மோகத்தீ - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
“இந்தாங்க வாத்தியாரே, நீங்க தந்த பணம்...”
அவர் பணத்தை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்தார். சாவித்திரிக்கு எதுவுமே புரியவில்லை... அச்சு வாத்தியார் எதற்காகப் பணத்துடன் வரவேண்டும்? அவருக்கு எதற்குத் தன்னுடைய இடுப்புக்கொடி? மீத்தலேடத்து ராமுண்ணி பலதடவை படிகளில் ஏறி இங்கு வந்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவருடைய தலைக்குள் குழப்பம் உண்டானதே. ஒருமுறை கூட இந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத அச்சு வாத்தியார் இதோ இந்த வீட்டைத்தேடி வந்திருக்கிறார். ராமுண்ணியைப்போல அச்சு வாத்தியாருக்கும் தலைக்குள் ஏதாவது நடக்குமோ? சாவித்திரி இப்படிப் பல விஷயங்களையும் எண்ணியவாறு அவரையே உற்றுப் பார்த்தாள்.
“சாவித்திரி...”
எங்கோ தூரத்திலிருந்து ஒலிப்பது மாதிரி இருந்தது அச்சு வாத்தியாரின் குரல்.
“மீத்தலேடத்து ராமுண்ணி இந்த ஊரிலேயே பேர் வாங்கின ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னோட அந்தஸ்து குறைகிற அளவுக்கு ராமுண்ணி இதுக்கு முன்னாடி எப்பவும் நடந்தது இல்ல. ஆனா, இப்போ ராமுண்ணியோட நிலைமையைப் பார்த்தியா? சரியா சாப்பிடுறது இல்ல... தூங்குறது இல்ல... குளிக்கிறது இல்ல... ஆடை உடுக்குறது இல்ல... ஓரு பைத்தியம் பிடிச்ச மனுசனைப் போல அவர் நடந்து திரியிறாரு. ரெண்டு நாட்களுக்கு முன்னாடி ராமுண்ணியை கள்ளுக்கடையில பார்த்தேன். தோட்டிங்ககூட உட்கார்ந்து அவர் கள்ளு குடிச்சிக்கிட்டு இருக்காரு”
அதைக் கேட்டு சாவித்திரியின் முகம் மங்கலானது.
“சரி... இந்த விஷயங்களை என்கிட்ட ஏன் நீங்க சொல்றீங்க?”
“உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட இதைச் சொல்ல முடியும்? எல்லாத்துக்கும் காரணக்காரியே நீதானே? நீயும் உன்னோட இடுப்புக்கொடியும்தான் எல்லாத்துக்கும் காரணம்...”
அதைக் கேட்டு சாவித்திரி ஒன்றும் புரியாமல் விழித்தாள். மீத்தலேடத்து ராமுண்ணியிடம் ஏதோ சில பிரச்சினைகள் உண்டாகி விட்டிருக்கின்றன என்பதை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். நீலகண்டனே அவளிடம் அதைக் கூறியிருந்தான். ஆனால், ராமுண்ணியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்றால்...?
“உன்னோட இடுப்புக்கொடி ராமுண்ணியோட மடியில இருக்குற காலம் வரைக்கும் அவருக்கு விமோசனமே இல்ல... சாவித்திரி, நான் உன் காலைப் பிடிச்சு கேட்டுக்குறேன். நீ போயி அந்த இடுப்புக் கொடியைத் திருப்பி வாங்கிட்டு வா...”
அப்போதும் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அதனால் அவளுக்கு எல்லா விஷயங்களையும் அச்சு வாத்தியார் விளக்கிக் கூற வேண்டிய நிலை உண்டானது. எல்லாவற்றையும் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் சாவித்திரி.
