மோகத்தீ - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
தினமும் காலையில் உடம்பில் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு அவர் வாசலிலும் நிலத்திலும் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பார். எண்ணெய் மில் உரிமையாளரான அவருக்கு எண்ணெய்க்கு பஞ்சமா என்ன? தூளாக்கப்பட்ட சிறு பயறின் பருப்பை உடம்பில் நன்றாகத் தேய்த்துவிட்டு எண்ணெய் பசை சிறிதுகூட இல்லாமல் நீக்க வேண்டிய பொறுப்பு சரோஜினியைச் சேர்ந்தது. மனைவியின் மோதிரங்கள் அணிந்த கை விரல்கள் தன்னுடைய கையிடுக்குகளில் படும்போது ராமுண்ணிக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். அவர் மனைவியைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரிப்பார். அந்த அபூர்வமான சிரிப்பைப் பார்ப்பதற்காகவே சரோஜினி மீண்டும் மீண்டும் தன் கணவருக்கு கிச்சுக் கிச்சு மூட்டுவாள். அவளும் தன் கணவரின் சிரிப்பில் சேர்ந்துகொண்டு சிரிப்பாள். குளியலறைக்குள் புகுந்துகொண்டு இப்படி கணவனும் மனைவியும் விடாமல் சிரித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரர்கள் விழிப்பார்கள்.
“ராமுண்ணி ஐயா, எங்கே போறீங்க?”
“அதோ அந்த நீலகண்டனோட வீடுவரை போயிட்டு வரணும்”
மீத்தலேடத்து ராமுண்ணி இடது கையால் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிப் பிடித்துக்கொண்டு வலது கையில் பற்றியிருந்த குடையை நிலத்தில் ஊன்றியவாறு நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். குடை பிடித்த கையை உயர்த்தி எதிரில் வந்து கொண்டிருந்த ஊர்க்காரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டபடி நடந்தார்.
அவர் இப்போது நடந்துசெல்லும் தெரு முன்பு ஒரு ஒற்றையடிப் பாதையாக இருந்தது. இரண்டுபேர் ஒன்றாகச் சேர்ந்து நடந்து போகமுடியாத அளவிற்கு மிகவும் குறுகலாக இருக்கும். அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்லும்போது ராமன் செட்டியாரின் கூர்மையான கொம்புகளைக் கொண்ட பருத்த பசு எதிரில் வந்தால் தான் என்ன செய்வது என்பதை நினைத்துப் பார்த்து சிறுவனான ராமுண்ணி பயந்த நிமிடங்கள் எவ்வளவோ. சில இரவுகளில் அந்த எண்ணம் கெட்ட கனவுகளாக மாறி ராமுண்ணியின் தூக்கத்தை முழுமையாகக் கெடுத்ததும் உண்டு. ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் ஆறாம் வகுப்பில் படிக்கும்போதுதான் அந்த ஒற்றையடிப் பாதை சற்று அகலமாக மாறியது. செட்டியாரின் பருமனான பசுவும் அதை மேய்க்கும் கிட்டனும் எந்தவித பிரச்சினையுமில்லாமல் அந்தப் பாதையில் தாராளமாக நடந்துபோகலாம் என்ற நிலை உண்டானது. இருந்தாலும் ராமுண்ணி பழைய கெட்ட கனவுகளை இரவு நேரங்களில் காண்பது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. செட்டியாருடைய பசுவின் இடத்தை திருவிழாவிற்கு வரும் ஆண் யானை பிடித்துக் கொண்டது என்பது மட்டுமே வித்தியாசம். ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோது அந்தப் பாதைக்கு மீண்டும் அகலம் கூடியது. அது தெருவாக மாறியது அப்போதுதான். இப்போது திருவிழாவிற்கு வரக்கூடிய யானைகளும் யானைப் பாகர்களும் திருவிழாவைப் பார்க்கவரும் குழந்தைகளும் எந்தவித பயமுமில்லாமல் அந்தத் தெரு வழியே நடந்து போகிறார்கள்.
