மழை நாளில் குடையானாய்! - Page 42
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6834
இந்தப் பொண்ணும் எதுவும் புரியாம, எதையும் விளக்காம 'ஆமா’ன்னு ஒத்தை வார்த்தையில சொல்லிடுச்சு போலிருக்கு. அதைக் கேட்ட அடுத்த நிமிஷம் மேல் கொண்டு எதுவும் பேச முடியாம நெஞ்சு வலி வந்து துடியா துடிச்சாரு. அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. அவரோட உயிரு ஒடுங்கிடுச்சு. மருமகப்பிள்ளை சொன்னப்ப கூட தன் மக அப்பிடியெல்லாம் போயிருக்க மாட்டாள்ன்னு உறுதியா நம்பினாரு. மொட்டை கட்டையா அவர் கேட்ட கேள்வியும், இந்தப் பொண்ணு சொன்ன பதிலும் அவரோட உயிரை காவு வாங்கிடுச்சு..." ஜெயம்மா அழுதாள்.
அர்ச்சனா திடமான குரலில் பேச ஆரம்பித்தாள். திருமணமான நாளிலிருந்து தன் வாழ்க்கை எப்படி இருந்தது..... தியாகுவின் சுயரூபம் என்ன.... அப்பாவின் அகால மரணத்திற்குத் தியாகு எப்படி காரணமானான்.... என்பதை ஒன்று விடாமல் எடுத்துக் கூறினாள். விளக்கினாள்.
"எந்தக் காரணத்துக்காக என்னோட ஃப்ரெண்ட்ஸைத் தவிர, அப்பா உட்பட எல்லார்கிட்டயும் என் கணவரைப் பத்தியும், என்னோட வாழ்க்கையைப் பத்தியும் மூடி வச்சேனோ அந்த என்னோட அப்பாவோட உயிரே போனப்புறம் மூடி மறைக்கறதுக்கு இனி எதுவுமே இல்ல. தாலி கட்டின கணவனோட அன்பும் இல்லாம, ஆதரவும் இல்லாம நான் அநாதரவா தவிச்சப்ப என்னோட நண்பர்கள்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. மழை நாள்ல்ல எனக்கு குடையா இருந்து பாதுகாத்தவங்க அவங்கதான். இதோ நிக்கறானே இந்த ப்ரவீன்... இவனை 'வீட்டை விட்டு வெளியே போ’ன்னு சொல்லி அவமானப்படுத்தினாரு என் புருஷன். அதுக்கப்புறமும் கூட, எனக்காக தன்னோட வேலையை எல்லாம் போட்டுட்டு சென்னையிலேயே இருந்து என் புருஷன் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறார்ங்கற காரணத்தை கண்டுபிடிச்சான். எதுக்காக? அந்தக் காரணத்தைக் கண்டு பிடிச்சு அதன் மூலமா அவரைத் திருத்தி என்னோட வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை அமைஞ்சுடாதாங்கற ஆதங்கத்துலதான். அந்த ஆதங்கமும் அக்கறையும் எதுக்காக? நட்புக்காக. எனக்காக நிறைய லீவு போட்டதுனால அவனோட வேலையும் போச்சு. என் மேல பழி சுமத்தி 'இவன் கூட ஓடிப் போயிட்டா’ன்னு சொன்ன என் புருஷன் கூட இனிமேல் நான் வாழத் தயாரா இல்லை.
“மானம்தான் உயிரை விட பெரிசுன்னு வாழ்ந்தவர் எங்க அப்பா. தன் மகளான என்னையும் அப்பிடித்தான் வளர்த்தாரு. அவரோட உயிரைப் பிடுங்கி எறிஞ்சுட்டாரு என் புருஷன்.
“பிரவீன் கூட பேசக் கூடா’துன்னு கட்டளை போட்டப்ப நான் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசலை. அவர் சொன்னபடிதான் நடந்துக்கிட்டேன்.
“எல்லாப் பொண்ணுங்களுமே தன்னோட புருஷன் தன்னை மட்டுமே விரும்பற, தன்னை மட்டுமே தொட்டு உறவாடறவனாத்தான் இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா... ஆண்கள் யாருமே ராமனா வாழறதில்லை. அப்பிடி வாழ்ந்தா... அது ரொம்ப அபூர்வம். அவதார புருஷன் ராமனா வாழ முடியாட்டாலும் சாதாரண மனுஷனா, என்கிட்ட பிரியமா பழகி இருந்தார்னா கூட அவரை மன்னிச்சிருப்பேன். திருத்தற முயற்சியைத் தொடர்ந்திருப்பேன்... என் மேல உயிரையே வச்சிருந்த எங்கப்பாவோட உயிர் மூச்சு நின்னு போனதும் அவராலதான். அன்பே இல்லாத ஒரு மனிதர் கூட மனைவியா எப்படி வாழ முடியும்? நான் வாழ்ந்தேன். மனசு மாறுவார்ன்னு காத்திருந்தேன். இலவு காத்த கிளியோட கதையாயிடுச்சு என்னோட நிலை..."
