நெருப்பு - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
திருவிழா
தட்டுகளைக் கையில் வைத்திருந்த இளம் பெண்கள் இரண்டு வரிசைகளாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால், விளக்குகளைப் பிடித்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால் ஆனந்தகுரு நின்றிருந்தார். வெளிச்சப்பாடு (பூசாரி) வாளுடனும் சிலம்புகளுடனும் நின்றிருந்தார்.
சரளா ஒரு கனவு நிலையில் இருந்தாள். பஞ்சவாத்தியத்தின் மனதைச் சுண்டி இழுக்கும் சத்தம், வெளிச்சப்பாடு அணிந்திருந்த அரைமணி, சிலம்பு ஆகியவற்றின் ஓசையெல்லாம் சேர்ந்து அவளைப் பித்து பிடித்த ஒரு உலகத்தில் கொண்டுபோய் விட்டிருந்தன.
மலையை விட்டு இறங்கும்போது தான் வந்து இறங்கிய இடத்தை அதேபோல பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருந்தது. ஆஸ்ரமத்தின் முன் வாசலைக்கடந்தபோதே அவளுக்கு, தான் வழி தவறி வந்துவிட்டோம் என்ற உணர்வு உண்டானது. மூன்று வாரங்களுக்கு முன்பு வந்த வழி இதுவல்ல என்பதை அவள் புரிந்துக் கொண்டாள். அவள் ஏறி வந்த வழி மிகவும் அகலம் குறைவானதாக இருந்தது. இப்போது இறங்கிக்கொண்டிருந்த வழியோ மிகவும் அகலமானதும் இடையில் ஆங்காங்கே கற்களாலான படிகளைக் கொண்டதுமாகவும் இருந்தது. அவள் காளை வண்டியிலிருந்து இறங்கியதாக நினைத்த சமதளத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷா நின்றிருந்தது. அங்கிருந்து கீழ்நோக்கிப் போன சாலை தார் போடப்பட்டு, அதிக அகலத்தைக் கொண்டதாக இருந்தது. அவள் வந்த வண்டியின் சக்கரங்கள் உருண்டது மணல் பரவியிருந்த பாதையாக இருந்தது.
இனி இதைப்பற்றி விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்பது அவளுக்குத் தெரியும். இப்போது அவளின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த விஷயம் அவளுடைய இருப்பு பற்றியதுதான். யார் என்பது அல்ல- எதற்கு என்ற கேள்வி. ஞானானந்தனைச் சீக்கிரம் பார்க்க வேண்டும்போல அவளுக்கு இருந்தது. தன்னுடைய கேள்விகளுக்கான பதில் அவனிடம் மட்டுமே இருக்கிறது என்று அவள் நம்பினாள். அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தபிறகு அவள் ஞானானந்தனைப் பார்க்கவில்லை. அவள் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய கண்கள் ஆனந்தகுருவின் கண்களைச் சந்தித்தன. நரை ஏறிய புருவத்திற்குக் கீழே முன்பு எப்போதோ பார்த்திருக்கிறோம் என்ற பரிச்சய உணர்வு அவளைத் திடீரென்று பயமுறுத்தியது. அவள் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
வெளிச்சப்பாடு ஆவேசமாகக் குதித்துக்கொண்டிருந்தார். பஞ்சவாத்தியம் முழங்கியது. ஆலமரத்திற்குக் கீழே வெடிகள் வெடித்தன.
பதில் இல்லாத கேள்வி
ஞானானந்தன் தன்னை விலக்கிவிட்டு நடக்கிறான் என்று சரளா நினைத்தாள். கூடத்தில் உணவு நேரத்திலோ, குருவின் பர்ணசாலையில் பூஜை நேரத்திலோ, சொற்பொழிவு வேளையிலோ ஞானானந்தனை அவள் கேள்விக்குறியுடன் பார்ப்பாள். அவன் சிரிப்பான். அவ்வளவுதான். சரளாவுடன் அவன் தனியாக இருக்க பயப்படுவதைப் போல இருந்தது. ஆனால் அவள் விஷயத்திலோ, அவனுடன் பேசுவதற்கு அவளிடம் நிறைய விஷயங்கள் இருந்தன.
மீண்டும் மழை பெய்தது. மழைத்துளிகள் பாறைகள்மீது விழுந்துகொண்டிருப்பதை சரளா தன் மனதில் கண்டாள். இடிச்சத்தம் அவளைப் பயமுறுத்தவில்லை. கீழே மழையால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட பாறையும் மறுபிறப்பை ஞாபகப்படுத்தும் தீர்த்தமும் அவளுக்காகக் காத்திருந்தன.
