நெருப்பு - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
எதிர்பாராதவை, ஒற்றுமைகள்
ஞானானந்தனுடன் சேர்ந்து மலர்கள் பறிக்கப் போகும் விஷயம் சரளாவிற்குப் பிடித்திருந்தது. அவனுடைய பேச்சு கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிரபஞ்சம் படைக்கப்பட்டதிலிருந்து இருக்கும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவன் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பான். கோடானுகோடி கேலக்ஸிகள்... ஒவ்வொரு கேலக்ஸியிலும் கோடானுகோடி நட்சத்திரங்கள்... அவற்றுள் ஒரு நடுத்தர நட்சத்திரமான சூரியன்.
“அக்கா, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நினைச்சா நம்மால நம்பாம இருக்க முடியாது.”
ஞானானந்தன் நிறைய விஷயங்களைப் படித்திருந்தான். அவனுடைய அறிவு, வயதையும் தாண்டி இருந்தது. அவள் விளையாட்டாகச் சொன்னாள்:
“இந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு தெரிஞ்சுதான் குரு உனக்கு ஞானானந்தன்னு பெயர் வச்சிருப்பாரோ?”
அவன் சிரித்தான். பிறகு சிந்தித்துவிட்டு சொன்னான்:
“அப்படிச் சொல்ல முடியாது. நாம எல்லோரும் நல்ல பெயர்களுக்கேற்றபடி நடக்க முயற்சிக்கிறோம். முதல்ல பெயர் கிடைக்குது - பெரிய எதிர்பார்ப்புகளுடன். பிறகு அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உயர, அந்தப் பெயரை நியாயப்படுத்த நாம முயற்சிக்கிறோம்.”
ஞானானந்தனுக்கு வினோத்திடம் இருந்த பல சாயல்களும் இருந்தன. பேச்சில், கைகளின் அசைவில்... அதனால் அவன் பேசிக் கொண்டிருக்கும்போது, சரளாவின் மனம் இனிமையான நினைவுகளில் மூழ்கிவிட்டது.
வினோத்தின் கையில் தளர்ந்து கிடந்தவாறு சரளா அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.
“அண்ணி, நீங்க பக்கத்துல இருக்குறப்போ எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? நீங்க பக்கத்துல இல்லாதப்போ, நீங்க மட்டும்தான் என் மனசுல இருக்கீங்க. ஒரு பார்வைக்காக, ஒரு தொடலுக்காக நான் ஏங்குறேன்.”
சரளா அவன் சொல்றதைக் கேட்டுக்கொண்டே படுத்திருப்பாள் - முழுமையான திருப்தியுடன், அவனை விட்டு நீங்குவதற்கு முடியாமல்.
“இரவு நேரத்தில்தான் ரொம்பவும் கஷ்டம்” - அவன் கூறுவான். “பத்து மணிக்கு கோபி அண்ணன் படிகளில் ஏறி வர்ற சத்தம் கேட்கும். அதற்குப் பிறகு பத்தே நிமிடங்களில் அண்ணி, உங்க காலடி சத்தம் கேட்கும். அந்தச் சத்தம் எவ்வளவு மெதுவா ஒலிக்கும் தெரியுமா? இருந்தாலும் நான் அதைக் கேட்பேன்.”
சரளா நினைத்துப் பார்ப்பாள். அவள் கூஜாவிலும் கண்ணாடி டம்ளரிலும் நீருடன் வருவதையும், கூஜாவிலிருந்த நீரை மேஜைமீது வைத்துவிட்டு, கண்ணாடி டம்ளரில் நீருடன் வினோத்தின் அறைக்குள் நுழைவதையும் எண்ணிப் பார்த்தாள். அவன் படித்துக் கொண்டிருந்த போது அருகில் சென்று அவனுடன் சேர்ந்து நின்று கொண்டு நீரை மேஜைமீது வைப்பாள். அவன் பரிதாபமாக கூறுவான்:
“இப்படியாவது நாம பார்க்க முடியுதே!”
சரளா எதுவும் பேசாமல் அவனைப் பார்ப்பாள். குனிந்து அவனுடைய கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவாள்.
“அண்ணி, நீங்க போயிட்டா, எனக்கு ரொம்பவும் கவலை ஆயிடும்” - வினோத் கூறுவான்: “நீங்க கதவை அடைக்கிற சத்தம் கேட்கும். அண்ணி, நீங்க புடவையை அவிழ்க்கிறதை நான் மனசுல நினைச்சுப் பார்ப்பேன். விளக்கை ஊதி அணைச்சிட்டு ப்ளவ்ஸ், பாவாடையுடன் கோபி அண்ணன் பக்கத்துல போய் படுக்குறது, கோபி அண்ணன் கட்டிப் பிடிக்கிறது, முத்தம் தர்றது... சாய்ந்து படுக்குறப்போ தாலிச் சங்கிலியை மறைச்சு வைக்கிற அழகான மார்பகங்கள் நினைவுல வரும். நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிடுவேன்.”
சரளா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே படுத்திருப்பாள். அவனுடைய முகத்தைத் தன்னுடைய நிர்வாணமான மார்பகங்ளின் மீது வைத்து அழுத்துவாள். அவனை எப்படிக் தேற்றுவாள்?
“நான் உன்னோடவ வினு” அவள் கூறுவாள்: “உன்னோடவ மட்டும்.”
“உண்மையாகவா?”
“ஆமா வினு, உண்மைதான்...”
அவன் சிறிது நேரம் அமைதியாக இருப்பான். ஆனால், அவனை வேதனைப்படுத்த மனசாட்சி காத்து நின்றிருக்கும். அவன் கூறுவான்:
“அண்ணன் எனக்கு அப்பா மாதிரி. எனக்காகத்தான் அவர் தன் படிப்பையே நிறுத்தினாரு- என்னைக் கல்லூரிக்கு அனுப்புறதுக்காக.... இருந்தும் அந்த அண்ணனுக்கு நான் துரோகம் பண்ணுறேன். நான் ஒரு பாவி...”
“அதுனால என்ன?” - சரளா அவனைத் தேற்ற முயற்சிப்பாள்: “இதுல துரோகம் ஒண்ணும் இல்ல. நான் ரெண்டு பேருக்கும் மனைவின்னு நினைச்சுக்கிட்டா எல்லாம் சரியாயிடும். அதாவது எனக்கு ரெண்டு கணவர்கள் இருக்காங்கன்னு.... அப்படி நினைக்கிறது தப்பு இல்லையே!”
உண்மையாகச் சொல்லப்போனால், சரளாவிற்கு மனசாட்சியின் குத்தல் எதுவும் இல்லை. அவளுடைய கணவர்கள் இருவரும் அண்ணன் - தம்பிகள். அவர்களுக்கிடையே பாசம் இருக்கிறது. பாசம் இல்லாமல் போகும்போதுதான் பிரச்சினைகள் உண்டாகும்.
ஆனால், சரளாவிற்கே தெரியாமல், அவளுடைய மனதிலும் பிரச்சினைகள் உண்டாகியிருந்தன. தனியாக இருக்கும்போது அவளுக்குள் இருக்கும் நீதிபதி எழுந்து, அவளை விசாரணை செய்வதுண்டு. எதற்காக வினோத்துடன் இப்படி நெருங்க வேண்டும்? ஆறு வருட திருமண வாழ்க்கையில் அவளுடைய கர்ப்பப்பை தரிசாக இருக்கிறது என்றாலும், மனதில் அன்பின்- கருணையின் நீரோட்டம் இருக்கத்தான் செய்தது. வினோத் ஒரு மகன் என்றே இதற்கு முன்பு மனதில் தோன்றிக் கொண்டிருந்தான். பிறகு, திடீரென்று ஏன் இந்த மாற்றம்?
இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு மத்தியிலும் சரளா சந்தோஷம் நிறைந்தவளாகவே இருந்தாள். கவலைப்படும் நிமிடங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், வினோத்தும் மகிழ்ச்சி நிறைந்தவனாகவே இருந்தான்.
ஆனால், துயரம் அதிக தூரத்தில் இருக்கவில்லை.
ஞானானந்தன் மிகவும் சீக்கிரமே வந்து சேர்ந்திருந்தான். ஒரு திருப்பத்தில் அவன் காத்து நின்றிருந்தான். மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சரளாவைப் பார்த்து அவன் கேட்டான்:
“அக்கா- களைச்சுப் போயிட்டீங்களா?”
அவனுடைய முகத்தில் குழந்தைத்தனம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே நடந்தபோது ஞானானந்தனுக்கும் வினோத்திற்கும் இடையிலுள்ள எதிர்பாராத உருவ ஒற்றுமையை நினைத்த அவள் தன்னைத்தானே மறந்து விட்டாள். அவள் சொன்னாள்:
“இல்ல வினு.”
ஆச்சரியம் வெளிப்பட்ட கண்களுடன் ஞானானந்தன் சரளாவைப் பார்த்தான். அவளுடன் சேர்ந்து நடக்கும்போது அவன் கேட்டான்,
“அக்கா, வினுன்றது யாரு?”
சரளாவின் முகம் அதைக் கேட்டு சிவந்துவிட்டது. தன்னுடைய வாயிலிருந்து வினுவின் பெயர் மீண்டும் வெளியே வந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவள் நினைத்துப் பார்த்தாள்.
“சந்நியாசத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு என்னோட பேரு வினயான்னு இருந்தது. அம்மாவும் அப்பாவும் என்னை வினுன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, ஆஸ்ரமத்துல குருவுக்குத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பேரு தெரியாது.”
ஒற்றுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்று சரளா நினைத்துக் கொண்டாள்.