நெருப்பு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
பயணத்தின் முடிவு
வளைந்து திரும்பி மலைமீது ஏறிப் போய்க்கொண்டிருந்த மணல் நிறைந்த பாதை முடிவடையும் இடத்தில் ஒற்றைக் காளைவண்டி நின்றது.காவி ஆடை அணிந்திருந்த தேவிகாவைப் பின்பற்றி சரளா இறங்கினாள். கடந்த சில நிமிடங்கள் வரை அவர்களைச் சூழ்ந்திருந்த அடிவாரம் இப்போது மறைந்துவிட்டது. சுற்றிலும் மரங்கள் மட்டும் இருந்தன. ஒரு சிறு காற்றின் குளிர்ச்சியில் அவர்கள் நீண்ட பயணத்தின் களைப்பை மறந்தார்கள்.
வண்டியை ஓட்டி வந்த மனிதன் ஒரு வயதானவன். நீளமான நரைத்த தாடியையும் கொஞ்சம் தலை முடியையும் கொண்டிருந்த அவன் ஒரு சந்நியாசியைப் போல இருந்தான். தேவிகா நீட்டிய பணத்தை இரண்டு கைகளாலும் வாங்கி, தேவைக்கும் அதிகமாக நீளமாக இருந்த சட்டைப் பாக்கெட்டிற்குள் வைத்த அவன் சொன்னான்:
“அதோ... அதுதான் ஆஸ்ரமம். ஐந்து நிமிடங்கள் மேல ஏறணும்.”
வண்டிக்காரன் சுட்டிக்காட்டிய இடத்தை சரளா பார்த்தாள். மரங்களுக்கு மத்தியில் மலையின் உச்சியில் வைக்கோலால் வேயப்பட்ட பர்ணசாலையின் ஒரு பகுதி தெரிந்தது. திடீரென்று அவள் உணர்ச்சி வசப்பட்டாள். தான் மனதில் அடைய வேண்டும் என்று நினைத்திருந்த இடத்தை நெருங்க நெருங்க அவளுக்குள் உற்சாகம் கூடிக் கொண்டேயிருந்தது.
இரு பக்கங்களிலும் புற்களும் புதர்களும் வளர்ந்திருந்த ஒற்றையடிப் பாதை வழியாக தேவிகாவுடன் சேர்ந்து சரளா நடந்தாள்.
தேவிகா பேசுவதில் மிகவும் விருப்பம் கொண்டவளாக இருந்தாள்.காலையில் எட்டு மணிக்குப் பயணம் ஆரம்பமானபோது அவள் நிறைய பேசினாள். தன்னுடைய மனதின் கதவுகளை முழுமையாகத் திறந்து வைத்து மற்றவர்களை உள்ளே அழைக்கக் கூடிய ஒரு தனி குணத்தை அவள் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு வழியில் எப்போதோ, பேச்சின் உபயோகமற்ற தன்மையைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, அவள் அமைதியாகிவிட்டாள். சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவந்த சூழ்நிலைக்கான காரணங்களைப் பற்றித்தான் தேவிகா கூறிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பதினான்காம் வயதில் தந்தை இறந்துவிட்டார். பட்டினியில் கிடந்தபோது, அவளுடைய தாய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள். ஆனால், இரண்டாவது தந்தை முழுமையான குடிகாரனாக இருந்தான். தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்துவான். மகளுக்குத் தொந்தரவுகள் கொடுப்பான். ஆரம்பத்தில் அவளுடைய தாய் சண்டை போட்டாள்,எதிர்த்தாள். பிறகு அது தினமும் நடக்கக் கூடிய ஒரு செயல் என்று ஆனபோது, பட்டினியாலும், துன்பத்தாலும் உண்டான கசப்பான அனுபவங்களுக்கு மத்தியில் அவள் சிறிதும் எதிர்ப்பு காட்டாமல் ஒரு மரத்துப்போன பெண்ணைப் போல மாறிக் கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருந்தாள்.
மூன்று வருடங்கள் அவள் தன்னுடைய இரண்டாவது தந்தையின் செயல்களுக்கு எதிராக தைரியத்துடன் நின்றாள். ஒரு இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தன்மீது கனமாக அழுத்துவதை உணர்ந்த அவள் கண்விழித்தபோது, தான் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் இருப்பதை அவள் பார்த்தாள். எப்படியோ அந்த மனிதனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவள் வேகமாக ஓடினாள். ஓடுகிறபோது, கிடைத்த ஒரே ஒரு ஆடையை மட்டும் அணிந்து கொண்டு இரவு முழுவதும் பயந்து யாருக்கும் தெரியாமல் மறைந்து திரிந்தாள். காலையில் யாருடைய உதவியாலோ பிரபாமயிதேவியின் ஆஸ்ரமத்தை அடைந்த அவள் சந்நியாசகோலம் பூண்டாள்.
பேருந்தின் இரைச்சலுக்கு மத்தியில் தேவிகா கூறிக்கொண்டிருந்ததை மிகவும் கவனத்துடன் கேட்டவாறு சரளா உட்கார்ந்திருந்தாள்.
“பாவம் அம்மா... இப்போ அவங்க என்ன செய்வாங்களோ?”
தேவிகா சிறிது நேரம் பேருந்திற்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதைப் போல் இருந்தது.
“வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை... அப்படித்தானே அக்கா?” - சரளாவின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு தேவிகா சொன்னாள்: “சரி... அக்கா... நீங்க வீட்டைவிட்டு வந்ததுக்கான காரணம் என்ன?
தன்னுடைய கதையைச் சொல்லி முடித்தவுடன், அதற்குப் பதிலாக சரளாவின் கதையைக் கேட்கக்கூடிய உரிமை தனக்கு இருக்கிறது என்று அவள் நினைத்திருக்க வேண்டும். குற்ற உணர்வு இல்லாத கள்ளங் கபடமற்ற மனதிற்குச் சொந்தக் கதைகளைக் கேட்பது என்பது சர்வசாதாரணமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு?
சரளா எதுவும் கூறவில்லை. அவளுடைய முகம் இருண்டுபோய் இருப்பதைப் பார்த்த தேவிகா சொன்னாள்:
“அக்கா, கவலைப்படாதீங்க. எல்லா விஷயங்களும் சரியாயிடும்.”
பேருந்து நிலையத்திலிருந்து ஒற்றைக் காளை வண்டியில் ஏறிச் செல்லும் பயணத்தின்போது தேவிகா எதுவும் பேசவில்லை. இப்போது தேவிகாவிற்குப் பின்னால் நிழலைப்போல நடக்கும்போது, சரளா சந்தேகத்துடன் நினைத்துப் பார்த்தாள்-‘தனக்கு என்றைக்காவது வாழ்க்கையில் அமைதி கிடைக்குமா?’
வெளி வீட்டைப் போல அமைக்கப்பட்டிருந்த கதவுக்கு அப்பால் பர்ணசாலை இருந்தது.
ஆனந்த குரு
வெகு சீக்கிரமே சந்நியாசத்தை ஏற்றுத் தனக்கு முன்னால் மண்டியிட்டு நின்றிருக்கும் இளம் பெண்ணின் தலையில் கையை வைத்து, பத்மாசனத்தில் இருந்த ஆனந்தகுரு ஆசீர்வதித்தார்.
“மகனே, எழுந்திருங்க.”
சரளா எழுந்து நின்றாள். கன்னத்தின் வழியாக வழிந்துகொண்டிருந்த கண்ணீரை புடவைத் தலைப்பால் துடைத்தாள்.
“அழாதீங்க....”
அது ஒரு கட்டளையைப் போல் இருந்தது. சாளரத்தின் வழியாக உள்ளே வந்த மாலைநேர வெயில் அவளுடைய முகத்தைப் பொன் நிறத்தில் மின்னச் செய்ததை குரு கவனித்தார். சதைப்பிடிப்பான கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தன. ஒரு பொன்னால் ஆன சிலையைக் கழுவி வைத்ததைப்போல அவள் இருந்தாள். மெல்லிய பச்சைக் கரை போட்ட வெள்ளைப் புடவையை அவள் அணிந்திருந்தாள். கூச்சம் காரணமாகப் புடவையைத் தோளில் இட்டு உடலை முழுமையாக அவள் மூடியிருந்தாள்.
குரு சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் இருந்தார். எங்கிருந்தோ வந்து தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்தப் பெண் யார்? அவளின் கவலைக்கான காரணம் என்ன? மாலை நேர சொற்பொழிவு முடிந்து திரும்பி வந்தபோதுதான், முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை அவர் பார்த்தார். அவரை எதிர்பார்த்திருந்ததைப் போல அவள் சொன்னாள்:
“நான் சந்நியாசினியா ஆகணும்.”
சந்நியாசத்திற்கு தீட்சை கொடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. ஏராளமான பேர் ஆஸ்ரமத்திற்கு வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு பஜனம் இருக்க வேண்டும் என்று வருவார்கள். அதற்குள் மனஅமைதி கிடைத்துவிட்டால், அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள். தீராத நோயைக் கொண்டவர்கள், கெட்ட நேரத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்கள், மனதில் அமைதி இல்லாதவர்கள்- இப்படி உலகத்தில் உள்ள பலவிதப்பட்ட பிரச்சினைகளைத் தாங்கிக்கொண்டு வருபவர்கள் பஜனம் இருப்பதற்காக ஒதுக்கப் பட்டிருக்கும் பர்ணசாலையில் ஒரு வாரகாலம் இருப்பார்கள்.