மழை நாளில் குடையானாய்! - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6834
"என்ன.... என்னை பைத்தியக்காரன்ங்கறியா?"
"ஐய்யோ நான் அப்பிடிச் சொல்லலைங்க. உடம்புக்கு வர்ற வியாதி மாதிரி மனசுக்கு வர்ற பிரச்னைகளுக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறது நமக்குத்தானே நல்லது? நீங்க என் கணவர். உங்க கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படறேன். உங்க மனசுக்குள்ள இருக்கற அந்த சின்னப் பிரச்சனை சரியாயிடுச்சுன்னா நாம ரொம்ப சந்தோஷமா வாழலாம்...."
"பைத்தியக்கார டாக்டர்ட்ட போறதுக்கு நான் பைத்தியக்காரன் இல்ல. எனக்கு எந்த வைத்தியமும் தேவை இல்ல. நீதான் உளறிக்கிட்டிருக்க. உனக்கு இங்க என்ன குறைச்சல்? பெரிய வீடு, கார், தேவையான செலவுக்கு பணம், வேலைக்கு ஆள். வேற என்ன வேணும்?..."
"கார், பங்களா, பணம், வேலையாட்களோட சொகுசான வசதி... இது மட்டுமே ஒரு பொண்ணுக்கு நிறைவான வாழ்க்கையைத் தந்துடுமாங்க? என் கிட்ட எதுவுமே பேச மாட்டேங்கறீங்க. நீங்க பாட்டுக்கு வர்றீங்க. சாப்பிடறீங்க.... படுத்துக்கறீங்க...."
"நான் இப்பிடித்தான். என்னை மாத்தணும்னு உபதேசம் பண்ணிக்கிட்டிருக்காத. நான் மாற மாட்டேன்...."
"அப்பிடின்னா... எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"
"கல்யாணம் எதுக்காக பண்ணுவாங்க? ஜாலியா இருக்கறதுக்கும், ருசியா சமைச்சதை சாப்பிடறதுக்கும், பிள்ளையைப் பெத்து நான் ஆம்பளைன்னு நிரூபிக்கறதுக்கும்தான்....."
"பிள்ளை பெத்து காமிச்சா மட்டும்தான் ஆம்பளையா? தாலி கட்டி, வந்தவளோட அன்பா, பண்பா பழகி அவ மனசை புரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறமா தாம்பத்யத்துல ஈடுபட்டு குடும்பம் நடத்தறவன் தான் உண்மையான ஆம்பளை. ப்ளீஸ்.... புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கைங்கறது அன்பு நிறைஞ்சது. அந்த அன்பை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கறதுதான் குடும்பம். உங்க கூட அன்பான வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டு கேக்கறேன். உங்க மனசுல இருக்கற அழுக்கையெல்லாம் துடைச்சுட்டு ஒரு புது வாழ்க்கையைத் துவங்கலாம்...."
"உன்னோட போதனைகள் எனக்குத் தேவை இல்லை. நான் சொல்றதைக் கேட்டு, எனக்கு சர்வீஸ் பண்றதுதான் உன்னோட கடமை."
"கணவனோட பணம், வசதி, இதுக்கெல்லாம் அடிமையா வாழ முடியாதுங்க.. கணவனோட அன்புக்கு மட்டும்தான் ஒரு பொண்ணு அடிமை. கணவனுக்கு ஆளுமையான அன்பு இருந்தா... மனைவி, அடங்கிப் போற அடிமையா வாழத் தயாராயிடுவா. அதிகாரத்துனால அவளை அடக்கி ஆள நினைச்சா... அவளுக்குன்னு என்ன இருக்கு?..."
"இங்கப் பாரு. புராணம் பாடறதை நிறுத்திக்க. எனக்குத் தூக்கம் வருது." போர்வையை எடுத்து, இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கொண்டான் தியாகு.
'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத சில பேர்கள் பிறந்தென்ன லாபம்...’ எம்.ஜி.ஆர். அவர்களின் பழைய பாடல்தான் அர்ச்சனாவிற்கு நினைவு வந்தது.
நல்ல வரைமுறைகளைப் பின்பற்றி 'நான் இப்பிடித்தான் வாழ்வேன்’னு சொன்னா... அது நியாயமானது. 'நீங்க செய்றது தப்பு... மாத்திக்கோங்க... திருத்திக்கோங்க..ன்னு சொல்லும்போது 'நான் இப்பிடித்தான் வாழ்வேன்’னு சொல்றது...? 'ஆண்’ங்கற திமிர்ல வெளிவர்ற வார்த்தைகள்! என்னவோ பெரிய வீரம் பேசறதா நினைப்பு.... கடவுளே... என்னை ஏன் அழகா படைச்சே? அழகா இருக்கறது என்னோட குற்றமா? அழகை ஆராதிக்க வேண்டிய புருஷன் இப்பிடி அந்த அழகை என் உணர்வுகளோட அனுமதி இல்லாம ஆளுமையோட அனுபவிக்கறது மட்டுமில்லாம... சந்தேகப்பட்டு என்னை சித்ரவதை செய்யறாரே. மனம் விட்டு பேசலாம்னு முயற்சி பண்ணா அதுக்கும் ஒத்து வராம அகங்காரமா பேசறாரு...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.
