Lekha Books

A+ A A-

நெருப்பு - Page 14

neruppu

“அக்கா, ஞாபகத்துல இருக்குதா? ஒருநாள் நான் பூ பறிச்சுக்கிட்டு இருந்தப்போ நீங்க வினுன்னு என்னை அழைச்சீங்க. அது என் தாயோட சத்தம் மாதிரியே இருந்தது. நான் அன்னைக்கு நீண்ட நேரம் அழுதுகிட்டே இருந்தேன்.”

அவர்கள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தார்கள்.

“அக்கா....” அவன் தொடர்ந்தான். “சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டு விட்டோம்ன்றதுக்காகப் பற்று இல்லாமல் போயிடாது. நம்மோட மனதின் ஆழத்தில் அது என்னைக்கும் இருக்கத்தான் செய்யும்.”

“அம்மா இப்போ எங்கே இருக்காங்க.”

“அங்கே....” வானத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவன் சொன்னான். “எனக்குப் பத்துவயது நடக்குறப்போ அம்மா இறந்துட்டாங்க.” அதிகரித்துக்கொண்டிருந்த எதிர்பாராத ஒற்றுமைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள் சரளா. வினோத்தின் தந்தை, ஞானானந்தனின் தாய் - இரண்டு பேரும் இறந்ததும் பிள்ளைகளுக்குப் பத்து வயது நடக்கும்போதுதான். இருமையிலிருந்து ஒருமையை நோக்கிய இரண்டு ஆன்மாக்களின் பயணம்- அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“நாம கொஞ்சம் அதிகமா நடந்துட்டோம்ல?”

சரளா சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இங்கே பக்கத்துலதானே அன்னைக்கு நாம போன இடம்? அந்தப் பாறையும் வாய்க்காலும்?”

“அங்கே போகணுமா?”

“போவோம்.”

“அது ஒரு ஆபத்தான் இடம். நம்ம அறிவைக் குழப்புற ஏதோ ஒண்ணு அங்கே இருக்கு. அங்கே அதிகம் போகாம இருக்குறதே நல்லது.”

நேரம் என்ற புதிர்

லைத் தொடர்களிலிருந்து பனிப்படலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. உச்சியில் பனியால் மூடப்பட்டிருந்த சிகரங்கள் சூரிய வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. மலை மேலே இருக்கும் பாறைகளிலிருந்து கீழ்நோக்கி வேகமாக விழுந்துகொண்டிருக்கும் அருவி நீர் இப்போது தெளிவாகத் தெரிந்தது. பர்ணசாலையின் வாசல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தகுரு நிலைகுலைந்து போய்விட்டார். ஞானானந்தன் மலர்கள் பறிக்கச் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது.

குரு வெளியேறி நடந்தார். ஞானானந்தன் விஷயத்தில் தனக்கு இந்த அளவுக்கு ஏன் அக்கறை இருக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். ஞானானந்தனைப் பார்க்கும்போது ஆழத்தில் எங்கோ வேர்கள் இறங்கிச் சென்று பாசம் என்ற கிளைகளில் கனிவு என்ற தளிர்களை முளைக்கச் செய்யும். மற்ற எல்லா பந்தங்களையும் அறுத்து எறிந்த அவர் ஒன்றே ஒன்றைமட்டும் விட்டு வைத்தார். அதை மரணத்தால் மட்டுமே அறுக்க முடியும் என்பது கடவுளின் தீர்மானமாக இருக்கலாம். அந்தக் காரணத்தால்தான் கடவுள் ஞானானந்தனை தன்னிடம் அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். கடவுளின் முடிவுகள் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் இதற்கு முன்பு பார்த்திராதவையாகவும் இருந்தன.

காற்று ஹோமகுண்டத்தின் சாம்பலை முற்றத்தில் சிதறவிட்டது. அது கோவிலுக்கு முன்னால் போட்ட கோலத்தைப் போல இருந்தது.

பாறைக்குக் கீழே ஆலமரம் உண்டாக்கிய நிழலில் அவர்கள் நின்றிருந்தார்கள். மூன்று பக்கங்களிலும் பாறைகள் மட்டுமே இருந்தன. பாறைகள் இல்லாத இடங்கள் கொடிகளால் மூடப்பட்டிருந்தன. மேலே வானத்தை முழுமையாக மூடியிருந்தது ஆலமரம். வெளி உலகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் தங்களுக்கென்று உண்டாக்கிக் கொண்ட ஒரு சிறிய உலகம் மட்டுமே அங்கு இருந்தது.

