புனிதமான குடிகாரன் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6382
13
தாரி-பாரியில் நல்ல கூட்டம். காரணம்- ஏராளமான வீடு இல்லாத மனிதர்கள் நாட்கணக்கில் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்கள் பகல் நேரங்களில் மது அருந்தும் இடத்திற்குப் பின்னாலும், இரவில் பெஞ்சுகளிலும் படுத்து உறங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே ஆண்ட்ரியாஸ் படுக்கையை விட்டு எழுந்தான். வழிபாட்டு கூட்டத்திற்கு உரிய நேரத்துக்கு போய்ச் சேர வேண்டும் என்பதைவிட ஹோட்டல் உரிமையாளர் வந்து உணவிற்கு மதுவிற்கும் தங்கினதற்கும் பணம் கேட்பார் என்ற பயமே அவனின் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
அவன் போட்ட கணக்குகள் தவறாகி விட்டன. காரணம் - ஹோட்டல் உரிமையாளர் அவன் எழுவதற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்திருந்தார். அவருக்கு பல நாட்களாகவே ஆண்ட்ரியாஸை நன்கு தெரியும். பில் தொகையைக் கட்டுவதற்கான எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் தப்பிக்கப் பார்க்கும் ஒரு மாதிரியான ஆள் ஆண்ட்ரியாஸ் என்பதை அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏராளமாக சாப்பிட்டதற்கும், மது குடித்ததற்கும் ஒரு பெரிய தொகையை நம்முடைய ஆண்ட்ரியாஸ் அங்கு கொடுக்க வேண்டியிருந்தது. தாரி-பாரியின் உரிமையாளருக்கு எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்களையும், அப்படி நடந்து கொள்ளாதவர்களையும் பிரித்துப் பார்த்து இனம் கண்டு பிடிக்கும் திறமை இருந்தது. நம்முடைய ஆண்ட்ரியாஸ் பல குடிகாரர்களையும் போல, இரண்டாம் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். அதனால் கையில் வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட பெரும் பகுதியை அங்கே அவன் கட்ட வேண்டியதாகிவிட்டது. பணத்தைச் செலுத்திவிட்டு, கம்பீரமாக புனித மேரியின் தேவாலயத்தை நோக்கி நடந்தான். அதே நேரத்தில் செயிண்ட் தெரேஸாவுக்குத் தரவேண்டிய முழுப்பணமும் தன் கைவசம் தற்போது இல்லை என்பதையும் அவன் அறியாமல் இல்லை. இருந்தாலும், அவன் மனம் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தன்னுடைய நண்பன் வொய்செஹ்ஹை சந்திப்பதைப் பற்றிய நினைவில்தான் அப்போது ஈடுபட்டிருந்தது.
அதனால் அவன் தேவாலயத்தை நெருங்கும்போது, அவனுடைய கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்- பத்து மணிக்குள் வழிபாட்டு கூட்டத்திற்கான நேரம் முடிந்து விட்டிருந்தது. தேவாலயத்தை விட்டு வெளியே வந்த மனிதர்கள் அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மது அருந்தும் இடத்திற்குப் போகலாம் என்று அவன் திரும்பிய போது, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அடுத்த நிமிடம் முரட்டுத்தனமான ஒரு கை தன் மேல் விழுவதை அவன் உணர்ந்தான். அவன் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றிருந்தான்.
சட்ட அனுமதி கொண்ட எந்த அத்தாட்சி தாள்களும் ஆண்ட்ரியாஸின் கைகளில் இல்லை என்பதுதான் நமக்குத் தெரியுமே. அதனால் போலீஸ்காரனைப் பார்த்ததும், நியாயமாகவே ஆண்ட்ரியாஸ் பயப்பட ஆரம்பித்தான். சட்ட அனுமதி கொண்ட தாள்கள் தன்னுடைய பாக்கெட்டிற்குள் இருப்பதைப் போல் காட்டுவதற்காக, அவன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தான். ஆனால், போலீஸ்காரன் அவனைப் பார்த்து சொன்னான், ‘‘நீங்க பாக்கெட்டுக்குள்ள எதற்காக கையை விடுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, அது உங்க பாக்கெட்ல இல்ல. உங்க பர்ஸ் கீழே விழுந்துருச்சு. இந்தாங்க... ஞாயிற்றுக்கிழமை காலையில அதுவும் காலம் காத்தால இந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாம குடிச்சா, இப்படித்தான் நடக்கும்ன்றதை ஞாபகத்துல வச்சுக்குங்க.
