மோகத்தீ - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
அதற்குப் பிறகு எதற்குத் தேவையில்லாமல் அச்சு வாத்தியார் அதையும் இதையும் நினைத்து தன்னுடைய தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும்?
ராமுண்ணியும் அவர் மனைவியும் மரப்படிகளில் இறங்கி கீழே வந்தார்கள். அவருக்கு வெளியே நடந்துபோக நேரமாகிவிட்டது. அச்சு வாத்தியார் பெட்டிப்பாலத்தின் மீது அமர்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம். உண்மையிலேயே அவர் அங்கு ராமுண்ணிக்காகக் காத்துக் கொண்டுதானிருந்தார்.
“நீலகண்டனோட நகையைத் திருப்பித் தந்தாச்சா?” அச்சு வாத்தியார் கேட்டார்.
சிறிது தயங்கியவாறு ராமுண்ணி சொன்னார்.
“தந்தாச்சு...”
நாற்பது வருட நட்புக்கிடையில் முதல் தடவையாக ராமுண்ணி அச்சு வாத்தியாரிடம் பொய் சொன்னார்.
“என் ராமுண்ணி, நீ சுத்தமான மனசைக் கொண்டவன். நீலகண்டனுக்கு நீ கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்னு நினைக்கிறியா? உன் பணம் கையைவிட்டுப் போச்சுன்னு வச்சுக்கோ...”
“பரவாயில்ல... யார் யாருக்கோ நான் எவ்வளவு பணம் கொடுத்திருக்கேன்.”
“அதுனாலதான் சொல்றேன்.... நீ ஒரு பரிசுத்தமான இதயத்தைக் கொண்டவன்னு...”
சொல்லிவிட்டு அச்சு வாத்தியார் போலிப் பல்லைக் காட்டி சிரித்தார். உமிக்கரியால் நன்றாகத் தேய்க்கும் அவருடைய பற்களுக்கு இந்த வயதிலும் நல்ல பிரகாசம் இருந்தது. மங்கலான போலிப் பல் மற்ற பற்களிலிருந்து மாறுபட்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. புழு விழுந்ததால் அவரின் அந்தப் பல் கீழே விழவில்லை. கால் தடுக்கி வாசலில் தலைக்குப்புற விழுந்ததன் விளைவாகத்தான் அவருடைய அந்த முன்வரிசைப் பற்களில் ஒன்று கீழே விழுந்துவிட்டது.
ஏழரை மணிக்குச் செல்லும் லோக்கல் வண்டி பாலத்திற்கு மேலே கடந்து போனதும் அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் வீடுகளை நோக்கி திரும்பி நடந்தார்கள்.
வீட்டை அடைந்தவுடன் இளம் வெப்பத்திலிருந்த நீரால் கை, கால்களையும் முகத்தையும் கழுவி சுத்தமாக்கிய பிறகு ராமுண்ணி நேராக மாடிக்குச் சென்றார். மில்லில் வேலை பார்க்கும் இரண்டு பணியாளர்களும் தேங்காய் வியாபாரம் செய்யும் சாப்பன் நாயரும் வெளியே அவருக்காகக் காத்து நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்க்காதது மாதிரி ராமுண்ணி படுக்கையறையை நோக்கிச் சென்றார். மீத்தலேடத்து ராமுண்ணிக்கு இன்று என்ன ஆகி விட்டது என்று சாப்பன் நாயர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தேங்காய்கள் பற்றிய கணக்கையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார் அவர். சிறிதுநேரம் வாசலில் காத்து நின்றிருந்த அவர் திரும்பிப் போனார். ராமுண்ணிக்கு கணக்கும் பணமும் இப்போது தேவைப்படாமல் இருக்கலாம். அதைவிட மிகவும் முக்கியமான வேலை அவருக்கு இருக்கலாம். மீத்தலேடத்து ராமுண்ணிக்குப் பணம் வாங்குவதற்கு நேரமில்லையென்றால் தட்டும்புறத்து சாப்பன் நாயருக்கு பணம் கொடுப்பதற்கு நேரமில்லை என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், சாப்பன் நாயர் போனதைப்போல மில்லில் வேலை பார்க்கும் பணியாட்கள் போகவில்லை. அவர்கள் கூலி வாங்குவதற்காக வந்தவர்கள். ‘கள்ளுக் கடையை இந்நேரம் அடைத்திருப்பார்களே. அட கடவுளே!’ என்ற ஒரே சிந்தனைதான் அவர்களின் மனதை ஆக்கிரமித்திருந்தது. நின்று நின்று கால் வலித்தவுடன், அவர்கள் வாசலில் உட்கார்ந்தார்கள். ராமன் என்பதும் பொக்கன் என்பதும் அவர்களின் பெயர்கள். ராமன் உயரமானவனாகவும் பொக்கன் குள்ளமானவனாகவும் இருந்தார்கள்.
