மோகத்தீ - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருக்க அவள் இடுப்புக் கொடியைப் பிரித்துப் பார்த்தாள். அவளின் கண்கள் நெருப்பென கொழுந்துவிட்டு எரிந்தன.
“உங்களுக்கு அறிவு வேலை செய்யாமல் போச்சா என்ன? யாரோ ஒருத்தி இடுப்புல கட்டி நடக்குற கொடியை மடியில வச்சுக்கிட்டா நடந்து திரியிறீங்க?”
அவர் அந்த இடுப்புக் கொடியை அவளிடமிருந்து வாங்கி கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.
“யார் அவ?”
அவளின் அந்தக் கேள்விக்கு அவர் பதிலெதுவும் சொல்லவில்லை. அவர் மீண்டும் கீழே வந்தார். கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல வெளியே அவர் நடந்தார். அவரின் நடையில்கூட முழுமையாக மாறுதல் தெரிந்தது. ஒரு கையால் வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மறு கையால் குடையைத் தரையில் ஊன்றியவாறு கம்பீரமாக நடக்கும் அவரின் பழைய நடை அல்ல அது. பார்வை சக்தி குறைந்துபோன ஒருவனைப்போல அவர் தட்டுத் தடுமாறி நடந்து போய்க் கொண்டிருந்தார். பல நேரங்களில் எதிரில் வருகின்ற ஆட்களைக்கூட அவர் கவனிப்பதில்லை. யாராவது ஏதாவது சொன்னால்கூட அவரின் காதுகளில் அந்தச் சொற்கள் விழுவதில்லை. உண்மையாகவே சொல்லப்போனால் அது பழைய மீத்தலேடத்து ராமுண்ணியே அல்ல.
6
தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் தூரத்தில் பாதை வழியாக நடந்து வரும் ராமுண்ணியைப் பார்த்தார். அங்கு அமர்ந்து கொண்டே எவ்வளவு தூரத்தில் வரக்கூடிய ஆளையும் அவரால் யாரென்று பார்க்கமுடியும். அவரின் கண்களுக்கு அந்த அளவுக்குக் கூர்மையான பார்வை சக்தி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை அவர் இளநீரைத் தன்னுடைய கண்களில் ஊற்றிக் கொள்வார். எவ்வளவோ வருடங்களாக இந்த விஷயத்தை சிறிதும் தவறாமல் அவர் செய்து வருகிறார். தொண்ணூறு வயது ஆனாலும் தன்னால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எழுத்துக்களைப் படிக்க முடிய வேண்டும். அதற்கான பார்வை சக்தி தனக்கு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் வேண்டுவார்.
நடந்து வரும் ராமுண்ணி தூரத்தில் பாதையோரமாக நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். முகத்திற்கு நேராக எதையோ உயர்த்திப் பிடித்து அதையே பார்த்தவாறு ஒரு சிலையைப் போல ராமுண்ணி நின்றிருந்தார். பாதையின் இரு பக்கங்களிலும் வயல்கள் இருந்தன. காய்ந்துகொண்டிருந்த அந்த வெயிலிலிருந்து சற்றுக் காப்பாற்றிக்கொள்ள நிழல் தருவதற்கு அங்கு ஒரு மரம்கூட இல்லை. சிறிதுநேரம் சென்றதும் ராமுண்ணி மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தார். ஆனால், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள திருப்பத்தை அடைந்தபோது அவர் மீண்டும் சிலையாக மாறினார். கண்ணுக்கு நேராக எதையோ உயர்த்திப் பிடித்தவாறு அவர் சிறிதுநேரம் எந்தவித அசைவுமில்லாமல் அப்படியே நின்றிருந்தார்.
அச்சு வாத்தியார் இப்போது தனியாகத்தான் சாயங்கால வேளைகளில் நடந்து போகிறார். ராமுண்ணி அவருடன் வருவதில்லை. காலையில் படகோட்டும் குட்டி, வாத்தியாருக்கான செய்தித் தாளைக் கொண்டுவந்து கொடுப்பான். வழக்கம்போல செய்தித் தாளுடன் மீத்தலேடத்து வீட்டிற்குச் சென்று வயலிலிருந்து வரும் காற்றை அனுபவித்தவாறு அமர்ந்து அவர் உரத்த குரலில் செய்தித்தாளை வாசிக்கும்போது ராமுண்ணி அதைக் கவனிப்பதே இல்லை. அவருடைய மனம் முழுக்க வேறெங்கோ இருக்கும். அச்சு வாத்தியாரின் கேள்விகளுக்கு ராமுண்ணி தெளிவாகப் பதில் கூறமாட்டார். வார்த்தைகளும் சொற்களும் விட்டுவிட்டு வரும். ஒரு வாக்கியத்தைக் கூட அவரால் தெளிவாகக் கூற முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார். சிலநேரங்களில் அவர் சொல்லும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருப்பதாக அச்சு வாத்தியார் உணர்ந்தார். ராமுண்ணியின் மனதில் உண்டான மாற்றம் அவருடைய உடம்பையும் பாதித்துவிட்டிருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொன் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் ஆங்காங்கே கறுமை படர்ந்து காட்சியளித்தது. தலையையும், மார்பையும் நிமிர்த்தியவாறு குடையின் முனையைத் தரையில் ஊன்றிக்கொண்டு கம்பீரமாக செல்வதற்குப் பதிலாக ஒரு கூனனைப்போல முன்பக்கமாக வளைந்து இப்போது நடந்து போய்க் கொண்டிருந்தார் ராமுண்ணி.
மீத்தலேடத்து ராமுண்ணி நடந்து அச்சு வாத்தியாரின் வீட்டின் முன்னால் வந்தார். வாசலில் அமர்ந்திருந்த வாத்தியாரை அவர் பார்க்கவில்லை. சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் கவனிக்கக்கூடிய சுய நினைவை இழந்தவராக ஆகிவிட்டிருந்த அவர் தன் நடையைத் தொடர்ந்தார். அச்சு வாத்தியார் வேகமாக வேலியைத் தாண்டி பாதையில் இறங்கி ராமுண்ணியைப் பின்தொடர்ந்தார். கணியானின் வீட்டைத் தாண்டி பஞ்சாயத்து விளக்குக்கருகில் சென்றபோது ராமுண்ணியின் கால்கள் மெதுவாக நின்றன. அவர் மடியிலிருந்த இடுப்புக்கொடியை எடுத்து முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்து அதையே பார்த்தவாறு ஒரு கற்சிலையைப் போல நின்றார். அவருக்கு மிகவும் நெருக்கமாக வந்து நின்ற அச்சுவாத்தியாரை அவர் பார்க்கவேயில்லை.
“ராமுண்ணி, கையில என்ன இருக்கு?”
அப்போதும் ராமுண்ணி சிறிதும் அசையவில்லை. அவர் அச்சு வாத்தியாரைப் பார்க்கவில்லை. அவர் கேட்டதைக் காதில் வாங்கவுமில்லை.
சிறிது நேரம் சென்றதும் இடுப்புக் கொடியை மடியில் வைத்துக் கொண்டு ராமுண்ணி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அச்சு வாத்தியார் அவரைப் பின் தொடர்ந்து செல்லவில்லை. அவர் பஞ்சாயத்து விளக்கிற்குக் கீழே நின்றவாறு வயல் வழியே இறங்கிப் போகும் ராமுண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தார். வயலைக் கடந்து வாய்க்கால் கரை வழியாக நடந்துபோனால் நீலகண்டனின் வீட்டை அடையலாம்.
ராமுண்ணி குழந்தைப் பருவத்திலிருந்தே அச்சு வாத்தியாரின் மிகவும் நெருங்கிய நண்பர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படித்து வளர்ந்தார்கள். அவர்களுக்கிடையில் எந்தவொரு ரகசியமும் இதுவரை இருந்ததில்லை. ஒரே வயதைக் கொண்டவர்களென்றாலும் அச்சு வாத்தியாருக்கு கூடுதலான மனப்பக்குவமும் உலக அனுபவமும் இருந்தன. அதனால் எல்லா விஷயங்களிலும் ராமுண்ணி பொதுவாகவே அச்சு வாத்தியாரின் அறிவுரைகளை நாடுவது உண்டு. ராமுண்ணியின் நடத்தையில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டபோது ஊர்க்காரர்கள் ஆரம்பத்தில் தேடிச் சென்றது அச்சு வாத்தியாரைத்தான். ராமுண்ணி ஏதோ ஒரு பெரிய ஆபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் விளக்கு மரத்திற்குக் கீழே நின்றிருந்த அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்ன செய்தாவது ராமுண்ணியை இந்த ஆபத்திலிருந்து கட்டாயம் தான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அது தன்னுடைய தலையாய கடமை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
அச்சு வாத்தியார் வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு நேராக நடந்து வலது பக்கம் திரும்பி வயலில் இறங்கினார். அவர் வாய்க்கால் கரையை அடைந்தபோது சற்று தூரத்தில் வளர்ந்து நின்றிருந்த புல்லுக்குள் ராமுண்ணி மறைவதைப் பார்த்தார்.