"புருஷன் கூட வாழப் பிடிக்காத நீ... இனிமேல் என்னம்மா செய்யப் போற? உன்னோட எதிர்காலம்?" அவள் மீது உண்மையான அக்கறை கொண்ட உறவினர் கேட்டார்.
"ஜவுளி பிஸினஸ் பத்தி எனக்கு நல்லா தெரியும். என் வாழ்க்கை தோல்வியான அதே சென்னையில ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் ஆரம்பிச்சு அதை வெற்றிகரமா நடத்தி வாழ்ந்து காட்டுவேன்."
"சரிம்மா. உன் மனசுக்கு என்ன தோணுதோ அதன்படி செய்மா."
"என்னோட இன்னொரு ஃப்ரெண்டு சுகந்தி, எனக்காக என்னைக் காப்பாத்த ஓடோடி வந்தா. அவளோட கணவர் தங்கமானவர். தன் மனைவியின் சிநேகிதியான எனக்கு உதவி செஞ்சுருக்கார். தாய்மைக்கு அடுத்தபடியான சக்தியும், வலிமையும் உள்ளது நட்புதான். ஆண், பெண் பேதமெல்லாம் நட்புக்குக் கிடையாது. என்னால தன் வேலையை இழந்துட்ட இந்த ப்ரவீன் கூட சேர்ந்துதான் ஜவுளி பிஸினஸைப் பண்ணப் போறேன். எங்க அண்ணன் சரவணனால திடீர்னு கிளம்பி வர முடியலை... போன்ல எல்லாமே பேசிட்டேன். என்னோட முடிவுக்கு அண்ணன் பச்சைக் கொடி காட்டிட்டாரு. நீங்கள்லாம் இந்த துக்க நேரத்துல என் கூட இருந்து ஆறுதல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. 'கண்ணால் பார்த்ததும் பொய். காதால் கேட்டதும் பொய். தீர விசாரிப்பதுதான் நிஜம்’னு சொல்லுவாங்க. எங்கப்பாவும் விசாரிச்சாரு. ஆனா தீர விசாரிக்காம ஒரே ஒரு கேள்வியில விசாரிச்சு என்னோட ஒற்றை சொல் பதில்ல என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு உயிரையே விட்டுட்டாரு.
“தன்னைத் தவிர வேற யார் கூடயும் பேசக் கூடாது. வேற யாரும் என்னைப் பார்த்துடக் கூடாது’ன்னு வக்கிரத்தனமா என்னை துன்புறுத்தின என் புருஷன் கண் முன்னாடி ஒரு நல்லவனை மறு கல்யாணம் பண்ணிக்குவேன். அந்த ஆள் கண் முன்னாடியே சந்தோஷமா வாழ்ந்து காட்டுவேன். என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரு நல்லவர் எனக்குக் கிடைப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு." அனைவரையும் கைகூப்பி வணங்கினாள் அர்ச்சனா.
41
காலம் ஓடியது. 'அர்ச்சனா டெக்ஸ்டைல்ஸ்’ சென்னையின் பிரபல ஜவுளிக் கடைகளுள் ஒன்றாக மிக விரைவில் முன்னுக்கு வந்தது. அர்ச்சனாவிற்கு பக்க பலமாக அத்தனை உதவிகளையும் செய்து வந்தான் ப்ரவீன். அவனையும், ஒரு பார்ட்னராகப் போட்டு ரெடிமேட் கடை, டெய்லரிங் செக்ஷன் என்று பல கிளைகள் துவக்கி வெற்றிகரமாக நடத்தினாள் அர்ச்சனா.
வெற்றிகரமான பெண்மணிகள் வரிசையில் இடம் பெற்ற அர்ச்சனாவின் புகைப்படம், பேட்டியாவும் பிரபல வார இதழ்களிலும், தினசரி பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அவற்றையெல்லாம் பார்த்து தியாகு உள்ளம் எரிந்திருப்பான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஒன்றை இழந்தால்தான் வேறு ஒன்றை அடைய முடியும் என்ற கூற்று அர்ச்சனாவின் வாழ்க்கையில் உண்மையாகியது. ஆனால் அவள் இழந்தது ஒன்று அல்ல. இரண்டு. அப்பாவின் உயிர் மற்றும் அவளது திருமண வாழ்க்கை. சிநேகிதியைப் போல, நண்பனைப் போல, நட்பைப் போல, மழைநாளில் குடையாக ஒரு துணைவனும் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் அர்ச்சனா காத்திருக்கிறாள்.
தான் நினைப்பதை வாய்மொழியாக, தைர்யமாக வெளியிடும் சுதந்திரத்தை அடைந்துள்ளாள். ஆகவே அவளது மனக்குரல் ஒலிப்பதில்லை. அதனால் அவளது நெஞ்சம் வலிப்பதில்லை. சுபமான வாழ்விற்கு சுகமான காத்திருத்தலில் அர்ச்சனாவின் நெஞ்சம் நிம்மதியாக இருந்தது.