'தன் உயிர் நண்பன்... என் உடன் பிறவா சகோதரன்.... இப்பிடி தன்னைத் தவிர வேற எந்த ஆண்மகனும் என் கூடப் பேசினாலோ பழகினாலோ சந்தேகம்! சொந்த வீட்டுக்குள்ளயே திருடன் போல நுழைஞ்சு.... ச்சே...’ நினைக்க நினைக்க நெஞ்சம் எரிந்தது அவளுக்கு. எந்தக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த தியாகுவைப் பார்த்தவளுக்கு எரிச்சல் வந்தது. எழுந்து சென்று இரண்டு டம்ளர் தண்ணீரை 'மளக்’ 'மளக்’ என்று குடித்தாள். உடை மாற்றும் அறைக்குச் சென்றாள். ஷெல்பைத் திறந்தாள். இரவு உடையை எடுத்தாள். புடவையை அவிழ்த்து விட்டு இரவு உடையை அணிந்தாள். வந்து படுத்தாள். அவளது கண் இமைகள் தூக்கம் என்பதையே மறந்திருந்தன. மடை திறந்த வெள்ளமாய் பொங்கிய கண்ணீர் அவளது துக்கத்தை வெளிப்படுத்தியது.
‘அன்பு, அழகு, அறிவு, அந்தஸ்து, படிப்பு, பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் எந்தக் குறையும் இல்லாத எனக்கு ஏன் இப்படி ஒருவர் கணவன் அமைந்தார்? யாரிடமும் என் கஷ்டங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் எனக்கேன் இந்த நிலை’ யோசித்தாள்.... யோசித்தாள்.... விடியும்வரை யோசித்துக் கொண்டே இருந்தாள். விடை தெரியாத கேள்விக்கு எத்தனை நேரம் யோசித்தாலும் பலன் இல்லை.
விடியும் வரை தூங்காத அவள், விடிந்த பின் அவளையும் அறியாமல் கண் அயர்ந்தாள்.
19
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, வீட்டின் பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றாள் அர்ச்சனா. போகும் வழியிலேயே சுகந்தியின் மொபைல் அவளை அழைத்தது. ஒரு ஓரமாக நின்று பேசினாள்.
"ஹாய் சுகந்தி... எப்பிடி இருக்க?"
"நல்லா இருக்கேன். ஆனா ரொம்ப வேலைகள். முதுகை நிமிர்த்திடுச்சு...."
"அப்பிடி என்ன வேலை?"
"மாமனார்க்கு அறுபதாவது பிறந்தநாள் வருது. விசேஷமா செய்யணும்னு எல்லா ஏற்பாடும் நடக்குது. திருக்கடையூர்ல சாஸ்திரப்படி செய்யணுமாம். மூணு நாத்தனாருங்க, ஒரு கொழுந்தன், நாத்தனார் பிள்ளைங்க ஆறு பேர்... இப்பிடி எல்லாருக்கும் துணிமணி எடுக்கற வேலை முடிஞ்சுது. அத்தை, மாமாவுக்கு துணி எடுக்கற வேலை இருக்கு. கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு அழைப்பு குடுக்கணும். இருநூறு பேரை திருக்கடையூருக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு வேன் பேசற வேலை, இன்னும் நிறைய ஏற்பாடு.... இப்பிடி எக்கச்சக்கமான வேலைகள் நடந்துச்சு. இன்னும் சில வேலைகள் பாக்கி இருக்கு. நீயும், உன் வீட்டுக்காரரும் கண்டிப்பா ஃபங்ஷனுக்கு வரணும்...."
"ஆமாமா... நானும், அவரும்தான் அப்பிடியே வந்து கிழிச்சுடப் போறோம்..."
"ஏன்டி....? ஏன் அப்பிடிச் சொல்ற?"
"நான் இப்ப கோயிலுக்குப் போற வழியில தெருவுல நின்னு பேசிக்கிட்டிருக்கேன். நீ வாயேன் எங்க வீட்டுக்கு. உன் கிட்ட நிறையப் பேசணும்."
"இன்னும் ரெண்டு நாள்ல இன்விடேஷன் ரெடியாயிடும். ரெடியானதும் உன் வீட்டுக்கு வரேன். வர்றதுக்கு முன்னால உனக்கு போன் பண்ணிட்டு வரேன்."
"சரி சுகந்தி" மொபைல் போன் தொடர்பைத் துண்டித்துவிட்டு கோயிலுக்கு நடந்தாள். குங்குமக் கலர் பட்டுப் புடவையில் மாம்பழக் கலர் ஜரிகை போட்ட சேலையும், மாம்பழக்கலர் ஜாக்கெட்டும் அணிந்து மிக எடுப்பாகத் தெரிந்த அவளது அழகைத் தெருவில் போவோர் வருவோர் அனைவரும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.