மோகத்தீ - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7121
வயல் வரப்பில் நின்றவாறு இடுப்பிலிருந்த கொடியை எடுத்து அவர் கண்குளிரப் பார்த்தார். அதைத் தன்னுடைய இரண்டு கன்னங்களிலும் சேர்த்து வைத்து சந்தோஷப்பட்டார். அந்த இடுப்புக் கொடியை அவர் முத்தமிட்டார்.
4
எண்ணெய் மில்லில் நடக்கும் வேலைகள் எப்போதும் போல ஒழுங்காக நடந்தன. மாட்டு வண்டிகளில் தேங்காய்கள் வந்து இறங்கின. தயாரான எண்ணெய் நிரப்பப்பட்ட தகர டின்கள் அடுக்கப்பட்ட மாட்டு வண்டிகள் நகரத்தை நோக்கிச் சென்றன. மீத்தலேடத்து ராமுண்ணின் தேங்காய் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு ஆட்டினாலும் தீராத அளவிற்கு தேங்காய்கள் குவிந்து கிடந்தன. மீதி கிடந்த தேங்காய்களை சாப்பன் நாயர் விற்பனைக்கு எடுத்தார். ராமுண்ணி நீலகண்டனைத் தன்னுடைய உதவியாளராக ஆக்கிக் கொண்டார். தேவைப்படும் தேங்காய்களையும், எண்ணெயையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். நீலகண்டன் வாய்க்காலில் குளித்துவிட்டு மேலே வரும்போது நீருக்கு மேலே தேங்காய் எண்ணெய் பரவிக் கிடந்தது. பாலகோபாலன், இந்திரா- இருவரின் தலையிலிருந்தும் முகத்திலிருந்து எண்ணெய் எப்போதும் வழிவதைப் போல் இருக்கும்.
“சும்மா கிடைக்குறதுன்றதுக்காக தலையிலயும் முகத்துலயும் இப்படியா எண்ணெயைத் தேய்க்கிறது?”
அச்சு வாத்தியார் விளையாட்டாகக் கேட்டார்.
அவர் அப்படிச் சொன்னதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. நீலகண்டனை எதற்காக ராமுண்ணி தன்னுடைய உதவியாளராக வைத்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு இடத்தில் நிலையாக இருக்கக் கூடியவனல்ல நீலகண்டன். இரண்டு பிள்ளைகள் உண்டான பிறகும் தனக்கென்று ஒரு நிரந்தர வேலை இல்லாமல் இவ்வளவு காலமாக அவன் இருப்பதற்குக் காரணம்கூட அதுதானே? ராமுண்ணி விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவருக்கு ஒரு உதவியாளர் நிச்சயம் தேவையே இல்லை. தேங்காய்களையும் மில்லையும் பார்த்துக் கொள்வதற்குத் தேவைக்கும் அதிகமாகவே பணியாட்கள் அவரிடம் இருக்கிறார்கள்.
“எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் ஒரு வேலையும் இல்லாம வெறுமனே சுத்திக்கிட்டே கிடப்பான். ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைங்க வேற இருக்காங்களே?”
ராமுண்ணி சொன்னார்.
நீலகண்டனின் வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்தவண்ணம் இருந்தது. தேங்காய் அரைத்து வைத்த குழம்புடன் சாதம் சாப்பிட்டதாலும் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளித்ததாலும் நீலகண்டனின் பிள்ளைகள் இரண்டும் மினுமினுப்பாகத் தெரிய ஆரம்பித்தார்கள்.
ஒருநாள் நீலகண்டன் மில்லில் புண்ணாக்கு ஏற்றிக் கொண்டிருப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ராமுண்ணி மாட்டு வண்டியில் ஏறி வேகமாக அவனுடைய வீட்டை நோக்கிச் சென்றார். வண்டியை வயலின் கரையோரத்தில் நிறுத்திவிட்டு அவர் வீட்டு வாசலை நோக்கி நடந்தார்.
“யாரும் இங்கே இல்லையா?”
“அம்மா குளிச்சிக்கிட்டு இருக்காங்க.”
“எங்கேடா மகனே?”
“அதோ அங்கே...”
பாலகோபாலன் வாய்க்காலை நோக்கி விரலால் காட்டினான். அங்கே ஒரு ஆள் உயரத்திற்கு புற்கள் வளர்ந்திருந்தன. இந்திரா வாசலில் உட்கார்ந்து சிரட்டையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு சோறு, குழம்பு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ராமுண்ணி அங்கு வளர்ந்திருந்த புற்களைப் பார்த்தார். அதைத் தாண்டி நிறைந்து ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தெரிந்தது. ஓடிக் கொண்டிருந்த நீர் இங்கிருந்து பார்த்தபோது தெளிவாகத் தெரிந்தது. புற்களை ஒட்டிக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கட்டாயம் விரால் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்குமென நினைத்தார் ராமுண்ணி.
