Lekha Books

A+ A A-

நெருப்பு - Page 5

neruppu

கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய  பார்வை பாம்புப் புற்றை நோக்கித் திரும்பும். சூரியன் மரங்களுக்கு மத்தியில் மறையும் நேரத்தில் நிழல்கள் புற்றில் தெளிவற்ற உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்கும். அந்த நிழல்கள் அவளுடைய மனதில் என்னவென்று  கூறமுடியாத வேதனையை உண்டாக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன் கணவன் வயலில் வரப்பு வழியாக நடந்து வருவது அவளுக்குத் தெரியும்.அவள் மரத்தாலான படிகளில் சத்தம் உண்டாக்கியவாறு இறங்கி வருவாள்.

“அம்மா.... கோபி அத்தான் வர்றாரு தேநீருக்கு நீர் வைக்கட்டுமா?”

கோபி வந்தவுடன் வாசல் திண்ணையில் அவனை எதிர்பார்த்து நின்றிருக்கும் சரளாவின் கையிலிருந்து துண்டையும்,சோப்பையும் வாங்கிக் கொண்டு நேராக அவன் குளத்தை நோக்கி நடப்பான். குளித்து முடித்து வரும்போது தேநீரும் பலகாரங்களும் தயாராகி மேஜைமீது  வைக்கப்பட்டிருக்கும். பலகாரம் செய்வது அவனுடைய தாய். மதிய நேரத்தில் தூக்கம் இல்லாததால் சாப்பிட்டு முடித்தவுடன், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு அவள் பலகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

தேநீர் குடித்துக் கொண்டே அவன் விவசாயத்தின் வளர்ச்சியைப்பற்றி கூறிக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால், வேலைக்காரர்களின் பிரச்சினைகளைப் பற்றி கூறுவான். பக்கத்திலிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அதைக் கவனத்துடன் சரளா கேட்டவாறு தேநீர்  குடிப்பாள். அவளிடம் அதைப் பற்றி எந்தவொரு கருத்தும் இருக்காது. திருமணம் முடித்து ஆறு வருடங்கள் ஆனபிறகும், அவளால் தன்னுடைய கணவனின் உலகத்திற்குள் முழுமையாக நுழைய முடியவில்லை.

சமையலைறையிலும் சாப்பிடும் அறையிலும் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே அன்னை தன் மகன் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகக் கேட்டுத் தன் கருத்தையும் கூறுவாள்.

“அக்கா என்ன கனவு காண்றீங்களா?”

சுனந்தினி சரளாவைக் கனவு உலகத்திலிருந்து சுய உணர்விற்குக் கொண்டு வந்தாள். அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள்- இழந்து விட்ட உலகத்தைப் பற்றி. இதற்கிடையில் சுற்றியிருக்கும் உலகம் கண்களை விட்டு மறைந்துவிட்டது. வெளியே மரங்கள் இருட்டின் கூம்புகளாக மாறிவிட்டிருந்தன.

சுனந்தினி தன் கையிலிருந்தவற்றைத் தரையில் போட்டாள். இன்னொரு கையிலிருந்த கூஜாவையும் டம்ளரையும் அறையின் ஒரு மூலையில் கொண்டு போய் வைத்தாள்.

“குடிக்கிற தண்ணி...” சுனந்தினி சொன்னாள்: “அக்கா, பஜனத்திற்கு வேற பெண்கள் வர்றது வரை நான் உங்ககூட வந்து படுத்துக்குறேன்.”

இரவில் உணவாகக் கஞ்சி குடித்தார்கள். சாப்பிடும் இடத்தில் ஒன்றாக உட்கார்ந்து வேகவைத்த சிறுபயிறு கூட்டுடன் கஞ்சியைக்குடித்தபோது, சரளா தன் தலையை உயர்த்தவே இல்லை. சுற்றிலும் நிறைய ஆட்கள்... பெரும்பாலும் காவி உடை அணிந்தவர்கள். வெள்ளை நிற ஆடை அணிந்திருந்ததாலும், புதுமுகமாக இருந்ததாலும் தான் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம் எனற உணர்வு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

ஜமுக்காளத்தை விரித்துப் படுத்தபோது, சுனந்தினி கேட்டாள்:

“அக்கா உங்க கவலைக்கான காரணம் என்ன? எப்போ பார்த்தாலும் நீங்க ஏதாவது யோசனையில் இருக்குறது மாதிரியே இருக்கே?”

