
தலைகுனிந்து நின்ற சாவித்திரியின் கன்னங்களில் இருந்த பிரகாசம் அடுத்த நிமிடம் காணாமல் போனது. தன்னுடைய மடியில் இருக்கும் நகை அவள் இடுப்பில் கட்டி நடக்கின்ற கொடி என்பதை அவர் புரிந்துகொண்டார்.
"உன் இடுப்புக் கொடியை அவன் கொண்டுபோய் அடமானம் வச்சிட்டான் அப்படித்தானே?"
அதைக்கேட்டு அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது. அவளை அவளுடைய தந்தை நீலகண்டனுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைக்கும்போது அவர் பதினைந்து பவுன் நகை போட்டிருந்தார். எல்லாவற்றையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டான்.
“எதுவுமே இல்லைன்னா ஒரு நாலு கண்ணாடி வளையல்களையாவது கையில போட்டிருக்கக் கூடாதா, சாவித்திரி?”
நகை எதுவும் இல்லாமல் இருக்கும் தன்னுடைய வெண்ணிறக் கையை வாசல் படியின் மீது வைத்து நின்றுகொண்டிருந்த சாவித்திரியிடமிருந்து மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது.
தூரத்தில் வயலிலிருந்து வாய்க்காலுக்கு வந்து சேரும் நீரில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்த நீலகண்டன் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தான்.
“நான் புறப்படுறேன். மில்லுக்குப் போகணும். பஞ்சாயத்து அலுவலகத்திலயும் கொஞ்சம் வேலை இருக்கு. நீலகண்டன் வந்த பிறகு மீத்தலேடத்து ராமுண்ணி வந்துட்டு போனதாகச் சொல்லு...”
“இந்திராவோட அப்பா இப்போ வந்திடுவாரு...”
மீத்தலேடத்து ராமுண்ணி நீலகண்டனைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தால் வீட்டுப் பக்கம் வரச்சொன்னால் போதாதா? இவ்வளவு தூரம் நடந்து இங்கு வரவேண்டுமா என்ன? ஏதோ ஒரு முக்கிய விஷயம் காரணமாகத்தான் அவர் தங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறார் என்பதை சாவித்திரியால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து அவளிடமிருந்த பதைபதைப்பு மேலும் அதிகமானது.
நீலகண்டன் ஒரு எருமை மாட்டைப் போல வாய்க்காலில் பாதி அளவில் மூழ்கி குளித்துக் கொண்டிருப்பதை வீட்டு வாசலில் நின்றிருந்த சாவித்திரி பார்த்தாள். ராமுண்ணி இடது கையால் வேஷ்டியைத் தூக்கி பிடித்தார். அவர் உடனே புறப்படுகிறார் என்று அதற்கு அர்த்தம். சாவித்திரி என்ன செய்வதென்ற தவிப்புடன் ஒரு ஓரத்தில் ஒடுங்கி நின்றிருந்தாள். அவரை அவளால் தடுக்க முடியவில்லை. எதற்காக அவர் அங்கு வந்தார் என்பதையும் அவளால் விசாரிக்க முடியவில்லை. சாவித்திரி ஒருவித தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
நகை பத்திரமாக மடியில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர் வேஷ்டியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு குடையை தரையில் ஊன்றியவாறு நடக்கத் தொடங்கினார். மாளிகைக்குப் போகும் வழியில் அச்சு வாத்தியாரின் வீட்டைத் தேடி அவர் சென்றார். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறையாவது அச்சு வாத்தியாரைப் பார்த்து பேசவில்லையென்றால் ராமுண்ணிக்கு எதையோ இழந்ததைப் போல் இருக்கும். செந்தென்னை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட இளநீரைக் குடித்துவிட்டு மாளிகையை அவர் அடைந்தபோது, அங்கு வாசலில் நின்றிருந்தான் நீலகண்டன்.
“யார்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியனுப்பி இருந்தா நான் இங்கே வந்திருப்பேன்ல”.
நீலகண்டன் ஒருவித குற்றவுணர்வுடன் சொன்னான்-
“பரவாயில்ல... அச்சு வாத்தியாரோட வீட்டுக்குப் போற வழியில உன் வீட்டுப் பக்கம் நான் வந்தேன். விசேஷம் ஒண்ணும் இல்ல...”
அச்சு வாத்தியாரின் வீட்டைத் தாண்டித்தான் நீலகண்டனின் வீட்டிற்கே போக முடியும் என்ற உண்மையை ராமுண்ணி மறந்துவிட்டாரா?
