நெருப்பு - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
“வினு, நான் உன்னை எதிர்பார்த்து ரொம்ப நேரம் நின்னேன். நீ வந்து என்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கலாம்ல?”
அவனுக்குக் குற்றஉணர்வு உண்டானது. அவன் வந்து கூறியிருக்கலாம்தான்.
“அக்கா, நீங்க காத்து நிற்பீங்கன்றதை நான் நினைக்கல. பரவாயில்ல.... கஞ்சி குடிக்க வாங்க.”
“வர்றேன். ஆனா ஒரு நிபந்தனை....”
“என்ன நிபந்தனை?”
“வினு, இன்னைக்குச் சாயங்காலம் நீ என்கூட பாறை இருக்கிற இடத்துக்கு வரணும்.”
“அவ்வளவுதானே?” – ஞானானந்தன் சிரித்தான்.
எமதேவனின் கோவில்
வழியில் இருந்த ஈரத்தை வெயில் மாற்றிவிட்டிருந்தது. பாறை மிகவும் சுத்தமாக இருந்தது. சிதறிக் கிடந்த காய்ந்த இலைகளைப் பெருக்கி நீக்கிவிட்டு சரளா உட்கார்ந்தாள். வரும் வழி முழுக்க சரளா பேசிக்கொண்டே வந்தாள். அவளுடைய பயங்களைப் பற்றி.... அலைக் கழித்துக்கொண்டிருக்கும் கற்பனைக் கதைகளைப் பற்றி.....
ஞானானந்தன் ‘உம்’ கொட்ட மட்டும் செய்தான். அவனுக்கு ஆச்சரியப்படும் வகையில் எதுவும் உண்டானதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது நடக்கும் என்றே அவன் கூறுகிறான்.
“நான்தான் சொல்வேனே! இந்த மலை மேலே என்னவோ அற்புதங்கள் இருக்குன்னு.... அக்கா, இந்தப் பாறைகளில் உட்கார்ந்து தியானம் செய்யிறப்போ நேரம் அப்படியே தலைகீழா மாறுற உணர்வு உண்டாகுதுன்னு நீங்க சொன்னதை நான் முழுமையாக நம்புறேன். அது என்னோட சந்தேகங்களை மேலும் பலப்படுத்துது. ஆனா, மற்றவர்கள் நம்பணும்னு அவசியம் இல்ல. அவர்கள் உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னுதான் சொல்லுவாங்க.”
ஞானானந்தன் கூறிய வார்த்தைகள் சரளாவைப் பயம்கொள்ளச் செய்தன.
“அக்கா, உங்க விஷயத்துல இதுதான் நடந்திருக்கணும். நீங்களும் தேவிகா என்ற பெயரைக் கொண்ட பெண் சந்நியாசியும் சேர்ந்து இந்த மலை உச்சிக்கு வந்த நேரம் இருக்கே! அது எந்த வருடம்னு சொன்னீங்க?”
“அறுபத்து இரண்டு....”
“அந்த நேரத்துல இந்த மலைத் தொடர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஏதோ காரணத்தால் நேரத்திற்கு ஒரு விரிசல் உண்டாயிடுச்சு. அந்த விரிசலில் அக்கா, நீங்களும் தேவிகாவும் சிக்கிக்கிட்டீங்க. இப்போ அதே சம்பவத்தின் தலைகீழ் நிகழ்வின் விளைவாக அந்த விரிசலிலிருந்து நீங்க தப்பிச்சிட்டீங்க. அக்கா, உங்களைப் பொறுத்தவரையிலே நேரத்தின் விரிசலில் சிக்கிக் கிடந்த இருபத்து இரண்டு வருடங்களுக்குக் கணக்கே இல்ல. அதாவது - அக்கா, உங்களுக்கு அப்போ என்ன வயது இருந்ததோ அதேதான் இப்பவும்.....”
“அப்படின்னா, தேவிகா?”
“அதுதான் என்னைக் குழப்புகிற ஒரு விஷயம். இரண்டு பேரும் ஒரே நேரத்துல காணாமல் போறப்போ, ஒண்ணா சேர்ந்துதானே திரும்பவும் வரணும்? எனக்கு அதைத்தான் புரிஞ்சிக்க முடியல. ஒருவேளை அவங்களும் வெளியே வந்திருக்கலாம். வேற ஒரு காலத்துல, வேற ஏதாவது நாட்டுல.... ஒருவேளை..... அவங்களோட ஆஸ்ரமத்துலயேகூட....”
“நேரத்திற்கு விரிசல் உண்டாவதற்குக் காரணம்?”
“தெரியல....” ஞானானந்தன் சொன்னான். அவன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினான்.