சரளா அதற்குப் பதில் எதுவும் கூறாமல் சுனந்தினியின் இடுப்பின் மீது தன் கையைப் போட்டாள். அவள் எதுவும் யோசிக்கவில்லை. யோசிக்காமல் இருக்க முயற்சித்தாள். இதற்கிடையில் மனம் நழுவிப் போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது கிராமத்தின் ‘நாலுகெட்டை’ அடைந்தது. அத்துடன் இதயம் இரண்டாகப் பிளக்கிறது. அழுகையாக நினைவுகள் உள்ளே நுழைகின்றன. அவள் தனக்குள் கேட்கிறாள்?

“வினோத், நீ எதற்காக இதைச் செய்தே?”

“அக்கா உங்க கவலைகள் எதுவா இருந்தாலும் ஆனந்தகுருவைப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்”- சுனந்தினி அவளைத் தேற்றினாள்: “வெறுமனே குருவுக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தால் போதும். நம்ம கவலைகள் இருந்த இடமே தெரியாமல் போயிடும்.”

காலையில் கண் விழித்தபோது, சுனந்தினி அங்கிருந்து போய்விட்டிருந்தாள். வெளியில் பலவகைப்பட்ட கிளிகளின் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது. ஒரு துயில் எழுப்புப் பாடலின் புனிதத்தையொத்திருந்த அந்தச் சப்தங்களைக் கேட்டவாறு சிறிது நேரம் அவள் படுத்திருந்தாள். ஒரு புதிய இடம், புதிய நாள், ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பமோ அது?

உயர்ந்து நின்றிருந்த மலை உச்சிகளை வருடிக்கொண்டு வந்த காற்று மிகவும் குளிர்ச்சியானதாகவும் பலம் கொண்டதாகவும் இருந்தது. அவள் எழுந்து சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். மரங்கள் அவற்றின் அழகை முழுமையாக வெளிப்படுத்தி அவளை ஈர்த்தது. இளம் சூரியக் கதிர்கள் இலைகளுக்கு மத்தியில் தெரிந்தன.

திடீரென்று அவளுக்கு தான் தனியாகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வும், அத்துடன் அறைக்குள் அமைதியாக அடங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டானது. தான் ஒரு அனாதை என்ற எண்ணம்  கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்துவர,  அவளுடைய கணவன்  ஒருமுறை சொன்னது அவளின் ஞாபகத்தில் வந்தது.

“இவ்வளவு பெரிய வீட்டுல நாம மூணுபேர் மட்டும். அம்மாவின் காலம் முடிந்தால், நாம இரண்டு பேர் மட்டும்தான் இருப்போம். அது போதுமா?”

அவன் எதை மனதில் வைத்து அப்படிப் பேசுகிறான் என்பதை சரளாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அதைக் கேட்டு மனதில் வேதனைப்படுவாள். எதுவும் கூறாமல் அவனுடைய அணைப்பில் சிக்குண்டு அவள் படுத்திருப்பாள். தூங்கிக் கொண்டிருக்கும்போதும் அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டிருப்பான். திருமணம்   முடிந்த நாட்களில் அவளுக்கு அது மிகவும் தொந்தரவான ஒரு விஷயமாக இருந்தது. உறக்கம் வரும்போது, தனியாகப் போய் படுக்க முயற்சித்தபோது,  அவன் மீண்டும் அவளை இறுகத் தன்னுடன் சேர்த்து  அணைத்துக் கொள்வான். எங்கே தன்னை விட்டு அவள் போய்விடப் போகிறாளோ என்று பயப்படுவதைப்போல் இருக்கும் அவனுடைய செயல். நாட்கள் செல்லச் செல்ல அதுவே பழகிப் போய்விட்டது.  அதற்குப் பிறகு தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு கண் விழிக்கிறபோது முதலில் அவள் பார்ப்பதே கோபியின் கை தன் இடுப்பில் இருக்கிறதா என்பதைத்தான்.

தூக்கம் வராத இரவு வேளைகளில் அவள் நாலுக்கெட்டின் இசையைக் கேட்டவாறு படுத்திருப்பாள். நாலுக்கெட்டு உயிருள்ள ஒரு வினோத உயிரைப் போல அவளுக்குத் தோன்றும். கீழே வடக்குப் பக்கம்  அம்மா படுத்திருப்பாள். அதைத் தாண்டி இருக்கும் அறையில்  தேவதைகள் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பூஜை அறையில் இருந்து சந்தனத்திரியின் மணமும்,  குத்துவிளக்கின் அணைந்த எண்ணெய்த் திரியின் வாசனையும் அவளைத் தேடி வந்து கொண்டிருக்கும். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் அங்கு இருப்பதை அவள் உணர்வாள்.

வினோத் கல்லூரியிலிருந்து விடுமுறையில் வந்தால், மாடியிலிருக்கும் தெற்குப் பக்க அறையில்தான் படுப்பான். இரவு நீண்ட நேரம் ஆன பிறகும் அவனுடைய அறையில் வெளிச்சம் இருந்து கொண்டிருக்கும்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel