நெருப்பு - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
“ஆமா... எழுபத்து நான்காம் வருடம் பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி.”
“அப்படின்னா... இது என்ன வருடம்?”
“இதுவா? இது தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு?”’
அவன் சந்தேகத்துடன் சரளாவைப் பார்த்தான்.
அவளுடைய முகத்தில் ஒரு திகைப்பு தெரிந்தது.
சரளா அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு! அப்படியென்றால்...?
அவள் சிந்தித்தாள். தான் வீட்டை விட்டு வெளியேறியது அறுபத்து இரண்டாம் வருடம் ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதி என்று ஞாபகம். தேதி உறுதி என்று கூறுவதற்கில்லை. மனம் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ஏப்ரல் மாதம் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும். வினோத் தேர்வு எழுதச் சென்றது ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி.
அவள் ஞானானந்தனைப் பார்த்தாள். சரளாவின் மனதில் இருந்த சூறாவளியைப் பற்றி எதுவும் தெரியாமல், அதைப்பற்றி எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அவன் உட்கார்ந்திருந்தான். அவளுடைய கை அவன் கைகளில் இருந்தது. அதை மெதுவாக அழுத்தியவாறு அவன் கேட்டான்.
“என்ன பிரச்சினை?”
பதில் இல்லாத பிரச்சினைகளின் சூழலில் சிக்கி அவள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். ஞானானந்தன் விளையாட்டுக்காகக்கூட பொய் சொல்ல மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். அப்படியென்றால் என்ன நடந்தது?
வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளன்று நடைபெற்ற சம்பவங்களை முழுமையாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. புகை வந்து மூடியதைப் போல தெளிவற்று அவை இருந்தன. வினோத்தின் மரணத்திற்குப் பிறகு அவள் கீழே தன் மாமியாரின் அறையில்தான் படுப்பாள். கோபி அவளிடம் வழக்கத்திற்கு மாறாக எப்போதும் நடந்ததில்லை. ஆனால் அவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் அவளுடைய மனம் கூறிக்கொண்டே இருந்தது. அவள் வேதனையைக் கடித்துத் தின்று, அன்பின் விலையைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் சிந்தித்துப் பார்ப்பாள். அவன் எதற்காக அதைச் செய்தான்?
பதில் கிடைக்காமல் இருந்த இரவுகள் ஒன்றில் அவள் பயணம் கிளம்பிவிட்டாள். அவளுடைய மாமியார் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் கொடுத்து வைக்கப்பட்ட ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண்விழிக்காமல் இருந்தாள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். சரளா கட்டிலின் கால் பகுதியில் விழுந்து வணங்கினாள். கோபியின் அறையில் சாத்தப்பட்டிருந்த கதவுக்கு அருகில் அவள் சிறிது நேரம் நின்றாள். வினோத்தின் ஞாபகம் வந்தது. கண்ணீர் அருவியென வடிந்தது. மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “என்னை மன்னிச்சிடுங்க....”
“அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு?” ஞானானந்தன் அவளுடைய முதுகில் கையை வைத்து தேற்றினான். அவள் அவனுடைய இடுப்பைப் பிடித்துக்கொண்டு அவனின் தோளில் தன் முகத்தை வைத்தாள். அவன் பாசத்துடன் அவளுடைய முன் தலையைத் தடவினான்.
மரங்களுக்கு மத்தியிலிருந்து வந்த குளிர்ந்த காற்று அவளுடைய கண்ணீரை ஒற்றி எடுத்தது. அவள் எழுந்து நின்றுகொண்டு சொன்னாள்:
“நாம போகலாம்.”
பர்ணசாலையின் முற்றத்தில் உலவிக்கொண்டிருந்த ஆனந்த குரு பொறுமையை இழந்துவிட்டார். பூஜைக்கான நேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது. அது பரவாயில்லை. ஆனால் ஞானானந்தன் எங்கே? இப்படித் தாமதம் ஆகாதே! முற்றத்தின் அருகில் சென்று அவர் மலைச்சரிவைப் பார்த்தார். திடீரென்று அவர் நிமிர்ந்து நின்றார். மரங்களுக்கு நடுவில் வளைந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப்பாதைகள் வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும் இரண்டு உருவங்கள். குரு கூர்ந்து கவனித்தார். பூக்கூடையைக் கையில் வைத்திருந்தது ஒரு பெண் உருவமாக இருந்தது.
துன்பங்களின் காலடிச் சத்தம் கேட்பதைப்போல இருந்தது. என்ன காரணத்தாலோ, குரு தன் மன அமைதியை இழந்தார்.
ஒரு வெளிப்பாடுக்காக
உணவு நேரத்தில் கூடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த நாட் காட்டியில் சரளா பார்த்தாள். ஞானானந்தன் சொன்னது உண்மைதான். 1984 மே மாதம், தேதியைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஆனால், எண்பத்து நான்கு என்ற உண்மை அவளைக் கவலைப்படச் செய்தது. ஞானானந்தன் சொன்னதை அவள் நினைத்துப் பார்த்தாள். ‘நம்மோட சுயஉணர்வு மண்டலத்தைத் தாண்டி, வேற என்னென்னவோ இருக்கு.’ அது அவளை முழுமையாகப் பயப்படச் செய்தது. வீட்டை விட்டு வெளியேறி ஆஸ்ரமத்திற்கு வந்து சேரும்வரை நடைபெற்ற சம்பவங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. நகரத்திலிருந்த ஆஸ்ரமமும் பெண் துறவியும் சிறிதளவில் ஞாபகத்தில் இருக்கிறார்கள். பிறகு தேவிகா... ஒற்றைக் காளை வண்டியை ஓட்டிச் செல்லும் தாடிக்காரன்.... தேவிகாவைப் பற்றியும், காளை வண்டியைப் பற்றியும் சொன்னபோது, ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் ஆட்கள் மத்தியில் உண்டான ஆச்சரியத்திற்கான காரணத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. விஷயங்கள் அனைத்தும் தெளிவாகிவிட்டதைப் போல் அவளுக்கு இருந்தது.
காலத்தின் மாயையைப் பற்றி குரு சொன்னார்:
“நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம்- காலம். இரண்டு சம்பவங்களுக்கிடையே இருக்கும் கால அளவை நாம நேரம் என்று சொல்றோம். சம்பவங்கள் இல்லாமல் இருந்தால் நேரம்ன்றதும் இல்லாமப் போகும். அப்படிப்பட்ட ஒரு நிலை உண்டாவதற்கு வழியில்லை. காரணம் ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குள் என்னென்னவோ நடந்துவிடுகிறது. கோடானுகோடி உயிர்கள்... அவற்றில் அணு அளவைக் கொண்ட பாக்டீரியா முதல் யானையைப் போன்ற மிருகங்கள் வரை... பிறகு மரங்கள்... எல்லாம் பிறக்கவோ, வளரவோ,இறக்கவோ செய்கின்றன. முடிவே இல்லாத இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே செயல்படாமல் இல்லை. ஒரு சிறு அணுவில்தான் எத்தனை அசைவுகள்! ஒரு துளியிலிருந்து இன்னொரு துளிக்கு உள்ள நகர்தலின் கால அளவுதான் நேரம். நேரத்தை நம்மால் நிறுத்த முடியாது. சரி... அது இருக்கட்டும். உங்க சந்தேகம் என்ன? ”
அவள் குருவிடம் தன்னுடைய சந்தேகம் என்ன என்பதைக் கூறவில்லை. துன்பங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் ஒரு உலகத்தில் அவள் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறாள்.
“இந்த மலையில் ஏதோ புரிந்துகொள்ள முடியாத சக்திகள் இருப்பதைப்போல தோணுது....” சரளா சொன்னாள்.
ஆனந்தகுரு சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் தன்னுடைய குருநாதரான வேலப்ப சுவாமிகளை நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் அவர் சமாதி அடைந்தார். அறுபது வருடங்கள் அவர் இந்த மலைத்தொடர்களில் அலைந்து திரிந்தார் - இங்கு மறைந்து கிடக்கும் ரகசியங்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்வதற்காக. ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாமலே அவர் போய்விட்டார். தெரிந்துகொண்ட சில விஷயங்களைத் தன்னுடைய சிஷ்யனிடம் அவர் சொன்னார். ‘மறு பிறப்பின் ஆச்சரியங்களைப் பற்றி சுவாமிகள் கூறுவதுண்டு. அங்கு சந்தித்துக் கொள்ளும் ஆன்மாக்கள், கடந்த பிறவிகளின் பாவ புண்ணியங்களின் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றன கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்திற்கு அப்பால், கால வேறுபாடுகளைத் தாண்டிய ஒரு தளத்தில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள், கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்தின் செயல்களைத் தீர்மானிக்கின்றன. மனித மனத்திற்கு அப்பாலிருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பது ஆபத்தானது.’