நெருப்பு - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
“என் கையைப் பிடிச்சுக்கோங்க.” - அவன் தன் கையை நீட்டிக் கொண்டு சொன்னான்: “காலை வைக்கிறப்போ கவனமா இருக்கணும்.”
அவள் ஞானானந்தன் கையைப் பிடித்தாள். அந்த நிமிடத்தில் ஒரு சிலிர்ப்பு அவளுடைய உடம்பெங்கும் பரவியது. அவள் ஞானானந்தனில் வினோத்தைப் பார்த்தாள். அதற்காக அவள் தன்னைத்தானே பழித்துக்கொண்டாள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவதே நல்லது என்று அவள் நினைத்தாள்.
ஆஸ்ரமத்தை அடைந்தபோது அவள் கூடையை ஞானானந்தனிடம் கொடுத்துவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றாள். தரையில் உட்கார்ந்து குரு கொடுத்த பகவத்கீதையை வாசிக்க முயற்சித்தாள். ஆனால், மனம் அவள் நினைத்த மாதிரி ஒத்துழைக்கவில்லை.
ஞானானந்தன் எதைப் பற்றியும் சிறிதும் சந்தேகப்படவில்லை. பாறைகளுக்கு மத்தியில் இருந்த சமதளத்தைப் பார்த்தபோது ஒரு நிமிட நேரத்திற்கு, சரளாவிற்குச் சுற்றியிருந்த சூழ்நிலையே மறந்து போய்விட்டது. அது வினோத்தின் படுக்கையறை என்றும் அவள் நினைத்துவிட்டாள். மிகவும் இயல்பாகத் தோன்றிய அந்த அறிவு தடுமாறிய நிலை அவளை மிகவும் பயத்திற்குள்ளாக்கியது. மீண்டும் வினோத்தைப் பார்க்க வேண்டும் என்றும், அவனுடைய கைகளில் போய் விழவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்த விஷயம் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்ற புரிதலும் அவளுக்கு உண்டானது.
முழங்கால்மீது தன் முகத்தை வைத்துக்கொண்டு சரளா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
குரு
சரளாவிடம் உண்டான மாற்றங்களை ஆனந்தகுரு கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தன்னுடைய சொற்பொழிவுகள் நடக்கும் போது கூடத்தின் ஒரு ஓரத்தில் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த அவள் திடீரென்று சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்தாள். அவளுடைய செயல்களிலும், பேச்சுகளிலும் முன்னேற்றம் தெரிந்தது. பிடுங்கி நட்ட நாற்றைப் போல இருந்தாள் அவள். வாடிப்போயிருந்த வேர்கள் ஈர மண்ணில் பரவி நீரையும், உரத்தையும் இழுத்து வாட்டத்தை நீக்கிக் கொண்டிருந்தன. அவர் அதற்காகச் சந்தோஷப்பட்டார். அவளுக்கு ஆஸ்ரம வாழ்க்கைமீது ஒரு விருப்பம் உண்டாகி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். பூஜைக்குத் தேவையான பூக்களைச் சேகரிப்பதில் சரளா உதவியாக இருக்கிறாள் என்று ஞானானந்தன் ஏற்கெனவே அவரிடம் கூறியிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆஸ்ரம வாழ்க்கையுடன் பொருந்திப் போய்விடுவாள். மனதில் இருந்த காயத்தை ஆற்ற அது அவளுக்கு உதவும்.
மனதில் இருந்த காயம் என்ன என்று குரு அவளிடம் கேட்கவில்லை. அவள் கூறவுமில்லை. காரிய காரண நியாயங்களுக்கு முக்கியத்துவமேயில்லை என்ற உண்மையைத் தன்னுடைய இருபது வருட ஆஸ்ரம வாழ்க்கையில் அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். கர்மத்தை மட்டுமே செய்ய வேண்டும். அதற்கான பலன் பல பிறவிகள் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இயற்கையின் சட்டங்களுக்கு முன்னால் மனிதன் எவ்வளவு சாதாரணமாகிவிடுகிறான்!
அவர் தன்னுடைய தினசரி கடமைகளில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். பிறப்பால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கர்மம் விவசாயம் செய்வது. அந்தக் கர்மத்தைதான் அவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் இதயத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, அவரால் அதற்கு மேல் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. அப்போதுதான் ஒரு உள்மன அழைப்பின் புரிந்துகொள்ள முடியாத வீச்சுகள் அவரைத் தேடி வந்தன. அதைத் தொடர்ந்து அவர் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டார்.
வேலப்ப சுவாமிகள் அவரை ஏற்றுக்கொண்டார். புலன்களால் தெரிந்துகொள்ள முடியாத ஒரு உள்பார்வை மூலம் அவருடைய வரவை வேலப்ப சுவாமிகள் முன்கூட்டியே தெரிந்து கொண்டிருந்தார்.