7
தூரத்தில் எங்கோ மழை பெய்து வாய்க்காலில் நீர் சிவப்பாக வந்து கொண்டிருந்தது. கலங்கிப்போய் காணப்பட்ட நீரிலிருந்த விறால் மீன்கள் சாவித்திரியின் கால் பாதங்களில் மோதி விளையாடிக் கொண்டிருந்தன. அவள் நீருக்குள் மூழ்கி எழும்போது உண்டான சிறிய நீர் வளையங்கள் ஓரத்தில் வளர்ந்திருக்கும் புற்களின் மீது மோதி மறைந்துகொண்டிருந்தன. ஆளுயுரத்திற்கு வளர்ந்திருக்கும் புற்களுக்கு மத்தியில் இரண்டு பட்டாம்பூச்சிகள் விளையாடிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் வாய்க்காலுக்குள் இறங்கும்போதே அந்த இரண்டு பட்டாம்பூச்சிகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மீண்டும் நீருக்குள் மூழ்கி எழுந்து நீரைக் கிழித்துக்கொண்டு நடந்தாள். சாவித்திரிக்கு நன்றாக நீந்தத் தெரியும். அவள் சிறுமியாக இருந்தபோது அவளுடைய தந்தைதான் கோவில் குளத்தில் இறக்கிவிட்டு அவளுக்கு நீச்சல் கற்றுத்தந்தான். நீரில் நீண்டு கிடக்கும் முடிகள் அடர்ந்த தன் தந்தையின் தடிமனான கைகளில் குப்புறப் படுத்தவாறு கைகளால் நீரைத் துழாவியும் கால்களால் உதைத்தும் அவள் நீந்தக் கற்றுக்கொண்டாள். குளத்தில் பெண்கள் குளிப்பதற்கென்று தனியாக இடம் இருக்கிறது. அவள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்தது. குளித்து முடித்து வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பார்த்தால் அவளுடைய இடுப்பில் இருந்த கொடியைக் காணோம். அவ்வளவுதான்- அவளுடைய தாய் அழுதுகொண்டே குளிக்கும் இடத்தை நோக்கி ஓடினாள். வழியில் ஒரு இடத்திலும் இடுப்புக்கொடி இல்லை. அழுதவாறே அவளின் தாய் மீண்டும் வந்தாள். அவளுடைய தந்தை உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தபோது விஷயத்தைத் தெரிந்துகொண்டு அந்த நிமிடமே அவன் குளத்தை நோக்கி நடந்தான். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மூலையாகப் போய் ஒளிந்து கொண்டனர். அவர்கள் மறைந்து பார்த்துக் கொண்டிருக்க, சாவித்திரியின் தந்தை வெயில் விழுந்து கொண்டிருந்த நீருக்குள் குதித்து அடுத்த நிமிடம் காணாமல் போனான். நிமிடங்கள் பல கடந்தும் அவளின் தந்தை வெளியே வரவில்லை. ஒளிந்திருந்த பெண்களின் இதயங்கள் வேகமாக அடிக்கத் தொடங்கின. சாவித்திரி பயந்துபோய்விட்டாள். எல்லோரும் ஒருவித பதைபதைப்புடன், பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அதோ... கையில் தங்க இடுப்புக் கொடியுடன் சாவித்திரியின் தந்தை நீருக்கு மேலே தலையை உயர்த்திக் கொண்டிருந்தான்.
அவள் தன் கையை நீட்டி தங்கத்தால் ஆன இடுப்புக்கொடியை வாங்கி தன்னுடைய அழகான இடுப்பில் கட்டிக் கொண்டாள்.
‘இனி ஒருமுறைகூட நான் இடுப்புக்கொடியைக் கழற்ற மாட்டேன். ஒருமுறைகூட...’
அவள் கண்ணீர் மல்க தனக்குத்தானே கூறினாள்.
சாவித்திரி வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபோது இடுப்புக்கொடி அவளின் இடையை இறுக்கியது. அங்கு நிரந்தரமாக தடங்கள் விழ ஆரம்பித்தன. எனினும், அவள் அதைக் கழற்றி வைக்கவில்லை. இடுப்பு மேலும் பெரிதானபோது ஒருநாள் இடுப்புக்கொடி அறுந்துவிட்டது. பாவாடைக்கு அடியில் கால்களில் உரசியவாறு அது கீழே விழுந்தது. அறுந்து கீழே விழுந்த இடுப்புக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அவள் அதைப் பார்த்தவாறு தேம்பித் தேம்பி அழுதாள்.
“அய்யோ... எதுக்கு சாவித்திரி நீ அழுறே?”
அவளுடைய தாய் சொன்னாள். “தட்டான்கிட்ட கொடுத்து நாம அதைச் சரி பண்ணிடலாமே?”
அவளின் தாய் தன் மகளின் தலையைத் தடவியவாறு அவளைத் தேற்றினாள்.
தன் கணவன் வந்தபோது இடுப்புக்கொடி அறுந்து கீழே விழுந்த விஷயத்தை சாவித்திரியின் தாய் சொன்னாள்.
“பரவாயில்ல... தட்டானை சாயங்காலம் இங்கே வரச் சொல்றேன்...”
சாயங்காலம் தட்டான் வந்து இடுப்புக்கொடியை வாங்கிக் கொண்டு போனான். கூடுதலாக முக்கால் பவுன் சேர்த்து அவன் இடுப்புக் கொடியைப் புதிதாகச் செய்தான். முழுமையாக அதைச் செய்து முடிக்க நான்கு நாட்கள் ஆனது. இடுப்பில் கொடி இல்லாமல் நடந்த அந்த நான்கு நாட்களும் சாவித்திரி யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எங்கோ எதையோ மறந்து வைத்துவிட்டு வந்ததைப் போல... எதையோ இழந்ததைப் போல...
“இனிமேல் யானையே பிடிச்சு இழுத்தாலும், இந்தக் கொடி அறுந்து போகாது” - தட்டான் இடுப்புக் கொடியை சாவித்திரியிடம் தந்தான். “போயி இடுப்புல கட்டிக்கோ.”