படிகளின் மேற்பகுதியில் நின்றுகொண்டு சரோஜினி மேலே பார்த்தவாறு சொன்னாள்.
“அந்த ராமனும், பொக்கனும் எவ்வளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்காங்க. அவங்களுக்குத் தர வேண்டியதைத் தந்து அனுப்பி வைக்கக் கூடாதா?”
தன் மனைவியின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமுண்ணி வேகமாக இடுப்புக் கொடியை மடியில் மறைத்து வைத்தார். கனவில் நடக்கும் ஒரு மனிதனைப்போல அவர் கீழே இறங்கி வந்தார். ராமனுக்கும் பொக்கனுக்கும் தரவேண்டிய கூலியைத் தந்தார். அவர்கள் இருவரும் கள்ளுக் கடையை நோக்கி நடந்தார்கள்.
“மேலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அந்த சாப்பன் நாயர் உங்களுக்காகக் காத்து நின்று முடியாம திரும்பியே போயிட்டாரு...”
“போகட்டும்...”
மீத்தலேடத்து ராமுண்ணி யாரிடம் சொல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சுரத்து இல்லாத குரலில் சொன்னார். அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை.
“என் கடவுளே, இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?”
சரோஜினி தன் கணவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தாள். அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள். மது அருந்தும் பழக்கம் தன் கணவருக்கு இல்லை என்பதை அவள் நன்கு அறிவாள். எனினும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர் அவரின் வாயை முகர்ந்து பார்த்தாள். பாக்கு மணம்தான் அவரின் வாயிலிருந்து வந்தது.
“உடம்புக்கு முடியலைன்னா, கஞ்சி குடிச்சிட்டு சீக்கிரம் போய்படுங்க...”
யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு சரோஜினி தன் கணவரின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டு அதை மெதுவாகத் தடவினாள். அப்படி அவள் தடவியது அவரிடம் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, மேலும் அவரை சோர்வு கொள்ள வைத்தது.
ராமுண்ணி வேகமாக கஞ்சியைக் குடித்தார். தொடர்ந்து அதே வேகத்தில் மாடியிலிருக்கும் படுக்கையறையை நோக்கிச் சென்றார். யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுவர் கதவுகளை அடைத்து தாழ் போட்டார்.
அதற்குப் பிறகு சாவித்திரியின் இடுப்புக் கொடியை எப்போது பார்த்தாலும் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டே அவர் நடந்து திரிந்தார். மில்லுக்குப் போகும் வழியில் சுற்றிலும் ஆட்கள் யாரும் இல்லை என்றால் அவர் அந்த இடுப்புக் கொடியை மடியிலிருந்து எடுத்துப் பார்ப்பார். சில நேரங்களில் அதை ஆசையுடன் தடவவோ, வருடவோ செய்வார். வீட்டிலிருக்கும்பொழுது அடிக்கொருதரம் அவர் மாடியிலிருக்கும் படுக்கையறையை நோக்கிப் போவதைப் பார்க்கலாம். ஒரு நாள் அவரின் மனைவி அவரைப் பின்தொடர்ந்து மேலே சென்றாள். அவருக்கு மனைவி வருவது தெரியவில்லை. அறையை அடைந்தவுடன் அவர் இடுப்புக்கொடியை வெளியே எடுத்து அதையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். வாசலில் இருந்த பலகைமீது பட்ட காலடிச் சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அவருக்கு சரோஜினி அங்கு வந்து நின்றிருக்கிறாள் என்பதே தெரியவந்தது. ஒரு புலியின் பாய்ச்சலுடன் அவர் இடுப்புக்கொடியை மடிக்குள் மறைத்து வைத்தார்.
“தனியா இங்கே என்ன செய்றீங்க?”
மனைவி அருகில் வந்து நின்றாள். கடவுளின் கருணை என்றுதான் சொல்ல வேண்டும். இடுப்புக்கொடி அவள் கண்களில் படவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.
நீலகண்டன் அடமானம் வைத்தது சாவித்திரியின் இடுப்புக்கொடி என்ற விஷயம் சரோஜினிக்குத் தெரியாது. மூன்று பவுன் எடையுள்ள நகையை அவன் அடமானமாகத் தந்திருக்கிறான் என்பதை மட்டுமே அவள் அறிவாள்.