“நீலகண்டன், நீ புறப்படு. பணம் விஷயம் அப்படியொண்ணும் அவசரம் இல்ல. எப்போ முடியுமோ அப்ப கொடு”.
நீலகண்டனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வாய்க்காலில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்த தன்னை அழைத்து மாளிகைக்கு உடனே போகும்படி சொன்ன சாவித்திரிமீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.
“ஒரு அவசரமும் இல்ல...”
மீத்தலேடத்து ராமுண்ணி மீண்டும் சொன்னார்.
மாடியிலிருக்கும் படுக்கையறையில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால் அவர் ஜன்னலின் அருகில் சென்று பொட்டலத்தைத் திறந்து பார்த்தார். அவரின் தடிமனான கை விரல்கள் இடுப்புக் கொடியை மெதுவாக வருடின. தங்கத்தின் குளிர்ச்சியை உணர்ந்தவாறு சிறிது நேரம் அவர் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். நீலகண்டனை ஆள் அனுப்பி வரவழைக்க வேண்டும். நகையைத் திருப்பி அவன் கையில் தரவேண்டும். அந்த இடுப்புக்கொடி தன்னுடைய பணப்பெட்டியில் இருக்கக் கூடியதல்ல. அது சாவித்திரியின் இடுப்பிலேயே இருக்கட்டும்.
படியில் சரோஜினியின் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் அவர் படு வேகமாகப் பொட்டலத்தை மடியில் வைத்துக்கொண்டு ஜன்னல் திண்டின் மீது கிடந்த விசிறியை எடுத்து வீசியவாறு வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
“எதற்கு இந்த உஷ்ணத்துல மாடியில வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?”
சரோஜினி அருகில் வந்து அன்பு மேலோங்க தன்னுடைய கணவரின் தோளில் கையை வைத்தாள்.
“எதற்கு அந்த நீலகண்டன் இன்னொரு தடவை வீட்டுக்கு வந்தான்? அவனுக்கு கொடுத்த பணத்துக்கு கணக்கு வச்சிருக்கீங்களா? இனிமேல் அவனுக்கு ஒரு பைசாகூட தரக்கூடாது...”
அவள் தன் கணவனைப் பார்த்து கடுமையான குரலில் சொன்னாள். தன்னைத் தேடிவந்து யார் எதைக்கேட்டாலும் அவர் கொடுத்து விடுவார். இருப்பதையெல்லாம் அவர் கண்டவர்களுக்கெல்லாம் இப்படி வாரிக் கொடுத்துவிட்டால் கையிலிருக்கும் இருப்பு நாளடைவில் குறைந்து போகுமல்லவா? குடும்பத்தின் சொத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.
“என் சரோஜினி, நாம ஒண்ணு கொடுத்தா தெய்வம் நமக்கு ரெண்டா திருப்பித் தரும்ன்ற விஷயம் உனக்கு தெரியாதா?”
மீத்தலேடத்து குடும்பத்தில் ராமுண்ணியைப் போல இளகிய மனம் படைத்த ஒரு ஆண் பிறந்ததே இல்லை. அச்சு வாத்தியாரின் வாயில் இருக்கும் போலிப் பல்கூட ராமுண்ணி கொடுத்த பணத்தில் வாங்கியதுதான். ஏழு பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கும் வாத்தியாருக்கு எப்போதும் வாழ்க்கையில் வறுமைதான். ஆனால், மதிப்பு- மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் நீலகண்டனைப் போல பார்ப்பவர்களிடமெல்லாம் கடன் வாங்குவதில்லை. ராமுண்ணி தன்னுடைய நண்பருக்கு அவ்வப்போது ஏதாவது தந்து உதவியிருக்கிறாரென்றால், அது நிச்சயம் அச்சு வாத்தியார் கேட்டு நடந்ததல்ல. புரிந்துகொண்டு ராமுண்ணி கொடுத்துக் கொண்டிருப்பவையே அவை. அச்சு வாத்தியாரைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு கரை காண முடியாத கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் பிறந்த நான்கு பெண்களில் மூத்தவளை மட்டுமே திருமணம் செய்து வைத்து அவர் அனுப்பியிருக்கிறார். சாயங்காலம் பெட்டிப்பாலத்தின் மீது அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது ராமுண்ணி கூறுவார். “அச்சு, நான் உயிரோடு இருக்குறவரை நீ எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். அதையும் இதையும் நினைச்சு தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்க வேண்டாம். மூணு இல்ல; முப்பது பெண்களைத் திருமணம் செய்து அனுப்பி வைக்கிற அளவுக்கு வசதி கடவுள் அருளால் மீத்தலேடத்து குடும்பத்துக்கு இப்பவும் உண்டு.”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook