நெருப்பு - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6395
ஆனந்தகுரு சரளாவை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு கேட்டார்:
“இப்படி சொல்றதுக்குக் காரணம் என்ன?”
சரளா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. மனதிலிருந்த பயத்தைப் பற்றி, குழப்பங்களைப் பற்றி அவள் கூறுவதற்குத் தயங்கினாள். அவள் குருவின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள். குரு அவளுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.
தன்னுடைய கை நடுங்குவதை குரு உணர்ந்தார்.
சரளா அங்கிருந்து போய்விட்டாள். குரு சிறிதுநேரம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயம் உண்டாகிவிட்டிருந்தது. பல வருடங்களாக இருந்த தவத்தின் பலனாகப் பெற்றிருந்த பரம சித்திகள் அனைத்தும் இறுதி நிமிடத்தில் கைவிட்டுப் போகின்றனவோ? சரளாவுடன் பேசும்போது அவருடைய மனம் பதறிப்போய்விடுகிறது. ஒரு பழைய பந்தத்தின் சிதிலமடைந்த நினைவு நாடிகளைத் தட்டி எழுப்புகிறது. சரளா ஒரு விடுகதையாக இருந்தாள். யாரும் பார்த்திராத ஒற்றைக்காளை வண்டியில் தனக்கு முன்னால் வந்து நின்ற இவள் யார்? எங்கிருந்து இவள் வருகிறாள்? எந்தவிதத் தொடர்பும் இல்லாத பழைய விஷயங்களைப் பற்றியே அவள் கூறுகிறாள். அவளுடைய சந்தேகங்கள் சாதாரண மனிதர்களிடம் இருக்கும் சந்தேகங்கள் இல்லை. அவற்றுக்கான பதில்கள் அவரிடம் இல்லவே இல்லை.
குரு கண்களைத் திறந்தார். தூரத்தில் மலைத்தொடர்கள் மூடியிருந்த பனிப்படலத்தைக் கீழே போகச் செய்தன. மலைச்சரிவில் இருந்த மரங்கள் நிழல் வடிவங்களாக மாறின. மேற்குத் திசையிலிருந்து வந்த காற்று ஆஸ்ரமத்தின் ஜன்னல் வழியாக உள்ளே வந்து குருவைத் தொட்டது.
முற்றத்தில் ஹோமகுண்டத்தைத் தயார் செய்யும் ஞானானந்தனின் முகம் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தது.
நிமிடங்களுக்குள் நெருப்பு உயர பற்றி எரிந்தது. ஞானானந்தனின் முகம் அதில் பிரகாசமாகத் தெரிந்தது. அவன் வெறுமனே உட்கார்ந்திருந்தான். எதுவும் செய்யவில்லை. சுவாமிகளின் காலத்திலிருந்து இந்த வேலை நடக்கிறது. அன்று காட்டு மிருகங்களை விரட்டுவதற்காக இது தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஹோமகுண்டத்தை எரியச் செய்யும் செயல். இப்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு இல்லை. எனினும் அது ஒரு சடங்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனந்தகுரு ஹோமகுண்டத்தையே பார்த்தார். அசைந்து கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைகளுக்கு நடுவில் பற்றி எரிந்து கொண்டிருந்த விறகுகள் வினோதமான வடிவங்களை வெளிப்படுத்தின. அவர் தன்னுடைய குருநாதரான சுவாமிகளை தியானித்தார். ஒரு உண்மை வெளிப்பட வேண்டும் என்பதற்காக ரகசியங்களின் இருட்டறையில் வெளிச்சத்தின் உன்னதமான ஒரு தருணத்திற்காக.
எந்த உண்மையும் வெளிப்படவில்லை. ஆனந்தகுரு எழுந்தார்.
கோடை மழை
சரளா மிகவும் கவலையில் இருந்தாள். சந்தேகங்களைப் போக்கக் கூடிய எதுவும் ஆனந்த குருவின் வாயிலிருந்து வெளியே வரவில்லை. தன்னுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி நடத்திக் கொண்டிருப்பவை சாதாரண விஷயங்கள் அல்ல என்ற புரிதல் அவளுக்கு இருந்தது. குறைந்தபட்சம் தான் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்த பிறகாவது. இந்த எல்லாவற்றுக்கும் அர்த்தம் என்ன? இவ்வளவு காலம் தான் எங்கிருந்தோம்?
யாரையும் சந்தேகப்படாமல், பயமுறுத்தாமல் இந்தப் பிரச்சினைகளை அவளால் கூற முடியவில்லை. ஞானானந்தன்மீது அவளுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது. ஆனால், தன்னுடைய பிரச்சினையைக் கேட்ட பிறகு எங்கே தன்னுடைய அறிவின் செயல்பாட்டைப் பற்றி அவன் சந்தேகம் கொண்டுவிடுவானோ என்று அவள் பயந்தாள். விஷயங்களை ரகசியமாகப் புரிந்துகொள்ள அது அவளைத் தூண்டியது.
