புனிதமான குடிகாரன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
இதுவரை அவன் பாரில் நின்றுதான் மது அருந்தியிருக்கிறான். சில நேரங்களில் முழங்கையை ஊன்றி நின்றிருக்கிறான். அவ்வளவுதான். அவன் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த நாற்காலி ஒரு கண்ணாடிக்கு நேராக இருந்ததால், அதில் தெரிந்த தன்னுடைய உருவத்தைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய உருவத்தை தான் பார்ப்பதாக அவன் மனதில் பட்டது. அதை நினைத்து உண்மையிலேயே அவன் அதிர்ந்து போனான். சில வருடங்களாக கண்ணாடிகளைக் கூட தான் நம்பாமல் போனது ஏன் என்பதைப் பற்றி அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய அழிவின் வெளிப்பாட்டை தன்னுடைய கண்களால் பார்ப்பது என்பது அவன் விரும்பக்கூடிய ஒன்றா என்ன? தன்னை இதுவரை அவனுக்கு முகமே இல்லாதது மாதிரி, அதாவது... தன்னுடைய வீழ்ச்சிக்கு முன்பு இருந்த முகத்தையே தான் இப்போதும் கொண்டிருப்பதாகவே அவன் நினைத்திருந்தான்.
கண்ணாடியைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி உண்டாகத்தான் செய்தது. குறிப்பாக - தன்னைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்த வசதி படைத்த மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்களுடன் தன்னுடைய உணவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் முகத்திற்குச் சவரம் செய்து சரியாக ஒரு வாரம் ஆகிவிட்டது. வழக்கம்போல, வீடு வாசல் இல்லாத ஒரு மனிதன் அவன் தந்த சில்லறை காசை வாங்கிக்கொண்டு சவரம் செய்து விட்டான். இப்போது புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவன் மனதிற்குள் தீர்மானம் செய்து வைத்திருந்ததால், அதற்கேற்றபடி உரிய முறையில் தன்னுடைய முகத்தைச் சவரம் செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். அப்போதே, சாப்பிடுவதற்கு முன்பே நல்ல ஒரு பார்பர் ஷாப்பிற்குப் போக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.
மனதில் முடிவெடுத்த அந்தகணமே, புறப்படவும் செய்தான். பார்பர் ஷாப்பிற்குள் நுழைந்தான்.
மீண்டும் மதுக்கடைக்குத் திரும்பி வந்தபோது, தான் உட்கார்ந்திருந்த பழைய இடத்தில் வேறொரு ஆள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இப்போது தூரத்தில் இருந்துதான் கண்ணாடியில் தன் உருவத்தை அவனால் பார்க்க முடிந்தது. தான் இப்போது நவநாகரீக மனிதனைப் போல் தோன்றுவதாக அவன் மனதிற்குப் பட்டது. மீண்டும் இளமைத் தோற்றம் தன்னிடம் வந்திருப்பதாக அவன் உணர்ந்தான். தான் ஒரு புதிய மனிதனாக மாறியிருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. ஆமாம்... தன்னுடைய முகத்தில் இதற்கு முன்பு இல்லாத பிரகாசம் தற்போது வந்து ஒட்டிக் கொண்டிருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால், தான் அணிந்திருந்த கிழிந்துபோன ஆடைகள் கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. சட்டையின் ஒரு பக்கம் கிழிந்து போயிருப்பது, சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் கோடுகள் போட்ட காலருக்குப் பின்னால் வைத்திருந்த கைக்குட்டை - என எதையுமே அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
அதனால் அவன் மீண்டும் அமர்ந்தான். ஆண்ட்ரியாஸ் உற்சாகமாக ‘காஃபி ரம்’ கொண்டுவரும்படி திரும்பி வந்த காதலியைப் பார்த்தது போல படு உற்சாகமான குரலில் சொன்னான் அவன். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த பணியாள் மிகவும் பணிவுடன் அவன் கேட்டதைக் கொண்டு வந்த பரிமாறினான். அங்கு வந்திருந்த வசதி படைத்த மனிதர்கள் எல்லோரிடமும் காட்டும் பணிவைத்தான் ஆண்ட்ரியாஸிடமும் அவன் காட்டினான். அவன் காட்டிய பணிவு ஆண்ட்ரியாஸுக்கு சந்தோஷத்தை அளித்தது. தன்னைப் பற்றிய மதிப்பு கூடுவதாகவும் அன்றுதான் தன்னுடைய பிறந்த நாள் என்றும் திட்டவட்டமாக அவன் முடிவு செய்து விட்டான்.
அவனுக்கு அடுத்த மேஜையில் ஒரு நவநாகரீகமான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் வைத்த கண் எடுக்காமல் நம்முடைய வீடு இல்லாத மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அவன் பக்கம் திரும்பிய அந்த மனிதர் கேட்டார். ‘‘கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கா? எனக்காக ஒரு வேலை செய்து தர முடியுமா? இங்க பாருங்க... நாளைக்கு நாங்க வீடு மாத்துறோம். சாமான்களை மாத்துற விஷயத்துல என் மனைவிக்கும், அந்த வேலையைச் செய்ய வர்ற வேலையாட்களுக்கும் உதவியா நீங்க கொஞ்சம் இருக்க முடியுமா? உங்களுக்கு அதற்கான பலம் இருக்கிறது உங்களைப் பார்க்கும்போதே தெரியுது. நாளை நீங்க ஓய்வா இருக்கீங்களா? இந்த வேலையை உங்களால செய்ய முடியுமா?”
‘‘நிச்சயமா...” ஆண்ட்ரியாஸ் சொன்னான்.
‘‘இரண்டு நாட்கள் வேலை செய்றதுக்கு நீங்க எவ்வளவு பணம் எதிர்பார்க்கறீங்க? நாளையும் சனிக்கிழமையும் எனக்கொரு பெரிய ஃப்ளாட் இருக்கு. புதுச மாறுற ஃப்ளாட் அதைவிடப் பெருசு. ஏகப்பட்ட சாமான்களை மாத்தி ஆகணும். இந்த வேலையில நான் உதவி செய்ய முடியாத நிலைமையில இருக்கேன். காரணம்- கடையை நான்தான் பாத்துக்க வேண்டியிருக்கு...”
‘‘அந்த வேலையை நான் பார்த்துக்குறேன். அதுக்கு நான் சரியான ஆளுதான்” - வீடு இல்லாத மனிதன் சொன்னான்.
‘‘கொஞ்சம் குடிக்குறதுல ஒண்ணும் பிரச்சினை இல்லியே...” அந்த நவநாகரீக மனிதர் கேட்டார்.
அவர் இரண்டு பெர்னோ (சாப்பிடுவதற்கு முன்பு பசி உண்டாக்குவதற்காக அருந்தும் ஒருவகை மது) கொண்டு வரச் சொன்னார். அந்த மனிதரும் ஆண்ட்ரியாஸும் கண்ணாடி டம்ளர்களை முத்தமிடச் செய்தார்கள். வேலை செய்வதற்கான கூலி என்னவென்பதையும் அவர்கள் தீர்மானித்தார்கள். இருநூறு ஃப்ராங்க் கூலியாக நிர்ணயிக்கப்பட்டது.
‘‘இன்னொரு பெர்னோ குடிக்கலாமே” - தன்னுடைய பெர்னோ காலியானவுடன் அந்த மனிதர் சொன்னார்.
‘‘குடிக்கலாம். ஆனா, இப்போ நான் வாங்கித் தர்றேன்” வீடு இல்லாத மனிதனான ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘நான் எப்படிப்பட்ட மனிதன்னு உங்களுக்குத் தெரியாது. நான் எந்த வேலையையும் ஒழுங்கா செய்யக்கூடியவன். ஒரு வேலையை ஒத்துக்கிட்டா, கடைசிவரை சரியா முடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். என் கைகளைக் கொஞ்சம் பாருங்க...” - அந்த மனிதர் பார்ப்பதற்காக தன்னுடைய கைகளை அவன் நீட்டினான். ‘‘என் கைகள் அழுக்கு உள்ளதாக இருக்கலாம். இருந்தாலும் இது உண்மையான உழைப்பாளியோட கைகள்...”
‘‘நானும் அதைத்தான் விரும்புறேன்”- அந்த நவநாகரீகமான மனிதர் சொன்னார்.
அந்த மிடுக்கான மனிதரின் கண்கள் மிகவும் பளபளப்பு கொண்டதாக இருந்தன. அவரின் முகம் ஒரு குழந்தையின் முகத்தைப்போல சதை பிடிப்புடன் இருந்தது. அவரின் மீசை சிறியதாகவும், கருப்பாகவும் இருந்தது. மொத்தத்தில் அவரிடம் ஒரு இனிய சுபாவம் குடி கொண்டிருந்தது. ஆண்ட்ரியாஸுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.