவது என்பது பொதுவாக அவன் எப்போதும் செய்யக் கூடியதுதான். இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த பத்திரிகைகள் விற்கும் கடைகளைப் பார்த்ததும் அவன் நின்றான். சில வார இதழ்களின் அட்டைப் படங்களைப் பார்த்த அவனுக்கு இனம் புரியாத ஒரு ஆர்வம் உண்டானது. இன்று என்ன கிழமை, என்ன தேதி, அது எந்த வாரம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அன்று வியாழக்கிழமை என்பதை அவன் அறிந்து கொண்டான். தான் பிறந்ததும் ஒரு வியாழக்கிழமைதான் என்பதும் அவனுக்கு அப்போது ஞாபகத்தில் வந்தது. எது எப்படியோ, அன்று தேதி என்ன என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அந்த வியாழக்கிழமையை தன்னுடைய பிறந்த நாளாக அவன் மனதில் தீர்மானித்துக் கொண்டான். குழந்தைத்தனமான உற்சாகமும், துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் மனதையும் கொண்டிருந்த அந்த மனிதன் நல்ல சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான். அதனால் தான் அந்த பாருக்குப் போக வேண்டாம் என்றும் அதைவிடச் சற்று உயர்ந்த நிலையில் இருக்கும் வேறு ஏதாவது உணவுச் சாலைக்குப் போகலாம் என்றும் தீர்மானித்தான். பத்திரிகையைக் கையில் பிடித்தவாறு அவன் அதைத் தேடி நடந்தான். அங்கே அமர்ந்து ஒரு காப்பியும் ரொட்டியும் சாப்பிடலாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். அந்தக் காப்பியில் சிறிதளவு ரம்மைக் கலந்து பருகவேண்டும், அது உடம்புக்கு மேலும் கொஞ்சம் உற்சாகத்தைத் தரும் என்று அவன் முடிவெடுத்தான்.
அந்த முடிவுடன் அவன் தான் அணிந்திருந்த கிழிந்துபோன ஆடைகளைப் பற்றி கவலைப்படாமல், உன்னத நிலையில் இருக்கும் ஒரு மதுக்கடையை அடைந்து மேஜையை நோக்கி நடந்தான்.