புனிதமான குடிகாரன் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6382
எந்தப் படத்தைப் பார்க்கப் போவது என்பதைப் பற்றி அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. அந்த நிமிடத்தில் சாலையில் கடந்து போகும் எந்தப் பணக்காரனிடம் இருக்கும் அளவிற்கு தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டே அவன் அகலமான நடைபாதையில் இறங்கி நடந்தான். ஒப்பராவிற்கும் பூலவார் தெகப்யசின்னிற்கும் மத்தியில் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படத்தை அவன் தேடினான். கடைசியில் அத்தகைய ஒரு படத்தை அவன் கண்டுபிடித்தான்.
தைரியமாக மரணத்தைச் சந்திக்கிற ஒரு மனிதனைப் பற்றிய கதையைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தை அவன் பார்த்தான். மழையே இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் பாலைவன மணலில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்தத் திரைப்படத்தின் விளம்பரத்தில் காட்டப்பட்டிருந்தான். நிச்சயமாக அது ஆண்ட்ரியாஸுக்கு ஏற்ற படம்தான். அவன் அரங்கத்திற்குள் அமர்ந்து அந்த மனிதன் வெயில் தகித்துக் கொண்டிருக்கும் பாலைவனத்தை விட்டு எப்படி வெளியேற முயற்சிக்கிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கதாநாயகன் ஒரு மரியாதைக்குரிய மனிதனாக ஆண்ட்ரியாஸுக்குத் தோன்றிய அதே நேரத்தில் அந்தத் திரைப்படம் மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு நிலையை நோக்கி நகர்ந்தது. பாலைவனத்தில் அகப்பட்டுக் கொண்ட அந்த மனிதனை, அந்த வழியாக கடந்து போய்க்கொண்டிருந்த விஞ்ஞானி ஆராய்ச்சிக்காக வந்த ஒரு கூட்டம் காப்பாற்றி ஐரோப்பிய நாகரிகம் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கிறது. ஆண்ட்ரியாஸுக்கு கதாநாயகன் மீது இருந்த மதிப்பு அந்தக் கணத்தில் சிறிது கூட இல்லாமல் போய்விட்டது. அவன் எழுந்து போக தீர்மானித்த நேரத்தில், தான் மது அருந்தும் சாலையில் இருந்தபோது, மேலாளருக்கு பின்னால் சுவரில் சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த அந்த புகைப்படம் திரையில் தெரிந்தது. அது- புகழ்பெற்ற கால்பந்து வீரனான கன்யாக். திரையில் அவனைக் கண்டதும், இருபது வருடங்களுக்கு முன்பு அவனும் கன்யாக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரே பெஞ்சில் அமர்ந்து வகுப்பில் கல்வி கற்ற காலம் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மறுநாள் காலையில் அந்தத் தன்னுடைய பழைய நண்பன் இப்போது பாரிஸில் இருக்கிறானா என்று விசாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் ஆண்ட்ரியாஸ்.
நம்முடைய ஆண்ட்ரியாஸின் பாக்கெட்டில் தொள்ளாயிரத்து எண்பது ஃப்ராங்கிற்குக் குறையாமல் பணம் இருந்தது.
இது அவ்வளவு சாதாரணமான தொகை அல்லவே!
8
தியேட்டரை விட்டு வெளியே வருவதற்கு முன்பு அவன் மனதிற்குள் ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தான். தன்னுடன் சேர்ந்து படித்த அந்த நண்பனின் முகவரியைத் தேடி கண்டுபிடிப்பதற்கு நாளைக் காலை வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு பெரிய தொகை பாக்கெட்டிற்குள் இருக்கும்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவன் மனது கணக்குப் போட்டது.
எஞ்சியிருந்த பணம் ஆண்ட்ரியாஸுக்கு அளவுக்கு மேல் தன்னம்பிக்கையைத் தந்ததால், கேஷியரின் மேஜைக்கருகில் நின்றவாறு தன்னுடைய நண்பனின் - புகழ்பெற்ற கால்பந்து வீரன் கன்யாக்கின் முகவரியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை அங்கேயே தொடங்க அவன் தீர்மானித்தான். கன்யாக்கின் முகவரியைப் பெறுவதற்கு திரைப்பட அரங்கின் மேலாளரிடம் போக வேண்டியிருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அதற்கான அவசியம் வரவில்லை. கால்பந்து வீரனான கன்யாக் அளவிற்குப் புகழ்பெற்ற ஒரு மனிதன் பாரிஸில் வேறு யாரும் ல்லை. திரை அரங்கின் வாசலில் நின்று கொண்டிருக்கும் மனிதனுக்குக் கூட கன்யாக் எங்கே இருக்கிறான் என்ற விஷயம் தெரியும். ஷாந்தெப் எலிஸ்ஸெயில் இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் கன்யாக் இருப்பதாக ஒரு தகவல் அவனுக்குக் கிடைத்தது. அந்த விஷயத்தைச் சொன்ன திரை அரங்கத்தின் காவலாளி அவனிடம் அந்த ஹோட்டலின் பெயரையும் சொன்னான். ஆண்ட்ரியாஸ் அந்த நிமிடத்திலேயே அங்கிருந்து அந்த ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டான்.
