நெருப்பு - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அற்புதங்களை எதிர்பார்த்திருக்கும் அந்த நாட்களில் அவர்கள் வேலப்ப சுவாமிகளின் சமாதிக்கும் சென்று தொழுவார்கள். சில நேரங்களில் அற்புதங்களும் நடக்கத்தான் செய்கின்றன. தீராத நோய்கள் குணமாகின்றன. குழப்பங்கள் நிறைந்திருக்கும் மனங்களுக்கு அமைதி திரும்பக் கிடைக்கிறது. வலிப்பு நோய் குணமாகும். உடல் நிலை சரியானாலும் சரியாகாவிட்டாலும் ஏதோ ஒன்றை அடைந்தோம் என்ற திருப்தியுடன் அவர்கள் திரும்பிச் செல்வார்கள்.
நிரந்தரமாக பக்தர்களைத் தங்க வைப்பதும் அவர்களுக்குத் தீட்சை தருவதும் நீண்ட சிந்தனைக்குப் பிறகுதான்! அவர்களுடைய வாழ்க்கைப் பின்புலத்தைப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். தனக்கு முன்னால் இருக்கும் இளம் பெண்ணைப் பார்த்தபோது ஆனந்த குருவிற்குச் சந்தேகங்கள் உண்டாயின. அவளால் சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவளைவிட வயது குறைவான பெண்கள் ஆஸ்ரமத்தில் சந்நியாசம் ஏற்று இருக்கத்தான் செய்கிறார்கள். வயது என்பது முக்கியம் அல்ல. இந்த இருபத்து ஐந்து வயதை கொண்ட இளம் பெண்ணின் கண்களில், உடலுறுப்புகளின் அசைவுகளில் வாழ்க்கை துடித்து நின்று கொண்டிருந்தது. அங்கு விரக்தி அல்ல, ஆசை இருப்பது தெரிந்தது.அது குருவைக் குழப்பமடையச் செய்தது.
“அழாதீங்க” -ஆனந்தகுரு மீண்டும் சொன்னார்: “உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு என்னால் புரிஞ்சிக்க முடியல. எது இருந்தாலும், சந்நியாசம் இருக்குறதா இருந்தா இருங்க. சந்நியாசியின் வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்தது. உங்களால அவற்றைத் தாங்கிக் கொண்டிருக்க முடியுமா? அது உங்களுக்குத் தேவைதானா என்பதைப் பார்க்கணும். சிறிது நாட்கள் பஜனம் இருங்க. சுற்றிலும் பசுமையான மரங்கள் இருக்கு. நம்மை எந்தச் சமயத்திலும் தொந்தரவே செய்யாத இயற்கை... அவற்றுக்கு மத்தியில் இருக்கும் வாழ்க்கை உங்களுக்கு, நீங்கள் இழந்த மனஅமைதியைத் திரும்பத் தரும். ஒருவேளை, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு நேர்ந்தது என்ன என்பதை நீங்கள் என்கிட்ட சொல்லலாம். எதுவாக இருந்தாலும் நாம அதைத் தீர்த்து வைக்கலாம். உங்களால வாழ்க்கைக்கு தைரியமாகத் திரும்பிப் போக முடியும். கவலைப்படாதீங்க. தினமும் மத்தியத்திற்குப் பின்னாடி ஒரு மணிநேரம் சொற்பொழிவு இருக்கு. அதைக் கேட்க வாங்க. மனதை பலமா வைத்திருக்க அது உதவும்.”
பின்னால் நின்றிருந்த சந்நியாசினியைச் சுட்டிக்காட்டி குரு சென்னார்:
“இவங்க பஜனம் இருப்பதற்கான இடத்தைக் காட்டுவாங்க.”
இன்னொரு முறை காலில் விழுந்து வணங்கி எழும் அந்த இளம் பெண்ணை ஆனந்த குரு ஆசீர்வதித்தார்.
“நல்லது நடக்கட்டும்.”
சரளா பர்ணசாலையை விட்டு வெளியேறி நடந்தாள். சந்நியாசினியும் அவளுடன் வந்தாள்.சரளா கேட்டாள்:
“தேவிகா?”
“இல்ல. என் பேரு சுனந்தினி. வாங்க.”
தேவிகா எங்கு இருக்கிறாள் என்று கேட்கத்தான் சரளா நினைத்தாள். அவள் போயிருக்க வேண்டும் என்று சரளா நினைத்தாள். அவளுடைய நோக்கம் அங்கு வந்து சேர்வதுதானே! ஆனால், சொல்லாமல் அவள் போனது சரளாவை வேதனை கொள்ளச் செய்தது. ஒருவேளை அவள் இப்போதுகூட ஆஸ்ரமத்தில் வேறு எங்காவது இருக்கலாம் என்று சரளா தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.
