
மாலை நேரத்தில் நீலகண்டன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த சாவித்திரியை அவன் பார்த்தான்.
“மீத்தலேடத்து ராமுண்ணி ஐயா இன்னைக்கும் வந்திருந்தார்.”
“பணத்துக்காகவா?”
“பிறகு எதுக்கு அவர் இங்கே வரணும்?”
“சாகுறதுக்கு முன்னாடி எல்லா கடன்களையும் நான் கொடுத்திடுவேன்.”
அவன் வெறுப்புடன் அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்தான். அவனுடைய ஆடை வியர்வையில் நனைந்திருந்தது. அவன் அதைக் கழற்றிக் கொடியில் போட்டான்.
“நீ ஏன் அழுதுக்கிட்டு இருக்கே?”
“என் இடுப்புக்கொடி எனக்கு வேணும்.”
“இடுப்புக்கொடியைக் கட்டிக்கிட்டு நடக்குறதுக்கு நீ என்ன சின்னப்பிள்ளையா?”
“நீங்க எதை வேணும்னாலும் வித்துக்கங்க. எனக்கு என் இடுப்புக் கொடி திரும்பி வந்தாகணும்.”
“நீ எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பே போலிருக்கு!”
அவன் மேற்துண்டை எடுத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தான்.
சாவித்திரி அவனைத் தன்னுடன் படுக்க அனுமதிக்கவில்லை. மீத்தலேடத்து ராமுண்ணிக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை உடனே தரவில்லையென்றால் இந்திராவையும் பாலகோபாலனையும் அழைத்துக்கொண்டு தான் தன்னுடைய வீட்டிற்குப் போகப் போவதாக அவள் பயமுறுத்தினாள். அதன் விளைவாக நீலகண்டன் மீண்டும் ஒருநாள் மீத்தலேடத்து ராமுண்ணியைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றான். ராமுண்ணி அப்போது படுக்கையறையில் இருந்தார். கதவை உள்பக்கமாக அவர் மூடியிருந்தார். நீலகண்டன் தன்னைப் பார்ப்பதற்காக வந்திருப்பது தெரிந்து அவர் கீழே இறங்கிவந்தார்.
“என்ன நீலகண்டா? பணம் ஏதாவது வேணுமா?”
ராமுண்ணி தன்னிடம் விளையாடுகிறாரோ என்று நீலகண்டன் சந்தேகப்பட்டான்.
“தயங்க வேண்டாம். சொல்லு...”
“சாவித்திரி என்கூட சரியா பேசமாட்டேன்கிறா...”
“என்ன காரணம் நீலகண்டா?”
“அவளுக்கு அவளோட இடுப்புக்கொடி வேணுமாம்.”
அதைக் கேட்டதும் ராமுண்ணியின் முகம் என்னவோ மாதிரி ஆகிவிட்டது. நீலகண்டன் சொன்னதை எங்கே சரோஜினி கேட்டிருப்பாளோ என்று அவர் பயந்தார். நீலகண்டனைப் பார்த்தால் நிச்சயம் அவள் பயங்கர கோபத்திற்கு ஆளாவாள் என்பது மட்டும் நிச்சயம். ராமுண்ணி மெதுவாக வெளி வாசலைத் தாண்டி வெளியே வந்தார். நீலகண்டனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர் நடந்தார். வெளியே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சரோஜினியின் பார்வைபடாத இடமாகப் பார்த்து வெளிச்சுவரின் மறைவில் அவர்கள் நின்றார்கள். சுவரில் இருந்த பாசி வெயில் பட்டு கருகிப்போய் சாம்பல் நிறத்தில் ஆங்காங்கே காட்சியளித்தது.
“நீ என்கிட்ட ஏதாவது சொல்ல நினைச்சா, நான் உன் வீட்டுக்கு வந்துர்றேன். நீ இங்கே வர வேண்டாம்.”
ராமுண்ணி பேசிய முறையையும் நடந்துகொண்ட விதத்தையும் பார்த்து நீலகண்டன் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானான். மீத்தலேடத்து ராமுண்ணி, தனக்கென்று எந்த ஒரு வேலையும் இல்லாமல் தெருவில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கும் நீலகண்டனைப் பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வருவதாகச் சொல்வதா? ராமுண்ணிக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று நினைத்தவாறு அவரைப் பார்த்தான் நீலகண்டன்.
“சரி... நீ புறப்படு. சாயங்காலம் மில்லுல இருந்து திரும்பி வர்றப்போ நான் உன் வீட்டுக்கு வர்றேன். நீ என்கிட்ட என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ, அதை அந்தச் சமயத்துல சொல்லு.”
நீலகண்டன் புறப்படவில்லை. என்ன செய்வதென்பதே தெரியாமல் அவன் நின்றிருந்தான். ராமுண்ணி சட்டை பைக்குள் கையை நுழைத்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவன் கையில் தந்தார்.
“நீலகண்டா, இதை வச்சுக்கோ. போயி தேநீர் குடி...”
நீலகண்டன் போனதும் ராமுண்ணி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.