“நான் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்” – சுவாமிகள் சொன்னார். பர்ணசாலையின் வாசல் கதவுக்கு வெளியே எரிந்துகொண்டிருந்த ஹோம குண்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு சுவாமிகள் பேசினார்.
“அம்மா சாந்தியடைஞ்சிட்டாங்க... அப்படித்தானே?”
தன் தாயின் பதினாறாவது நாள் விசேஷம் முடிந்ததற்கு மறுநாள்தான் ஆனந்தகுரு அங்கு புறப்பட்டதே. மரணம் அமைதியாக முடிந்தது. இளைய மகனின் அகால மரணத்திற்குப் பிறகு அவள் பெரும்பாலும் படுத்த படுக்கையாகவே இருந்தாள். ஒருநாள் காலையில் தன் மூத்த மகனை அருகில் வரும்படி அழைத்தாள். நீர் அருந்திவிட்டுத் தன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டே கண்களை மூடிவிட்டாள்.
சுவாமிகள் சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஹோம குண்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். மாயாக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே அவர் தொடர்ந்து சொன்னார்:
“இரண்டு வருடங்களுக்குள் நீ நான் இருக்குமிடத்தில் இருப்பே. உன்னை இங்கு இருப்பவர்கள் குருவாக ஏற்றுக் கொள்வார்கள். வயதான காலத்தில் பல வருடங்களுக்கு முன்னால் இழக்கப்பட்டவர்கள் உன்னைத் தேடி வருவார்கள். அவர்களை நீ அறியாமல் இருக்கலாம். அறியாமல் இருப்பதே நல்லது. அறிவது உனக்குத் தொந்தரவாக இருக்கும்.”
வார்த்தைகள் நின்றன. குரு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
கடந்த கால விஷயங்களைப் பற்றி அதற்குப் பிறகு சுவாமிகள் எந்தச் சமயத்திலும் பேசவில்லை. அறிவு சம்பந்தப்பட்ட அபாரமான, வினோதமான உலகத்தை அவருக்கு சுவாமிகள் திறந்துவிட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல் பகுதி நடந்தபோது, ஆச்சரியப்படவில்லை. விதியின் புரிந்துகொள்ள முடியாத பாதைகளைப் பற்றிய அறிவு ஆச்சரியப்படாமல் இருக்க உதவியது.
மலைத் தொடர்களைப் பற்றி சுவாமிகள் கூறுவதுண்டு. “நம்மோட அறிவுக்கு அப்பாற்பட்ட பலவும் இந்த மலைத்தொடர்களில் இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம். அது ஆபத்தானது.”
சரளாவுடன் பேசியபோது சுவாமிகள் சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்தில் வந்தன. அவள் சொன்னவை நம்ப முடியாத விஷயங்கள் தான். எனினும், அவள் கூறும்போது அதற்கு உண்மையின் சாயல் உண்டாகிவிடுகிறது. ஒற்றைக் காளை இழுத்துச் செல்லும் பயண வண்டியும், அதன் உரிமையாளரான தாடிக்காரனும் இருந்ததென்னவோ உண்மைதான். வண்டி இல்லாமல்போய் பத்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. அதன் சொந்தக்காரனான தாடிக்காரனும் எப்போதோ இறந்துவிட்டான். இருபத்தைந்து வயதைக் கொண்ட இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆஸ்ரமத்திற்கு வந்தது அந்த வண்டியில்தான் என்று கூறுவது சாதாரணமல்ல. அது மறுக்கவும் முடியாத ஒரு உண்மை.
பிறகு-தேவிகா என்ற பெயரைக் கொண்ட பெண். அவளைப் பற்றி அதிகமாகக் கூற சரளாவால் முடியவில்லை. கேட்க ஆனந்த குருவிற்கும் பயமாக இருக்கிறது.
சரளாவுடன் பேசும்போது, பல யுகங்களைத் தாண்டி பயணம் செய்யும் உணர்வு உண்டாகிறது. நேர உணர்வு கொண்ட உலகம் மறைந்துபோய், தலைகீழான ஒரு நிலையில் அது போய் நிற்கிறது. நிமிடங்கள் மணிகளாகவும், மணிகள் நிமிடங்களாகவும் மாறுகின்றன. ஒரு நிமிடம் ஒரு யுகமாக நீளுவதைப் போன்ற ஒரு தோணல்... சரளாவின் முகத்தைப் பார்க்கும்போது அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் குருவை பாடாய்ப் படுத்தும். தேடல் மனதின் இருள் நிறைந்த சந்துகளில் ஆங்காங்கே பாதை மோதி நிற்கும். நினைவுகள் இருக்கும். மேலும் சில இடங்களில் இருள் நிறைய வேண்டியிருக்கிறது. அதுவும் நடந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.