நெருப்பு - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
வெற்றிலை வாசனை வரும் மூச்சுக் காற்று தன்மீது படுவதைக் கவனித்தவாறு, தட்டி எழுந்திராத தன்னுடைய உணர்ச்சிகளில் மூழ்கியவாறு சரளா படுத்திருப்பாள். தன் மனைவியின் உணர்ச்சிகள் கவனம் செலுத்தப்படவேண்டியவை என்பதை அவன் நினைத்ததே இல்லை. உழுத நிலத்தில் வித்துகளை எறியும் விவசாயி எப்படி இயல்பாக அதைச் செய்வானோ, அப்படித்தான் அவன் உடலுறவு விஷயத்தில் இருப்பான்.
வித்துகள் முளைக்காமல் போனதற்கான காரணங்களை அவன் நினைத்துப் பார்த்ததில்லை. வித்தை எறிய வேண்டியதுதான் என்றும், அதை முளைக்கச் செய்வது கடவுள் என்றும் அவன் நம்பினான். கடவுளின் விருப்பம் அதுவாக இருக்கலாம். மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் அவன் விரும்பவில்லை. விசாரித்துப் பார்த்தால் இரண்டு பேரில் ஒருவரிடம் குறை இருப்பது தெரியும். குறை யாரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? குறை என்ற விஷயத்தில் தன் மனைவிமீது அதைச் சொல்லாமல் இருக்கும் அளவிற்கு அவன் அவள்மீது அன்பு வைத்திருந்தான்.
வற்றாத வாய்க்கால்கள்
“குழந்தை இல்லைன்றது சாபம்தான்”- ஆனந்தகுரு சொன்னார்: “எந்த சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்ற நாம் முயற்சிக்கணும். புராணங்கள் முழுக்க இதற்கு உதாரணங்கள் உண்டு.”
குருவின் முகத்தில் மனித இனம் பலநூறு வருடங்களாகப் பெற்ற அறிவின் ஒளி தெரிந்தது.
“நீங்க இளம் வயது. பிள்ளைகள் பிறக்க இனிமேலும் வாய்ப்பு இருக்கு. அதைப் பற்றி நினைச்சு மனசைக் கெடுத்துக்க வேண்டாம்.”
அவள் குருவிடம் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகவே கூறினாள். கணவன், மாமியார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் கொழுந்தன், திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் இல்லை....
“திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் சந்நியாசம் ஏற்றுக் கொள்ள வரமாட்டாள்” - குரு தொடர்ந்து சொன்னார்: “அதற்கு வேறு காரணங்கள் இருக்கணும். சொல்றதுக்கு கஷ்டமாக இருக்குற.... இல்லாட்டி.... சொல்ல விருப்பமில்லாத விஷயங்கள்... எனக்கு அதைத் தெரிஞ்சிக்கணும்னு விருப்பமில்ல...”
குருவின் குரலில் இரக்கம் இருக்கிறதா? ஒருவேளை தனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். குருவிடம் எல்லா விஷயங்களையும் மனதைத் திறந்து கூறமுடியாமல் இருப்பதற்காக அவள் கவலைப் பட்டாள். எப்படி எல்லா விஷயங்களையும் கூற முடியும்? குரு அமானுஷ்யமான சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய மனதிற்குள் இருப்பதைப் படித்துத் தெரிந்துகொண்டு விடுவாரோ என்ற பயத்தால் தன் மனதின்மீது ஒரு போர்வையை மூடி மறைத்து கொள்ள சரளா ஆசைப்பட்டாள். தன்மீது படிந்த களங்கம் தன்னுடனே முடிந்து போகட்டும் என்று அவள் நினைத்தாள்.
“ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளணும். நாம எல்லோரும் கடவுளின் கையில் இருக்கும் காய்கள். அவ்வளவுதான். வெறும் அடையாளங்கள், பொம்மைகள்....”
மேலே கையால் சுட்டிக் காட்டியவாறு குரு தொடர்ந்தார். “கயிறு இழுக்குற கைகள் அவருக்குச் சொந்தமானவை. சரி.... நீங்க பகவத் கீதை படிச்சிருக்கீங்களா?”
“இல்லை” என்று அவள் தலையை ஆட்டினாள்.
“புத்தகம் அறைக்கு வர நான் ஏற்பாடு செய்றேன். படிங்க. சந்தேகங்களைக் கேளுங்க... என்னால் முடிஞ்சவரைக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன். கீதையின் மகத்துவமே என்னன்னா அது சந்தேகங்களை உண்டாக்குறது இல்ல... இருக்குற சந்தேகங்களை இல்லாம ஆக்குறதுதான்...”
சரளா அங்கிருந்து போனபிறகும் குரு சிறிது நேரம் பத்மாசனத்திலேயே உட்கார்ந்திருந்தார். அந்த முகம் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் எந்த இடத்தில் தான் அந்த முகத்தைப் பார்த்திருக்கிறோம்? பல வருடங்களைக் கடந்து வந்த தன்னுடைய பயணத்திற்கு மத்தியில் இழுத்துவிட்ட ஞாபகப் படலங்கைளை மீண்டும் கொண்டுவந்து நினைத்துப் பார்க்க அவர் முயற்சி செய்தார். எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. மனதில் நெருக்கமாக இருக்கும் உருவங்கள், தெளிவற்ற உருவங்கள் எல்லாம் அடுத்தடுத்து தோன்றிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் எங்கோ அந்த அழகிய முகம் இருக்கிறது. விடை கிடைக்காத தடுமாற்றத்துடன் ஆனந்த குரு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். சந்தியா வந்தனங்களுக்கான ஏற்பாடுகளுடன் சிஷ்யன் ஞானானந்தன் அங்கு வந்தான். அப்போதும் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த குருவைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். கண்களை மூடி தியானத்தில் இருக்கும் குருவைத் தொந்தரவு செய்யாமல் அவன் வெளியேறினான். பர்ணசாலையின் முற்றத்தில் ஹோமகுண்டம் எரிந்துகொண்டிருந்தது. கிழக்கு திசையில் இருந்த மலைகளுக்கு மேலே மாலைநேர வெயில் பட்ட மேகங்கள் பலவகை வடிவங்களைப் படைத்துக் கொண்டிருந்தன.
ஆனந்த குரு தியானத்தில் இருந்தார். அலைபாய்ந்துகொண்டிருந்த மனம் படிப்படியாகக் கனவு நிலைக்கு வந்தது. கடந்த காலத்தைப் பற்றிய தூரப் பயணத்தில் அவர் தன் தாயை நெருங்கிவிட்டார். அன்னையின் முகத்தை மனதில் கொண்டுவர முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. அந்த முகம் தெளிவில்லாமல் இருந்தது. இளம் வயதில் தன்னை விட்டுப்போன மனைவியின் முகத்தை அவரால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. எல்லா விஷயங்களும் மறதியின் எட்டாத இடங்களுக்குள் போய் மறைந்துவிட்டிருந்தன. அந்தப் புரிதல் குருவைக் கவலைக்குள்ளாக்கியது. ஒரு வகையில் பார்க்கப் போனால் அது ஒரு ஆசீர்வாதம் அல்லவா? குடும்ப பந்தத்தின் இறுதிக் கண்ணிகள்கூட அறுக்கப்பட்டுதான் விடுதலை ஆகியிருக்கிறோம் என்பதை அவரால் உணர முடிந்தது. ஆசைகள் என்னும் வாய்க்கால்கள் வற்றிப் போய் மனதில் செயலற்ற தன்மை என்ற வறட்சி முழுமையாக நிறைந்து இருக்கட்டும். அப்போதுதான் எல்லாம் முழுமை அடைந்ததாகிறது.
ஞானானந்தன்
தேவிகா ஒரு அற்புதமாகவே இருந்தாள். தேவிகா என்பவள் உண்மையிலேயே இருந்தாளா என்ற சந்தேகமே சரளாவிற்கு உண்டாகிவிட்டது. குருவின் முன்னாலிருந்து எழுந்த பிறகு அவளைப் பார்க்கவே இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்த விஷயம் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தவர்களுக்கு தேவிகாவைத் தெரியவே இல்லை என்பதுதான் ப்ரபாமயிதேவியின் ஆஸ்ரமத்தைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் அங்கிருந்து இங்கு வருவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஏதோ தொடர்பு இருந்திருக்கிறதாம்.
தான் கனவு ஏதாவது கண்டிருப்போமோ என்று கூட அவள் நினைத்தாள். கடந்த சில நாட்களாகவே தான் கனவிற்கும் உண்மைக்கும் இடையில் உள்ள உலகத்தில்தான் இருக்கிறோம் என்று அவள் நினைத்தாள். இரண்டுக்குமிடையே எந்தவொரு வித்தியாசத்தையும் அவளால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அவள் சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தாள். முன்னால் மலை மிகவும் அருகில் இருப்பதுபோல் தோன்றியது. சாயங்கால நேரமாகும் போது அது தள்ளித் தள்ளிப் போய் தூரத்தில் பனிப்படலத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டது.