அவர் சொன்னபடி செய்தார். மில்லில் இருந்து திரும்பிவரும் வழியில் அவர் நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். மீத்தலேடத்து ராமுண்ணியை மீண்டும் தன் வீட்டு வாசலில் பார்த்து சாவித்திரி ஆச்சரியப்பட்டாள். “இதோ ராமுண்ணி ஐயா வந்திருக்காரு...” -அவள் சொன்னாள். அடுத்த நிமிடம் அவிழ்ந்துப் போயிருந்த வேஷ்டியை இடுப்பில் இறுகக் கட்டியவாறு வாசலுக்கு வந்தான் நீலகண்டன். ராமுண்ணி கையிலிருந்த குடையைத் தரையில் ஊன்றியவாறு சற்று முன்னால் வந்தார். நீலகண்டன் அமரச் சொல்வதற்கு முன்பே அவர் அங்கிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தார்.
“சொல்லு... என்ன விஷயம்னு சொல்லு...”
அவர் கேட்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஆனால் நீலகண்டன் வாயே திறக்கவில்லை. சாவித்திரி வற்புறுத்திச் சொன்னாள் என்பதற்காகத்தான் காலையில் அவன் மீத்தலேடத்து இல்லத்திற்கே சென்றான்.
“என்ன நீலகண்டா, என்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணும் இல்லியா?”
“இல்ல...”
“பிறகு எதுக்கு காலையில பொழுது புலர்ற நேரத்துலயே நீ என் வீட்டுப் பக்கம் வந்தே? மத்தவங்க முன்னாடி நின்னுக்கிட்டு இதையும் அதையும் சொல்லிக்கிட்டு இருந்தியே!”
“ராமுண்ணி ஐயா, அந்த இடுப்புக்கொடியைத் திருப்பித்தரணும்...”
“நீ அதை அடகுல்ல வச்சிருக்கே!”
“நான் சீக்கிரம் பணத்தைத் தந்திர்றேன்.”
“எனக்கு அப்படியொண்ணும் அவசரமில்ல நீலகண்டா.”
தொடர்ந்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான் நீலகண்டன். அன்று அடகு வைத்துக் கொள்ளும்படி கூறி நகையைத் தந்தபோது ராமுண்ணி அதை வாங்கிக் கொள்ள சம்மதிக்கவில்லை. தான் வற்புறுத்தி அவரிடம் அந்த இடுப்புக்கொடியை ஒப்படைத்துவிட்டு வந்ததை அவன் நினைத்துப் பார்த்தான்.
வாசல் பக்கம் ஏதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்த ராமுண்ணி வேகமாக அங்கே பார்த்தார். சாவித்திரியின் தலைமுடியையும் அவள் இடுப்பின் ஒரு பகுதியையும் வாசல் கதவின் மறைவில் அவர் பார்த்தார். அவருடைய இதயம் ‘டக்டக்’கென்று அடிக்க ஆரம்பித்தது.
“என் நீலகண்டா, அந்த இடுப்புக் கொடியை மட்டும் நீ என்கிட்ட கேட்காதே. வேற எது வேணும்னாலும் நான் உனக்குத் தர்றேன்.”
கெஞ்சுகிற குரலில் ராமுண்ணி சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னார்.
“அந்த இடுப்புக் கொடியோட எடை மூணு பவுன்தானே? நான் அஞ்சு பவுனுக்கான பணத்தை உனக்கு தர்றேன். போதுமா?”
அதைக் கேட்டு நீலகண்டனின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது. ஒருவேளை தான் தந்த இடுப்புக்கொடியை ராமுண்ணி தொலைத்து விட்டாரோ என்று அவன் நினைத்தான். அதே நேரத்தில் அப்படி நடந்திருந்தால்கூட பரவாயில்லை. வேலையென்று எதுவும் இல்லாத தன்னால் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதென்பது முடியவே முடியாத ஒன்று என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். ஐந்து பவுனுக்கான விலையைக் கூட ராமுண்ணி தனக்கு தர வேண்டியதில்லை. மூன்று பவுன் நகைக்கான விலையையும் தட்டானின் வேலைக்கான பணத்தையும் அவர் தந்தால் போதும். தான் தர வேண்டிய ஐந்நூறு ரூபாயைக் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தை அவர் தந்தாலே தனக்கு திருப்திதான் என்று அவன் நினைத்தான்.
“என்ன, உனக்கு சம்மதம்தானே?”
சம்மதம்தான் என்று நீலகண்டன் தலையை ஆட்டினான்.
“அப்படின்னா நாளைக்கு இந்த நேரம் நான் பணத்தோட இங்கே வர்றேன்.”
நீலகண்டன் மீண்டும் தலையை ஆட்டினான்.
வேஷ்டியை உயர்த்திப் பிடித்தவாறு குடையைத் தரையில் ஊன்றிக் கொண்டே படிகளில் இறங்கிச் செல்லும்போது தன்னை ஒரு வெற்றி வீரனைப்போல உணர்ந்தார் ராமுண்ணி. ஒரு நாட்டைப் பிடித்த மகிழ்ச்சி அவரிடம் குடிகொண்டிருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook