மழை நாளில் குடையானாய்! - Page 41
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6834
இனி ஒரு நிமிஷம் கூட உங்க கூட வாழ முடியாத நிலை உருவாகிடுச்சு...." இது நாள் வரை ஒலித்து வந்த அர்ச்சனாவின் மனக்குரல் அடங்கியது. அவளது வாய் வழி குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலிக்கவில்லை. அந்த நெஞ்சத்திலிருந்த உரம், உரக்கக் குரல் கொடுத்தது.
"என் கூட வாழாம? வேற எவன் கூட வாழப் போற? இவன் கூடயா?" ப்ரவீனை சுட்டிக் காட்டிப் பேசிய தியாகு, மீண்டும் அர்ச்சனாவை அடிக்க முற்பட்டான்.
அவனை லட்சியம் பண்ணாமல் வீட்டின் வாசல் பக்கம் நோக்கி நடந்தாள் அர்ச்சனா.
வாசு, ப்ரவீன், சுகந்தி மூவரும் அவளைப் பின் தொடர்ந்தனர்.
வாசலை விட்டு இறங்குவதற்கு முன் சுகந்தி, தியாகுவின் அருகே சென்றாள்.
“உன்னோட திருவிளையாடல்களையெல்லாம் அர்ச்சனாகிட்ட சொல்றதுக்குத்தான் ப்ரவீன் அவளுக்கு போன் பண்ணினான். நான் அர்ச்சனாவை நேர்ல பார்த்து உன்னோட ராத்திரி ரகசியங்களை சொல்லணும்னு நினைச்சேன். எங்க வீட்டு ஃபங்ஷன் வேலைகள்ல என்னால வர முடியல. அதனாலதான் நான் அவளுக்கு போன் பண்ணினேன். நல்ல வேளை, நான் போன் பண்ணினது. லைன்ல அவளோட அலறல் சத்தம் கேட்டுத்தான் நாங்க இங்க ஓடி வந்தோம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திருந்தா உன் கையில விலங்கு மாட்டி ஊர் அறிய இழுத்துக்கிட்டு போயிருப்பாங்க. எங்க அர்ச்சனா நல்ல பொண்ணு. அதனாலதான் உன்னை இந்த அளவுக்கு விட்டு வச்சிருக்கா. இதே ப்ரவீன் எங்க வீட்லதான் ஒரு வாரமா தங்கி இருக்கான். என் கணவர் வாசுதான் அவனைத் தங்க வச்சார். என் கணவர் எங்க நட்புக்கு மரியாதை குடுக்கறவர். என்னைப் புரிஞ்சுக்கிட்டவர். என் மேல நம்பிக்கை வச்சிருக்கறவர். களங்கம் இல்லாத மனசு அவருக்கு. களங்கமே உருவானவன் நீ... அர்ச்சனாவுக்கு புருஷனா இருக்கற தகுதி உனக்கு இல்ல... ச்சீ... நீயெல்லாம் ஒரு மனுஷனா....?" கேட்டுவிட்டு மடமடவென்று வாசலை நோக்கி நடந்து அர்ச்சனாவை அணைத்தபடி அழைத்துச் சென்றாள்.
38
மறுநாள் விடியற்காலை. சுகந்தியும், வாசுவும் அமெரிக்கா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே போட்ட திட்டம்.
அர்ச்சனா இக்கட்டான நிலையில் இருந்தபடியால் அவளுக்கு உதவி செய்ய ஓடி வந்திருந்தனர் வாசுவும், சுகந்தியும். அவர்களின் வெளிநாட்டுத் திட்டம் அர்ச்சனா அறிந்த ஒன்று.
"சுகந்தி, நீ நாளைக்கு கிளம்பணும். இன்னிக்கு உனக்கு நிறைய வேலை இருக்கும்...."
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. போ... போய் படுத்துக்க. எனக்குக் கொஞ்சம் வெளில வேலை இருக்கு. ப்ரவீன் உனக்குத் துணையா இருப்பான். அது சரி, உங்க அப்பாகிட்ட எதுவும் பேசலியே? அவருக்கு இங்க நடந்ததைப் பத்தி சொல்ல வேண்டாமா?"
"இப்ப வேண்டாம் சுகந்தி. இன்னும் ரெண்டு நாளாகட்டும். அதிர்ச்சி அடைஞ்சுடாதபடி ஏதாவது பொய் சொல்லி நான் அங்க போய் கொஞ்ச நாள் தங்கணும். அதுக்கப்புறம் சந்தர்ப்பம் பார்த்து மெதுவா, பக்குவமா எடுத்துச் சொல்லணும். அவசரப்பட்டுடக் கூடாது..."
அவள் அவசரப்படவில்லை. ஆனால் அவளது புருஷன் தியாகு அவசரம் மட்டுமல்ல, ஆத்திரமும் பட்டு கனகசபையிடம் பேசிவிடக் கூடும் என்பதை அப்போது அவள் உணரவில்லை.
