நெருப்பு - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
ஆஸ்ரமம்
ஆஸ்ரமம் மலை உச்சியில் இருந்தது. அடிவாரத்தில் அல்லிக் கோடு கிராமம். கிராமத்திலிருந்து பார்த்தால், மரங்கள் அடர்ந்த மலை உச்சியில் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பர்ணசாலைகள் பனி மூடிய உய்ர்ந்த சிகரங்களுக்கு மத்தியில் தெரியும்.
ஆஸ்ரமம் பல வினோதச் செயல்களின் உறைவிடமாக இருந்தது. அதைப் பற்றி பலரும் கூறிக் கொண்டிருந்த வியப்பூட்டக்கூடிய கதைகள் நிறைய இருந்தன. வாயால் விளக்கிக் கூறுவதற்கு அப்பாற்பட்ட வினோதமான சம்பவங்கள். இரவு நேரத்தில் ஆஸ்ரமம் மலைகளும் இருட்டில் மூழ்கிவடும்போது வேலப்ப சுவாமிகளின் பர்ணசாலைக்கு முன்னாலிருக்கும் ஹோமகுண்டத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். இரவின் அச்சமூட்டக்கூடிய இறுதி யாமங்கள் வரை எரிந்துகொண்டிருக்கும் அந்த நெருப்பு, மலைக்கு ஒரு எரிமலை என்ற அடையாளத்தைத் தந்து கொண்டிருந்தது. எங்கே நின்றுகொண்டு பார்த்தாலும் கண்ணில் தெரியும் அந்தக் காட்சி கிராமத்து மக்களிடையே ஆர்வத்தையும் பயத்தையும் உண்டாக்கியது.
அந்த ஹோமகுண்டம்தான் சுவாமிகளின் சக்தி என்று அவர்கள் நம்பினார்கள். பகல் நேரத்தில் ஆஸ்ரமம் அந்த அளவிற்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை. பண்டிகை நாட்களில் அவர்கள் பழங்களையும், தேங்காய்களையும்,தேங்காய் எண்ணெயையும் தூக்கிக் கொண்டு மலையேறி வந்து சுவாமிகளைப் பார்த்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கினார்கள். பிறந்த நாட்களின்போது அதிகாலையிலேயே குழந்தைகளைக் குளிக்கச் செய்து, பகவதி கோவிலில் விளக்கேற்றி வணங்கி சுவாமிகளின் தரிசனத்திற்காக அவர்களைக் கொண்டு செல்வார்கள். சுவாமிகள் அரிசியையும் மலர்களையும் தலையில் தூவி, அவர்களை ஆசீர்வதித்தார். தேங்காய், சர்க்கரை, மலர் ஆகியவற்றைப் பிரசாதமாகக் கொடுத்தார்.
இருபது வருடங்களுக்கு முன்பு வேலப்ப சுவாமிகள் சமாதி ஆகிவிட்டார். அதற்குப் பிறகு ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்று நடத்திய ஆனந்த குருவிற்குத் தன்னுடைய குருநாதரான வேலப்ப சுவாமிகள் அளவிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ஒரு வரலாற்று நாயகன் உருவாக வேண்டுமென்றால், அதற்குப் பல யுகங்கள் ஆகும். வேலப்ப சுவாமிகளை எடுத்துக் கொண்டால், கிராமத்து மக்களுக்கு நினைவு தெரியும் காலத்திலிருந்து அவர் மலையின் மேல்தான் இருந்தார்.
இப்போதும் அவர்கள் பண்டிகை நாட்களிலும் பிறந்த நாட்களிலும் ஆஸ்ரமத்திற்குச் சென்று ஆனந்த குருவின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயங்கள் மேலும் நன்கு நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வேலப்ப சுவாமிகளின் சமாதி மண்டபத்திற்குச் செல்வார்கள். அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருக்கும் ஒற்றைக்கல் விளக்கில் எண்ணெய் ஊற்றி அவர்கள் விளக்கை எரிய வைப்பார்கள். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமாதியில் குளிர்ந்து போய்க் காணப்படும் திண்ணைமீது நெற்றி படும்படி மண்டியிட்டு பிரார்த்தனை செய்வார்கள். கல் விளக்கின் கரியை நெற்றியில் பூசிக் கொள்வார்கள். அது தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்தி அவர்களைக் காப்பாற்றும்.
கூறப்போகும் அற்புதச் செயல் நடந்தது பல வருடங்களுக்கு முன்பு வேலப்ப சுவாமிகளின் காலத்தில். அப்போதெல்லாம் கிராமத்து மனிதர்கள் வருடங்களின் கணக்கைச் சரியாக மனதில் வைத்திருந்தார்கள். அதற்கு பிறகு கணக்குகள் வைத்திருந்த தலைமுறையின் நினைவுகளில் நரை விழுந்தபோது கணக்குகள் சிதிலமடைந்துவிட்டன. வெள்ளப்பெருக்கு உண்டான ஒரு காலத்தில்தான் அது நடந்தது என்பது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து மழைக் காலத்தின்
கடுமையான குளிரிலும் மலையிலிருந்து வந்த நீர் உண்டாக்கிய சேதங்களுக்கு மத்தியிலும்கூட அதைப் பற்றிய பேச்சு மிகவும் சூடாகவே நடந்துகொண்டிருந்தது. பிறகு அவ்வப்போது வெள்ளப்பெருக்கு உண்டானதால், அது அறுபத்து இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கா அல்லது அறுபத்து நான்காம் ஆண்டு நடைபெற்ற வெள்ளப்பெருக்கா, இல்லாவிட்டால் அவற்றுக்கெல்லாம் முன்பு ஐம்பத்தாறாம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கா என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டானது. நடந்த சம்பவத்தின் ஆச்சரியத் தன்மையைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், கால நிர்ணயம் அந்த அளவிற்கு முக்கியமில்லை என்பது தெரியும்.
அறுவடை முடிந்து வெறுமனே கிடந்த வயலில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள்தான் அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறினார்கள். சாயங்காலம் ஆகியும் நிறைந்திராத வயிறுடன் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்த பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள், கூட்டமாகக் கடல் காகங்கள் மலைக்கு மேலே அடைவதற்காகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரு பெரிய கவணைப் போல அவை பறந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் எவ்வளவு பறவைகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கலாமா என்ற ஒருவனின் கேள்விக்குப் பதிலாக மற்றொரு சிறுவன் அவற்றை எண்ணத் தொடங்கினான். ஐந்து என்று எண்ணியபோது பறவைகள் ஆஸ்ரமம் இருந்த மலைக்குச் சரியாக மேலே இருந்தன. திடீரென்று அந்தப் பறவைகள் அத்தனையும் மறைந்து போயின. அங்கு சில பறவைகள் பறந்துகொண்டிருந்தன என்பதற்கான அடையாளமே இல்லாமல் அவை வானத்தின் நீல நிறத்தில் மறைந்து காணாமல் போயின.வானத்தில் மேகங்கள் கொஞ்சம்கூட இல்லை. எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் உடனிருந்த இன்னொரு சிறுவனைப் பார்த்தபோது, அவனும் வாயைப் பிளந்து திகைத்துப்போய் நின்றிருந்தான்.
அருகிலிருந்த பகவதி கோவிலில் தீபாராதனை நடப்பதற்கான மேளச் சத்தம் கேட்டது. ஆலமரத்திற்குக் கீழே வெடிகள் வெடித்தன.அப்போதும் திகைப்பில் மூழ்கிப் போயிருந்த சிறுவர்கள் பசுக்களை மேய விட்டுவிட்டு, அப்புண்ணியின் தேநீர்க் கடையை நோக்கிச் சென்றார்கள். அங்கு சிறு கூட்டமாக நின்றிருந்தவர்களிடம் கிராமத்திலேயே முட்டாளாக இருந்த கோபாலன் கைகளை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவாறு பறந்து கொண்டிருந்த பறவைகள் எப்படி வானத்தில் ஆச்சரியப்படும் வகையில் காணாமல் போயின என்பதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான். வழக்கம்போல அதை ஒரு தமாஷ் என்று எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் அவனைக் கேலி பண்ண ஆரம்பத்தது. அப்போதுதான் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் ஓடி வந்ததும், பறவைகளைப் பற்றிய விஷயத்தைக் கூறியதும் நடந்தது.
திடீரென்று அங்கு அமைதி நிலவியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆஸ்ரமத்தில் மலர்கள் சாற்றச் சென்ற ஒரு தாயும் மகளும் அங்கு கேள்விப்பட்ட, திகைப்பு உண்டாக்கக்கூடிய ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டு சிலையென நின்றுவிட்டனர். அவர்களுக்கு அதை நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது. பறவைகளைப் பற்றிய விஷயம் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், மனிதர்கள்?