சிறிய, அமைதியான மிகவும் மாறுபட்ட முறையில் அமைந்த ஒரு ஹோட்டலாக இருந்தது அது. கால்பந்து வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள் போன்ற நம்முடைய காலகட்டத்தின் முக்கிய நபர்கள் தங்குவதற்கு விருப்பப்படுகிற விதத்தில் அந்த ஹோட்டல் இருந்தது. ஹோட்டலுக்கு முன்னால் நின்றபோது ஆண்ட்ரியாஸுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஹோட்டல் பணியாளர்களின் பார்வையில் அவன் ஒரு மாதிரியாகத் தெரிந்தான். இருந்தாலும், கன்யாக் தற்போது அறையில்தான் இருக்கிறானென்றும், வெகுவிரைவில் அவன் கீழே இறங்கி வரவேற்பரைக்கு வருவான் என்றும் அவர்கள் கூறினார்கள்.
இரண்டு நிமிடம் சென்றிருக்கும். கன்யாக் இறங்கி கீழே வந்தான். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டார்கள். அங்கேயே நின்றவாறு தங்கள் பள்ளிக்கூட வாழ்க்கையின் நினைவுகளைப் பற்றிப் பேசி அவர்கள் புதுப்பித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்தே உணவு உட் கொள்வதற்காக வெளியே நடந்தார்கள். ஒருவரையொருவர் கண்டு கொண்டதில் இருவருமே மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோது புகழ்பெற்ற கால்பந்து வீரனான கன்யாக், அழுக்கடைந்து போன தன்னுடைய நண்பனைப் பார்த்துக் கேட்டான். ‘‘நீ ஏன் இவ்வளவு அசுத்தமான ஒரு மனிதனா நின்னுக்கிட்டு இருக்கே? உன்னோட ஆடைகள் ஏன் இப்படி கிழிஞ்சு போயிருக்கு?”
‘‘அதை நான் உன்கிட்ட சொல்றதா இருந்தா...?” ஆண்ட்ரியாஸ் கன்யாக்கிடம் சொன்னான், ‘‘அது ஒரு வருத்தத்தைத் தர்ற விஷயம். நாம ரெண்டு பேரும் சந்திச்சிருக்கிற இந்த மகிழ்ச்சியான நேரத்துல அதைப்பற்றி நாம பேசவே வேண்டாம். நாம பேச வேண்டிய சந்தோஷமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதைப்பற்றி பேசுவோம்...”
‘‘என்கிட்ட நிறைய ஸுட்டுகள் இருக்கு” - புகழ் பெற்ற கால்பந்து வீரன் சொன்னான், ‘‘அதுல ஒண்ணை உனக்கு நான் தர்றதுல எனக்கு சந்தோஷமே. நாம பள்ளிக்கூடத்துல ஒரே பெஞ்ச்ல உட்கார்ந்து படிச்சோம். நீ எழுதின பதில்களைப் பார்த்து எழுத நீ அனுமதிச்சே. அது கூட ஒப்பிட்டுப் பார்க்குறப்போ இந்த ஸுட் என்ன பெரிய ஸுட்? ஆனா... நான் அதை எங்கே அனுப்பி வைக்கணும்?”
‘‘அது உன்னால முடியாது...” - ஆண்ட்ரியாஸ் சொன்னான். ‘‘காரணம் எனக்குன்னு எந்த முகவரியும் கிடையாது. ஸேன் நதிக்கரையில இருக்குற பாலங்களுக்குக் கீழேதான் நான் வசிக்கிறேன்...”
‘‘அப்படியா...?”- கன்யாக் சொன்னான், ‘‘அப்படின்னா உனக்காக ஒரு அறையை உடனே வாடகைக்கு எடுத்துடுவோம். நான் ஒரு ஸுட் உனக்குத் தர்றேன். வா...”
உணவு சாப்பிட்டு முடித்து அவர்கள் ஒன்றாக நடந்தார்கள். கால்பந்து வீரன் கன்யாக் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தான். அதன் வாடகை நாளொன்றுக்கு இருபத்தைந்து ஃப்ராங்க். அந்த அறை பாரிஸின் புகழ் பெற்ற தேவாலயமான ‘மத்ல’னுக்கு அருகில் இருந்தது.