அதோ... அங்கு தெரிவதுதான் நீலகண்டனின் வீடு. குளித்து முடித்து வாசலில் வந்து நின்று தலைமுடியை வாரிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்தான் நீலகண்டனின் மனைவி சாவித்திரி. கன்னங்கரேல் என்று இருக்கும் நீலகண்டனுக்கு இப்படியொரு சிவந்த நிற உடம்பைக் கொண்ட பெண் எப்படி மனைவியாக வந்து வாய்த்தாள் என்று பொதுவாக ஊரைச் சேர்ந்த எல்லாருமே ஆச்சரியப்படுவார்கள். மீத்தலேடத்து ராமுண்ணியின் மனைவி சரோஜினிக்கு சாவித்திரியின் நிறத்தில் பாதிகூட இல்லை என்பதே உண்மை. நீலகண்டன் கிணற்றின் கரையில் உட்கார்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தான். அவன் தொண்டைக்குள் கைவிரல்களை நுழைத்து உரத்துத் துப்பும் சத்தத்தை இங்கு வயல் வரப்புவரை நாம் கேட்கலாம். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். சாணம் மெழுகிய தரையில் அமர்ந்து ஸ்லேட்டில் எழுத்துக்கள் எழுதிப் படித்துக் கொண்டிருக்கும் இந்திராதான் இளையவள். மூத்தவன் பாலகோபாலன்.
நகையை சாவித்திரியின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். நகையை அடமானம் வாங்கி பணம் கடனாகத் தருவதென்பது மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற ஒரு செயல் அல்ல என்று அவளிடம் சொல்ல வேண்டும். ராமுண்ணி வயல் வரப்பு வழியே நடந்தார். அவ்வப்போது அவரின் டயர் செருப்புகள் மழை நீரில் நனைந்தன. வரப்பை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்துவரும் ராமுண்ணியை சாவித்திரி பார்க்கவில்லை. கிணற்றின் கரையில் அமர்ந்தவாறு பல் தேய்த்துக்கொண்டிருந்த நீலகண்டன் அதோ... இறங்கிப் போகிறான். அவன் அருகில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காகப் போயிருக்க வேண்டும். ராமுண்ணி மடியைத் தொட்டுப் பார்த்தார். பொட்டலம் பத்திரமாக இருந்தது. அப்போது அவருடைய மனதில் திடீரென்று ஒரு ஆர்வம் பிறந்தது. மூன்று பவுன் நகை என்பது தெரியுமே தவிர, அந்த நகை என்ன என்பதை அவர் இதுவரை பார்க்கவில்லை. நீலகண்டன் தந்த பொட்டலத்தை அதே நிலையில் பணப்பெட்டிக்குள் வைத்து அவர் பூட்டி விட்டார். இப்போது ஒரு ஆர்வம். பொட்டலத்திற்குள் இருப்பது மாலையாக இருக்குமோ? வளையலாக இருக்குமோ? ராமுண்ணி பொட்டலத்தைப் பிரித்து உள்ளேயிருந்த நகையை எடுத்துப் பார்த்தார். உள்ளே அகலம் சற்று குறைவாக இருந்தாலும் அருமையான கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு தங்க இடுப்புக் கொடி இருந்தது. ராமுண்ணி அதை மீண்டும் பொட்டலமாக ஆக்கி மடியில் வைத்துக் கொண்டார். அவர் ஒரு கையால் வேஷ்டியை தூக்கி பிடித்துக்கொண்டு குடையைத் தரையில் ஊன்றியவாறு ஏறி வீட்டு வாசலில் வந்து நின்றார். சிறிதும் எதிர்பார்க்காமல் தன்னுடைய வீட்டின் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கும் மீத்தலேடத்து ராமுண்ணியைப் பார்த்து சாவித்திரி ஒருவித பதைபதைப்பிற்கு ஆளானாள். தலையை வாரிக் கொண்டிருந்த அவளுடைய கை தலைக்கு மேலே ஒரு நிமிடம் அசையாமல் நின்றது.
“இங்கே நீலகண்டன் இல்லியா?”
அவர் கண்களுக்கு நன்கு தெரியும்படிதான் நீலகண்டன் வாய்க்காலை நோக்கி சென்றதே. இருப்பினும் எதற்காக இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை நாம் கேட்டோம் என்பதை ராமுண்ணியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாவித்திரி ஒரு முண்டை எடுத்து பெஞ்சைத் துடைத்து அதில் அவரை உட்காரச் சொன்னாள். அவளின் பதைபதைப்பைப் பார்த்து அவருக்கு சுவாரசியம் உண்டானது. அவளின் கன்னங்கள் எவ்வளவு வெண்மையாக இருக்கின்றன! தலைமுடி எவ்வளவு கறுப்பாக இருக்கிறது!
‘என் கடவுளே! மீத்தலேடத்து ராமுண்ணி எதற்காக என்னை இப்படி வச்ச கண் எடுக்காம பார்க்குறாரு?” -சாவித்திரி மனதிற்குள் நினைத்தாள்.
"உன் கையும் கழுத்தும் ஏன் நகை எதுவும் இல்லாமல் சும்மா இருக்கு?” - அவர் கேட்டார். "எல்லாத்தையும் அவன் கொண்டுபோய் அடமானம் வச்சிட்டானா?”