பப்பு - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6528
கல்யாணி அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. அவள் லட்சுமியைப் பார்த்தாள். லட்சுமியை கோபியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
கோபி தொடர்ந்து சொன்னான்: ‘‘உங்க எல்லாரையும் என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதுக்குத்தான் நான் வந்தேன்.”
‘‘நாங்க ஏழைங்க...”
‘‘நான் பணக்காரனும்கூட. அதுனாலதான் உங்களை என் வீட்டுக்கு அழைக்கிறேன்.
‘‘அதை என்கிட்ட சொன்னா போதாது?”
‘‘சொல்ல வேண்டியவர்கிட்ட சொல்றேன். உங்களுக்குச் சம்மதமா?”
‘‘அவருக்குச் சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான்.”
‘‘லட்சுமியோட மாமா எங்கே?”
‘‘வெளியே போயிருக்காரு.”
‘‘அவரை இனிமேல் வெளியே அனுப்ப வேண்டாம். இனி வேலை செய்தால், அவர் செத்துப் போயிடுவாரு. உடல்ல இருக்குற நோய்க்குத் தகுந்த சிகிச்சை செய்யணும்.”
‘‘யார் சொல்றதையும் கேக்குற ஆள் இல்ல.”
‘‘சரி... அது இருக்கட்டும். நான் இங்கே வந்திருந்தேன்ற விஷயத்தையும், அவரைப் பார்க்க விருப்பமா இருக்கேன்றதையும் சொல்லுங்க. நான் திரும்பவும் வருவேன்.” - அவன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
அன்று இரவு கல்யாணி பப்புவிடன் கோபி வந்த விஷயத்தைச் சொன்னான். சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிய அவன் சொன்னான்: ‘‘அவளோட படிப்பு முடியட்டும்.”
10
பப்பு இரண்டு நாட்கள் முழுவதும் வேலை தேடினான். நகரமெங்கும் அலைந்து பார்த்தான். ஒரு வேலையும் கிடைக்கவில்லை. புகைவண்டி நிலையத்திற்குச் சென்று சுமை தூக்கும் வேலையைச் செய்யலாம் என்று எண்ணி ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தபோது, அவன் கிட்டத்தட்ட கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தான். அதனால் அந்த வேலையை அக்கணமே சரிப்படாது என்று விட்டுவிட்டான். பீடி சுற்றும் வேலை அவனுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்று. ஆனால், இருமிக் கொண்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டும் இருக்கக் கூடிய அவன் பீடிக்காரர்களுக்குத் தேவையில்லை.
இரக்கப்படவும், சிறு சிறு உதவிகள் செய்வதற்கும் பலரும் இருந்தார்கள். ஆனால் பரிதாபப்படுவதும் உதவிகளும் அவனுக்குத் தேவையில்லை. நண்பர்கள் பரிதாபப்பட்டு வாங்கித்தரும் தேநீரும் பீடியும் வேண்டாம் என்று அவன் மறுத்துவிடுவான். அவனுடைய கம்பீரமும் கட்டுப்பாடற்ற சுதந்திர உணர்வும் மற்றவர்களின் இரக்கத்திற்கு ஆளாகக் கூடிய மனிதனாக இருக்கவும், மற்றவர்களின் உதவிகளைப் பெறுபவனாக இருக்கவும் அவனை அனுமதிக்கவில்லை. அப்போதுகூட தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு கம்பீரமாகத்தான் அவன் நடந்தான்.
வீட்டிலிருந்த கஷ்டங்கள் எதையும் அவனுக்குத் தெரியாமல் இருக்கும்படி கல்யாணியும் லட்சுமியும் பார்த்துக் கொண்டார்கள். கல்யாணியின் கையிலிருந்த கொஞ்சப் பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மிகவும் சிக்கனமாகச் செலவு செய்தார்கள். பப்புவை வெளியில் எங்கும் அனுப்பாமலும், மருந்து உட்கொள்ள வைக்கவும் அவர்கள் பிறகும்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அதனால் ஒரு பயனும் உண்டாகவில்லை.
கோபி திரும்பவும் அங்கு சென்றான். பப்பு வீட்டில் இருக்கக்கூடிய நேரமாகப் பார்த்து அவன் சென்றான். பப்பு அவனை அன்புடன் வரவேற்றான். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். கோபிதான் அதிகம் பேசினான். பப்புமீது தான் கொண்டிருக்கும் உண்மையான மதிப்பையும் அன்பையும் கோபி மனம் திறந்து சொன்னான். லட்சுமியின் அறிவுத் திறமையையும் கலைமீது கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் அவன் பாராட்டிச் சொன்னான். தங்கள் இருவருக்குமிடையில் உள்ள காதலைப் பற்றியும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் விருப்பத்தைப் பற்றியும் சூசகமாக வெளிப்படுத்தினான்.