“நீங்க புறப்படுறீங்களா?”
“கொஞ்சம் வேலை இருக்கு மகனே.”
அவர் சட்டைப் பைக்குள்ளிருந்து இரண்டு கால் ரூபாய் நாணயங்களை எடுத்து பாலகோபாலன் கையிலும் இந்திராவின் கையிலும் தந்தார்.
“இது எவ்வளவு காசு?”
“கால் ரூபா.”
“இதுக்கு ஆரஞ்சு மிட்டாயி கிடைக்குமா?”
“நிறைய கிடைக்கும்.”
“அய்யோ... அம்மா அடிப்பாங்க. எனக்கு வேண்டாம்”
பாலகோபாலன் காசைக் கீழே வைத்தான். அதைப் பார்த்து இந்திராவும் அப்படியே செய்தாள்.
“அம்மா அடிக்க மாட்டா. ராமுண்ணி ஐயா தந்தார்னு சொன்னா போதும்...”
பிள்ளைகள் தயக்கத்துடன் நாணயத்தைத் திரும்ப எடுத்தார்கள்.
ராமுண்ணி வேகமாக இறங்கி நடந்தார். தூரத்தில் வயலோரத்தில் மாட்டு வண்டி நின்றிருந்தது. மாடுகள் காலையில் தின்ற வைக்கோலையும் குடித்த நீரையும் ஜீரணம் செய்து கொண்டிருந்தன. அவற்றின் வாயிலிருந்த பெரிய புற்களுக்கிடையே நுரை ததும்பிக் கொண்டிருந்தது. மாடுகளின் பின்னங்கால்களுக்கிடையில் தரையில் சாணம் விழுந்து கிடந்தது.
அதோ, மீத்தலேடத்து ராமுண்ணி தன்னைவிட உயரமாக வளர்ந்து நின்றிருக்கும் புற்களுக்கிடையே தன்னை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அவரின் டயர் செருப்புகள் அணிந்த கால்கள் சேற்றில் இருக்கிறது. தன்னுடைய மடியில் வைத்திருக்கும் இடுப்புக்கொடியின் தடம் பதிந்த இடையை ஒரு கனவில் பார்ப்பதைப் போல அவர் பார்த்தார். பச்சைப் புல், நீர் ஆகியவற்றின் குளிர்ச்சியில் ஒரு சிலையைப் போல அவர் நின்றிருந்தார். நேரம்போனதே ராமுண்ணிக்கு தெரியவில்லை.
5
ராமுண்ணியின் நடவடிக்கையில் என்னவோ குறைபாடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் அச்சு வாத்தியார். காலையில் ராமுண்ணிக்கு தாடியை மழிப்பதற்காகச் சென்ற நாவிதன் தாடியை மழிக்காமல் திரும்பிச் செல்வதைத் தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் கவனித்தார். தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தவாறே வழியில் போவோரையும் வருவோரையும் அச்சு வாத்தியாரால் பார்க்கமுடியும். ஊரிலேயே மிகவும் முக்கியமான வழி அவரின் வீட்டிற்கு முன்னால்தான் இருக்கிறது. மில்லிற்கு தேங்காய்களை ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகள் அந்த வழியேதான் கடந்துபோகும். வழக்கம்போல ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் இப்போதும் மாலைவேளைகளில் நடப்பதற்காகச் செல்வார்கள். அந்தச் சமயத்தில் ராமுண்ணி சில வேளைகளில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பார். அச்சு வாத்தியார் கூறுவது எதையும் அவர் தன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பதைப் போல் அப்போது தோன்றும். ராமுண்ணி வேறு ஏதோவொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். அப்படி அவர் எந்த உலகத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்? யாருடைய உலகம் அது? இந்த விஷயங்களைத்தான் அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
சரோஜினியும் தன் கணவரிடம் சமீபகாலமாக இருந்துவரும் மாற்றங்களைக் கவனிக்காமலில்லை. காலையில் மாடியைவிட்டு கீழே இறங்கி வந்தால் மீண்டும் மதிய உணவு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் படுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் மாடிக்குச் செல்வார். இப்போது என்னவென்றால் நாளொன்றுக்கு பத்து தடவைகளாவது படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கீழே இறங்கிவந்த மறுநிமிடமே என்னவோ யோசித்தவாறு மீண்டும் மாடியை நோக்கி அவர் வேகமாகச் செல்வதை அவளே பார்த்திருக்கிறாள்.
‘பேசாம மாடியிலயே இருந்தட வேண்டியதுதானே? எதுக்கு நூறு தடவை ஏறுறதும் இறங்குறதுமா இருக்கணும்?’
ஒருநாள் தன் கணவன் மாடிக்குச் சென்றபோது, அவருக்கு தெரியாமல் சிறிதும் ஓசையின்றி அவள் அவரைப் பின்தொடர்ந்தாள்.