பப்பு - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6528
தூரத்தில் ஒரு இருமல் சத்தம் கேட்டது. பப்பு வருவதற்கு அடையாளமாக அது கேட்டது. அவன் திருமண மண்டபத்திற்கு அருகில் வந்தான். லட்சுமி அவனுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோபியும் அதே போல பப்புவின் கால்களில் விழுந்தான்.
அவன் மணமகனையும் மணமகளையும் ஆசீர்வதித்தான்.
திருமணம் முடிந்து மணமகனையும், மணமகளையும் உள்ளே அழைத்துச் சென்றார்கள். விருந்து முடிந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் புறப்பட்டார்கள். லட்சுமி கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே?”
‘‘எங்கேயாவது மறைஞ்சு உட்கார்ந்திருப்பாரு.”
‘‘அப்படி மறைந்து உட்கார்ந்திருக்க வேண்டியவர் இல்ல என் மாமா. என் மாமா எங்கே?” - அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். வீட்டிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தேடினாள். ஒரு இடத்திலும் அவளுடைய மாமா இல்லை. அவள் மீண்டும் தன் தாயின் அருகில் வந்தாள். ‘‘அம்மா, மாமாவைக் காணோம். மாமா அங்கேதான் போயிருக்கணும்?”
‘‘போகட்டும், அட்டையைப் பிடிச்சு மெத்தைமேல் படுக்கச் சொன்னா, அது இருக்குமா?”
வெறுப்பு கலந்த அந்த வார்த்தைகளை லட்சுமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முகத்தில் ஒரு தைரியம் நிழலாடியது. அவளுடைய வார்த்தைகள் மிகவும் கூர்மையாக வெளியே வந்தன: ‘‘நாமளும் அட்டைகளாகத்தாம்மா இருந்தோம். குப்பைக் குழியில நெளிஞ்சு திரிஞ்ச அட்டைகள். மாமாதான் நம்மை மனிதர்களா ஆக்கினாரு. நம்மளை இங்கே கொண்டு வந்து சேர்த்ததும், இந்த மெத்தையில் நம்மைப் படுக்க வச்சதும் மாமாதான். அப்படிப்பட்ட மாமாவை அட்டைன்னு சொல்றீங்க. அப்படித்தானேம்மா?”
‘‘நல்லது சொன்னா கேக்குறது இல்ல, மகளே, அதுனாலதான் அப்படிச் சொன்னேன்.”
‘‘மாமாவை அழைச்சிட்டு வர நான் போறேன். நான் கூப்பிட்டா என் மாமா கட்டாயம் வருவாரு. நான் மாமா கால்கள்ல விழுந்து அழுவேன்.” அவள் நடந்தாள்.
கல்யாணி அவளைத் தடுத்தாள்: ‘‘அய்யோ... மகளே! நீ போகக் கூடாது. நீ போனா, அவர் என்ன நினைப்பாரு? நான் போறேன் மகளே.... நான் போறேன்.”
‘‘அப்படின்னா, புறப்படுங்க. இப்பவே புறப்படுங்க.”
‘‘நான் கூப்பிட்டு வரலைன்னா, என்ன செய்யிறது?”
‘‘வரலைன்னா... அம்மா, நீங்க அங்கேயே இருங்க. நாளை அவரும் நானும் அங்கே வருவோம். அதுவரை நீங்க மாமாவைப் பத்திரமா பார்த்துக்கணும், அம்மா.”
கல்யாணி முழுமையான வருத்தத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள். சந்தோஷத்தில் தான் ஊன்றிய காலை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு உண்டானது.
ஜன்னல் வழியாக வானத்தின் விளிம்பைப் பார்த்தவாறு பப்பு எந்தவிதமான அசைவும் இல்லாமல் கட்டிலில் படுத்திருந்தான். வானத்திற்கு அப்பால் சந்தோஷமான ஏதோ ஒன்றைப் பார்த்து விட்டதைப் போல அவனுடைய முகம் பிரகாசமானது.
சாத்தப்பட்டிருந்த கதவைத் திறந்து கல்யாணி உள்ளே வந்தாள். பப்பு திரும்பிப் பார்த்தான்.
‘‘என்ன?” - அவன் புன்னகைத்தான்.
‘‘அங்கே போகணும்.”
‘‘எங்கே.”
‘‘உங்களைக் காணோம்னு அவ கவலையில இருக்கா. நாம அங்கே போவோம்.”
‘‘பரவாயில்ல... அவளோட கவலை மாறிடும்.”
‘‘அவள் அழுறா. இன்னைக்கு அவளை அழ வைக்கிறது நல்லது இல்ல. வாங்க போகலாம்.”