பப்பு சொன்னான்: ‘‘அது அவளின் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எனக்குச் சந்தோஷம்தான். இருந்தாலும், அவளின் படிப்பு முடியட்டும். அதுக்குப் பிறகு, கல்யாண விஷயத்தை முடிக்கலாம்.”
‘‘அது போதும்” என்று கோபியும் ஒப்புக் கொண்டான். போவதற்காக எழுந்தபோது அவன் ஒரு கவரைப் பப்புவின் கையில் தந்தான். அதில் நிறைய ரூபாய் நோட்டுகள் இருந்தன.
பப்பு கேட்டான்: ‘‘இது என்ன?”
‘‘என்னோட ஒரு அன்புக் காணிக்கை.”
பப்பு கவரைப் பிரித்துப் பார்த்தான். அவன் நகைச்சுவை உணர்வு கொண்ட புன்னகையுடன் சொன்னான்: ‘‘இதுதான் காணிக்கையா? இப்படிப்பட்ட காணிக்கைகள் எதுவும் எனக்கு வேண்டாம். இதை நீங்களே கொண்டு போயிடுங்க.
‘‘மனசுல மதிப்பு வச்சு கொடுக்குற காணிக்கையைத் திருப்பித் தர்றது வருத்தமா இருக்கு.”
‘‘குழந்தை, நான் இப்படி எதையும் வாங்கினது இல்ல. வாங்கவும் மாட்டேன்.”
‘‘அப்படின்னா லட்சுமிக்காகவாவது இதை நீங்க வாங்கணும்.”
அவன் சொல்லி விட்டுத் திரும்பி நடந்தான்.
பப்புவின் முக வெளிப்பாடே மாறிவிட்டது. ‘‘கொஞ்சம் நில்லுங்க”- அவன் கட்டளையிட்டான்.
கோபி திரும்பி நின்றான். அவனை நோக்கிக் கவரை நீட்டியவாறு பப்பு நடந்தான். ‘‘வேலை செய்தும் கூலி வாங்கியும் பழகிப்போன கை இது. இந்தக் கைக்கு காணிக்கை வாங்கிப் பழக்கம் இல்ல. இதை நீங்களே கொண்டு போயிடுங்க.”
கோபி கவரை வாங்கினான். சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்துவிட்டு அவன் மெதுவாகத் திரும்பி நடந்தான்.
கல்யாணியும் லட்சுமியும் நடந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கோபி போனவுடன் கல்யாணி பப்புவின் அருகில் வந்தாள். ‘‘இது என்ன பழக்கம்? அன்பு இருக்கிறதுனாலதானே அவர் அதைத் தந்தாரு! அதைத் திருப்பி தர்றது சரியா?” - அவள் கேட்டாள்.
அதைக் கேட்டு பப்புவின் முகத்தில் கோபம் படர்ந்தது. அதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் அப்படியொரு கோப வெளிப்பாட்டை அந்த முகத்தில் அவள் பார்த்ததே இல்லை. ‘‘ம்...” - அவன் நீட்டி முனகினான். அதைப் பார்த்து அவள் அதிர்ந்து போய் பின்வாங்கினாள்.
லட்சுமி ஓடி வந்தாள். ‘‘அம்மா, நீங்க எதுவும் சொல்லாதீங்க. மாமாவோட விருப்பத்திற்கு மாறாக எதுவும் சொல்லக் கூடாது. எதையும் செய்யக் கூடாது.”
‘‘அவர் என்ன நினைப்பார்னு நினைச்சு நான் அப்படிச் சொன்னேன்.”
‘‘அவர் ஒண்ணும் தப்பா நினைச்சிருக்க மாட்டார். உங்களைவிட, என்னைவிட மாமாவைப் பற்றி அதிகமாக தெரிஞ்சிக்கிறவர் அவர்தான்.”
பப்புவின் முகத்திலிருந்த கோப உணர்ச்சி மறைந்து போனது. அவன் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டு மவுனமாக நின்றிருந்தான். சிறிது நேரத்தில் அந்த முகத்தில் ஒரு ஆழமான சாந்த நிலை வந்து ஒட்டிக் கொண்டது. அவன் மெதுவாகப் படியை நோக்கி நடந்தான்.
மதியம் ஆகும் வரை அவன் ஒவ்வொரு தெருவாக அலைந்தான். பிறகு ஒரு பீடி பற்ற வைப்பதற்காக ஒரு பீடிக் கடையை நோக்கி நடந்தான். கடைக்கு முன்னால் முனையை எரிய விட்டுத் தொங்கிக் கொண்டிருந்த கயிறு எரிந்து முடியும் நிலையில் இருந்தது. பப்பு அதை எடுத்து பீடி பற்ற வைத்தபோது கடைக்காரன் சொன்னான்: ‘‘பப்பு, கயிறு கொண்டு வர முடியுமா? இங்கே கயிறு கொண்டு வர்ற ஆளு மூணு நாலு நாட்களாக வரவே இல்ல.”