“ஒருவேளை இந்த மலையில் இருக்குன்னு சொல்லப்படுற யந்திரம் காரணமாக இருக்கலாம். இங்கு எமதேவனின் கோவில் இருந்தது என்று குரு சொல்லியிருக்காரு. பிரசன்னம் வச்சுப் பார்த்தப்போ கோவில் கருவறைக்கு அடியில் மிகவும் சக்தி படைத்த ஒரு யந்திரம் புதைச்சு வைக்கப்பட்டிருக்குன்னு தெரிய வந்திருக்கு. பிரதிஷ்டையின் சக்தி முழுவதையும் எடுத்துக்குறது அந்த யந்திரம்தான். சில நேரங்கள்ல யந்திரத்தின் சக்தி நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாயிடுது. அந்தச் சமயத்துல அதன் காந்த வீச்சுகளோ இல்லாட்டி நம்மால புரிஞ்சிக்க முடியாத பெரிய சக்திகளோ சுற்றியிருக்குற நேரத்தை பாதிச்சிருக்கலாம். கிராமத்தில் இருக்குற பகவதி கோவிலில் திருவிழா நெருங்குற நேரத்துல இந்த மலையில் சில அற்புதச் செயல்கள் நடப்பது உண்டு. ஓருவேளை, அந்தக் கோவிலின் சக்தியையேகூட இந்த யந்திரம் உறிஞ்சி எடுத்திருக்கலாம்.”
சரளாவிற்கு இப்போது சமாதானம் உண்டானது மாதிரி இருந்தது. ஞானானந்தன் நம்பாமல் இருக்கிறான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவன் நம்புகிறான் என்பது மட்டுமல்ல, தன்னை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு தெளிவான விளக்கத்தையும் அவன் தந்திருக்கிறான்-அது முழுமையாகத் தனக்குப் புரியாவிட்டாலும்கூட.
“அக்கா, நீங்க எந்த வருஷம் ஆஸ்ரமத்துக்கு வந்தீங்க?”
“அறுபத்து இரண்டாம் வருஷம்.”
“அறுபத்து இரண்டிலா?”
“ஆமா.”
“அக்கா, நீங்க அறுபத்து இரண்டாம் வருஷம் வந்திருந்தால், நீங்க ஆனந்தகுருவைப் பார்த்திருக்க மாட்டீங்க. வேலப்ப சுவாமிகளைத்தான் இருக்கும். ஆனந்தகுரு அறுபத்து நான்காம் வருஷம்தான் வந்தாரு. அக்கா, சுவாமிகளைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கா?”
அவளுக்கு ஞாபகத்தில் இல்லை. தேவிகாவுடன் சேர்ந்து வந்ததும் ஒரு சந்நியாசியின் முன்னால் உட்கார்ந்திருந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. எழுந்தபோது முன்னால் இருந்தது ஆனந்தகுருதான். தேவிகா மறைந்துவிட்டிருந்தாள். ஆஸ்ரமத்திற்கு வந்தவுடன் பார்த்த சந்நியாசியும் ஆனந்தகுருவும் இரண்டு வெவ்வேறு நபர்களா என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.
ஞானானந்தன் அவளுக்கு அருகில் உட்கார்ந்தான். சரளா தோளில் வைத்திருந்த தன் கையை எடுத்து அவனுடைய கைகளில் வைத்துப் பாசத்துடன் அழுத்தினாள்.
திடீரென்று சரளா கேட்டாள்:
“நான் உன் மடியில் படுக்கட்டுமா?”
ஞானானந்தன் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவன் சொன்னான்:
“நாம திரும்பிப் போவோம். குரு சில வேலைகள் எனக்குத் தந்திருக்காரு.”
“என்ன? நான் மடியில் படுக்குறது உனக்குப் பிடிக்கலையா?”
சரளா சிரித்துக்கொண்டே கேட்டாள். அவளுடைய சிரிப்பில் ஒரு காந்தத் தன்மை இருந்தது.
ஞானானந்தன் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை வலது கையால் தொட்டவாறு, குரு காதில் ஓதிய மந்திரங்களை அவன் கூறிக்கொண்டிருந்தான். அந்த மந்திரத்தில் அவனுடைய ஆன்மா கலந்துவிட்டிருந்தது. வாழ்க்கையின் சாரம் இருந்தது. சுழலில் சிக்கிக் கீழ்நோக்கித் தாழ்ந்து கொண்டிருப்பவனுக்குக் கயிறு கிடைத்ததைப் போல, அவன் அந்த ருத்ராட்ச மாலைகளை இறுகப் பிடித்துக்கொண்டான்.
சரளா பாறைமீது மல்லாந்து படுத்து ஞானானந்தனின் மடியில் தன் தலையை வைத்துக்கொண்டு அவனுடைய மார்பிலிருந்த ரோமங்களை வருடினாள். ஒரு சிறு குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்துடன் ஞானானந்தன் சரளாவைப் பார்த்தான். அவளுடைய தலை முடியை அன்புடன் தடவிக்கொண்டே அவன் சொன்னான்:
“அக்கா, நான் ஒரு சந்நியாசி. பிரம்மச்சாரி. சந்நியாச தர்மத்தை வாழ்க்கையின் ஆதாரமாக நினைப்பவன் நான். அக்கா, என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க.”
சரளா எதுவும் பேசாமல் அவனுடைய மடியில் தன் தலையை வைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.
சூரிய வெளிச்சம் இரண்டு பாறைகளுக்கு நடுவில் வந்து அவர்கள் மீது விழுந்தது.
“அக்கா, எழுந்திரிங்க. நாம போகலாம்.”
அவள் மனமே இல்லாமல் எழுந்தாள்.