சுகந்தி வெளியே கிளம்பினாள். அவளது வேலைகளை முடித்தாள். ப்ரவீன், அர்ச்சனாவிற்கு துணையாக இருந்து அவளுக்கு பழச்சாறு, ஹார்லிக்ஸ் என்று அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் விடியற்காலை.
சுகந்தியும், அவளது கணவன் வாசுவும் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். உறவினர்கள் ஓரிருவர் வழி அனுப்ப வந்திருந்தனர்.
அர்ச்சனாவின் அருகே வந்தாள் சுகந்தி.
"இப்படி ஒரு நிலைமையில உன்னை விட்டுட்டுப் போக வேண்டியிருக்கு அர்ச்சு. உங்கப்பா வீட்டுக்குப் போற வரைக்கும் நீ இங்கேயே இருந்துக்க. ப்ரவீன் உன்னை நல்லா கவனிச்சுப்பான். உனக்கு உன்னோட அப்பா வீட்டுக்குப் போணும்னு தோணும்போது ப்ரவீனையும் துணைக்கு அழைச்சுட்டுப் போ. டேக் கேர்." கண்கள் கலங்க விடை பெற்று புறப்பட்டாள் சுகந்தி.
39
சுகந்தி புறப்பட்டுச் சென்ற அன்று மாலை நேரம். அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது. நம்பரைப் பார்த்தாள். 'அப்பா!’ எடுத்துப் பேசினாள்.
"அர்ச்சனா.... நீ... நீ.... ப்ரவீன் கூடயாம்மா இருக்க?"
கனகசபை எடுத்த எடுப்பில் இவ்விதம் கேட்டதும் அர்ச்சனா, பதில் பேசுவதறியாது திகைத்தாள். யோசித்தாள். இதற்குள் மறுபடியும் கனகசபையின் குரல்!
"என்னம்மா அர்ச்சனா? நான் கேக்கறேன்ல... பிரவீன் கூடயாம்மா இருக்க?"
"அ.... அ... ஆ...ஆமாம்ப்பா...."
"ஐய்யோ கடவுளே... ஆ...." கனகசபை அலறுவது கேட்டது. அதன் பின் எந்த ஒலியும் இல்லை.
மறுபடியும் அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது. வேகமாக எடுத்தாள் அர்ச்சனா. யாரோ உறவினர் பேசினார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் அர்ச்சனா.
"ஐய்யோ அப்பா....." அவளது அலறலைக் கேட்டு சமையலறையில் 'டீ’ போட்டுக் கொண்டிருந்த ப்ரவீன் ஓடி வந்தான்.
"ஐய்யோ... அப்பா...."
"என்ன அர்ச்... அப்பாவுக்கு என்ன?"
"ஐய்யோ ப்ரவீன்... என் அப்பா... என்னோட உயிருக்கு உயிரான அப்பா என்னை விட்டுட்டுப் போயிட்டாராம் ப்ரவீன்...." கதறி அழுதாள் அர்ச்சனா.
40
அர்ச்சனா பிறந்து வளர்ந்த ஊர். கனகசபையின் காரியங்கள் யாவும் முடிந்தது. முக்கியமான உறவினர்களும் ஊர் பெரியவர்கள் மட்டும் கூடி இருந்தனர். அர்ச்சனாவின் மற்ற நண்பர்கள் வந்து துக்கம் விசாரித்துவிட்டு, தகனக்கிரியை, சம்பிரதாயங்கள் முழுவதும் நிறைவேறும் வரை கூட இருந்துவிட்டு கிளம்பி இருந்தனர்.
ப்ரவீன் மட்டும் இருந்தான்.
சமையல்கார ஜெயம்மா, அர்ச்சனாவுடன் அவளருகே நின்றிருந்தாள்.
ஊர் பெரியவர் உலகநாதன் பேச ஆரம்பித்தார்.
"அம்மா அர்ச்சனா... நீ சந்தோஷமா வாழணும்னு உங்க அப்பா உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் குடுத்தார். நாங்க அவரைப் பார்க்கும் போதெல்லாம், 'உங்க மக அர்ச்சனா நல்லா இருக்காளா’ன்னு கேக்கறதுண்டு. நாங்க கேக்கறப்பல்லாம் 'எங்க மக ரொம்ப சந்தோஷமா, சௌகர்யமா இருக்கா. மாப்பிள்ளை அவகிட்ட பிரியமா இருக்காராம்’ இப்பிடித்தான் சொல்வாரு. ஆனா... திடீர்னு உன் புருஷன், உங்க அப்பாவுக்கு போன் பண்ணி 'உங்க மக அர்ச்சனா, அவளோட சிநேகிதன் ப்ரவீன் கூட ஓடிப் போயிட்டாள்’ன்னு சொல்லி இருக்காரு.
ஜெயம்மா குறுக்கிட்டாள்.
"அப்பவும் அவர் அதை நம்பலைங்க. உடனே அர்ச்சனாவுக்கு போன் போட்டு 'நீ ப்ரவீன் கூடயாம்மா இருக்க’ன்னு ஒத்தை கேள்வி கேட்டாரு.