‘‘கொஞ்ச நேரம் கழிச்சு அவ சிரிக்க ஆரம்பிச்சிடுவா.”
‘‘உங்களைப் பார்த்தாதான் அவ சிரிப்பா.”
‘‘இல்லாட்டின்னாக்கூட அவ சிரிப்பா.”
‘‘நாம அங்கே போவோம்.”
‘‘போ...”
‘‘என் கூட நீங்களும் வரணும்.”
‘‘நானா?” - அவன் அலட்சியமாகச் சிரித்தான்.
அவள் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. மாலை நேரம் வந்தது. பப்பு கேட்டான்: ‘‘புறப்படலையா?”
‘‘எப்படிப் போறது?” நீங்க இப்படிப் படுத்திருக்கிறப்போ....”
‘‘நான் படுத்திருக்கிறதைப் பெருசா எடுத்துக்க வேண்டாம். புறப்படு...”
‘‘நான் புறப்பட மாட்டேன்.”
அமைதி!
பாதி இரவு ஆனது. கல்யாணி ஒரு நீண்ட பெருமூச்ச விட்டாள்.
‘‘தூங்கலையா?” - பப்பு கேட்டான்.
‘‘எப்படித் தூங்குறது? அவள் என் மகளாச்சே! அவ இல்லாம நான் எப்படித் தூங்குவேன்?”
‘‘எதுக்கு அவளைப் பிரிஞ்சு வரணும்?”
‘‘பிரியாம என்ன செய்யறது?”
அமைதி!
இரவுக் கோழி கூவி இரண்டு நாழிகைகள் கடந்தன. நிலவு மறைந்தது. கல்யாணி குறட்டை விட ஆரம்பித்தாள். பப்பு ஓசை எதுவும் உண்டாக்காமல் கட்டிலை விட்டு எழுந்து மெதுவாக வாசல் கதவைத் திறந்தான்.
இருமல். அவன் தன் இரண்டு கைகளாலும் வாயை அழுத்தி மூடினான். கல்யாணி முனகியவாறு திரும்பிப் படுத்தாள். அவன் வாசலுக்கு வந்தான்.
இருமல்! வாயை இறுகப் பொத்திக் கொண்டு அவன் படிகளில் இறங்கி, பாதைக்கு வந்தான். இருமல் அதற்கு மேல் கட்டுப்பாட்டில் நிற்கவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று இருமினான்.
அவன் நடந்தான். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது இருமிக் கொண்டும் இருந்தான். முழுமையான வெற்றிடமும் அமைதியும். இருமிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் அவன் நடந்து கொண்டிருந்தான்.
புதுமண தம்பதிகளின் முதல் இரவு! காதல் வயப்பட்ட இரண்டு இதயங்களின் சங்கமம்!
நள்ளிரவு நேரம் ஆன போது நித்திரை தேவி அவர்களின் அன்றைய காதல் லீலைகளுக்குத் திரைபோட்டாள்.
வீட்டு மாடியில் இருந்த படுக்கையறையின் பட்டு மெத்தை மீது அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தனர்.
லட்சுமியின் மனதில் அடித்தளத்தில் ஒரு பலமான சலனம் தோன்றியது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அவள் திடுக்கிட்டு எழுந்தாள். இருட்டில் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு சத்தமும் கேட்கவும் இல்லை.
தூரத்தில் ஒரு இருமல் சத்தம்! அவள் கூர்ந்து கவனித்தாள். மீண்டும் இருமல் சத்தம்! தொடர்ந்து இருமல்! அந்த இருமல் சத்தம் நெருங்கிக் கொண்டேயிருந்தது.
வெண்ணெயில் ஒட்டிக்கொண்ட நூலைப் பிரிப்பது போல அவள் தன்னுடைய மார்பிலிருந்த கணவனின் கையை எடுத்து மெத்தைமீது வைத்துவிட்டு மெதுவாக எழுந்தாள்.
இருமல்! இருமல்! அது அந்த மாளிகையின் முன்னாலிருந்த சாலையில் கேட்டது.
அவள் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். விளக்கு மரத்திற்குக் கீழே யாரோ நின்றிருந்தார்கள். அவளுடைய இதயம் பலமாக அடித்துக் கொண்டது. பூனையொன்று பதுங்கிப் பதுங்கி விளக்கு மரத்திற்கு அருகில் வந்து நின்று கொண்டிருந்தது.
அங்கு நின்றிருந்த உருவத்தைப் பார்த்து அது பயந்து போய் மெதுவாகப் பின்னோக்கித் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடியது.
இருமல்! இருமல்! அந்த உருவம்தான் இருமியது. இருமிக்கொண்டே அது நடக்க ஆரம்பித்தது.
‘‘மாமா....” - அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன.