நெருப்பு - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
ஒற்றையடிப்பாதை மலையைச் சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சுற்றும்போதும் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.
“மழைக்காலம் முடிந்தால் இங்கு மலர்களின் ஆட்சிதான். ஐந்து நிமிடங்கள் நடந்தால் போதும், பூக்கூடை நிறைஞ்சிடும்.”
இப்போது காடு கிட்டத்தட்ட காய்ந்து போய்க் கிடந்தது. மரங்கள் மட்டும் பசுமை படர்ந்து நின்றிருந்தது. ஆனால், செடிகள் வாடியும் காய்ந்து போயும் இருந்தன.
“இது மலைதானே! ஆனா, இது யந்த்ரம்” – நடந்து கொண்டிருக்கும்போது ஞானானந்தன் சொன்னான்: “அந்தக் காலத்துல இங்கே ஒரு கோவில் இருந்ததுன்னு சொல்லுவாங்க. நம்ம குருவோட குருநாதரா ஒரு சுவாமிகள் இருந்தாரு. வேலப்ப சுவாமிகள். அவர் ஆஸ்ரமம் உண்டாக்குவதற்காக இந்த மலைமேல வந்தப்போ இடிஞ்சு கிடந்த கோவிலைப் பார்த்திருக்காரு. அந்தக் கோவில் இருந்த இடத்துலதான் ஆஸ்ரமத்தைக் கட்டினாரு.”
“கோவிலை ஏன் சுவாமிகள் புதுப்பிச்சுக் கட்டல?”
“அப்போ தேவப்பிரசன்னம் வச்சு பார்த்தப்போ அது எமதேவனின் கோவில்னும் புதுப்பித்து அதைக் கட்டக்கூடாதுன்னும் அதுல வந்தது. அமானுஷ்ய சக்திகள்தான் தானே அந்தக் கோவிலை உண்டாக்கின! அந்தக் கோவிலை மனிதர்கள் புதுப்பித்துக் கட்டக்கூடாதுன்னும், அதற்காக முயற்சி செய்யக்கூடாதுன்னும் பிரசன்னத்துல தெரிஞ்சது.
ஆஸ்ரமம் உண்டாக்குறதைப் பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லைன்னு பிரசன்னத்தில் வந்ததால், இந்த இடத்திலேயே ஆஸ்ரமத்தை உண்டாக்கியாச்சு. கோவிலின் கருவறையில் இருந்த சிலைக்குக் கீழே மலையின் ஆழத்தில் இருக்குற யந்த்ரம் ரொம்பவும் சக்தி படைச்சது. அதனாலதான் வேலப்ப சுவாமிகளுக்குப் பல சித்திகளும் கிடைச்சது.”
ஒரு இடத்தை அடைந்தவுடன், ஞானானந்தன் நின்றான்.
“அக்கா, நான் உங்களுக்கு ஒரு இடத்தைக் காட்டுறேன்.”
அவன் ஒற்றையடிப் பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தான். வறண்ட மண் வழியாக, பாறைகளுக்கு மத்தியில் அவன் நடந்தான். சரளா அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள். அவர்கள் மேலே பார்த்தார்கள். ஆஸ்மரத்தின் புல்லால் ஆன மேற்கூரைகள் இப்போது தெரியவில்லை. மரங்கள் மட்டுமே தெரிந்தன. இங்கிருந்து பார்க்கும் போது அவை இடைவெளியின்றி இருப்பது மாதிரி தெரிந்தன. இரண்டு பெரிய பாறைகள் அவர்களின் வழியில் குறுக்கிட்டன. அவற்றுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்லும்போது ஞானானந்தன் சொன்னான்:
“அக்கா, கவனமா நடக்கணும்.”
பாறைகளின் மறுபக்கத்தில் ஒரு இறக்கம் இருந்தது. அந்த இறக்கத்தில் ஒரு சமதளம். ஒரு பெரிய அறை அளவிற்கு அது இருந்தது. சுற்றிலும் உயர்ந்த பாறைகள். மேலே ஒரு பெரிய ஆலமரம் குடை பிடித்து நின்று கொண்டிருந்தது.
“பாருங்க.”
ஞானானந்தன் சுட்டிக்காட்டிய இடத்தை அவள் பார்த்தாள். அவளுடைய கண்கள் மலர்ந்தன. பெரிய ஒரு பாறையின் பிளவிற்குள்ளிருந்து தெளிந்த நீர் கொண்ட ஊற்று புறப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது.
“எவ்வளவு அழகா இருக்கு!” சரளா சொன்னாள்.
மெல்லிய அந்த நீரோட்டம் தரையிலிருந்த பாறையில் சிறிய ஒரு தேக்கத்தை உண்டாக்கி, ஒரு ஓரமாக வெளியே ஓடியது.
“இதை மறுபிறவி தீர்த்தம்னு சொல்லுவாங்க” - ஞானானந்தன் சொன்னான்: “யாரும் இந்த நீரைத் தொடமாட்டாங்க. அது நம்மோட மறுபிறவிகளை பாதிக்குமாம். அதுனால...”
அவள் கேள்வியுடன் ஞானானந்தனைப் பார்த்தாள்.
“அதாவது நம்மோட கர்மங்களை வைத்துதான் நமக்கு ஒரு பிறவி கிடைக்குது. இந்தப் பிறவியில் செய்யிற கர்மங்களின் பலனுக்கு ஏற்றபடி அடுத்த பிறவியில் நாம் என்னவாக ஆவோம் என்பது தீர்மானிக்கப்படுது. இந்தத் தீர்த்தத்தைத் தொட்டால் நம்மோட கர்மங்களெல்லாம் அழிஞ்சு போயிடும். நாம நினைக்கிற பிறவி நமக்கு கிடைக்காது. அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். எவ்வளவு ஆயிரம் சாதாரண பிறவிகளை எடுத்த பிறகு, ஒரு மனிதப் பிறவி கிடைக்குது! அந்தப் பிறவிகள் முழுவதையும் திரும்பவும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்...?”
அதைக் கேட்டு சரளாவிற்குப் பயம் வந்துவிட்டது. மீண்டும் புழுவாக, சாதாரண உயிரினங்களாக, மிருகங்களாக, பறவைகளாக ஓராயிரம் பிறவிகள்!
“அக்கா, உங்களுக்கு மறுபிறவிமேல நம்பிக்கை இருக்குதா?”
“எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது.” - சரளா சொன்னாள்: “நான் அந்த அளவிற்கு வாசிச்சதோ, படிச்சதோ இல்ல...”
“இந்த மலையில் பல அற்புதச் செயல்கள் இருக்குதுன்னு சொல்லப்படுறது உண்மைதான். நான் அவ்வப்போது இந்தப் பாறையில உட்கார்ந்து தியானம் செய்வதுண்டு. அப்போ மிகவும் ஆச்சரியமான உணர்வுகளை நான் அடைஞ்சிருக்கேன். எனக்கே அது என்னன்னு தெரியாது.”
“அப்படின்னா?”
“அதை வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அனுபவிச்சுத்தான் தெரிஞ்சிக்கணும். சில நேரங்கள்ல இந்த மலைகள் முழுவதிலும் ஏராளமான குகைகள் இருக்கின்றன என்றும் அந்தக் குகைகளில் நம்மோட கற்பனையைத் தாண்டிய ஒரு காலமும் அந்தக் காலத்துல இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்காங்கன்னு தோணும். ஒருவேளை, நம்மோட சாயலிலேயே இருக்கக்கூடிய மனிதர்களாக அவங்க இருக்கலாம். எல்லாம் என்னோட தோணல்களாகூட இருக்கலாம்.”
சரளாவிற்கு அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. ஆஸ்ரமத்தில் ஆச்சரியப்படக்கூடிய ஏதோவொன்று இருக்கிறது என்ற உணர்வு ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இருந்தது. அவள் கேட்டாள்.
“ஞானானந்தன், நீ எதற்கு ஆஸ்ரமத்துல சேர்ந்தே?”
“கடவுளோட தீர்மானம்” - அவன் தயங்காமல் சொன்னான்: “நான் ரொம்பவும் சின்ன வயசிலேயே சந்நியாசத்தை ஏற்றுக் கொள்வேன்னு என் ஜாதகத்துலேயே இருக்கு. என் தந்தையும் தாயும் அதை நம்பல. காரணம் - நான் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த ஒருத்தன் இல்ல. கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவன் எப்படி சந்நியாசியாக ஆக முடியும்? ஆனால், நான் உண்மையான கடவுள் நம்பிக்கையாளனா இருந்தேன் - எனக்குன்னு இருந்த வழியில அவ்வளவுதான். சில நேரங்கள்ல எனக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். அது என்னை வீட்டை விட்டு வெளியேறும்படிச் சொல்லும். என் ஆன்மாவின் குரலாக அது இருக்கலாம். நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கலைன்ற தோணல் மேலும் மேலும் பலமாகும். வேறொரு தெரியாத இடத்தைப் பற்றித் தெளிவற்ற எண்ணங்கள் மனதில் தோணும். நிழல்களைப் போல... நான் மன அமைதி இல்லாம தவிப்பேன்.”
“நேரம் அதிகமாயிடுச்சு...” - சரளா சொன்னாள்: “நாம திரும்பிப் போவோம்.”
பாறையிலிருந்து எளிதாக இறங்கியதைப் போல மேல் நோக்கி ஏறுவது முடியாத விஷயம் என்பதை அவள் புரிந்துகொண்டாள். ஞானானந்தன் மேலே அடைந்துவிட்டிருந்தான்.