நெருப்பு - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
திடீரென்று காற்றின் வேகத்தில் அவள் அந்தக் கைகளைப் பிடித்து அவனைத் தன்னை நோக்கி இழுத்தாள். கீழே விழாமல் இருக்க அவளுக்கு அருகில் கையை ஊன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை ஞானாந்தனுக்கு உண்டானது. அவள் திரும்பி அவனுடைய முகத்தைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்து உதடுகளில் முத்தமிட்டாள்.
சரளா செய்த காரியம் ஞானானந்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளுடைய கைகளை அடைந்துவிட்டிருந்தான். அவனுக்கு பயங்கரமான கோபம் உண்டானது. போராடி எழுந்தவாறு அவன் சொன்னான்:
“அக்கா, என்ன செய்றீங்க? நான் போறேன்.”
அவன் வேகமாகப் பாறைகளில் மிதித்து ஏறி திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
சரளா கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தனைத் திரும்பவும் அழைக்க அவள் முயற்சிக்கவில்லை. பிரயோஜனமில்லை என்பது அவளுக்குத் தெரியும்.
வெயில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் கிளைகள் வழியாக அவளைத் தேடி வந்த வெயில் கதிர்கள் மிகவும் வெப்பம் கொண்டவையாக இருந்தன. தகித்துக் கொண்டிருந்த மனதுடன் அவள் உட்கார்ந்திருந்தாள். சூரியன் வானத்தின் பாதிப் பகுதியைப் பயணம் செய்து முடித்த பிறகும், சரளா சிறிதும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
திடீரென்று ஒரு முடிவு எடுத்ததைப் போல அவள் எழுந்து, பாறைக்கு நடுவில் வந்து நின்றாள். ஒரு வழக்கமான சடங்கைப் போல அவள் தன் புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள். புடவையை அவிழ்த்து வீசி எறிந்துவிட்டு, அவள் ப்ளவ்ஸின் கொக்கிகளைக் கழற்றி, அதையும் உடம்பிலிருந்து நீக்கினாள். உள்ளாடைகள் பாறைகளில் சிதறிக் கிடந்தன.
தும்பிக்கை அளவில் இருந்த நீரோட்டத்திற்குக் கீழே அவள் நின்றாள். மறு பிறவியை ஞாபகப்படுத்தும் தீர்த்தத்தின் சாபத்தைப் பற்றி அவள் சிறிதும் யோசிக்கவில்லை. தகித்துக்கொண்டிருந்த மனமும், உடம்பும் குளிரும் வரை அவள் நீரோட்டத்திற்குக் கீழே நின்றிருந்தாள். பிறகு துவட்டக் கூட செய்யாமல் திரும்பவும் பாறை மீது வந்து சப்பணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
பல பிறவிகளின் வலி ஒரு கனவைப் போல அவளுடைய கண்களுக்கு முன்னால் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஆரம்பமற்ற துக்கத்தின் முடிவற்ற தொடர்ச்சிகள்... சாப விமோசனம் கிடைக்காமலிருந்த நினைவுகள்...
பர்ணசாலையின் முற்றத்தில் ஞானானந்தன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மதிய உணவிற்கும் சரளா வரவில்லை. அவள் அறைக்கு வந்து சேரவில்லை என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். சரளா என்ன செய்யப் போகிறாள் என்பதை நினைக்காமல் இருக்க அவன் முயற்சித்தான்.
சூரியன் மேற்கு திசையில் இருந்த மரங்களுக்கு மத்தியில் மறைந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்பி வந்த குரு, தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த சிஷ்யனைப் பார்த்தவாறு உள்ளே சென்றார். ஞானானந்தன் எழுந்து ஹோம குண்டத்தில் விறகுத் துண்டுகளை அடுக்க ஆரம்பித்தான். அவனுடைய முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உணர்ச்சிகளையே முழுமையாக இழந்துவிட்டவனைப் போல அவன் அமைதியாக விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.
ஹோம குண்டத்தைப் பற்ற வைத்து, மீதியை மேற்கிலிருந்து வீசிய காற்றிடம் ஒப்படைத்துவிட்டு ஞானானந்தன் வெளியே வந்தான். ஒரு கனவில் நடப்பதைப் போல அவன் நடந்தான்.
பாறைக்கு மேலே அவன் ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்றான். பாறை மீது சரளா சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நிர்வாண உடம்பில் நிலவொளி விழுந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி ஞானானந்தனை வேதனை கொள்ளச் செய்தது. அவன் மெதுவாகப் பாறைகள் வழியாக இறங்கினான்.
சரளா கண்களைத் திறந்தாள். கண்களிலிருந்து திரண்டுவந்த கண்ணீர்த் துளிகள் கடைக்கண் வழியாகக் கன்னங்களில் உருண்டு சந்தன நிறத்தைக் கொண்ட மார்பகங்களில் போய் விழுந்தன.
“அக்கா, இது என்ன தண்டனை?”
அவள் எதுவும் சொல்லாமல் ஞானானந்தனையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்.
“அக்கா, எழுந்து ஆடைகளை அணியிங்க.”
அவள் அசையாமல் கண்களைக்கூட இமைக்காமல் உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தன் அவள் அருகில் சென்று உட்கார்ந்தான். அவளுடைய கையைத் தன் கைகளில் எடுத்தான். அவள் அசையவில்லை.
“அக்கா, உங்க கவலையைப் போக்க நான் என்ன செய்யணும்? ”
சரளாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது. அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தன் அவளுடைய முகத்தைத் தன் கைகளில் தாங்கி, நடுங்கிக் கொண்டிருந்த உதடுகளில் தன்னுடைய உதடுகளைப் பொருத்தினான்.
காமம் என்ற முரட்டு பாறைமீது விழுந்து உருளும்போது, ஞானானந்தன் நினைத்தது தன் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையைத்தான். கை சுதந்திரமான ஒரு நிமிடத்தில், அவன் அந்த மாலையைப் பிய்த்துக் காட்டுக்குள் எறிந்தான்.
இரவு வளர்ந்து கொண்டிருந்தது. காமவயப்பட்ட நிமிடங்களில், இரவின் வாசனைகள், அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த வானத்திற்குக் கீழே பாறை ஒரு படுக்கையறையாகவும், மலைத் தொடர்கள் நாலுகெட்டு ஆகவும் மாறின. பாதி மூடிய கண்களுடன் படுத்திருந்த சரளாவின் முகம் ஞானானந்தனுக்குள் முன் பிறவியைப் பற்றிய ஞாபகங்களைத் தட்டி எழுப்பியது.
வெளிப்பாடு
கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டத்திற்கு அப்பால் மலைத்தொடர்கள் இருளில் மூழ்கியிருந்தன. என்ன காரணத்தாலோ ஆனந்தகுரு வேலப்ப சுவாமிகளின் கடுமை நிறைந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். குரு மிகவும் களைத்துப் போய்க் காணப்பட்டார். ஹோம குண்டத்தைப் பார்ப்பதற்கே அவர் பயப்பட்டார். உயர்ந்து எரிந்து கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைகள் என்னவோ கூற முயற்சிப்பதைப் போல இருந்தது.
ஒரு அதிர்ச்சியின் கசப்புடன், நம்ப முடியாத தெளிவுடன் அலை அலையாக வெளிப்பாடுகள் தோன்றிக் கொண்டிருந்தன.
வாழ்க்கையில் இரண்டாவதாக ஒரு துயரத்தின் கொடுமையைச் சந்திப்பதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக்கொண்டு குரு அமர்ந்திருந்தார்.