சரளா கேட்டாள்:

“உன்னை நான் வினுன்னே அழைக்கட்டுமா?”

ஞானானந்தன் சிரித்தான். கள்ளங்கபடமில்லாத சிரிப்பு. அவள் மெதுவான குரலில் அழைத்தாள்:

“வினு....”

குழந்தைத்தனமான அந்த அழைப்பைக் கேட்டு ஞானானந்தன் சிரித்தான். ஆலமரத்திற்குக் கீழே பெஞ்சைப் போல அகலமாக இருந்த பாறையில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.

குரு தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை ஞானானந்தன் நினைத்துப் பார்த்தான். பூஜைக்கான நேரம் வந்துவிட்டது.

“அக்கா நாம போகலாம். குரு காத்திருப்பார்.”

“பரவாயில்ல, வினு... கொஞ்ச நேரம் மட்டும்...”

வினு என்ற அழைப்பில் மந்திர சக்தி கலந்திருந்தது. அவன் தன் தாயை மனதில் நினைத்துப் பார்த்தான். இறப்பதற்கு முந்தைய நாள் அவள் சோர்வான குரலில் அவனைப் பார்த்துக் கேட்டாள்:

“நான் இறந்ததை நினைச்சு கவலைப்படுவியா?”

அதற்கு அவன் என்ன பதில் கூறுவான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் மெலிந்துபோன தன் கையால் அவன் தலையைத் தடவினாள். பத்து வயதைக் கொண்ட ஒரு சிறுவனால் தன்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளியிட முடியும் என்று கூறுவதற்கில்லை. அன்று அழாமல் இருந்ததற்காக, தன் தாயிடம் அவள் அவ்வளவு சீக்கிரம் இறக்க மாட்டாள் என்று கூறித் தேற்றாமல் இருந்ததற்காக அவன் பின் நாட்களில் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறான்.

“வினு, நீ சந்நியாசம் பூண்டதுக்கு என்ன காரணம்?”

சரளா அவனுடைய தோளில் கையை வைத்தவாறு கேட்டாள். ஞானானந்தன் அந்தக் கையை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டு அதை அன்புடன் தடவினான்.

என்ன காரணம்? தன் தாய் சற்று சீக்கிரமே மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் இருப்பதை அவன் புரிந்துகொண்டான். ஒரு வருடம் ஆன பிறகு அவனுடைய தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவின் மூலம் ஒரு மகன் பிறந்த பிறகு, இரண்டாவது தாயின் கொடுமைகள் ஆரம்பமாயின. இருக்கக்கூடிய பொருட்களை மூத்த மகனுக்கும் சேர்த்துப் பங்கிட வேண்டுமே! முணுமுணுப்புகள், இரவில் படுக்கையறையில் தாழ்ந்த குரலில் பேச்சுகள், ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலிருக்கும் அவனுடைய தந்தையின் கெஞ்சல் குரல்...

இதற்கிடையில்தான் நிசப்தமான அந்தக் குரல் அவனைத் தேடிவந்தது. அவன் மட்டும் தனியாக இருக்கும் நேரங்களில் அந்தக் குரல் அவனுடைய மனதிற்குள் நுழைந்தது. அதற்குப் பிறகு கனவு நிலைக்கு நிகரான காட்சிகள்.... அது வேறொரு உலகத்தைச் சேர்ந்ததாக இருந்தது. சில நேரங்களில் புரிந்துகொள்ள முடியாத சக்தியின்... சில நேரங்களில் ஆன்மிக சக்தியின் மகத்தான அனுபவங்கள்...

சரளா அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள். அவன் சொன்னான்: “ஒரு குரலைக் கேட்டேன். நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன். நேரா வந்து சேர்ந்தது மலைமேல இருந்த ஆஸ்ரமத்துக்குத்தான்...”

தான் கூறிக்கொண்டிருந்ததைச் சற்று நிறத்திய அவன் சொன்னான்: “நம்ம சுய உணர்வு மண்டலத்தைத் தாண்டி வேறு என்னென்னவோ இருக்கு. சில நேரங்களில் அது என்னைப் பயமுறுத்துது...”

வினு, நீ ஆஸ்ரமத்துக்கு வந்து எவ்வளவு காலமாச்சு?

“பத்து வருடங்கள்... அதாவது.... எழுபத்து நான்காம் வருடம்...”

“எழுபத்து நான்கு?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

உப்புமா

உப்புமா

February 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel