புனிதமான குடிகாரன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6381
அவளும் பயங்கர குழப்பத்தில்தான் இருந்தாள். இப்படி ஒரு சூழ்நிலையில் வீடு மாறுவது என்பது அவளுக்கு அத்தனை லேசான ஒரு காரியமாக இருக்கவில்லை. ஒரு வேளை புதிதாகப் போகப் போகும் இடம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி அவளுக்குச் சரிவரத் தெரியாமல் இருக்கலாம். அன்று பகல் முழுவதும், இரவிலும் ஒருவேளை அடுத்த நாளின் சில மணி நேரங்கள் கூட அவர்கள் அதே வீட்டில் இருக்கவேண்டி நேரிடலாம். அந்த விஷயம் அவளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் கோட்டும், தொப்பியும், கையுறைகளும் அணிந்து ஹேண்ட்பேக்கையும் குடையையும் கையில் வைத்துக் கொண்டு வெளியே போவதற்காக அவள் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் தன்னுடைய உதடுகளில் சாயம் தேய்க்கவும் மறக்கவில்லை. அதை அவன் கவனிக்கவே செய்தான். அதை அவனால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! ஆண்ட்ரியாஸ் நாள் முழுக்க வேலை செய்தான். அவன் வேலையை நிறுத்தியபோது வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள். ‘‘நாளைக்குக் காலையில சரியா ஏழு மணிக்கு வந்துடணும்” அவள் ஹேண்ட் பேக்கில் இருந்து சில்லறை நாணயங்கள் வைக்கும் பர்ஸை எடுத்தாள். அவள் கை அந்தப் பர்ஸுக்குள்ளேயே துழாவின. முதலில் ஒரு பத்து ஃப்ராங்க் நாணயத்தை எடுத்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ, அதைப் பர்ஸுக்குள்ளேயே போட்டாள். கடைசியில் ஒரு ஐந்து ஃப்ராங்க் நாணயத்தை எடுத்தாள். ‘‘இதோ இதை நீங்க வச்சுக்குங்க” - அவள் சொன்னாள். ‘‘இதை வச்சு...” - அவள் தொடர்ந்து சொன்னாள். ‘‘தண்ணி அடிச்சு எல்லாத்தையும் காலி பண்ணிடாதீங்க. நாளைக்கு சரியான நேரத்துக்கு இங்க வந்துடணும்.”
ஆண்ட்ரியாஸ் அவளுக்கு நன்றி கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான். அவன் அந்தப் பணத்தை வேறு எதற்கும் அல்ல, மது அருந்துவதற்காக மட்டும் செலவழித்தான். அன்று இரவு ஒரு சிறு ஹோட்டலில் அவன் தங்கினான்.
காலையில் ஆறு மணிக்கு எழுந்தவுடன் அவன் மிகவும் கவனமாக தன்னை தயார் படுத்திக்கொண்டு வேலை செய்வதற்காகக் கிளம்பினான்.
4
பொருட்களை எடுத்துச் செல்லும் பணியாட்கள் வருவதற்கு முன்பே அவன் அங்கு வந்து விட்டான். இரவு தூங்குவதற்கே போகவில்லை என்பது மாதிரி வீட்டின் சொந்தக்காரி முதல் நாளைப் போலவே தொப்பியும் கையுறைகளும் அணிந்து அங்கே நின்றிருந்தாள். அவள் மகிழ்ச்சி பொங்க அவனிடம் சொன்னாள், ‘‘நான் சொன்னபடி நீங்க சரியா நடந்திருக்கீங்க. நான் தந்த பணத்தை முழுசா தண்ணி அடிக்க நீங்க பயன்படுத்தல, இல்லே?”
ஆண்ட்ரியாஸ் தீவிரமாக தன்னுடைய வேலையில் இறங்கினான். பிறகு அவன் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவர்களின் புதிய வீட்டிற்குச் சென்றான். அங்கே அந்த நவநாகரீகமான மனிதர் வந்து கூலியின் இரண்டாவது தவணையை தன்னிடம் கொடுக்கும் வரை அவன் காத்திருந்தான்.
‘‘சரி... நாம போகலாம். நான் ஏற்கனவே வாக்கு கொடுத்தபடி மது அருந்தச் செல்வோம்” - அந்த நவநாகரீக மனிதர் அழைத்தார்.
ஆனால், அதற்கு அவரின் மனைவி சம்மதிக்கவில்லை. அவன் இருவருக்குமிடையில் வந்து நின்று தன் கணவனிடம் சொன்னாள்.
‘‘இரவு உணவு தயாரா இருக்கு” அதன் விளைவாக ஆண்ட்ரியாஸ் மட்டும் தனியே போனான். அவன் மது அருந்தினாலும், அளவுக்கு மேல் போய் நிதானம் தவறும் அளவுக்குக் குடிக்கக் கூடாது. பணம் அதிகமாகச் செலவாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான். காரணம்- அடுத்த நாள் தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்கும் விஷயத்தை அவன் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அதன்படி அவன் புனித மேரியின் தேவாலயத்திற்குப் போக வேண்டுமென்று விரும்பினான். சின்ன தெரேசாவிற்குத் தர வேண்டிய கடனில் ஒரு பங்கையாவது அவளுக்குத் தர வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். ஆனால், கொஞ்சம் கூட அதைப் பற்றியே யோசனையே இல்லாமல், சொல்லப்போனால் அந்த எண்ணமே மறக்கடிக்கப்படும் அளவிற்கு அதிகமாக அவன் குடிக்கத் தொடங்கினான். செலவு குறைவாக வரும் ஹோட்டலுக்குப் போவது என்ற வறுமையில் கிடக்கும் மனிதனின் சிந்தனையை அவன் மீறத் தலைப்பட்டான்.
அதன் விளைவாக சற்று செலவு அதிகமாக வரும் ஹோட்டலை நோக்கி அவன் கால்கள் நடைபோட ஆரம்பித்தன. தன் கையில் பொருட்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அணிந்திருந்த ஆடைகள் பரிதாபத்தை எழுப்பும் வண்ணம் இருந்ததாலும், அங்கே கொடுக்க வேண்டிய முழுப்பணத்தையும் அவனை முதலிலேயே செலுத்தும்படி கேட்டார்கள். அவனும் வேறு வழியில்லாமல் அதைக் கொடுத்தான். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தனக்கு வந்ததற்காக அதைப் பற்றி யோசித்து, வருத்தப்படும் நிலையில் அவன் இல்லை. மறுநாள் காலை வரை நிம்மதியாகப் படுத்து உறங்கினான். அருகிலிருந்த ஒரு தேவாலயத்திலிருந்து முழங்கிய மணியோசை அவனை எழுப்பியது. இன்று எவ்வளவு முக்கியமான நாள் என்ற சிந்தனையே இப்போதுதான் அவனுடைய மனதின் அடித்தளத்தில் ஓடியது. இன்று ஞாயிற்றுக்கிழமை. இன்று செயிண்ட் தெரேஸாவைப் பார்த்து கொடுக்க வேண்டிய கடன் தொகையைத் தர வேண்டிய நாளாயிற்றே! அவன் அடுத்த நிமிடம் ஆடையை அணிந்து தேவாலயம் இருக்கும் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்தான். ஆனால், அவன் அங்கு போய்ச் சேரும்போது மிகவுகம் தாமதமாகிவிட்டது. அவன் அங்கு சென்றபோது, தேவாலயத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் பத்து மணிக்கான வழிபாட்டுக் கூட்டம் முடிவடைந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அடுத்த வழிபாட்டுக் கூட்டம் எப்போது என்று அவன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தான். மத்தியானம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். தேவாலயத்திற்கு வெளியே வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதை பொதுவாக அவன் விரும்பவில்லை. மதிய கூட்டம் ஆரம்பிக்கும் வரை தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கவும் அவனுக்கு விருப்பமில்லை. அதனால் சற்று வசதி கொண்ட ஏதாவதொரு இடம் கிடைக்குமா என்று அவன் சுற்றிலும் தேடிப் பார்த்தான். நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் தேவாலயத்திற்கு நேர் எதிரில் ஒரு மூலையில் ஒரு மது அருந்தும் இடம் இருப்பதை அவன் பார்த்தான். அவ்வளவுதான். வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிக்கும் வரை அங்கேயே தன்னுடைய நேரத்தைச் செலவிட அவன் தீர்மானித்து விட்டான்.
பாக்கெட்டில் பணம் இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனின் தைரியத்துடன் ஒரு பெர்னோ கொண்டு வரும்படி சொன்னான். வாழ்க்கையில் தான் இதே போல் எத்தனையோ முறை பெர்னோ குடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு, அவன் அதைக் குடிக்க ஆரம்பித்தான்.