இரவில் படுக்கும்போது, சுனந்தினி சொன்னாள்:
“மே மாதம் இருபத்து நான்காம் தேதி பகவதி கோவிலில் திருவிழா.”
“பகவதி கோவில் எங்கே இருக்கு?”
“கிராமத்துல... ஆஸ்ரமத்துல இருந்து எல்லாரும் போவாங்க. வருடத்துல அந்த ஒருநாள் மட்டுமே நாங்க கிராமத்துக்குப் போவோம்.”
திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சுனந்தினியின் உதவியுடன் சரளா தன் புடவையைக் காவியாக மாற்றினாள். கிராமத்திற்குப் போகும்போது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாள். மலை உச்சிக்கு வந்த பிறகு அவள் கீழே இறங்கவேயில்லை. ஞானானந்தனுடன் சேர்ந்து பூப்பறிக்கச் செல்வது மிகவும் கீழே இல்லை. மலையைச் சுற்றி நடந்தாலும் மிகவும் குறைவான தூரமே கீழ்நோக்கிச் செல்வார்கள். தான் வண்டியை விட்டு இறங்கிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் சரளா.
அது அவளுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம்.
இரவில் மழை பெய்தது. கனமான மழை. அதோடு சேர்ந்து இடியும், இடி முழங்கியபோது மலையே அதிர்வதைப்போல அவள் உணர்ந்தாள்.
“திருவிழாவிற்கு முன்னால் ஒன்றிரண்டு முறை மழை பெய்வது வழக்கம்தான்...”
சுனந்தினி சொன்னாள். ஒவ்வொரு இடி முழங்கும்போதும் அவள் சரளாவுடன் மேலும் சேர்ந்து ஒட்டிக் கொண்டு படுத்தாள்.
“எனக்கு இடின்னா பயம்.”
“எனக்கும்தான்” - சுனந்தினியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சரளா சொன்னாள்: “பரவாயில்ல... நீ பயப்படாதே.”
அவள் ஞானானந்தனை நினைத்தாள். மழை நீரால் பாறைகள் கழுவப்பட்டிருக்கும். சீக்கிரம் பொழுது விடியாதா என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் சுனந்தினியை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். பாதித் தூக்கத்துடன் சரளாவுடன் சேர்ந்து படுத்தாள்.
காலையில் ஞானானந்தன் வரவில்லை. பூக்கூடையுடன் வரும் அவனுடைய உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டே அவள் வாசலில் நின்றிருந்தாள். ஞானானந்தன் வரவில்லை. மேலே குருவின் பர்ணசாலையிலிருந்து கை மணியின் ஓசையும் மந்திரங்களும் கேட்டன. சந்தனத்திரி, ஊதுபத்தி ஆகியவற்றின் மணம் இறங்கி வந்தது.
அவள் சுவருக்கு அருகில் போய் உட்கார்ந்து, முழங்கால்மீது தலையை வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
காலை உணவிற்கு அவள் கூடத்திற்குச் செல்லவில்லை. சுனந்தினி விசாரிப்பதற்காக வந்தபோது முகம் என்னவோ மாதிரி இருப்பதைப் பார்த்துக் கேட்டாள்:
“என்ன ஆச்சு, உடம்புக்கு ஆகலையா?”
“ஒண்ணுமில்ல...”
“அப்படின்னா உணவு?”
“எனக்கு வேண்டாம்...”
சுனந்தினி போனபிறகு சரளா சாளரத்தின் வழியாக வெளியே பார்த்து கொண்டு நின்றிருந்தாள். சுற்றியிருந்த இடங்கள் நீரால் சுத்தமாக்கப்பட்டிருந்தன. இலைகளில் பசுமை பளிச்சிட்டது. கிளிகளின் சத்தத்தில் ஒரு தனி உற்சாகம் வெளிப்பட்டது. கோடைமழை எல்லோருக்கும் ஓரு ஆசிர்வாதத்தைப் போல இருந்தது.
“அக்கா.”
அவள் அதிர்ந்து போனாள். ஞானானந்தன் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான்.
“அக்கா, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சுனந்தினிதேவி சொன்னாங்க. ஏன் கஞ்சி குடிக்க வரல?” - அவன் கேட்டான்.
நீ ஏன் காலையில் வந்து என்னை அழைக்கல?
“அக்கா, நீங்க அதை நினைச்சு கவலைப்பட்டுட்டீங்களா?” - அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:“இன்னைக்கு பூப்பறிக்கப் போனது நான் இல்ல. குரு கிருஷ்ணப்பிரியாவை அனுப்பிட்டாரு.”