நெருப்பு - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
முற்றத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட முள்ளாலான வேலிக்கு அப்பால் இருக்கும் காட்டில் மலர்கள் பறித்துக்கொண்டிருக்கும் இளைஞனை சரளா பார்த்தாள். அவனுடைய பின்பக்கம் மட்டுமே தெரிந்தது. திடீரென்று அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. எதையும் யோசிக்காமல் அவள் உரத்த குரலில் சத்தம் போட்டு அழைத்தாள்:
“வினு....”
அழைத்தவுடன் தன்னுடைய முட்டாள்தனத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. திடீரென்று, கட்டுப்பாட்டை மீறி எழுந்த ஒரு உணர்ச்சியின் உந்துதலால் அவள் அப்படி அழைத்துவிட்டாள். வெளியே விட்ட வார்த்தைகளை மீண்டும் திரும்ப எடுக்க முடியாமல் முன்னோக்கியே பயணத்தைத் தொடர்ந்தாள். நிமிடங்களுக்குள் அவன் அந்த அழைப்பைக் காதில் வாங்காமல் இருக்க வேண்டுமே என்று அவள் பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை செய்தது வீணாகி விட்டது. அவன் மலர்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தான். சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சரளாவைக் கண்டதும், அவன் பூக்கடையைக் கையில் வைத்தவாறு வேலிக்கு அருகில் வந்தான்.
“என்ன அக்கா, என்னை அழைச்சீங்களா?”
இரண்டாவது தடவையாக அதிர்ச்சி உண்டானது அப்போது தான். அந்த முகம்.... அது வினோத்தின் முகமாக இருந்தது. இரண்டு முகங்களுக்குமிடையே இந்த அளவிற்கு ஒற்றுமை இருக்குமா என்ன? ஞானானந்தனை குருவுடன் இருக்கும்போது அவள் பார்த்திருக்கிறாள். ஆனால், இந்த முக ஒற்றுமையை அவள் கவனிக்கவேயில்லை. இப்போது உதயசூரியனின் இளம் சிவப்புக் கதிர்கள் அவனுடைய அழகான முகத்தில் படுவது காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் அவனும் வினோத்தைப்போல இடது கையால் ஒத்துழைக்காத தலைமுடியை வருடிக் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம். எது காரணம் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஞானானந்தனுக்கு வினோத்தின் சாயல் உண்மையாகவே இருந்தது.
“அக்கா, எதுக்கு என்னை அழைச்சீங்க?”
“நான்...” - சரளா வார்த்தைகளைத் தேடினாள்! “நான் பூக்கள் பறித்து தரட்டுமா? பூஜைக்கான பூக்கள்தானே? ”
“இன்னைக்குத் தேவையான பூக்களைப் பறிச்சாச்சு” - ஞானானந்தன் பூக்கூடையை உயர்த்திக் காட்டினான். “அக்கா, நாளைக்கு வேணும்னா பூக்கள் பறிச்சுக் கொடுங்க. நான் குருவிடம் சொல்லிடுறேன்.”
“குருவிடம் சொல்லவேண்டாம்...” - உடனடியாக அவள் சொன்னாள். சொன்ன பிறகுதான் எதற்காக அதைச் சொன்னோம் என்ற குற்ற உணர்வு அவளுக்கு உண்டானது. தான் ஒரு குழிக்குள்ளிருந்து இன்னொரு குழிக்குள் போய் விழுகிறோம் என்பதை அவள் உணர்ந்தாள். ஞானானந்தனைப் பார்த்து வினோத் என்று நினைத்து அழைத்துவிட்டாள். அழைத்தவுடன் ஏதாவது காரணத்தைக் கூறவேண்டும் என்பதற்காகப் பூக்களைப் பற்றிச் சொன்னாள்.
“குருவிடம் கட்டாயம் சொல்லணும்ன்ற அளவுக்கு உள்ள மிகப் பெரிய காரியம் எதையும் நான் செய்யப்போறது இல்லையே!” - அவள் நிலைமையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகச் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “நான் பூக்கள் பறிச்சுத் தர்றேன். வினு.... இல்ல.... குழந்தை, அதை குருவிடம் கொடுத்தால் போதும்.”
ஞானானந்தன் சிரித்தான். அவனுடைய முகம் கள்ளங்கபடமில்லாமல் இருந்தது. மெல்லிய மீசையும் தாடியும் அப்போதுதான் முளைத்துக் கொண்டிருந்தன. அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்:
“அக்கா, வினுன்றது யாரு?”
சரளா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.
ஞானானந்தன் அங்கிருந்து போய்விட்டான். சிறிதுநேரம் அவள் சாளரத்தின் அருகிலேயே நின்றிருந்தாள். வினோத்தைப் பற்றிய ஞாபகம் அவளை வேதனை கொள்ளச் செய்தது. கண்களை மூடிக்கொண்டு தான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப எடுக்க அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டின் முற்றத்திலிருந்து வெளிப் படிகளுக்குச் செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டடி உயரத்தில் அரைச் சுவர் இருக்கிறது. அந்த வழியில் கோபி நடந்து சென்று படிகளில் இறங்கிப் போவதை சரளா சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ஒரு வளைவு திரும்பினால், வயல் வந்துவிடும். வரப்பின் வழியாக கோபி நடந்துபோவதைச் சிறிது தூரத்திற்குப் பார்க்கலாம். வெயிலில் வரப்பின் வழியாக நடந்து செல்லும் உருவம் தூரத்தில் ஒரு புள்ளியாக முடிந்தபோது சரளா தன் பார்வையைத் திருப்பினாள். சுவரிலிருந்த கடிகாரம் மூன்று முறை அடித்தது. குதித்துக் கொண்டிருந்த மனதைக் கட்டுப்படுத்த அவள் கடிகாரத்தின் ஆடிக்கொண்டிருந்த பெண்டுலத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.
வினோத் என்ன செய்து கொண்டிருப்பான்? சில நிமிடங்களுக்கு முன்புவரை அவனுடைய சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நாற்காலி இழுக்கப்பட்ட சத்தமோ, எதையோ தரையில் போடும் சத்தமோ கேட்டது. இப்போது அந்த அறை படு அமைதியாக இருந்தது. ஒருவேளை அவன் தூங்கியிருக்கலாம்.
இரவில் நீண்ட நேரம்வரை அவனுடைய அறையில் வெளிச்சம் இருந்துகொண்டே இருந்தது. தேர்வு தலைக்குள் நுழைந்துவிட்டதால் விடாது படித்துக்கொண்டிருந்தான். கோபியின் கைகளில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் கடிகாரத்தின் “டிக் டிக்” சத்தத்தைக் கேட்டவாறு, அந்தச் சத்தத்தை மீறி பக்கத்து அறையிலிருந்து கேட்கும் மெல்லிய ஓசைகளுக்காக அவள் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருந்தாள். வினோத்தின் மேஜை விளக்கு மேற்குப் பக்க முற்றத்தில் இருந்த மாமரத்தின் கிளைகளை வெளிச்சமயமாக்குவது சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது தெரிந்தது. அதையும் பார்த்தவாறு அவள் சிறிது நேரம் தூங்காமல் படுத்திருந்தாள்.
முந்தைய நாள் காலையில்தான் வினோத் வந்தான். வந்தவுடன் தன் தாய் தயாரித்துக் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டான்.
காலையில் கோபி போன பிறகுதான் சரளா குளிப்பாள். அவள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காயைக் குழைத்து கிண்ணத்தில் வைத்து, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு குளத்தை நோக்கி நடந்தாள். குளத்தில் குளிக்கும் இடத்தை அடைந்தபோதுதான், வினோத் அங்கு குளித்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. நீரில் இறங்கி நின்றுகொண்டு அவன் சோப்புப் போட்டுக் கொண்டிருந்தான்.
தன் கணவனின் சகோதரன் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக அவள் நினைக்கவில்லை. ஒரு குறும்புக்காரச் சிறுமியின் மனதுடன் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் சீயக்காய் இருந்த கிண்ணத்தையும் சலவை செய்ய வேண்டிய ஆடைகளையும் படியில் வைத்துவிட்டு அவள் உட்கார்ந்தாள். வினோத் குளத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்ததால் ஆபத்து அண்ணியின் வடிவத்தில் வந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. கட்டியிருந்த ஒற்றைத் துண்டு நனைந்து அவனுடைய நிறத்தைக் கொண்ட பின் பாகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். விரிந்த முதுகுப் பகுதியில் சிறுசிறு ரோமங்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவள் திடீரென்று ஆசை வயப்பட்டாள்.