காலையில் அவள் கூடத்தில் உணவு சாப்பிடச் செல்லவில்லை. தனியாக இருக்கவேண்டும்போல இருந்தது. ஆட்கள் கூட்டத்திலிருந்து விலகித் தனியாக இருக்க அவள் ஆசைப்பட்டாள். ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் கூடத்தில் கூடியிருந்த நேரத்தில் அவள் அங்கிருந்து வெளியேறினாள். ஈரம் படிந்திருந்த பாதை வழியாக வெறும் பாதங்களுடன் அவள் நடந்தாள். காற்றில் இலைகளின், மலர்களின் மணம் கலந்திருந்தது. அந்த மணத்தை முகர்ந்தவாறு அவள் நடந்தாள்.
காய்ந்த இலைகள் எதுவும் இல்லாமல் பாறை சுத்தமாக இருந்தது. மறுபிறவியை ஞாபகப்படுத்தும் தீர்த்தம் மேலும் சற்று அதிகமாக வந்துகொண்டிருந்தது. அவள் பாறைமீது சப்பணமிட்டு அமர்ந்தாள்.
ஞானானந்தன் வருவான் என்பது அவளுக்குத் தெரியும். கூடத்தில் பார்க்கவில்லையென்றால், அவளைத் தேடி அறைக்கு வராமல் இருக்கமாட்டான். அங்கேயும் இல்லையென்றால், அவள் வேறு எங்கு இருப்பாள் என்பதை அவன் ஊகம் செய்துவிடுவான்.
இப்போது அவன் வரவில்லை என்றால்?
என்ன செய்வது என்பதை அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். அவளின் மனம் மிகவும் சாந்த நிலையில் இருந்தது. வாழ்க்கையில் எப்போதும் இருந்திராத அமைதி நிலை. அவள் கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள்- தியானத்தில் இருப்பதைப்போல.
ஞானானந்தன் அங்கு வந்தான். பாறையின்மேலே இருந்தவாறு அவன் கண்களை மூடி தியானத்தில் இருந்த சரளாவைப் பார்த்தான். அவனுடைய மனம் இளகியது. பாறைகளில் இறங்கியவாறு அவன் அழைத்தான்.
“அக்கா....”
அவள் தன் கண்களைத் திறந்தாள். அவளுடைய முகம் பிரகாசித்தது. காற்று வீசப்பட்ட கனலைப்போல அது ஜொலித்தது. உறங்கிக் கிடந்த இந்திரியங்கள் கிளர்ந்தெழுந்து ஏக்கத்தை வெளிப்படுத்தின.
“அக்கா, இங்கே என்ன செய்றீங்க?”
பாதி போரை வென்ற போராளியைப் போல அவள் சிரித்தாள்.
“நீ வருவேன்னு எனக்குத் தெரியும்.”
பாறையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஞானானந்தன் கேட்டான்:
“அக்கா, நீங்க ஏன் காலை உணவு சாப்பிட வரலை?”
சரளா சிந்தித்தாள். தான் ஏன் காலை உணவு சாப்பிடவில்லை? எதற்காக இந்த இடத்திற்கு இறங்கி வந்தோம்? எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு முன்னால் பதில் இல்லாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் சொன்னாள்:
“நான் ஏன், எதற்காக வாழ்கிறேன் என்பதைத் தெரியாமல் உணவு சாப்பிடுவது இல்லைன்னு முடிவு செய்தேன். ஒண்ணு- எனக்கு பதில் கிடைக்கணும். இல்லாட்டி இது என்னோட இறுதியா இருக்கணும்.”
ஞானானந்தனுக்கு சரளா கூறியது மிகவும் பிடித்திருந்தது. தான் யார் என்பது அல்ல- ஏன் என்ற அவளுடைய கேள்வி. சந்நியாசியாக மாறிய ஒருவரால் மட்டுமே கேட்க முடிகிற அந்தக் கேள்வியை எந்தவொரு ஆன்மிகப் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண பெண் கேட்கிறாள். அவளுடைய மனம் எதை வேண்டுமானாலும் நினைக்கட்டும். தன்னிடம் அதற்கான பதில் இல்லை என்பதை மட்டும் ஞானானந்தன் புரிந்துகொண்டான். அவன் சொன்னான்:
“அக்கா, வாங்க... உணவு சாப்பிடுங்க. இங்கே இருக்குற மற்றவங்களை மாதிரி நடக்கப் பாருங்க.”
“நான் வரல...”
ஞானானந்தன் தர்மசங்கடமாக இருந்தது. என்ன கரணத்தாலோ அந்தப் பாறை அவனுக்கு பயத்தைத் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. அங்கு நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க அவனுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. சரளாவைத் தனியாக அங்கு விட்டுவிட்டுப் போகவும் அவனுக்கு விருப்பமில்லை.
“அக்கா, வாங்க... நாம குருவிடம் பேசலாம். ஏதாவது வழி பிறக்கும்.”
“நான் வரல...”
ஞானானந்தன் எழுந்து அவளுக்கு நேராக கையை நீட்டிக்கொண்டு சொன்னான்:
“வாங்க....”