ஆனந்தகுரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அந்த இளம் பெண்ணைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவருடைய இதயம் காரணமே இல்லாமல் படுவேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது. ஆசைகளுக்குத் தன்னுடைய மனதில் இடமில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பல வருடங்களாகப் பின்பற்றி வந்த கடுமையான தவத்தின் விளைவாக மனதை வாழ்வுமீது கொண்ட பற்றிலிருந்தும்- செயல் பற்றுகளிலிருந்தும் விலக்கி, சுத்தமான மனதுடன் இருக்க அவர் பழகிக்கொண்டிருந்தார். நினைவுகளின் தேவையற்ற தூரங்களுக்குப் பயணம் செய்ய அவர் தன்னுடைய மனதை அனுமதிக்கவில்லை. அது பயனற்ற ஒன்று என்பதை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். வாழ்க்கையின் ஓரத்தைச் சுற்றிப் பயணம் செய்வது, பற்று சிறிதும் இல்லாமல், தனியனாக...
பாம்புப் புற்றில் நிழல்கள்
வெளியே கடந்துபோன போதுதான் ஆஸ்ரமம் எவ்வளவு பரந்திருக்கிறது என்பதே அவளுக்குத் தெரிந்தது. மலையின் மேற் பகுதியில் மூன்று கட்டிடங்கள். அவை செங்கற்களால் கட்டப்பட்டு வைக்கோலால் வேயப்பட்டிருந்தன. பிறகு, மலையின் வேறொரு சரிவில் பல அடுக்குகளாக ஏராளமான சிறுசிறு குடில்கள்.அவை பனையோலைகளால் வேயப்பட்டிருந்தன. மேலே இருந்து பார்க்கும்போது மரங்களுக்கு மத்தியில் ஓலைக்குடைகளின் ஊர்வலம் போலத் தெரிந்தது.
கற்களால் உண்டாக்கப்பட்ட படிகள் வழியாக இறங்கி அவர்கள் ஒரு வீட்டை நோக்கி நடந்தார்கள்.காவி நிறத்தில் சிமெண்ட் பூசப்பட்ட தரை எந்தவித இல்லப் பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இரண்டு சிறிய அறைகள்.ஒரு அறையுடன் சேர்ந்த குளியலறை.
“அக்கா இங்கே வந்து உட்காருங்க”- சுனந்தினி சொன்னாள்: “நான் போயி படுக்குறதுக்கான ஜமுக்காளத்தையும் குடிக்கிறதுக்குத் தண்ணியையும் கொண்டு வர்றேன்.”
சரளா இப்போது தனியாக இருந்தாள், பஜனத்திற்குப் பெண்கள் யாருமில்லை என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. இரவில் தனியாக அந்த வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுமோ என்ற பயம் சரளாவிற்கு உண்டானது.
அகலமான சாளரத்தின் வழியாக அவள் வெளியே பார்த்தாள். கீழே மரங்களுக்கு மத்தியில் சிறுசிறு வீடுகளை இணைக்கக்கூடிய செம்மண்ணால் ஆன பாதையில் காவி ஆடை அணிந்தவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சாயங்கால நேரத்தின் நிழல்கள் விழ ஆரம்பத்திருந்தன. படிப்படியாகத் தன்னுடைய மனதிற்குள்ளும் நினைவுகளின் வேதனை தரும் நிழல் படிவதை அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. வெளியே இருந்து குளிர்ந்த காற்று உள்ளே வந்தது.
மதிய உறக்கத்தின் சோர்வு குறைந்து வரும் சாயங்கால வேளைகளில் மேலே இருக்கும் தனியான சாளரத்தின் வழியாக அவள் வெளியே பார்த்தவாறு நிற்பதுண்டு.வெளியே ஒரு விநோதமான உலகம் இருக்கலாம். அப்போதும் கடுமையான வெயில் வயலின் பசுமையில் பட்டு மாற்றம் உண்டாக்கிக் கொண்டிருக்கும். அங்கிருக்கும் நிலத்தில் நின்றிருக்கும் மரங்களின் கிளைகள் காற்றில் இப்படியும் அப்படியுமாக ஆடிகொண்டிருக்கும். பறவைகள் ஓசைகள் உண்டாக்கிக் கொண்டிருக்கும். சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகத்தைப்போல அவள் கவலையுடன் நின்றிருப்பாள். வேண்டுமென்றால், அவள் வெளியே செல்லலாம். வெளியே நடந்து காற்றையும், வெயிலையும் அனுபவிக்கலாம். காலையில் நீர் பாய்ச்சல் முடிந்து, அப்போதும் விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களில் வெறும் பாதங்களுடன் நடக்கலாம். வாய்க்கால்களின் இரு பக்கங்களிலும் இருக்கும் ஈர மண்ணில் எப்படியோ வளர்ந்து வரும் செடிகளைப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கலாம். இவை ஒவ்வொன்றும் மனதில் சந்தோஷத்தை உண்டாக்கக் கூடியவை. ஆனால் ஏதோ புரிந்துகொள்ள முடியாத சக்தி ஒன்று அவளைப் போட்டு அலைக் கழித்துக் கொண்டிருந்தது. இந்த அளவிற்கு அவள் அருகில் இருந்தும், அந்த இயற்கை அழகு தாண்டவமாடும் உலகம் அவளை வேதனைப்படுத்தவே செய்தது.