மோகத்தீ - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
அந்த நகை மாலையா, வளையலா என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடிய- சாதாரணமாக பெண்களிடம் காணக்கூடிய ஆர்வம்கூட அவளிடம் இல்லை. பொதுவாகச் சொல்லப்போனால் கணவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவள் தலையிட்டுக் கொள்வதில்லை. மில்லில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு எண்ணெய் தயாராகிறது என்பதைப் பற்றியோ- அங்கு எத்தனைப் பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியோ தெரிந்துகொள்ள அவள் எந்தச் சமயத்திலும் விருப்பப்பட்டதில்லை. கண்ணில் பார்ப்பவர்களுக்கெல்லாம் தானம் கொடுக்கும் செயல் சற்று அதிகமாகப் போகிறது என்று மனதில் தோன்றும்போது மட்டும் அவள் தன் கணவரிடம் ஏதாவது கூறுவாள். அவ்வளவுதான்.
“கொஞ்சம் படுக்கட்டுமா? என்னால முடியல என் சரோஜினி.”
ராமுண்ணி படுக்கையில் படுத்தபோது கட்டில் ஓசை உண்டாக்கியது. நூறு வருடங்கள் பழமையான கட்டில் அது. ராமுண்ணியின் தாய் அவரைப் பெற்றெடுத்ததுகூட இந்தக் கட்டிலில் படுத்துதான். அவருடைய நான்கு பிள்ளைகளையும் சரோஜினி கர்ப்பம் தரித்தது இந்தக் கட்டிலில் படுத்துத்தான். விரலைச் சப்பிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல சாவிரித்தியின் இடுப்புக் கொடியைத் தன்னுடைய மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவர் சுருண்டு படுத்திருந்தார். அன்று இரவு தங்கத்தால் ஆன அந்த இடுப்புக்கொடியை அணிந்த சாவித்திரியின் இடையை அவர் கனவு கண்டார்.
நிம்மதியற்ற நிலையுடனே ராமுண்ணி காலையில் படுக்கையை விட்டு எழுந்தார். வழக்கமாக தாடியைச் சவரம் செய்வதற்காக வந்த நாவிதனை அவர் வேண்டாமென்று திருப்பி அனுப்பினார். நீண்டநேரம் அவர் வாசலில் இங்குமங்குமாய் நடந்து கொண்டே இருந்தார். குளிக்கவில்லை. மில்லுக்குக்கூட செல்லவில்லை.
“என்ன ஆச்சு உங்களுக்கு? ரெண்டு நாளா நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீங்க பழைய மாதிரி இல்லையே! அப்படி என்ன தீவிரமான சிந்தனை? எது இருந்தாலும் என்கிட்ட மனசைத் திறந்து சொல்லக்கூடாதா? நான் என்ன வேற ஆளா? உங்க மனசுல என்ன இருக்குன்றதை நானும் தெரிஞ்சிக்கிறேனே!...”
சரோஜினி ஒருமுறைகூட தன் கணவரிடம் இப்படிப் பேசியதில்லை. அவள் இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை.
“என் சரோஜினி, உனக்குத் தெரியாம என்கிட்ட என்ன ரகசியம் இருக்கு?”
மீத்தலேடத்து ராமுண்ணி தன் மனைவியைப் பார்த்து சிரித்தார். யாருக்கும் தெரியாமல் அவளின் பின்பகுதியை அவர் கையால் தடவினார். அவர் அப்படி நடந்துகொண்டதைப் பார்த்து சரோஜினி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அவள் உள்ளே சென்றாள். அவளுக்கு எல்லா நேரத்திலும் சமையலறையில் வேலை இருந்தது.
உட்கார்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் எல்லா நேரங்களிலும் முந்தைய நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் ராமுண்ணி. வெண்மையான இடையில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன தங்க இடுப்புக்கொடி...
‘என் கடவுளே! நான் என்ன தப்பு செய்யறேன்? எனக்கு இப்போ ஐம்பது வயசு நடக்குது. மனைவியும் நாலு பிள்ளைகளும் இருக்காங்க. இருந்தாலும் யாரோ ஒருத்தனோட பொண்டாட்டியின் இடுப்பை நான் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.’ -இப்படி சிந்தித்தவாறு அவர் நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். வழக்கம்போல் வேஷ்டியின் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு குடையைத் தரையில் ஊன்றியவாறு கம்பீரமாக அவர் நடந்து சென்றார்.
வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் கையால் சைகை செய்ததையும், என்னவோ கூறுவதற்காக அழைத்ததையும் ராமுண்ணி பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை.
மீண்டும் ராமுண்ணி தன் வீட்டு வாசலில் வந்து நின்றிருப்பதைப் பார்த்த சாவித்திரி ஒருவித பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டால். நீலகண்டன் அப்போது வீட்டில் இல்லை. தனக்கென நிரந்தர வேலை எதுவும் இல்லாத அவன் எப்போது வீட்டிற்கு வருவான், எப்போது போவான் என்றே சொல்ல முடியாது. வெயில் காலமாக இருந்தால் அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கே வாய்க்காலில் இறங்கி குளிப்பதுதான் என்றாகிவிட்டது. ஒருநாள் அப்படி நீரில் மூழ்கி குளித்துக்கொண்டிருந்த அவன் அங்கேயே உறங்கிவிட்டான். கொஞ்சம் நீர் கண்ணிற்குள்ளும் மூக்கிற்குள்ளும் போய்விட்டது. சிறிது நீர் குடலுக்குள்ளும் நுழைந்துவிட்டது. அந்தச் சம்பவத்தைக் கேட்டு சாவித்திரி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“நீலகண்டன் இல்லியா?”
“இல்ல...”
அவள் கதவிற்குப் பின்னால் மறைந்து நின்றிருந்தாள். தொடர்ந்து என்ன சொல்வது என்று தெரியாமல் ராமுண்ணி தயங்கியவாறு நின்றார். மறைந்து நின்றிருந்த அவளுடைய இடுப்பின் ஒரு பகுதி மட்டும் அவருக்குத் தெரிந்தது. கனவில் கண்ட இடுப்பிற்கும் நேரில் பார்க்கும் இடுப்பிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கனவில் கண்ட இடுப்பு பெரியதாக இருந்தது.
“வாய்க்கால்ல குளிக்கப் போயிருக்கானா?”
“நீலகண்டன் வந்தா நான் விசாரிச்சதா சொல்லு...”
சாவித்திரி அடுத்த நிமிடம் கதவிற்குப் பின்னாலிருந்து வெளியே வந்தாள். அவள் கண்கள் கறுப்பு நிறத்தில் இருந்தன.
“ராமுண்ணி ஐயா, கொஞ்சநாள் பொறுத்துக்கங்க. எல்லா ரூபாயையும் நாங்க சீக்கிரம் திருப்பித் தந்தர்றோம்.”
அப்போது ராமுண்ணியின் மனதில் தோன்றிய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. எனினும் அவர் மறைத்துக்கொண்டு வேண்டுமென்றே தன்னுடைய குரலைக் கடுமையாக்கிக் கொண்டு சொன்னார்.
“என் சாவித்திரி, மீத்தலேடத்து குடும்பத்துக்கு இன்னைக்கு பெருசா சொல்ற அளவுக்கு என்ன இருக்கு? எனக்கு நாலு பிள்ளைகள காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்குல்லே?”
அதைக் கேட்டு சாவித்திரியின் முகம் வாடிவிட்டது. இனிமேல் விற்பதற்கும் அடமானம் வைப்பதற்கும் அவளிடம் எதுவும் இல்லை. இறுதியாக அவளிடம் இருந்தது அந்த இடுப்புக் கொடி மட்டும்தான். அதை அவளுடைய கணவன் நீலகண்டன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இடுப்பிலிருந்து கழற்றி எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் புற்களின் மறைவில் வாய்க்காலில் இறங்கிக் குளிக்கும்போது இடுப்புக் கொடி இல்லாத தன்னுடைய இடையைப் பார்த்து அவள் பெருமூச்சு விடுவாள். இனிமேல் அடமானம் வைப்பதற்கும் விற்பதற்கும் அவளிடம் இருப்பது அவள் பெற்ற பிள்ளைகள் மட்டுமே. ஒரு நாள் நீலகண்டன் இந்திராவையும் பாலகோபாலனையும் கொண்டுபோய் அடமானம் வைத்தால் நிச்சயம் அவள் ஆச்சரியப்படமாட்டாள்.
அவள் இப்படி பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவர் அவளின் இடையையே பார்த்தவாறு நின்றிருந்தார்.