நெருப்பு - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
எழுச்சியுடன் நின்றுகொண்டிருந்த சரளாவின் மார்பகங்களைப் பார்த்ததும், வினோத் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவளை இழுத்து அணைத்துக்கொண்டு அவன் சொன்னான்:
“கொஞ்ச நேரம் கழிச்சுப் போனால் போதும்.”
சுனந்தினி
ஒரு குரல் கேட்டு சரளா கனவிலிருந்து விடுபட்டாள்.
“அக்கா...”
அவள் திரும்பிப் பார்த்தாள்.
“தேவிகா?”
“இது நான் அக்கா...” - சுனந்தினி சொன்னாள்: “அக்கா, எப்போ பார்த்தாலும் ஒரு தேவிகாவைப் பற்றியே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே! யாரு அது?”
சரளா எதுவும் சொல்லவில்லை. தேவிகா யாரென்று அவளுக்கே தெரியாது.
ஆச்சரியப்படும் விதத்தில் தன்னைச் சுற்றிலும் என்னவோ நடக்கிறது என்று சரளாவிற்குத் தோன்றியது. தான் வந்த ஒற்றை மாட்டுவண்டியைப் பற்றியும் அதைச் செலுத்திக் கொண்டு வந்த தாடிக்காரனைப் பற்றியும் அவள் சொன்னபோது ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆச்சரியத்தையும், தாங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயம் அது என்பதையும் வெளிப்படுத்தினார்கள். கடந்த பதினைந்து வருடத்திற்கும் மேலாக மலை உச்சிக்கு ஆட்டோ ரிக்ஷா தான் வருகிறது. அடிவாரத்தில் இருக்கும் கிராமத்திலும் யாரிடமும் ஒற்றை மாட்டு வண்டி இருப்பதாகத் தங்களுக்குத் தெரியாது என்றார்கள் அவர்கள். சரளா வாழ்க்கையில் ஒருமுறைகூட ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியதில்லை.
அதேபோலத்தான் இருந்தது தேவிகாவின் விஷயமும். சரளா தனியாகத்தான் ஆஸ்ரமத்திற்கு வந்தாள் என்று சுனந்தினி உறுதியான குரலில் கூறுகிறாள்.
“அக்கா... நீங்க ஆனந்தகுருகிட்ட பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே நான் இருந்தேன். நான் எந்த தேவிகாவையும் பார்க்கல.”
உண்மையாகவே அது ஒரு பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயமாக இருந்தது. ஒன்று தன்னுடைய மூளையில் ஏதாவது கோளாறு உண்டாகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் சரளா. அவை இரண்டுமே இல்லாவிட்டால்? அதை நினைக்கும்போது அவளுக்கு உடனடியாக பயம் வந்தது. இங்கு இந்த மலை உச்சியில் அவளுடைய அறிவு எல்லைக்கு அப்பால் வேறு என்னவோ இருக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது. இரவில் சுனந்தினி தூங்கியபிறகு, தூக்கமில்லாமல் படுத்திருக்கும் நேரங்களில் மனதைப் பாடாய்ப் படுத்தும் அந்த எண்ணம் சரளாவிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
“அக்கா, என்ன இங்கு தனியா இருக்கீங்க?” - சுனந்தினி கேட்டாள்: “அங்கே வாங்க... அங்கே நேரம் போறதே தெரியாது.”
“எனக்குத் தனியா இருக்கத்தான் பிடிக்குது.”
சுனந்தினி போய்விட்டாள். அவள் அப்படித்தான். திடீரென்று காற்றைப்போல அங்கு வருவாள். ஒரு சிரிப்புடன், நட்பு என்ற குளிர்ச்சியைப் போர்த்திவிட்டு அங்கிருந்து போய்விடுவாள். மீண்டும் அவள் தனியாகிவிடுவாள்.
தனியாக இருக்கும்போது நினைவுகள் வந்து அவளை வளைத்துக்கொள்ளும். மனதில் வேதனைகளை உண்டாக்கும், இனிமையான நினைவுகள்... அவற்றை விட்டு ஓடிப்போய் விடவேண்டும் என்று முயற்சிக்கும்போது அவள் அந்த நினைவுகளை நோக்கிப் பிடித்து இழுக்கப்பட்டு விடுகிறாள்.
வினோத் கூறுவதுண்டு:
“நான் செய்யிறது சரியில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனால் என்னால அதைக் கட்டுப்படுத்த முடியல.”
கவலை உண்டாக்கும் நிமிடங்கள் அவை.
“அண்ணி ஒவ்வொரு தடவையும் நீங்க எழுந்து போறப்போ நான் மனசுல முடிவு செய்வேன் இது கடைசி தடவையா இருக்கணும்னு. இனி இதைச் செய்யக்கூடாதுன்னு நான் நினைப்பேன். ஆனால் மறுநாள் மதியநேரம் வந்திடுச்சுன்னா, நான் உங்கக் காலடிச் சத்தத்துக்காகக் காதுகளைத் தீட்டி வச்சிக்கிட்டு காத்திருக்கேன். அந்தச் சத்தம் வர்றதுக்கு தாமதமாயிடுச்சுன்னா மனசு முழுக்க கவலை வந்து ஒட்டிக்குது.”
சரளா அமைதியாக அவனை முத்தமிடுவாள்.
“அண்ணி, நீங்க உண்டாக்குற ஒவ்வொரு ஓசையும் எனக்கு இப்போ தெரியும். படி ஏறுறது... பிறகு உங்க அறையில இருந்து வர்ற ஒவ்வொரு அசைவும்... இவ்வளவு காலமா நான் இது எதையும் கவனிச்சது இல்லன்றது எனக்கே ஆச்சரியமான ஒரு விஷயமா இருக்கு.”
ஆனால், சரளாவிற்கு அதைப்பற்றி எந்த வருத்தமும் உண்டாகவில்லை. மதிய உணவு முடிந்தால், வினோத் மாடிக்குச் செல்வான். கோபி கீழே இருக்கும் அறையில் படுத்திருப்பான். அவள் குடிப்பதற்கான நீரைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றிக்கொண்டு போய் வைப்பாள். சாயங்காலம் கடையிலிருந்து ஏதாவது வாங்க வேண்டுமென்றால் அப்போதுதான் கூறுவாள். திரும்பிப் போய் சமையலறையைச் சுத்தம் செய்ய மாமியாருக்கு உதவுவாள். அவள் எப்போதும் கூறுவதைக் கூறுவாள்:
“போயி கொஞ்ச நேரம் படு, மகளே...”
இப்போது அதைப் பாதி கேட்டு, பாதி கேட்காமல் அவள் மாடிக்குச் செல்வாள். கடிகாரத்தில் இரண்டரை மணி ஆகியிருக்கும். காலடிச்சத்தத்தை உண்டாக்காமல் பக்கத்து அறையை நோக்கி நடப்பாள். கட்டிலில் படுத்துப் படித்துக் கொண்டிருக்கும் வினோத்திற்கு குனிந்து முத்தம் தருவாள்.
“மன்னிச்சுக்கோ குழந்தை... நான் இப்போ வந்திடுறேன்.”
அவன் அவளுடைய கையைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுக் கூறுவான்.
“சீக்கிரமா வாங்க.”
அவள் திரும்பி அறையை நோக்கி நடப்பாள். கடிகாரத்தின் பெண்டுலம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவாறு படுத்திருப்பாள். மூன்று மணி ஆகிவிட்டால், கீழேயிருந்து வரும் சத்தத்திற்காக அவள் காதுகளைத் தீட்டிக்கொண்டிருப்பாள். வாசல் கதவு திறக்கப்படும், அடைக்கப்படும் சத்தம் கேட்கும் அவள் சாளரத்தின் வழியாகப் பார்ப்பாள். கோபி வயலின் பரந்துகிடக்கும் பசுமையில் தூரத்தில் போய் மறைந்துவிட்டால், அவள் வினோத்தின் அறையை நோக்கி நடப்பாள்.
வினோத் தூங்காமல் விழித்திருப்பான்.
மறுபிறவி
ஞானானந்தன் மலர்கள் விஷயத்தை மறக்கவில்லை. காலையில் பூக்கூடையுடன் வந்த அவன் கேட்டான்:
“அக்கா இன்னைக்கு நீங்கதானே பூக்கள் பறிக்கணும்?”
சரளா தலையில் கை வைத்தாள். ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகச் சொன்ன பொய்பை அவன் உண்மையென நினைத்திருக்கிறான். அவள் கூடையைக் கையில் வாங்கிக் கொண்டு வாசலில் சந்தேகத்துடன் நின்றிருந்தாள்.
“எங்கே பூக்கள் கிடைக்கும்னு எனக்குத் தெரியாதே.”
“ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் பூச்செடிகள்தான்” - ஞானானந்தன் சொன்னான்: “ரொம்பவும் சிரமப்படாமலே கிடைக்கும்.”
“குழந்தை, ஒருமுறை என்கூட நீ வரமுடியுமா?”- சரளா தயங்கியவாறு சொன்னாள். “ஒரு தடவை வந்தால் போதும். எனக்குக் கொஞ்சமும் அறிமுகமே இல்லாத இடமாயிற்றே!”
அவன் அழகாகச் சிரித்தான். அவனுடைய முகத்தில் உயிர்த்துடிப்பின் பிரகாசம் இருந்தது. ‘எனக்கு தெரியுமே!’ என்ற அர்த்தம் அவன் முகத்தில் தெரிந்தது.
“சரி... வாங்க...”
ஆஸ்மரத்திற்குப் பின்னாலிருக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடந்தார்கள். சிறிது தூரம் நடந்தபோதுதான் சரளாவிற்கே தெரியவந்தது தாங்கள் மலையையே ஒரு வலம் வந்துகொண்டிருக்கிறோம் என்பது.