ஆண்ட்ரியாஸ் போலீஸ்காரன் கொடுத்த பர்ஸை வேகமாக வாங்கினான். தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் போலீஸ்காரனுக்கு நேராக தன்னுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்ற மனம் கொஞ்சமாவது அவனுக்கு இருந்தது. அடுத்த நிமிடம் படுவேகமாக மது அருந்தும் சாலையை நோக்கி அவன் நடந்தான்.
வொய்செஹ்ஹை அங்கு பார்த்தாலும், அவனால் அந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இருப்பினும், அடையாளம் கண்டு கொண்ட பிறகு, அவனை சிரித்த முகத்துடன் ஆண்ட்ரியாஸ் வரவேற்றான். ஒருவருக்கொருவர் குடிப்பதற்கு மதுவை வாங்கிக் கொடுத்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான மனிதர்களைப் போல மரியாதை தெரிந்திருந்த வொய்செஹ் தான் அமர்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்து, ஆண்ட்ரியாஸுக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, இடறி இடறி நடந்தவாறு மேஜையை சுற்றிப் போய் எதிர்ப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்து பாசம் பொங்க ஆண்ட்ரியாஸுடன் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பெர்னோவைத் தவிர, வேறு எதையும் குடிக்கவில்லை.
‘‘ஆச்சரியப்படும் வகையில் திரும்பவும் என் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்துகிட்டுதான் இருக்கு” - ஆண்ட்ரியாஸ் சொன்னான்: ‘‘நான் இங்கே வர்றதுக்காக நடந்து வந்தா, ஒரு போலீஸ்காரன் என் தோளைத்தட்டி சொல்றான். ‘உங்க பர்ஸ் கீழே விழுந்துருச்சு, இந்தாங்க’ன்னு. சொன்னதோடு நிற்காம, யாரோ ஒருத்தரோட பர்ஸை என் கையில அவன் தர்றான். நான் அதைப் பேசாம வாங்கிக்கிட்டேன். இப்போ நான் அதைத் திறந்து பார்க்கப் போறேன். அதுல என்ன இருக்குன்னு உடனடியா பார்க்கணும்...”
அவன் அந்த பர்ஸை வெளியே எடுத்து, பார்த்தான். அதில் இருந்த பல தாள்களை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவற்றுக்கு மத்தியில் பணமும் இருப்பது அவனுக்கு தெரியவந்தது. அவன் அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். சரியாக இருநூறு ஃப்ராங்க் இருந்தது. ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘இங்க பாரு- இது கடவுள் தர்ற எச்சரிக்கை. கடைசி கடைசியா நான் அங்கே போயி என்னோட கடனை அடைக்கப் போறேன்.”
‘‘அதற்கு...” -வொய்செஹ் சொன்னான்: ‘‘வழிபாட்டுக் கூட்டம் முடியும் வரை நீ காத்திருக்கலாம். வழிபாட்டுக் கூட்டத்துக்கு நீ போயி என்ன செய்யப் போற? வழிபாட்டுக் கூட்டம் நடக்குறப்போ நீ உன் கடனைத் திருப்பித் தர முடியாது. அந்தக் கூட்டம் முடிஞ்ச பிறகு தேவாலயத்துல இருக்குற ஆலோசனை அறைக்கு நாம போகலாம். அதுவரை நாம இங்கேயே இருந்து குடிப்போம்.”
‘‘சரி...” -ஆண்ட்ரியாஸ் சொன்னான், ‘‘நீ சொல்றது படி நடக்கட்டும்.”
அப்போது கதவைத் திறந்து வந்த ஒரு சிறுமி அவனுக்கு நேர் எதிராக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தாள். அதைப் பார்த்ததும் ஆண்ட்ரியாஸின் தலையில் இருந்த பாரம் இறங்குவது மாதிரியும் இதயத்தில் தாங்க முடியாத அளவிற்கு வேதனையும் தோன்றுவதைப் போல் இருந்தது. அந்தச் சிறுமி மிகவும் வயது குறைவானவளாக இருந்தாள். இதுவரை அவன் பார்த்த எல்லா பெண்களையும் விட மிகவும் வயதில் குறைந்த சிறுமியாக இருந்தாள் அவள். நீல வானத்தின் நிறத்தில் அவள் அணிந்திருந்த ஆடைகள் இருந்தன. வரம்போல் அமைந்த சில நாட்களில் வானம் எப்படி நீல நிறமாகத் தோன்றுமோ, அப்படியொரு நீல நிறத்தில் இருந்தாள் அவள்.